Friday, December 27, 2019

சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைக்க என்ன வழி thanks to dinamalar.com


பதிவு செய்த நாள்

24டிச
2019
00:00
* சிறுநீரகத்தின் முக்கியத்துவம் என்ன?
நாம் உண்ணும் உணவில் இருக்கும் விஷத்தன்மை கொண்ட, தீங்கு விளைவிக்கக்கூடிய கழிவு, திரவப்பொருட்களை வெளியேற்றுவதுடன், நீரின் சமநிலையை பாதுகாத்து, உடலுக்கு தேவையான தாது உப்புக்கள், சத்துக்களை பிரித்து வழங்கி, கழிவுகளை சிறுநீராக உருவாக்கி வெளியேற்றுகின்றன சிறுநீரகங்கள். இது மனிதர்களின் சுத்திகரிப்பு நிலையம்.

* சர்க்கரை நோய்க்கும், சீறுநீரக பாதிப்புக்கும் சம்பந்தம் உண்டா?
உண்டு. நம் உடலில் உள்ள சர்க்கரையை தேவையான சக்தியாக மாறுவதற்கு இன்சுலின் வேண்டும். ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவும் அதை சக்தியாக மாற்றி பயன்படுத்திக் கொள்ள தேவையான இன்சுலினும் சரியான விகிதத்தில் இருக்கும் வரை, சிறுநீரகத்தில் அனைத்துப் பணிகளும் சுமூகமாக நடக்கும். மாறாக இன்சுலின் அளவு குறைந்து, ரத்த சர்க்கரை அதிகரிக்கும் போது, அந்த சர்க்கரை சிறுநீரகம் வந்தடைவதால் பிரச்னை ஏற்படும். இது தொடர்ந்து வருவதால்தான் சர்க்கரை பாதிப்பு உள்ளவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படுகிறது.

* சர்க்கரை நோயாளிகளுக்கு சிறுநீரக பாதிப்பு எவ்வாறு ஏற்படுகிறது?
கழிவுகளை பிரித்து வெளியேற்றும் சிறுநீரகத்தில் ரத்த சர்க்கரை மூலம் அதீத சர்க்கரை சேரும் போது சிறுநீரகங்கள் அதன் பண்பை சிறிது சிறிதாக இழக்கும். மேலும், உடலுக்கு தேவையான தண்ணீர், தாதுக்களையும் வெளியேற்றிவிடுகிறது. அதனால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிக தாகம் ஏற்படுகிறது. அடுத்தகட்டமாக சிறுநீரகத்தில் மிக முக்கிய பணியாற்றும் 'நெப்ரான்'கள் (வடிகட்டி) அதிக சேதம் அடைகிறது. இதனால் உடலுக்கு அவசிய தேவையான 'அல்புமின்' நுண் புரதம் சிறுநீர் வழியே வெளியேறுகிறது. இதுதான் சர்க்கரை நோய் பாதிக்கப்பட்டவருக்கு சிறுநீரகம் பாதிப்பு ஏற்படுவதற்கான முதல் அறிகுறி.

* சிறுநீரக பாதிப்பு அறிகுறிகள் என்ன?
பாதிப்பு ஏற்பட்ட உடன் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். கண் விழித்திரையில் பாதிப்பு ஏற்படும். பார்வை குறையும். கை, கால், கணுக்காலில் வீக்கம் உண்டாகும். காலையில் எழும்போது கண் இமைகளுக்குக் கீழ் வீக்கம் உண்டாகும். சிறுநீர் பிரிவது குறைவது, பசியில்லாத நிலைமை, களைப்பு, மூச்சுத்திணறல், நாக்கில் உலோகச் சுவையுணர்வு போன்று அறிகுறிகள் தோன்றும். இதனால் சிறுநீரகப் பாதிப்பை ஓரளவு தெரிந்து கொள்ளலாம். நோயை உறுதிப்படுத்த மற்ற பரிசோதனைகளையும் செய்வது அவசியம்.

