Monday, August 27, 2018

கவலைப்பட்டால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும் - நன்றி: தினமலர்

சொல்கிறார்கள்


கவலைப்பட்டால் உடல் வெப்பநிலை அதிகரிக்கும்!உடல் வெப்பநிலை சொல்லும் தகவல் குறித்து கூறும், குழந்தைகள் நல மருத்துவர், சி.திருப்பதி: அனைத்து ஜீவராசிகளுக்கும் மிகவும் அவசியமானது, உடல் வெப்பநிலை மற்றும் நாடித்துடிப்பும் தான். மனித உடலில் நடக்கும் அனைத்து வேதியியல் மாற்றங்களும், வெப்பநிலை சரியாக இருந்தால் தான் நடைபெறும்.குழந்தைகள் முதல், வயதானவர்கள் வரை, ஆரோக்கியமாக இருக்கின்றனரா என்பதை, உடல் வெப்பநிலையை வைத்து அறிந்து கொள்ள முடியும். மனித உடலின் சராசரி வெப்பநிலை, '98.6 டிகிரி பாரன்ஹீட்' அளவில் இருந்தால், அது இயல்பானது; அதை விட அதிகரித்தால் அல்லது குறைந்தால் இயல்பானதல்ல.உடல் வெப்பநிலை, 102 டிகிரி பாரன்ஹீட்டுக்கு அதிகமாகவோ, 96 டிகிரி பாரன்ஹீட்டுக்கு குறைவாகவோ செல்லக் கூடாது; அது மிக ஆபத்தான நிலை.வெப்பநிலை இயல்பை விட அதிகரிப்பது, 'ஹைப்பர் தெர்மியா' எனப்படும். இதை தான் காய்ச்சல் என்கிறோம். உடல் வெப்பநிலை சரியாக இருந்தால் தான், செல்களுக்கு தேவையான வெப்பம் கிடைத்து, வளர்சிதை மாற்றம் சரியாக நடைபெறும்.உடலின் வளர்சிதை மாற்றத்தை பொறுத்தே, ஒவ்வொருவரின் உடல் வெப்பநிலை மாறுபடும். வளர்சிதை மாற்றம் அதிகமாக நடைபெறுபவர்களின் உடலில், அதிக வெப்பம் காணப்படும்.எப்போதும் யோசித்துக் கொண்டே இருப்பவர்கள், எதையாவது நினைத்து கவலைப்படுபவர்கள், எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுபவர்களின் உடல் வெப்பநிலை, அதிகமாக இருக்கும். வைரஸ், பாக்டீரியா போன்ற நோய் தொற்றுகள் காரணமாக, உடலின் வெப்பநிலை அதிகரிக்கும்.மனதை அமைதியாக வைத்துக் கொள்பவர்கள், நேர்மறையான சிந்தனை உடையவர்களின் உடல் வெப்பநிலை, சரியாக இருக்கும். சுற்றுப்புறச்சூழலில், குறைந்த வெப்பநிலையின் போது, உடல் வெப்பநிலை சராசரி அளவை விட குறைவாகவே இருக்கும்.வெப்பநிலையை சரியான அளவில் பராமரிப்பதற்காக, மூளையில் வெப்ப சீர்நிலை தரும் கருவி இருக்கிறது. அது சுற்றுச்சூழலுக்கேற்ப, நம் உடல் வெப்பநிலையை பராமரிக்கும் வேலையை செய்கிறது.பச்சிளம் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளை ஒருவர் மாற்றி ஒருவர் கையாளக் கூடாது. ஒவ்வொருவரின் உடல் வெப்பநிலையும் மாறுபடும். அதனால், குழந்தைகளுக்கு உடல்நல கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.வயதானவர்களுக்கு, சுற்றுப்புற வெப்பநிலைக்கு ஏற்ப, அவர்களின் உடல் வெப்பநிலையை பராமரிக்க முடியாது. அதனால் தான், குளிர்காலத்தில் அதிக மரணங்கள் நிகழ்கின்றன. வயதானவர்கள் எப்போதும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.

No comments:

Post a Comment