Monday, August 6, 2018

பகல் நேரங்களில் துாங்கக் கூடாது! thanks to dinamalar.com

மாதவிடாய் குறித்த தகவல்களை கூறும், ஆயுர்வேத மருத்துவர் ஆர்.பாலமுருகன்: ஆயுர்வேதத்தைப் பொறுத்தவரை, பெண்களுக்கு பொதுவாக, 12 - 50 வயது வரை மாதவிடாய் சக்கரம் நிகழும். ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் வரும் கால இடைவெளி, வெளியேறும் ரத்தத்தின் அளவில் ஏற்படும் மாற்றத்தை வைத்து, வெளியேறுவது சுத்த ரத்தமா, அசுத்த ரத்தமா என, கண்டறிய முடியும். சராசரியாக, 28 நாட்களுக்கு ஒரு முறை, மாதவிடாய் ஏற்பட வேண்டும்.மாதவிடாய் ரத்தம், நல்ல சிவப்பில், கருஞ்சிவப்பு அல்ல, அடர்த்தியாக முயல் ரத்தத்தைப் போன்று இருக்க வேண்டும். மாதவிடாய்க்கு பயன்படுத்தப்படும் துணியை துவைத்தால், அந்த துணி, கறை படியாமல் இருக்க வேண்டும். சரியான மாதவிடாய் காலம், 3 - 5 நாட்கள் வரை இருக்கும். இதற்குக் குறைவான அல்லது மிகையான நாட்கள் வரை மாதவிடாய் ரத்தம் வெளியேறினால், அது குறைபாடுடன் கூடிய மாதவிடாய் என, கணக்கிடப்படுகிறது.வாதம் அதிகமான மாதவிடாய் ரத்தம், நுரைத்து இருக்கும். மிகக் குறைவாக வெளியேறும்; அதிதீவிரமான வலியை உண்டாக்கும். பித்தம் பிரதானத்தில் இருந்தால், அளவுக்கு அதிகமாக மாதவிடாய் ரத்தம், எரிச்சலோடு வெளியேறும். கப(ம்) ரத்தம் வெளியேறும் போது, உடலில் பாரம் இருக்கும். துர்நாற்றத்துடன் வெளியேறும் ரத்தம் வெளிர் நிறத்தில் இருக்கும். அரிப்பு, நமச்சல் உள்ளிட்டவை ஏற்படும்.மாதவிலக்கின்போது வலி, எரிச்சலை சரிசெய்ய, சீரகம், பெருஞ்சீரகம் உள்ளிட்ட மருந்துகளை எடுத்துக் கொள்ளலாம். குறைந்த மாதவிடாய் பிரச்னை உள்ளவர்கள், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், கருப்பட்டி, எள் ஆகியவற்றை உணவுடன் சேர்த்து சாப்பிடலாம்.மிகவும் தீவிரமாகவும், அதிக எரிச்சலுடனும், நீர்த்தும் மாதவிடாய் வெளியேறினால், கற்றாழை ஜெல், செம்பருத்திப்பூ சாப்பிடலாம். கட்டிக் கட்டியாக, வெளிர் நிறத்தில் வெளியேறும் மாதவிடாயை சரி செய்ய, மிளகு, துளசி, கற்பூரவல்லி சாப்பிடலாம். தைராய்டு, உடல் பருமன், ஹார்மோன் மாற்றம், உடலின் வளர்சிதை மாற்றம், பரம்பரை நோய், கருப்பையில் கட்டி, கருமுட்டை உருவாகாமல் இருத்தல், பிறவியிலேயே கருப்பை பிரச்னை. துரித உணவு, பாக்கெட் உணவை எடுத்துக் கொள்ளுதல், உடற்பயிற்சி செய்யாதிருத்தல், தினசரி வாழ்வில் உடல் உழைப்பு இல்லாதிருத்தல் உள்ளிட்ட காரணங்களாலும், மாதவிடாய் சுழற்சி காலம் மாறும்.மாதவிடாயின்போது அதிக பயணம் செய்யக் கூடாது. மன அமைதியுடன் ஓய்வு எடுக்க வேண்டும். பகல் நேரங்களில் துாங்கக் கூடாது. உப்பு, புளிப்பு, காரம் உள்ளிட்ட சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். மாதவிடாயின்போது உடலுறவில் ஈடுபடக் கூடாது. இவற்றை பெண்கள் தவறாது பின்பற்றினால், எந்த நோயும் ஏற்படாததுடன், சீரான மாதவிடாய் சுழற்சி ஏற்படும். வரக்கூடிய சந்ததியினரும் ஆரோக்கியமாக இருக்க வழிவகுக்கும்.

No comments:

Post a Comment