Wednesday, June 22, 2016

இளைஞர்களுக்கு: ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 19


சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி
           னித உறவுகளை பலப்படுத்திக்கிறது பத்திப் பேசிட்டிருந்தோம், இல்லையா? ஆமாம், இங்கே யாரும் தனியா வாழ்ந்துட முடியாது. வீம்புக்கு வேணா சொல்லலாம், நான் யாரை நம்பியும் இல்லை; எனக்கு எவன் தயவும் தேவையில்லைன்னு! ஆனா, நல்லா யோசிச்சுப் பார்த்தோம்னா, நாம சாப்பிடற ஒவ்வொரு பிடி சோறும் பலருடைய உழைப்பினாலயும் உதவியினாலயும்தான் நமக்குக் கிடைக்குது!
அன்பால கட்டப்பட்டதாகவும் அக்கறையினால நெய்யப் பட்டதாகவும் இருக்கிற சமுதாயம்தான் நம்மோட பலம். உறவுச் சங்கிலிகள் வலுவா இருந்தாதான் ஒரு சமுதாயம் முன்னேறும். இங்கே நான் உறவுன்னு சொல்றது மாமன், மச்சான் உறவுகளை இல்ல. மனித உறவுகளை! ஒவ்வொரு சக மனிதனும் நம் சொந்தம்; நமது பந்தம்.


சக மனிதனுடனான உறவுகளை மேம்படுத்திக்க பாசாங்கு இல்லாத அன்பும், ஆத்மார்த்தமான அக்கறையும் வேணும்.

சமீபத்துல ஒரு நியூஸ் கேள்விப்பட்டிருப்பீங்க. கால் டாக்ஸி கூப்பிட்டாராம் ஒருத்தர். வந்த டிரைவர், கார் டயர் பஞ்சராகி நடுவழியில நின்னதாலதான் இவர் நம்மளைக் கூப்பிட்டிருக்காருன்னு தெரிஞ்சு, அங்கேயே அப்பவே டயரை மாத்திக் கொடுத்தாராம். “வேணாம்ப்பா! டயர் மாத்தணும்னா அரை மணி, முக்கா மணி ஆகும். இதை அப்புறமா பார்த்துக்கலாம்”னு இவர் சொல்லியும், “இல்ல சார், இதோ இப்ப மாத்திடலாம்”னு சொல்லி, இருபதே நிமிஷத்துல ஸ்டெப்னி டயரை மாத்திக் கொடுத்து, அவர் தன்னோட கார்லேயே ஆபீஸுக்குப் போகும்படியா பண்ணிட்டாராம். டயர் மாத்திக் கொடுத்ததுக்காகப் பணம் கொடுக்க இவர் முன்வந்தப்போகூட, “வேண்டாம் சார், இதெல்லாம் ஒருத்தருக்கொருத்தர் செய்துக்கற ஹெல்ப்தானே!”னு மறுத்துட்டாராம் அந்த டிரைவர். ‘இந்தக் காலத்துல இப்படியும் ஒரு மனுஷனா!’ன்னு ஃபேஸ்புக்ல கொண்டாடுறாங்க அவரை.

சில மாசங்களுக்கு முன்னால ஒரு நியூஸ் படிச்சேன். சென்னை, எக்ஸ்பிரஸ் அவென்யூ ஷாப்பிங் மால்ல பார்க்கிங் பண்ணியிருந்த தன்னோட பைக்கை எடுக்க வரும்போது, அதன் டெயில் லைட் உடைஞ்சிருந்ததைப் பார்த்து ஷாக்காயிட்டார் ஒருத்தர். யாரோ தன் வண்டியை ரிவர்ஸ் எடுக்கும்போது மோதி உடைச்சிருக்கணும்னு புரிஞ்சுடுச்சு. கடுப்பாகி, முகம் தெரியாத அந்த நபரைக் கன்னாபின்னானு திட்ட வாய் வரைக்கும் வார்த்தை வந்துடுச்சு இவருக்கு. அப்பத்தான் பார்த்தாரு, உடைஞ்ச லைட்டுக்குள்ளே ஏதோ பேப்பர் சுருட்டி வெச்சிருந்துது. 

எடுத்துப் பிரிச்சாரு. ‘ஸாரி சார், தெரியாம உங்க பைக் லைட்டை உடைச்சிட்டேன். ரொம்ப ஸாரி! இதுல 500 ரூபா வெச்சிருக்கேன். உங்க லைட்டை சரி பண்ணிக்குங்க!’ன்னு எழுதி, கூடவே 500 ரூபா நோட்டு ஒண்ணும் வெச்சிருந்தான் அவன். சட்டுனு இவரோட கோபம் தணிஞ்சிருச்சு. ரூபா பெரிசில்லை; நாம உடைச்சதை யாரும்தான் பார்க்கலையே, நமக்கென்னன்னு அப்படியே போகாம, ஸாரி கேட்டு அவன் ஒரு சின்ன குறிப்பு எழுதி வெச்சிருந்ததுதான் இவர் மனசைத் தொட்டுடுச்சு.