* பரிசோதனைகள் என்ன?
நுண் புரத பரிசோதனை, புரதப் பரிசோதனை, ரத்தத்தில் யூரியாவின் அளவு, கிரியாடின், ரத்த அயனிகள் போன்றவற்றின் அளவுகளைப் பரிசோதிக்க வேண்டும். சிறுநீரில் புரதம் வெளியேறுவது தெரிந்தால் யூரியா 40 மி.கி., அதிகமாகவும், கிரியாட்டின் 1.2 மி.கி., சதவீதத்திற்கு அதிகமாகவும் இருந்தால், சிறுநீரக பாதிப்பை உறுதி செய்யலாம். சர்க்கரை நோயாளிகள் இந்த பரிசோதனைகளை ஆண்டிற்கு ஒரு முறையாவது செய்வது அவசியம். நுண்புரதம் சிறுநீரில் வெளியாகும் நிலை ஏற்பட்ட பிறகு சிகிச்சை மேற்கொள்ள தவறியவர்களுக்கு அடுத்த மூன்றாண்டுகளில் வெண்புரதம் சிறுநீரில் வெளியாகிவிடும். இதனால் 30 வயதிற்கு மேல் உள்ள அனைவரும் 'மாஸ்டர் செக் அப்' செய்வது கட்டாயம்.

* எவ்வாறு சிகிச்சைகள் மேற்கொள்வது?
ஆரம்பநிலை ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தினால் சிறுநீரக பாதிப்பும் கட்டுக்குள் வந்துவிடும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதன் மூலமும் சீறுநீரக பாதிப்பை கட்டுப்படுத்தலாம். புரதச்சத்து குறைந்த உணவும் சிறுநீரகங்களின் வேலைப்பளுவைக் குறைக்கும். கால்சியம், ரத்த ஊட்டச்சத்து மாத்திரைகள் தரப்படும். சிறுநீரக பாதிப்பிற்கு 'டயாலிசிஸ்' சிகிச்சை முறை என்பது சிறுநீரகம் செய்யும் வேலையை நோயாளியின் ரத்தத்தை டியூப் மூலம் வெளியே கொண்டு வந்து மிஷின் மூலம் சுத்திகரிப்பு செய்து உடலுக்குள் ரத்தத்தை மீண்டும் செலுத்தும் முறையாகும். இதை எல்லாம் கடந்த நிலையில் நோய் பாதிப்பில் இருந்து மீட்கவே முடியாத பட்சத்தில் 'சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை' செய்கிறோம்.

* உணவு கட்டுப் பாடுகளால் பாதிப்பை தவிர்க்கலாமா?
பாதிப்பு இருப்பவர்கள் டாக்டர்களின் பரிந்துரைப்படி, குடிக்கும் தண்ணீரின் அளவு அதிகரித்துவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். உணவில் உப்பின் அளவையும், புரதச் சத்துள்ள உணவுகளையும் குறைத்துக் கொள்ள வேண்டும். முக்கியமாக பால், அதில் தயாரிக்கப்பட்ட உணவுகள், பருப்பு, பயறு வகைகள், மீன் வேண்டாம். வத்தல், வடகம், சிப்ஸ், கருவாடு, தேங்காய், ஊறுகாய், கிழங்குகள், எலுமிச்சை, ஆரஞ்சு மற்றும் இறைச்சி போன்ற அசைவ உணவுகளை தவிர்க்கலாம். அரிசி, ரவை, அவல் போன்ற மாவுப் பொருளில் தயாரிக்கப்பட்ட உணவுகள் நல்லது. கட்டுப்பாடு இல்லாத சர்க்கரையினால் வரும் பக்க விளைவுகளை தடுப்பதற்கு சர்க்கரை நோய் பாதித்த முதல் நாளில் இருந்தே தீவிர கட்டுப்பாடுகளில் ஈடுபட்டு சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்தால் சீறுநீரக பாதிப்பின்றி தப்பிக்கலாம்.

டாக்டர் என். மோகன வெங்கட்டராமன்
சர்க்கரை நோய் சிறப்பு நிபுணர்
தேனி
90470 06573

No comments:

Post a Comment