Saturday, June 4, 2016

ஆடிப் பார்ப்போமா ஆடு புலி ஆட்டம்.... பழகிப் பார்ப்போமா பல்லாங்குழி ஆட்டம்!

ல்லாங்குழி தமிழகத்தின் பாரம்பர்ய விளையாட்டுகளில் ஒன்று. தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களில்  ஒன்றாகவும் திகழும் இவ்விளையாட்டு, முப்பது - நாற்பது வருடங்களுக்கு முன்பு வரையிலும், நம் தமிழ்ப்பெண்களின்  இன்டோர் கேமாகவும் விளங்கியது. 
தற்போது வாட்ஸ் அப், ஃபேஸ்புக், கேண்டி கிரஷ் (candy crush ) என்று நவீன  யுவதிகளாக மாறிவிட்ட இன்றைய தலைமுறை இளம் பெண்களுக்கு, பல்லாங்குழி  பற்றிய அறிமுகமாவது உண்டா என்றால், சந்தேகம்தான்.

அவர்களுக்காக... பல்லாங்குழி எப்படி ஆடுறதுன்னு பார்க்கலாமா....?

பல்லாங்குழி - மரம் அல்லது உலோகத்தால் ஆன ஒரு விளையாட்டுச் சாதனம். ஏழேழு குழிகளாக இரண்டு வரிசைகள், இந்த வரிசைகளுக்கு நடுவில் எதிரெதிர் திசைகளில் இரண்டு குழிகள் என்று மொத்தம் 16 குழிகளுடன் திகழும். புளியங்கொட்டைகள், சீத்தாப் பழ விதைகள், முத்துச் சோழிகள் ஆகியவையே இந்த ஆட்டத்துக்கான முத்துக்கள்.
புளியங்கொட்டைகள் அல்லது முத்துச் சோழிகளை குழிக்கு ஐந்து ஐந்தாகப் போட்டு வைப்பார்க்கள். முதலில் ஆடத் துவங்குவோர் ஏதேனும் ஒரு குழியில் இருக்கும் முத்துக்களை எடுத்து ஒவ்வொன்றாக... இடமிருந்து வலமாக அடுத்தடுத்த குழிக்குள் போடவேண்டும். முடிந்தவுடன் அதற்கடுத்த குழியில் உள்ள முத்துக்களை எடுத்து மீண்டும் அடுத்தடுத்த குழிகளில்  போட்டுக் கொண்டே வர வேண்டும். இப்படி முத்துக்களைப் போட்டு வரும்போது, கடைசி முத்தினைப் போட்டு முடித்ததும், அடுத்து ஒரு வெறுங்குழி வருமாயின் அதைத் தடவி அடுத்த குழியில் இருக்கும் முத்துக்களை உங்களுக்கானதாகச் சேகரித்துக்கொள்ளலாம்.

ஒரு குழியில் நான்கு முத்துக்கள் இருந்தால் அவற்றையும் ‘பசு’ எனச் சொல்லி தனதாக்க வேண்டும். இப்படி யார் அதிகமான முத்துக்களை சேகரிக்கிறாரோ அவரே வெற்றியாளர் ஆவார். எந்தக் குழியில் இருந்து முதலில் முத்துக்களை எடுத்துப் போட ஆரம்பித்தால், 'வெறுங்குழிக்கு முன்னதாக முத்துக்கள் முடியும், அடுத்துள்ள குழியில் இருக்கும் முத்துக்களைச் சேகரிக்க முடியும்' என்று முன்னரே யூகித்து விளையாடுவதே, இந்த ஆட்டத்துக்கு உரிய சவால்.

முத்துக்களை  இழந்தவர் (15 காய்களுக்கு குறைவாகக் கிடைத்தால்) தன்னுடையப் பகுதியில் மூன்று குழிகளைக் காலியாக (தக்கம்) விட்டு விட்டு, ஆட்டத்தைத் தொடர வேண்டும். அந்தக் குழியில் எதிரி (வென்றவர்) காய்களைப் போட மாட்டார். சில இடங்களில் தோற்றவரும் போடமாட்டார்.

ஆட்ட இறுதியில் ஒருவர் தோற்றுப் போகிறபோது, அவர் கையில் மீதமிருக்கும் காய்கள், ஒரு குழிக்குரிய ஐந்து எண்ணிக்கையில் கூட இல்லாமல் நான்காக இருந்தால் குழிக்கு ஒவ்வொரு காயினை இட்டு ஆட்டம் தொடரும். தோற்றவர் ஒரு காய் கூட இல்லாமல் தோற்கின்ற போதே, ஆட்டம் முழுமை பெறுகிறது.