நம்ம ஜனங்ககிட்டே இந்த மாதிரியான மேன்மையான குணங்களெல்லாம் ஒரேயடியா காணாம போயிடலை; இன்னமும் இருக்கத்தான் செய்யுதுன்னு இந்த மாதிரியான சின்னச் சின்ன சம்பவங்கள் மூலமா தெரிய வர்றப்போ, உள்ளூர ஒரு சந்தோஷம் வருது; நம்ம சமூகத்து மேல ஒரு நம்பிக்கை வருது. இந்த குணங்களை இன்னும் வளர்த்தெடுக்கணும். தப்பு யார் மேல வேணா இருக்கட்டும், ஸாரி கேக்கறதுனால ஒண்ணும் கொறைஞ்சு போயிட மாட்டோம்கிற எண்ணம் வரணும். விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போவதில்லை.

பொம்மைகள் விக்கிற ஒரு கடை. எட்டு வயசுள்ள ஒரு சின்ன பெண்ணும், அவளோட அஞ்சு வயசு தம்பியும் அந்தக் கடையை கிராஸ் பண்ணிப் போனாங்க. அந்தப் பொண்ணு மட்டும் சட்டுனு நின்னு, ரெண்டு ஸ்டெப் பின்னாடி வந்து அந்தக் கடையையும், அதுல அலங்காரமா அடுக்கியிருந்த பொம்மைகளையும் வெச்ச கண்ணு வாங்காம பார்த்தா. அவ கண்ணுல ஏக்கமான ஏக்கம். அந்தக் குட்டிப் பையன் அதைக் கவனிச்சுட்டான். “என்ன, உனக்கு அந்த பொம்மை வேணுமா?”ன்னு பெரிய மனுஷன் மாதிரி கேட்டான். அவ ஆமான்னு தலையாட்டினா. “சரி, வா!”ன்னு அவளைக் கடைக்குக் கூட்டிட்டுப் போனான் அந்தப் பையன்.  

“உனக்கு என்ன பொம்மை வேணும், சொல்லு?”னு கேட்டான். அந்தப் பொண்ணு ஒரு பொம்மையைக் காண்பிக்க, அதை சுவாதீனமா எடுத்து அவகிட்டே கொடுத்துட்டு, கடைக்காரரைப் பார்த்து, “எவ்ளோ சார் இந்த பொம்மை விலை?”ன்னு கேட்டான் அந்தப் பையன். 

ஆரம்பத்துலேர்ந்தே அந்தக் குட்டிப் பையனோட பெரிய மனுஷ தோரணையைப் பார்த்து மனசுக்குள்ளே ரசிச்சுட்டிருந்தார் அவர். ஏதோ அவர் விலையைச் சொன்னதும் பர்ஸ்லேர்ந்து நோட்டு நோட்டா எடுத்துக் கொடுத்துடறவன் மாதிரி அவன் பெரிய மனுஷ தோரணையில் கேட்கவும், ஒரு புன்னகையோடு, “நீ எவ்வளவு தருவே?”ன்னு கேட்டார். 

அவன் தன் டிராயர் பைக்குள் கை விட்டு, கடற்கரை மணல்ல பொறுக்கின சின்னச் சின்ன கிளிஞ்சல்களை வெளியே எடுத்து, அவர் மேஜை மீது பரப்பினான். அவரும் சீரியஸா பணத்தை எண்ணுறவர் மாதிரியே அந்தக் கிளிஞ்சல்களை ஒவ்வொண்ணா எண்ணினார். அப்புறம் அவனைப் பார்த்தார்.

அவன் முகம் வாடிப் போச்சு. “என்ன சார், பணம் குறையுதா?”ன்னு கவலையோடு கேட்டான். “சேச்சே! அதெல்லாம் இல்லே. நிறையவே இருக்கு”ன்னவர், ஒரு ஐந்தாறு கிளிஞ்சல்களை மட்டும் தன் பக்கம் நகர்த்திக்கிட்டு, “இதுதான் இந்த பொம்மை யோட விலை. மீதிப் பணமெல்லாம் உனக்குதான்”னார். அந்தப் பையன் ரொம்ப குஷியா அந்தக் கிளிஞ்சல்களை எடுத்துத் தன் டிராயருக்குள்ளே போட்டுக்கிட்டு, அக்காவோடு நடையைக் கட்டினான்.

