Thursday, December 5, 2019

போதுமென்ற மனமே நிம்மதி thanks to dinamalar

போதுமென்ற மனமே நிம்மதி7
Shares
எந்த நேரமும் அறுந்து போகும் ஒற்றை நுாலில் தொங்கிக் கொண்டிருக்கிறது நமது வாழ்க்கை. நுாலை கண்டவாறு சுற்றி சிக்கலாக்கி கொள்வதுதான் நமது வழக்கம். உறவு, பணம், பொருள் என சந்தோஷமாக வாழும் வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை. ஏதாவது ஒரு உறவை இழப்பின், அடுத்த நொடியிலேயே வாழ்க்கை சூனியமாக, பற்றற்றதாக மாறிவிடும்.


நிம்மதியாக வாழ

எப்பொழுதும் சிரித்த முகத்துடன் இருக்கும் ஞானியைப் பார்க்கச் சென்றார் ஒருவர். அப்பொழுது அந்த ஞானி முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்து அதில் அவ்வப்போது முகத்தைப் பார்த்துக் கொள்வதும், பின்பு எடுத்து வைப்பதுமாக இருந்தார்.

எல்லாம் துறந்த ஞானி அடிக்கடி தன்னை கண்ணாடியில் பார்த்து அழகு படுத்திக் கொள்கிறாரே என நினைத்து தயங்கியவாறே அவரிடம் ஏன் கண்ணாடியை அடிக்கடி பார்க்கிறீர்கள் என கேட்டார். அவர் சொன்னார் 'தம்பி, எனக்கு கவலை, பிரச்னை, துன்பம் வரும்பொழுதெல்லாம், யார் காரணம் என்று தெரிந்துகொள்வதற்காக இந்த முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துப் பார்ப்பேன். யார் என்று தெரிந்து விடும். உடனே என்னை சமாதானப்படுத்திக் கொள்வேன். ஆகையால் தான் என்னால் கவலையின்றி இருக்கமுடிகிறது' என்றார். பிரச்னைக்கு நாம் தான் காரணம் என விளக்கினார்.


வாலறுந்த நரி

காட்டில் உள்ள நரி பக்கத்தில்இருக்கும் திராட்சை தோட்டத்திற்கு அடிக்கடி திருட்டுத்தனமாக சென்று திராட்சையை சாப்பிட்டு வந்தது. ஒருநாள் நரியை கையும் களவுமாக பிடித்த தோட்டக்காரன் அதன் வாலை ஒட்ட வெட்டி விட்டான். நரிக்கு அவமானமாகி விட்டது. எப்படிடா இந்த ஊரில் தலை காட்டுவது, என தயங்கியவாறு காட்டுக்குள் நுழைந்தது. எல்லா நரிகளும் அதனைப் பார்த்து சிரித்தன.

உடனே அந்த நரி சொன்னது, 'என்னைப் பார்த்து சிரிக்காதீர்கள், நான் கடவுளைப் பார்த்துவிட்டு வந்தேன். அவர் சொன்னதால் தான் இந்த வாலை நறுக்கி விட்டேன்; நான் கடவுளின் அவதாரம்' என்றது.

நம்பாமல் எல்லா நரிகளும் வாலறுந்த நரியை பொறாமையாக பார்த்தன. ஒரு நரி மட்டும் அதனிடம், 'நானும் கடவுளைப் பார்க்கலாமா?' என கேட்டது.'அந்த தோட்டத்திற்கு சென்றால் கடவுள் இருப்பார்' என நரியை திராட்சை தோட்டத்துக்கு போகச் சொன்னது. புதிதாக வந்த நரியை பிடித்த அந்த தோட்டக்காரன் அதன் வாலையும் ஒட்ட வெட்டி விட்டான்.



சிக்கலில் தவிக்கிறோம்

கடும் கோபத்துடன் வந்த புதிய நரி, ஏற்கனவே வாலறுந்த நரியைப் பார்த்து, 'ஏன், என்னை ஏமாற்றினாய்?' என திட்டியது.அப்பொழுது பழைய நரி சொன்னது, 'எனக்கும் வாலில்லை. உனக்கும் வாலில்லை. காரணத்தை வெளியே சொன்னால் நமக்கு அசிங்கம். ஆகவே இந்த டயலாக்கைச் சொல்லி எல்லோரையும் திராட்சை தோட்டத்துக்கு அனுப்புவோம். அப்பொழுது தான் வாலில்லாத நரிகளை அதிகமாக்கி நாம் பெரும்பான்மை பெற முடியும்' என சொல்லியது.எல்லா நரிகளும் வால் இழந்தது போல் நாமும் நமது ஆசை மற்றும் தேவைகளுக்காக சந்தோஷத்தை அடகுவைத்து பெரும் தொகை கடன் வாங்கி பொருளாதார சிக்கலில் தவிக்கிறோம்.


நம்பிக்கை விதைப்போம்

ஒரு பெரிய கப்பல் வெளிநாட்டுக்கு புறப்பட்டது. பயணம் செய்பவர்களுக்கு இரண்டு பேருக்கு ஒரு அறை கப்பலில் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஓர் அறையில் முரட்டுத் தனமாக ஒருவன் இருந்தான். மற்றொருவன் சாதுவாக பணிவாக இருந்தான்.இருவரும் கை நிறைய பொருளும், பணமும் வைத்திருந்தனர். சாதுவாக இருந்தவனுக்கு அடுத்தவனைப் பார்த்து பயம். நம் அறையில் இருப்பவன் பக்கா முரடனாக இருக்கிறானே. இந்த பொருளை நம்மால் பத்திரமாக எடுத்துக் கொண்டு செல்ல முடியுமா என தயங்கியவாறு பொருளை எல்லாம் ஒரு பெட்டியில் வைத்து நேராக கப்பலின் பாதுகாப்பு அதிகாரியை அணுகி, 'நான் ஊர் சென்று சேரும் வரை இந்த பெட்டியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். இதற்குள் பணமும் நகையும் இருக்கின்றன' எனக் கொடுத்தான்.