இந்த விளையாட்டை  இருவர் மட்டுமே விளையாடலாம். தமிழர்களின் பண்பாட்டு மரபினில் பெண்ணுக்கு உரிய சீர்வரிசைப் பொருட்களிலும் பல்லாங்குழி  இடம் பெறுகிறது. மேலும் உலகெங்கிலும் பல்லாங்குழி ஆட்டம், சிற்சில மாறுதல்களுடன் பழங்குடிகளிடையே காணப்படுகிறது என்பது  குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலும் இருவர் மட்டுமே ஆடும் விளையாட்டாகத் திகழ்கிறது பல்லாங்குழி. ஒருவர் விளையாடும் விளையாட்டை 'சீதையம்மா விளையாட்டு' என்பர். அசோக வனத்தில் ராமரை நினைத்து சீதை விளையாடினாராம். முடிவே பெறாத விளையாட்டு இது.  ராஜா, ராணி, மந்திரி என மூவராக விளையாடும் ஆட்டமும் இதில் உண்டு.

பல்லாங்குழி, விரல்களுக்கு நடுக்கத்தைப்போக்கி வலிமையை தரும், சிந்தனையை ஒருமுகப்படுத்தும். கவனம் ஓரிடத்தில் குவிக்கப்பெறும், அதிக உடல் உழைப்பு தேவைப்படாத விளையாட்டு. பெண்களின் உள்ளார்ந்த பிரச்னைகளின் தீர்வாகவும், மனச்சோர்வைப்போக்கும் மருந்தாகவும் உள்ள விளையாட்டு இது.

நீங்கள் ஆடி பார்க்க ரெடியா...?

ஆடு புலி ஆட்டம்... ஆடிப் பார்ப்போமா?  

தமிழகத்தில் மட்டுமின்றி, தெற்காசிய நாடுகள் பலவற்றிலும் விளையாடப்படும் ஆடு புலி ஆட்டம், தமிழகத்தின் பாரம்பர்ய விளையாட்டுகளில் ஒன்று. வெட்டும்புலி என்றும், இன்னும் வேறுபல பெயர்களிலும் அழைக்கப்படும் இந்த விளையாட்டில், தரையில் கீற்றப்படும் கட்டங்களே பிரதானம். அதில் சிறு கற்கள் அல்லது புளியங்கோட்டை ஆகியவற்றை முத்துக்களாகக் கொண்டு ஆடுவர். சங்கப்பாடலில் இதனை 'வங்கா வரிப்பாரை' என்று குறிப்பிடுகிறார்கள். 

இது மதிநுட்ப விளையாட்டாகும். சாதாரணமாக கைகளை நகர்த்தி எளிதில் விளையாடக்கூடிய விளையாட்டில்லை இது. கூர்மையான சிந்தனை தேவை. நன்கு யோசித்து விளையாண்டால் மட்டுமே வெற்றி.
இதனை எவ்வாறு விளையாடுவது என்பதை தெரிந்துகொள்வோமா...? 
படத்தில் உள்ளது போன்று கட்டங்களை போட்டுக்கொள்ள வேண்டும். இந்த விளையாட்டுக்கு மொத்தம் 18 கற்கள் தேவை. அதில் மூன்று கற்கள், அளவில் சற்று  பெரிதாக இருக்கும். அவற்றைப் புலியாக பாவிக்கவேண்டும். அதேபோல்  15 சிறிய கற்களை எடுத்துகொண்டு அவற்றை ஆடுகளாக பாவித்துக்கொள்ள வேண்டும்.
வரையப்பட்ட கோடுகள் ஆடுகளும், புலியும் ஓடும் வழிகள். கோடுகள் கூடும் சந்திகள், காய்கள் வைக்குமிடம். புலிக் காய்கள், உச்சியில் ஒன்றும் அடுத்த சந்திகளில் இரண்டுமாக முதலில் வைக்கப்பட்டிருக்கும். ஆடுகள் ஒவ்வொன்றாகச் சந்திகளில் இறங்கும். ஒரு ஆடு இறங்கியதும், புலி அடுத்த சந்திக்கு நாலாப்பக்கமும் நகரும். நகரும்போது அடுத்த சந்தியில் ஆடு இருந்து, அடுத்த நேர்த்திசைச் சந்தி காலியாக இருந்தால் புலி வெட்டிவிட்டுத் தாவும்.

புலி இப்படி ஆடுகளை வெட்ட முயல்வதும், அதற்கு இடம் கொடுக்காமல் தற்காத்துக் கொள்வதுடன், புலியை நகரவிடாதபடி ஆடுகள் மறிப்பதும்தான் இந்த ஆட்டத்தின் ஸ்பெஷல்.

