இல்லறம் இனிக்க இனிய வழிகள்
Advertisement

இந்த உலகம் பரந்துபட்டது. அன்பும், உறவுகளும் பின்னிப்பிணைந்த கூட்டுக் கலவை தான் இவ்வுலக வாழ்வியல். இவை இல்லாமல் வாழ்க்கை முற்றுப்பெறாது. இந்த உறவுகளில் கணவன், மனைவி என்ற உறவு வலிமையானது என்று முன்னோர் சொன்னார்கள்.
வலி நிறைந்தது என்று இன்றைய தலைமுறை சொல்லிக் கொள்கின்றனர்.அம்மி மிதித்து அருந்ததி பார்த்து, நாளும் கோளும் தேர்வு செய்து மங்கல அணி கட்டப்பட்ட திருமண வாழ்க்கை கடந்த காலத்தில் வரமாக பார்க்கப்பட்டது. சொர்க்கமாக நினைக்கப்பட்டது. உறவில் உரிமையும், அன்பில் உண்மையும் இருந்தது. காலங்கள் கடந்தோடின; எல்லாம் மாறிப்போனது. உண்மையான அன்பிலும் உறவிலும் விரிசல்தான் எட்டிப்பார்க்கிறதே தவிர உயிர்த்துடிப்பு இல்லையென்றே சொல்லலாம். அதனால் தான் காவல் நிலையத்திலும், நீதிமன்றங்களிலும் படியேறி விவகாரத்துக்கேட்டு காத்துக் கொண்டிருக்கின்றனர் இன்றைய இளைய தலைமுறை.
விட்டுக்கொடுத்தல்
'விட்டுக்கொடுத்தவன் கெட்டுப் போனதில்லை' என்பது பழமொழி. இது இல்லற வாழ்க்கையின் இலக்கணம் என்பதனை மறந்துவிடாதீர்கள். கடந்த காலத்தில் ஆண் சம்பாதித்தான்; பெண் வீட்டிலிருந்தாள். ஆனால் இன்றைய நிலை அதுவல்ல. ஆணிற்கு இணையாக பெண் வேலைக்குச் செல்கிறாள். பணம் சம்பாதிக்கிறாள். இதனால் இணையர்கள் இருவருக்கும் இடையே ஈகோ எனும் கொடிய நோய் தொற்றிக் கொள்கிறது. இந்நோய்க்கு மருந்துமில்லை; மாத்திரையுமில்லை. விளைவு விவகாரத்து.இதற்காகவா இந்த இல்லறப் பாதையில் பயணித்தோம். யோசித்துப்பாருங்கள், வாழ்வது கொஞ்ச காலம் அதனை ஏன் வாழ்ந்து அனுபவிக்கத் தெரியவில்லை. திருமணம் ஆன சில மாதங்கள், சில வருடங்களிலேயே மண வாழ்க்கை கசந்துபோகிறது. நிச்சயித்த திருமணங் களிலும் இந்தநிலை என்றால், காதல் திருமணங்களில் எண்ணிக்கை ஒருபடி மேலேயே இருக்கிறது.
ஒரு கை தட்டினால் ஓசை வராது. இரண்டு கையும் சேர்த்து தட்டினால் அந்த ஓசை பத்து பேருக்குக் கேட்கும். அதே போல் தான் வாழ்க்கையும். ஆம் ஒருவர் பேசும் பொழுது ஒருவர் விட்டுக் கொடுத்துச் சென்றால் வீட்டில் அமைதி நிலவும். இரண்டு பேரும் நீயா நானா என்றால் கடைசியில் காலம்தான் ஜெயிக்கும். காலத்தை நாம் ஜெயிக்க முடியாது. எனவே இல்லற வாழ்க்கையில் ஈகோவை துாக்கி எறிந்து இன்பமாக வாழப் பழகிக் கொள்வது அவசியம்.
கடந்த காலத்தில் கூட்டுக் குடும்பமாக இருந்த போது, பிரச்னைகளை பெரியவர்கள் பேசித்தீர்த்தனர். அன்றைக்கு இணையம் இல்லை; அலைபேசி இல்லை. ஒருவருக் கொருவர் உண்மையாக, அன்பாக மனம்விட்டு பேசிக் கொள்ளும் மந்திரச்சாவி மட்டும் இருந்தது. அதனால் குடும்பங்களில் குழப்பம் இல்லை.
