Saturday, April 6, 2019

பெற்றோரின் கவனத்திற்கு thanks to dinamalar varamalar

பள்ளி தேர்வுகள் முடிந்து, விடுமுறை விட்டிருப்பர். இரண்டு மாத விடுமுறையில், உங்கள் குழந்தைகளுக்காக, நீங்கள் செய்ய வேண்டியது...
அவர்களை சிரமப்படுத்தாமல், பொழுது போக்காக, அவர்களே விரும்பி செய்யும்படியான சில வழிமுறைகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்...
* உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதேனும் ஒரு வங்கிக்கு, குழந்தைகளை அழைத்து சென்று, அதன் நடைமுறைகளை, கற்றுக் கொடுங்கள். 
ஏ.டி.எம்.,ல் பணம் எடுப்பது மற்றும் பணம் சேமிப்பு கணக்கை எப்படி ஆரம்பிப்பது என்று சொல்லிக் கொடுத்து, சேமிப்பின் அவசியத்தையும் புரிய வையுங்கள்
* அருகில் உள்ள அனாதை ஆசிரமம் அல்லது முதியோர் இல்லத்திற்கு அழைத்து சென்று, அவர்களுடன் பேச வைத்து, அவர்கள் படும் துன்பங்களையும், ஏக்கங்களையும் கேட்க வைத்தாலே போதும், பெற்றோரின் அருமை அவர்களுக்கு புரியும்; முதியோரை விடுதியில் சேர்க்கும் எண்ணமும் மாறும்
* இரண்டு மரக்கன்றுகளையோ அல்லது தொட்டியில் வளர்க்கும் செடிகளையோ பரிசாக அளித்து, தண்ணீர் ஊற்றி, வளர்க்க சொல்லுங்கள். செடி வளர வளர, சிறு பரிசு கொடுத்து அசத்துங்கள்
* இரண்டு மாதங்களில், ஒரு முறையேனும், குழந்தை முன்னிலையில், நீங்கள் ரத்த தானம் செய்யுங்கள். ரத்த தானத்தின் அவசியத்தை, கண்டிப்பாக அவர்கள் உணர்வர். அதே சமயம், 'என் பெற்றோர் எப்போதும் எனக்கு, 'ஹீரோ' தான்...' என்று, பெருமை கொள்வர்
* மிக முக்கியமாக, அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்கு, நோயாளிகள் படும் கஷ்டத்தை கண்கூடாக பார்க்க செய்யுங்கள். ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்திக் கொள்ளலாம் என்று புரிந்து கொள்வர் 
விபத்தில் சிக்கி, சிகிச்சை பெற்று வருவோரை காண செய்தாலே போதும், வாகனத்தை எவ்வாறு ஓட்ட வேண்டுமென்று முடிவெடுப்பர்
* சொந்த கிராமத்துக்கு, குழந்தைகளுடன் சென்று, தாத்தா, பாட்டி மற்றும் சொந்தங்களை அறிமுகப்படுத்துங்கள். நம் முன்னோரின் எளிய வாழ்க்கை முறையையும், அவர்களின் பெருமைகளையும் எடுத்துக் கூறுங்கள். அப்போது தான், உறவுகளின் அருமை புரியும்
* அருகில் உள்ள நீதிமன்றம், காவல் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு கூட்டிச் சென்று, அவை செயல்படும் விதங்களை எடுத்துக் கூறுங்கள். அதன்பின், அவர்களாகவே, எந்த துறையில் காலுான்ற வேண்டும் என்பதை தீர்மானித்து, அதன்படி செயல்பட ஆரம்பித்து விடுவர்
* குழந்தைகளிடம், அவர்களின் சின்ன சின்ன ஆசைகளை கேட்டறிந்து, அதை நிறைவேற்ற நாங்கள் இருக்கிறோம் என்பதை, பதிய வையுங்கள் 
* அனைத்து மத கோவில்களுக்கும் சென்று, அவரவர் வழிபாட்டு முறைகளை காண செய்யுங்கள். அனைத்து மதமும், அன்பை மட்டுமே போதிக்கிறது என்ற உண்மையை, உணர செய்யுங்கள். அன்பால் அனைத்தையும் பெற முடியும் என்பதையும் உணர்த்துங்கள்
* வீட்டிற்கு என்னென்ன பொருள் தேவை என்ற பட்டியலை, எழுத சொல்லி, கடைக்கு சென்று, பணம் கொடுத்து, பொருட்களை வாங்க பழக்குங்கள். பணத்தின் அருமையும், சிக்கனமும், தெரிய வரும்.
இதில் உள்ள சிலவற்றை செய்ய முயற்சித்தாலே, அவர்கள் மீது நீங்கள் கொண்டுள்ள அக்கறையை புரிந்து கொள்வர்; எதிர்காலத்திலும் யாரையும் சார்ந்து இல்லாமல், நல்ல குடிமகனாக வளர்வர்.

ஏ. எஸ். கோவிந்தராஜ்

No comments:

Post a Comment