சின்ன வயசுல விளையாண்டது, எப்படி விளையாடுறதுன்னே மறந்துபோச்சுனு பீல் பண்ற 80'ஸ், 90'ஸ் ஹீரோ, ஹீரோயின்களுக்கு இப்ப இத படிச்சதுமே ஞாபகம் வந்திருக்குமே.... அப்ப விளையாட ஆரம்பிக்கலாமே...!!!!

நொண்டி ஆட்டம்


ஒற்றைக் காலால் நொண்டியடித்து ஆடும் ஆட்டம் இது. ஓடுபவர்களை, நொண்டி அடித்தபடி சென்று தொட்டு அவுட்டாக்குவார்கள். இத்தனைபேர்தான் விளையாட வேண்டும் என்பது இல்லை. எத்தனைபேர் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். தரையில் வட்டம் அல்லது சதுரமாக கோடு கிழித்து எல்லைக்கோடு போட்டுக் கொள்ள வேண்டும். ஓடுபவர்கள் இந்த எல்லையைத் தாண்டிவிடாமல் ஓடவேண்டும். நொண்டி வருபவர், அவர்களை விரட்டித் தொட முயற்சிக்கவேண்டும். ஓடுபவர்களைத் தொட்டுவிட்டாலோ, அவர்கள் எல்லையைத் தாண்டினாலோ போட்டியில் இருந்து வெளியேறுவர்.

நொண்டியடித்து செல்பவரின் கால் வலித்தால் குறிப்பிட்ட எல்லைக்குள் (காலை வைத்து) போடப்பட்டிருக்கும் சிறு வட்டத்தினுள் நின்று கொள்ளலாம். வட்டத்தை தவிர மற்றப் பகுதிகளில் காலை ஊன்றக் கூடாது.
இரு அணிகளைக் கொண்டும் இந்த விளையாட்டை விளையாடலாம். அவ்வாறு விளையாடும்போது, ஓர் அணி கைகோத்து ஆள்வட்டம் செய்து நிற்கும். மற்றோர் அணி வட்டத்துக்குள் இருக்கும். ஆள்வட்டம் சேர்த்து நிற்கும் அணியில் ஒருவர் நொண்டியடித்துச் சென்று, உள்ளே ஓடும் அணியினரைத் தொட்டு அவுட் செய்ய வேண்டும். அவருக்குக் கால் வலிக்கும்போது மீண்டும் ஆள்வட்டத்துக்கு வந்து கைகோத்துக்கொண்டு, அருகிலிருப்பவரை நொண்டியடித்து ஆட்டத்தைத் தொடரச் செய்வார்கள்.

தட்டாமல் ஆடுவோமா தட்டாங்கல் ஆட்டம்! 

ஒரே அளவிலான சிறிய உருண்டை வடிவிலான கூழாங்கற்களைக் கொண்டு சிறுமிகள் ஆடும் விளையாட்டு இது. 'பாண்டிக்கல்' என்றும் இதை அழைப்பார்கள்.  சங்க காலத்தில் இதன் பெயர் தெற்றி.

ஏழு கற்களைக் கொண்டு ஆடப்படும் இந்த ஆட்டத்தில் ஒண்ணான், இரண்டான், மூன்றான், நான்கான், ஐந்தான், ஆறான் , ஏழான், எட்டான், ஒன்பதான் மற்றும்  பத்தான் என பத்துப் பிரிவுகள் விளையாட வேண்டும். ஒவ்வொன்றுக்கும் எடுக்க வேண்டிய கற்களின் எண்ணிக்கைக்கும், எடுக்கவேண்டிய விதத்துக்கும் விதிமுறைகள் உண்டு.
முதலில் ஆரம்பிக்கும்போது ஏழு கற்களையும் கீழே போட்டுவிட்டு, அதில் ஒரு கல்லை 'தாய்ச்சிக் கல்' என்று கையில் எடுத்துக்கொள்வார்கள். இந்தக் கல்லினை மேலே வீசியெறிந்துவிட்டு, அது கீழே கைக்கு வந்து சேருவதற்குமுன், கீழே கிடக்கும் கற்களை அலுங்காமல் (ஒன்றை எடுக்கும்போது அடுத்தக் கல்லைத் தொட்டுவிடக் கூடாது) கையில் எடுத்துக்கொண்டு, மேலிருந்து விழும் தாய்ச்சிக் கல்லைப் பிடிக்க வேண்டும். இப்படி எல்லா கற்களையும் எடுத்ததும் முதல் ஆட்டம் முடிவுபெறும். இதுபோன்று 10 பிரிவுகள் ஆடவேண்டும். காய்களின் எண்ணிக்கை வெவ்வேறு ஊர்களில் வெவ்வேறு விதமாக மாறுபடும். ஆட்டத்தில் சுவாரஸ்யம் சேர்க்கும்விதம் பாடிக்கொண்டே விளையாடுவதும் உண்டு!

No comments:

Post a Comment