இதைப் பார்த்துட்டிருந்த கடைப் பணியாள் ஒருத்தனுக்கு ஆச்சரியம் ப்ளஸ் குழப்பம்! அவன் தன் முதலாளியைப் பார்த்து, “என்னங்க ஐயா, விலை உசத்தியான அந்த பொம்மையை அந்தப் பையனுக்கு வெறும் அஞ்சு கிளிஞ்சலுக்கு வித்துட்டீங்க?”ன்னு பொறுக்கமாட்டாம கேட்டான்.

“அடேய், நமக்குத்தான் அது வெறும் கிளிஞ்சல். அந்தப் பையனைப் பொறுத்த வரைக்கும் அது பெரிய பொக்கிஷம். இந்த வயசுல அந்தப் பையனுக்குப் பணம்னா என்னன்னு தெரியாது; அதோட மதிப்பு புரியாது. பெரியவனாகும்போது கண்டிப்பா புரிஞ்சுப்பான். அப்போ, சின்ன வயசுல நாம நம்ம அக்காவுக்குப் பணத்துக்குப் பதிலா வெறும் அஞ்சே அஞ்சு கிளிஞ்சல்களைக் கொடுத்து ஒரு பொம்மையை வாங்கிக் கொடுத்தோமேனு அவனுக்கு ஞாபகம் வரும். அப்போ, இந்தக் கடையைப் பத்தியும் என்னைப் பத்தியும் நினைப்பான். இந்த உலகம் நல்ல மனிதர்களால் நிரம்பியதுதான்னு அவன் மனசுல ஓர் அழுத்தமான எண்ணம் விழும். அந்த பாஸிட்டிவ் எண்ணத்தை அவன் மத்தவங்களுக்கும் பரப்புவான். எனக்கு அதுதான் வேணும்!”னு சொல்லிட்டுப் புன்னகைச்சார் அந்தக் கடைப் பெரியவர்.
உண்மைதானே? மேலே சொன்ன அந்த டாக்ஸி டிரைவரும், ஸாரி கேட்டு லைட் ரிப்பேர் செலவுக்குப் பணம் வெச்சுட்டுப் போன முகம் தெரியாத அந்த நபரும் அப்படியான பாஸிட்டிவ் எண்ணங்களைத்தானே பரப்பிட்டுப் போயிருக்காங்க! அதுக்காக அவங்களுக்கு என்னோட மகிழ்ச்சியையும், மனப்பூர்வமான நன்றிகளையும் தெரிவிச்சுக்கறேன். 

‘ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும், ஒரு சேதி கொண்டு வருகிறது; கடவுள், மனித இனத்தை இன்னும் வெறுக்கத் தொடங்கவில்லை என்கிற சேதியே அது’ன்னு புகழ்பெற்ற ஒரு வசனம் உண்டு. அது மாதிரி, இந்த பொம்மைக் கடைக்காரர், டாக்ஸி டிரைவர் மாதிரியான நபர்களைப் பத்தின செய்திகள் வெளியாகுறபோதெல்லாம், மனித நேயம் முற்றிலுமாகத் தொலைஞ்சு போயிடலை; இன்னும் பல இடங்கள்ல அது உயிர்ப்புடன் தான் உலவிக்கிட்டிருக்கு என்கிற நம்பிக்கை விதை தூவப்படுதுன்னு நினைக்கிறேன்.  

என்ன ப்ரோ, கரெக்ட்தானே?! 

- இன்னும் பேசலாம்

குங்ஃபூ வீரர் புரூஸ் லீ, இளைஞர்களுக்குச் சொன்ன யோசனைகளில் ஒரு ஐந்து மட்டும் இங்கே…

**  உனது தவறுகள் மன்னிக்கப்படக்கூடியவையே, அவற்றை ஒப்புக்கொள்ளும் தைரியம் உனக்கு இருக்கும்பட்சத்தில்!

**   அறிவு உனக்கு சக்தியைத் தரும்; ஆனால், குணம்தான் மரியாதையைத் தரும்.

**    ஒரு செயல் குறித்து ரொம்ப காலம் சிந்தித்துக்கொண்டு இருந்தால், அதை ஒருநாளும் உன்னால் செய்து முடிக்க முடியாது. உனது இலக்கை நோக்கி தினம் ஓரடியாவது எடுத்து வைப்பது அவசியம்!

**   தோல்வி என்பது மனதைப் பொறுத்தது. தோல்வியை மனப்பூர்வமாக ஏற்காதவரையில் நீ தோல்வியாளன் இல்லை.

**   கற்றால் மட்டும் போதாது; கடைப்பிடிக்க வேண்டும். விரும்பினால் மட்டும் போதாது; வேலையில் இறங்க வேண்டும்!

No comments:

Post a Comment