சமூகத்தில் ஆபத்து
ஆனால் இன்றைய நிலை... அவசர உலகம், இருபத்து நான்கு மணி நேரமும் இணையத்தில் இணைப்பு; சமூக வலைத்தளங்களில் இருத்தல் என்பதை தாண்டி எங்கே எப்பொழுது தங்கள் பிரச்னைகளை மனம் விட்டு பேசப் போகிறார்கள்? அதற்கான நேரமும் இல்லை; சூழலும் இல்லை. அதனால் தான் வாழ்க்கை திசைமாறுகிறது. வாழ்வின் வசந்தம் வறண்டு போகிறது. உண்மை காணாமல் போகிறது. உறவுகள் முறிந்து போகிறது. கல்யாணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர் என்பார்கள். அந்தப் பயிரை தண்ணீர் ஊற்றி வளர்க்கத் தெரியாமல் தரிசு நிலமாக்கிக் கொண்டிருக்கிறது இன்றைய தலைமுறை. வீட்டிலேயே பேசுவதை மறந்து முகம் தெரியாத மனிதர்களிடம் முகம் காட்டி தன் வாழ்க்கையை தொலைத்துக் கொண்டிருக்கும் சந்ததியினர் அதிகரித்து வருவது இச்சமூகத்தின் ஆபத்தினை எடுத்துரைக்கிறது. எனவே தம்பதியினர் மனம் விட்டுப் பேசுங்கள்; வீட்டுப் பிரச்னைகளை வீட்டுக்கு வெளியே எடுத்துச் செல்லாதீர்கள். மனம் போல் மாங்கல்ய வாழ்க்கை மகிழ்ச்சி தரும்.
மதுவும் மணமுறிவும்
சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தில் மது எனும் அரக்கனால் மணமுறிவு பெற்ற தம்பதியர் பலர். கணவன், மனைவிக்கிடையே எப்போதும் சண்டை நடப்பதால், ஒரு பாவமும் செய்யாத குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். பெற்றோர்களின் சண்டையால் பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன. போதை பழக்கமுள்ளவர்கள் அதனை மறந்து மனைவியை நேசித்து பிள்ளைகளிடம் அன்பு செலுத்துங்கள். இல்லறம் இனிக்கும்.கணவனும், மனைவியும் ஒருவரை ஒருவர் சந்தேகப்படுவது இல்வாழ்க்கையின் சந்தோஷத்தை சவக்குழிக்குள் கொண்டு போய்விடும்.
நம்பிக்கை தானே வாழ்க்கை
கணவன், மனைவி மீதும் மனைவி, கணவன் மீதும் நம்பிக்கை வைக்க வேண்டும். இல்லாத பொழுது கொலையும், தற்கொலையும் தலைதுாக்கி நிற்கும். இருவரிடமும் உண்மையும், அன்பும் இல்லாதபொழுதுதான் இதுபோன்ற வன்மங்கள் ஏற்படுகின்றன.இல்லற வாழ்க்கைக்கு தனிமனித ஒழுக்கம் அவசியம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற தமிழ்ப்பண்பாடு மீறும் பொழுது அங்கே அமைதியான வாழ்க்கை கேள்விக்குறியாகிறது. இன்றைய சமூகத்தில் கள்ளக்காதலால் நடக்கும் கொலையும், குடும்ப வன்முறையும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தம்பதியர் வாழ்க்கையில் அச்சமும் அவமானமும் குடிகொள்கிறதே தவிர ஆனந்தம் அசைபோடுவதில்லை. ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒழுக்கம் தவறி நடந்தால் அங்கே துன்பம் வருமே தவிர இன்பத்திற்கு ஒரு நாளும் வழியில்லை.
இல்லறம் நல்லறமாக
இல்லறம் எனும் பந்தம் நல்லறமாக சில தியாகங்களை இணையர்கள் இருவரும் செய்ய வேண்டும். நான் ஆண்... நான் என்ன வேண்டுமென்றாலும் செய்வேன் என்று கணவன் கூறக்கூடாது. மனைவியும் தான் பேசுவதே சரி என பிடிவாதம் செய்யக்கூடாது. தம்பதியர் தங்களுக்குள் இருக்கும் பிடிவாதத்தை துரத்திவிட்டு இருவரும் ஒருவராகப் பயணியுங்கள். பணத்திற்கான முக்கியத்துவத்தை விட அன்பிற்கு முக்கியத்துவம் தாருங்கள். ஒருவருக்கொருவர் உண்மையாக இருங்கள்; அன்பு செலுத்துங்கள். இணைந்து நின்று ஒருவொருக்கு ஒருவர் தோள் கொடுங்கள். இல்லறம் எனும் நல்லறத்தில்'அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கைபண்பும் பயனும் அது' எனும் வள்ளுவத்தின் வழிநின்று வாழப்பழகிக் கொண்டால் அந்த வாழ்க்கையை வரலாறு பேசும். இல்லத்தில் வசந்தம் குடிகொள்ளும்.-மு.ஜெயமணி
No comments:
Post a Comment