Tuesday, January 16, 2018

குடும்ப ஒற்றுமை, சகோதரர்கள் நலம் பெருக அருளும் கணு பூஜை #Pongal thanks to vikatan.com

குடும்ப ஒற்றுமை, சகோதரர்கள் நலம் பெருக அருளும் கணு பூஜை #Pongal



கணு பூஜை

பொங்கல் பண்டிகைக்கு அடுத்தநாள் கொண்டாடப்படுவது `கணு பூஜை’ அல்லது `கணுப்பிடி பொங்கல்.  இதே தினத்தில்தான் மாட்டுப்பொங்கலும் கொண்டாடப்படுகிறது. 
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், போட்டதைத் தின்றுவிட்டு, காலமெல்லாம் நமக்காக உழைக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் திருநாள்தான் மாட்டுப் பொங்கல். 
அன்று மாடுகளை நன்றாகக் குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளுக்கு வர்ணம் பூசியும், கால்களுக்கு சலங்கை கட்டியும் அலங்கரிப்பார்கள். பிறகு வஸ்திரம் அணிவித்து, மாலை போட்டு பூஜை செய்வார்கள். பூஜை முடிந்த பிறகு மாட்டின் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருக்கும் மாலையை எடுத்து, வீட்டின் தலைவாசலில் கட்டுவார்கள். அப்படிச் செய்வதால், வீட்டில் இருக்கும் தோஷங்கள் எல்லாம் நீங்குவதுடன், சுபநிகழ்ச்சிகள் தடையில்லாமல் நடக்கும் என்பது தொன்றுதொட்டு வரும் நம்பிக்கை. 
மாட்டுப் பொங்கல் அன்று கன்னிப் பெண்கள், சுமங்கலிப் பெண்களிடம் இருந்து, பொங்கல் பானையில் கட்டியிருந்த மஞ்சளை வாங்கி, தினமும் அரைத்துப் பூசி வந்தால் விரைவில் திருமணம் கூடி வரும் என்பதும் ஐதீகம். கூட்டுக் குடும்பமாக இருந்த அந்தக் காலத்தில், பெரியவர்களின் அறிவுரைப்படி கீழ்க்கண்ட பாடலைப் பாடியபடி மஞ்சள் பூசுவார்களாம். 
அந்தப் பாடல்...
               ‎'மக்களைப் பெற்று, மனையைக் கட்டி
               ‎ மக்கள் வயிற்றிலே பேரன்பிறந்து,
               ‎ பேரன் வயிற்றிலே பிள்ளையைப் பார்த்து, 
               ‎கொட்டில் நிறையப் பசுமாடும், பெட்டி நிறைப் பூஷணமுமாக,
               ‎ தழையத்தழைய தாலிகட்டி புருஷனோடு
               ‎ பூவும், பொட்டுமாக நூறாண்டு நோய் நொடி இல்லாமல் வாழணும்'
பாடல் முழுவதும் இருக்கும் நேர்மறையான எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நல்ல வாழ்க்கை அமையும்.
தஞ்சை மற்றும் இதர பகுதிகளில் மாட்டுப்பொங்கல் நாளில் முந்தின தினம் படைக்கப்பட்ட மஞ்சளை, வீட்டுப் பெரியவர்களின் கையால் வாங்கிக்கொள்வார்கள். பிறகு அந்த மஞ்சளை குறுக்காக வளையம்போல நறுக்கி, நடுவில் துளையிட்டு, மஞ்சள் சரடில் கட்டி நோன்பு கயிறுபோல கழுத்தில் கட்டிக்கொள்வார்கள். இது கன்னிப் பெண்களின் சிறந்த மண வாழ்க்கைக்கும், சுமங்கலிப் பெண்களின் மாங்கல்ய பலத்தையும்அளிக்கும் என்கிற நம்பிக்கை உண்டு.
மாட்டுப் பொங்கலன்றுதான் குடும்ப ஒற்றுமைக்காகவும், சகோதரர்களின் நன்மைக்காகவும் பெண்கள் கணு பூஜை செய்வார்கள்.
பொங்கல் திருநாளில் சமைத்த வெள்ளை சாதம் மற்றும் சர்க்கரைப் பொங்கலை முழுவதுமாகச் சுரண்டி எடுக்காமல், மீதம் வைத்துவிடுவார்கள். 
மாட்டுப் பொங்கல்
கணு பூஜை செய்யும் நாளில் வீட்டுத் தோட்டத்திலோ அல்லது மாடியிலோ, திறந்தவெளியில் முதல்நாள் பொங்கல் படையலிட்ட இடத்தைச் சுத்தம் செய்து, கோலம் போடுவார்கள். அந்த இடத்தில் பொங்கல் திருநாளன்று மீதம் வைத்திருந்த சர்க்கரைப் பொங்கலை பானையுடன் வைப்பார்கள். அருகில் இலையைப் போட்டு, பொங்கலன்று எடுத்துவைத்திருந்த வெள்ளை சாதத்தை மூன்று பங்காகப் பிரித்து, முதல் பங்கில் தயிர்சாதமும், இரண்டாவது பங்கில் எலுமிச்சை சாதம் அல்லது மஞ்சள் பொடி தூவிய சாதமும், மூன்றாவது பங்கில் குங்குமம் மற்றும் மூன்றாவது என்று சூசகமாகச் சொல்லப்படும் சுண்ணாம்பு மிகச் சிறிதளவு சேர்த்த சிவப்பு சாதமும் தயார் செய்துகொள்வார்கள்.
பிறகு அந்த சாதத்தை மொத்தமாக சேர்த்து எடுத்துக்கொண்டு, 5, 7, 9 அல்லது 11 என்ற எண்ணிக்கையில் நெல்லிக்கனி அளவில் உருண்டைகளாகப் பிடிப்பார்கள். அந்த உருண்டைகளை 'காக்காய்ப்பிடி வைத்தேன், கணுப்பிடி வைத்தேன், காக்கைக் கூட்டம்போல் எங்கள் குடும்பமும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்’ என்று கூறிக்கொண்டே வைத்து, அத்துடன் கரும்புத்துண்டு, மஞ்சள்கொத்து, வெற்றிலை பாக்கு, பூ வைத்து சூரிய பகவானையும் குலதெய்வத்தையும், இஷ்டதெய்வத்தையும் வணங்கி, 'சகோதரர்கள் தங்களுக்குள் ஒர்றுமையுடனும், குடும்பத்தில் மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும்' என்றும், 'தங்களிடம் எப்போதும் பாசமாக இருக்க வேண்டும்' என்றும் இறைவனிடம் வேண்டிக்கொண்டு, மாட்டுப்பொங்கல் தினத்தில் கணுப் பிடி வைத்து கணு பூஜை செய்வார்கள். இந்த கணு பூஜை செய்யும் வழக்கம் உள்ளவர்கள் மட்டும்தான் செய்ய வேண்டும். அப்படி வழக்கம் இல்லாதவர்கள் குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் கணு பூஜை செய்யலாமா என்று கேட்டு செய்யலாம். 
பொங்கலை முன்னிட்டு சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்குப் பரிசுகளைத் தருவார்கள். இன்றைக்கும் கிராமப்புறங்களில் சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு சீர்வரிசை என்ற பெயரில் தரும் பரிசு, சகோதரிக்கு அவளுடைய புகுந்த வீட்டில் கௌரவம் தருகிறது.

No comments:

Post a Comment