மற்றவர்கள் மேல் பழி

அதிகாரி, 'உன் அறையிலேயே வைத்து விட வேண்டியது தானே. பத்திரமாகத் தானே இருக்கும்' என்றார். 'இல்லை ஐயா. என் அறையில் என்னுடன் ஒரு மகாமுரடன் தங்கி இருக்கிறான். அவனை பார்ப்பதற்கே பயமாக இருக்கிறது. ஆகையால் இந்த பெட்டியை உங்களிடம் கொடுத்து வைக்கிறேன். ஊர் வந்ததும் வாங்கிக் கொள்கிறேன்' என்றான். 'கொஞ்ச நேரம் முன்புதான் உங்கள் அறையிலிருந்த அந்த முரடன், அவனுடைய பெட்டியை கொடுத்துவிட்டு போனான். என் அறையில் இருப்பவன் பார்ப்பதற்கு சாது மாதிரி தெரிகிறான், ஏமாற்றுகாரனாக இருப்பானோ என பயமாக இருக்கிறது, இந்த பெட்டியை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்துவிட்டு போனான்' என்றார். இப்படித்தான் ஒருவரை ஒருவர் நம்பாமல் மற்றவர்மேல் பழி போட்டு நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.


நேர்மையே நிம்மதி

மருத்துவ முகாமில் ஒரு முதியவரை சந்தித்தேன். பார்த்து 20 ஆண்டுகளுக்கு மேலிருக்கும். டக்கென அடையாளம் தெரிந்தது. நன்கு மெலிந்திருந்தார். இனம் புரியாத சோகம் முகத்தில். 'நல்லா இருக்கீங்களா, உங்க பசங்க எப்படி இருக்காங்க' என்றேன். தனது மகன்களை எனது மருத்துவமனைக்கு முன்பு அழைத்து வருவார். மிகவும் வசதியானவர். பொதுப்பணித் துறையில் உயர்ந்த பதவியில் இருந்தவர்.

'வருமானம் நல்லா இருந்தது டாக்டர். கூடுதல் வருமானம் உண்டு. உங்க கிட்ட கூட்டிட்டு வருவேனே அந்த இரண்டு பசங்களையும், அமெரிக்காவில் படிக்க வைத்தேன். என்னிடம் இருந்த எல்லா பணத்தையும் அவங்க படிப்பு வேலைக்கு செலவு பண்ணினேன். பணம், பணம் என என்னென்ன வழிகள் இருக்கிறதோ அவற்றையெல்லாம் கண்டுபிடித்து பணம் சம்பாதித்தேன்.

பசங்களும் வெளிநாட்டில் செட்டில் ஆக, நன்றாக போய்க்கொண்டிருந்த வாழ்க்கையில், மனைவி திடீரென இறந்துவிட உடல் மற்றும் மனதளவில் பலகீனமானேன். பசங்க என்னை வெளிநாட்டிற்கு அழைத்துச் செல்ல தயாராக இல்லை. இங்கு வருவதுமில்லை. நான் செய்து வந்த தொழிலையும் செய்ய முடியவில்லை. கொஞ்ச கொஞ்சமாக நஷ்டம் ஆகி ஓய்வுக்குப் பின் கடனாளி ஆனேன். ஒரு முதியோர் இல்லத்தில் காவலாளியாக தங்கியிருக்கிறேன். பென்ஷன் பணம் வட்டி கட்டவே சரியாக உள்ளது. நான் சம்பாதித்த பணம் எல்லாம் எங்கே போனது என்றே தெரியவில்லை. எத்தனை பேர் வேதனையுடன் இந்த பணத்தை கொடுத்திருப்பார்கள் என இப்பொழுது தெரிந்து கொண்டேன்.

மனைவி இறந்த ஒரே நாளில் என் வாழ்க்கை தலைகீழாகி விட்டது. நான் வாங்கிய லஞ்சப்பணம் எதிர்கால நிம்மதி தொலைத்து விட்டது. இனி கடவுள் விட்ட வழி. இன்று அனாதையாக காலத்தை கழித்து வருகிறேன்' என கலங்கினார்.


நிரந்தரமில்லை

பிள்ளை, பொருள், பணம் என நாம் சேர்க்கும் எதுவும் நிரந்தரமில்லை என்பதை புரிந்து கொண்டால் நேர்மையாக நிம்மதி யாக வாழ முடியும். உடலில் ஆரோக்கியம் இருக்கும் வரை மட்டும்தான் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ முடியும். நாம் சேர்க்கும் பணம், பொருள், எல்லாவற்றையும் விட உடலளவிலும், மனதளவிலும் சந்தோஷமாக இருந்த கணங்களே, தருணங்களே என்றும் நிலைத்து நிற்கும்.-டாக்டர். ஜெ.ஜெயவெங்கடேஷ்

மருத்துவ எழுத்தாளர், மதுரை.
98421 67567

No comments:

Post a Comment