Friday, January 26, 2018


Advertisement
 சொல்கிறார்கள்
பூச்சி தாக்குதலே இருக்காது!
பாரம்பரிய நெல் குறித்து கூறும், புதுக்கோட்டை இயற்கை விவசாய உற்பத்தியாளர் கம்பெனி இயக்குனர்களில் ஒருவரான ஆதப்பன்: நம்மாழ்வார் தான், எனக்கு பாரம்பரிய நெல் வகைகளை அறிமுகப்படுத்தினார்.திருத்துறைப்பூண்டி ஆதிரெங்கத்தில் நடக்கும் நெல் திருவிழாவில், நெல் ஜெயராமனிடம் விதைகள் வாங்கி, முதலில் இங்கு விவசாயம் செய்தோம். அதன்பின் இங்கேயே பல விவசாயிகளிடம் பாரம்பரிய நெல் விதைகள் இருந்தன. அதை தேடிக் கண்டுபிடித்து, மற்ற விவசாயிகளுக்கும் கொடுத்து பயிரிடச்
சொல்லி, பரப்பி வருகிறோம்.இந்த ஆண்டு, 35 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிரிட்டிருந்தனர். இந்த ஆண்டும் எங்கள் பகுதிகளில் போதுமான அளவு மழை இல்லை. அதனால், சாதாரண ரகங்களை பயிரிட்டிருந்த விவசாயிகளின் வயல்கள் அனைத்தும் கருகி கிடந்தன.
ஆனால், அந்த கடுமையான சூழலையும், பாரம்பரிய நெல் வகைகள் தாக்குப்பிடித்து நிமிர்ந்து நின்றன. காரணம், அனைத்துமே குறைவான தண்ணீரில், நிறைவான லாபம் தரக்கூடிய நெல் ரகங்கள்.சிலருடன் ஆரம்பித்த எங்கள் பயணம், இன்று பல நுாறு விவசாயிகளிடம் சென்றிருக்கிறது. புதுக்கோட்டையில் மட்டும் எங்கள் விவசாயிகள், 300 ஏக்கருக்கும் மேல் பயிர் செய்து, நல்ல லாபத்துடன் அறுவடைசெய்திருக்கின்றனர்.பாரம்பரிய நெல் வகைகள் பொதுவாக வறட்சியையும், வெள்ளத்தையும் தாங்கக் கூடியன. அதனால், இவ்வகைகளை தொடர்ந்து பயிரிடும் போது, மண்ணின் உயிர்த்தன்மை அதிகரிக்கிறது.இதற்கு உரங்கள் இட வேண்டிய செலவும் இல்லை. இந்த ரகங்கள் அனைத்துமே, 3 முதல், 6 அடி வரை வளரக்கூடியது. அதனால், வைக்கோலும் அதிகம் கிடைக்கும். இந்த ரகங்களில், பூச்சித் தாக்குதலே இருக்காது.மேலும், ஒவ்வொரு ரகத்துக்கும், ஒரு சிறப்பான மருத்துவ குணம் உள்ளது. மாப்பிள்ளை சம்பா, நரம்புகள் சம்பந்தமான பிரச்னைக்கு நல்லது; பூங்கார், கருவுற்ற பெண்களுக்கு நல்லது; சண்டிகார் அரிசி, அதீத சுறுசுறுப்பை கொடுக்கும். பால்குடவாலை, பாலுாட்டும் தாய்மார்களுக்கு உதவும்.கருங்குறுவை அரிசியை, இந்தியன் வயாகரா என்கின்றனர். காலாநமக் அரிசி, அறிவுக்கூர்மைக்கு உதவும். குடவாழை அரிசி, குடல் நோய்களை தீர்க்கும். இதுபோல் ஒவ்வொரு அரிசியும், ஒரு மருந்தாக உள்ளது.நம் பாரம்பரிய நெல் ரகங்கள் எப்படி நீரை சேமிக்கின்றன; மண் வளத்தை கூட்டுகின்றன; மருத்துவ குணத்தை கொண்டுள்ளன என்பதை எல்லாம், நபார்டு உதவியுடன் ஆராய்ச்சி செய்து, ஆதாரபூர்வமாக கண்டறிந்துள்ளோம். அனைவரும் இதுபோன்ற பாரம்பரிய ரகங்களை பயிரிட்டு, பயனடைய வேண்டும்.

No comments:

Post a Comment