Sunday, January 21, 2018

காலை உணவு - டாக்டர் எஸ்.டி.வெங்கடேஷ்வரன்

நன்றி: தினமலர்


Advertisement
அடை சாப்பிட்டால் தொப்பைக்கு 'குட்பை'

காலை உணவு குறித்து கூறும், டாக்டர் எஸ்.டி.வெங்கடேஷ்வரன்: காலையில் எழுந்ததும், டீ மற்றும் காபிக்கு பதிலாக, சுக்கு மல்லி காபி குடிக்கலாம். காலை உணவே நம் உடலை காக்கும். நாள் முழுக்க இயங்க வேண்டுமெனில், காலை உணவை தவிர்க்கக் கூடாது.
டிபனோ அல்லது சாப்பாடோ, காலை உணவில் கண்டிப்பாக, தற்போது விற்கப்படும் பட்டை தீட்டப்பட்ட அரிசி, மைதா, பிரெட், ஓட்ஸ், கார்ன்பிளேக்ஸ், கஞ்சி உள்ளிட்டவற்றை தவிர்த்து, தினமும் சிறுதானியத்தை சமைத்து சாப்பிட வேண்டும்.நம்மில் பலரும், அடை என்ற உணவை மறந்தே விட்டோம். உயர் தரமான புரோட்டீனும், உடலுக்கு தேவையான, 'அமினோ ஆசிட்'டும் இதில் உள்ளது. அடையில், அதிகப்படியான பருப்பு வகைகளுடன், முருங்கை கீரை, வெங்காயம் மற்றும் காய்கறிகளும் சேர்க்கப்படுகின்றன.என்றும் இளமையாக இருக்க, சர்க்கரையை கட்டுக்குள் வைக்க, தொப்பை போடக் கூடாது என்பவர்களுக்கு, மிகச்சிறந்த உணவு அடை.சாதாரண அரிசியில் செய்யப்பட்ட இட்லி, இடியாப்பம், கஞ்சி போன்ற உணவுகள், சர்க்கரையை உடனே அதிகரித்து விடும்; எளிதாக செரிப்பதால், பசித்து, எதையாவது சாப்பிட்டபடியே இருப்போம். இதன் விளைவால் தான் தொப்பை ஏற்படுகிறது. ஆனால், சிறுதானியங்களில் நார்ச்சத்து இருப்பதால், சர்க்கரை உடனே அதிகரிக்காது.காலை டிபனுக்கு, கொத்துமல்லி, கேரட், கறிவேப்பிலை துவையல் மற்றும் வெங்காயம், வேர்க்கடலை, புதினா சட்னி என, தினமும் ஒன்றை செய்து சாப்பிடலாம்.காலை உணவில், புரதச்சத்து மிக முக்கியம். அதுவும், கார்போ ஹைட்ரேட்டுடன், புரதம் சேர்த்து சாப்பிடுவது மிக மிக நல்லது. அதனால் தான், இட்லி, தோசை, சாதம் இவற்றுடன், சாம்பார் செய்து சாப்பிடுகிறோம்.காலை உணவு முடித்து, இரண்டரை மணி நேரத்திற்கு பின், பழங்கள் சாப்பிடலாம். அந்தந்த சீசனில் கிடைக்கும் நம்மூர் பழங்களை சாப்பிடலாம்; அதே சமயம், ஜூஸ் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.பச்சை காய்கறிகளையும் துண்டுகளாக்கி சாப்பிடலாம். காய்கறியோ, பழங்களோ சாப்பிடும் போது, தண்ணீர் குடிக்கக் கூடாது; 20 நிமிட இடைவெளி விடுவதே நல்லது.இவ்வாறு, காலை உணவை சாப்பிடும் போது, நம் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்; மூப்பை தவிர்க்கலாம். 'ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்' கிடைக்கும்.முக்கிய விஷயம், காலை உணவை, வயிறு முட்ட சாப்பிடாமல், முக்கால் பாகம் மட்டும் சாப்பிட வேண்டும்.இந்த அளவை விட, மதிய சாப்பாட்டின் அளவு இன்னும் குறைவாகவும், அதை விட, இரவு குறைவாகவும் சாப்பிடலாம்.

No comments:

Post a Comment