Saturday, June 27, 2020

ஒவ்வொரு நொடியும்... thanks to dinamalar.com

ஒவ்வொரு நொடியும்...
 எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28ஜூன்
2020
00:00
ஒரு நாளின், 24 மணி நேரத்தில், கல்லுாரி, வேலை, வீடு, நண்பர்கள் என்று, அனைத்துக்கும், அனைவருக்கும் நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது. சரியான நேரத்தில், வேலை செய்ய முடியாமல், 'டென்ஷன்' ஏற்பட்டு, அதனால், மன அழுத்தம் போன்ற நோய்களுக்கு ஆளாக வேண்டியுள்ளது. இதிலிருந்து தப்ப, சில, நேர மேலாண்மை டிப்ஸ்...
* துாக்கமும், சோம்பலுமாக பொழுதை கழிக்கும் வெட்டி ஆபீசர்களுக்கு, காலம் கொடுத்திருக்கும், அதே, 24 மணி நேரத்தையே, வெற்றியாளர்களுக்கும், மேதைகளுக்கும் கொடுத்திருக்கிறது என்ற உண்மையை உணர வேண்டியது, நேர மேலாண்மையின் முதல் படி
* எப்போதும், வேலை செய்ய அமர்ந்த அடுத்த, ஐந்து நிமிடங்களில் வேலையை துவங்கி விடுங்கள். இல்லையெனில், கணினி முன் அமர்ந்ததும், இணையத்தில் அலைபாய அரை மணி நேரம், 'வாட்ஸ் - ஆப்' செய்திகளுக்கு பதில் அனுப்ப, கால் மணி நேரம் என, தாமதப்படுத்தினால், வேலையின் துவக்க புள்ளி தள்ளிக்கொண்டே போகும்
* குறித்த நேரத்தில் வேலையை முடிக்க, உங்களை சுற்றி உள்ளவர்களிடம், பணி அட்டவணையை தெரியப்படுத்துங்கள். '10:00 மணிக்குள் இந்த வேலையை முடித்து, 11:00 மணிக்கு, வாடிக்கையாளரை பார்க்க போவதாக, அவனிடம் சொல்லிட்டோமே... முடிக்கலையா, கிளம்பலையான்னு கேட்பானே...' என்று, பக்கத்து இருக்கையில் உள்ளவருக்கு பதில் சொல்லும் சங்கடத்தை தவிர்க்க, குறித்த நேரத்தில் வேலையை முடிக்க பாருங்கள்
* பத்து சிறிய வேலைகள், அதோடு ஒரு முக்கியமான பெரிய வேலை, உங்கள் பொறுப்பில் இருக்கும்பட்சத்தில், பெரிய வேலையை முதலில் முடிப்பது, புத்திசாலித்தனம்
* 'டைம் லாக்கர் ஆப்'பை, நீங்கள் வேலை செய்யும் நேரத்தில், 'ஆன்' செய்து, வேலையை முடித்த பின், 'ஆப்' செய்ய வேண்டும். நீங்கள் நேரம் செலவழிக்கும் விதத்தை வாரம் ஒருமுறை, பட்டியல் மற்றும் புள்ளி விபரங்களுடன் இது காட்டிவிடும். நேர மேலாண்மைக்கும் கைகொடுக்கும் எளிமையான, 'ஆப்!'
* 'மை லைப் ஆர்கனைஸ்டு ஆப்'பில், சுற்றுலாவுக்கு செல்ல திட்டமிடுவது துவங்கி, பரீட்சைக்கு படிப்பது வரை, எல்லா வேலைகளையும் வரிசையாக பதிவு செய்ய வேண்டும். இதையடுத்து, குறிப்பிடப்பட்டிருக்கும் நேரத்தில், அதுவே உங்களை, 'அலர்ட்' செய்யும். இதை, 'கஸ்டமைஸ்' செய்து, 'மேப்'பில், செய்ய வேண்டிய விஷயங்களை குறித்து வைத்துக் கொள்ளலாம்
* 'டைம் ஷீட் - டைம் டிராக்கர் ஆப்' வேலைக்கு செல்வோரும், மாணவர்களும் அதிகம் பயன்படுத்துவது. 'புராஜெக்ட்' அல்லது 'அசைன்மென்ட்'டை முடிக்க எவ்வளவு நேரம் ஆகிறது என்பதை கணக்கிட்டு, 'கிராப்ட்' வடிவில் பார்க்க முடிவதோடு, கணினியிலும் பதிவேற்றலாம். ஒரு குழுவில் உள்ளோர், தனித்தனியாக வேலை செய்ய, எவ்வளவு நேரம் எடுக்கின்றனர் என்பதை சுலபமாக கணக்கிடவும் உதவும்
* வண்ண மை பேனாக்களில், நீங்கள் செய்யும் செயல்களை, 'பாக்கெட் டைரி'யில், தினமும் குறித்து வாருங்கள். உதாரணமாக, நேரத்தை வீணாக்க கூடிய செயல்களை, கருப்பு மை பேனாவாலும், வெற்றிகரமாக செய்து முடித்த காரியங்களை, பச்சையிலும், நிலுவையில் உள்ள வேலைகளை, சிவப்பிலும் குறித்துக் கொண்டே வர வேண்டும். எந்த நிறம், 'டைரி'யில் அதிகம் ஆக்கிரமிக்கிறதோ, அதிலிருந்து உங்களுக்கான நேர மேலாண்மை மதிப்பெண்களை பெற்றுக் கொள்ளலாம்
* குறைந்தபட்சம், வாரத்தின் ஏதாவது ஒரு நாளில், உங்கள் செயல்பாடுகளை மணிகணக்கில் குறித்து வைத்து, அன்று, யாரால் அல்லது எதனால் அதிக நேரம் வீணாக நேரிட்டது என்பதை கண்டறிந்து, சரி செய்து கொள்ளுங்கள்
* மிக சோர்வாக இருக்கும்போது, இழுத்து பிடித்து வேலை செய்வதை விட, 10 நிமிடம் ஓய்வெடுத்து, அதை தொடரும்போது, செயல் திறன் அதிகரிக்கும்
* பணத்தை போலவே நேரத்தையும், தேவையின்றி செலவழிக்காமல் சிக்கனப்படுத்துங்கள். பணம், போனால் வரும்; ஆனால், ஒருபோதும் திரும்ப கிடைக்காது, நேரம்

No comments:

Post a Comment