Tuesday, March 28, 2017

மகளிர் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிய மரபும் உணவும்! நலம் நல்லது-60 #DailyHealthDose thanks to vikatan.com

மகளிர் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிய மரபும் உணவும்! நலம் நல்லது-60 #DailyHealthDose

நலம் நல்லது
ன்றைக்கு பார்பி டால்களையும் டெடி பியர்களையும் அணைத்துத் தூங்குகின்றன ஜென் இஸட் குழந்தைகள்! ஒரு காலத்தில் செப்புச்சாமான் விளையாட்டுதான் நம் மருத்துவ உணவு மரபையும், பாட்டி வைத்தியத்தையும் காப்பாற்றி வைத்திருந்தது. அதுதான் மகளிர் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிய மரபும் உணவும் மறைந்துபோகாமல், வழிவழியாக அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த உதவியது. இன்று எட்டிப் பிடிக்கவே முடியாத உயரத்துக்குப் போய்விட்டது அந்த மரபார்ந்த விளையாட்டு! செப்புச் சாமான் சொல்லிக்கொடுத்த வாழ்வியலை, பார்பி பொம்மைகளால் நிச்சயம் கற்றுத் தரவே முடியாது. `ஒல்லி இடுப்புடன் (ஸ்லிம் உணவுப் பொருட்கள் + உடற்பயிற்சிக் கருவிகளுக்கான வணிகம்), விதவித சாயங்களுடன் (அழகு சாதனப் பொருட்களின் விற்பனை), எண்ணெயில்லாத தலைமுடியை விரித்துப் போட்டிருப்பது (அழகு நிலைய வர்த்தகம்) பெண்ணுக்கு அழகு’ என நிலைநிறுத்துவதற்காகவே படைக்கப்பட்டவை அந்த பார்பி பொம்மைகள்.
மகளிர்
பெண் குழந்தைகளுக்கு பார்பி பொம்மைகளை ரோல் மாடலாக்கி, மெல்லிடை உடம்புக்காக, `பசிக்கலை; பிடிக்கலை’ என்று சாக்குப் போக்குச் சொல்லவைத்ததால், வளரிளம் பருவத்தில் பெண்களுக்கு உண்டான நோய்கள் ஏராளம்! பாலிசிஸ்டிக் ஓவரி, அனோரெக்ஸியா நெர்வோஸா, இர்ரிடபுள் பவுல் சிண்ட்ரோம் போன்ற வயிறு, குடல், மனம், சினைப்பை சார்ந்த நோய்கள் பெண்களிடையே பெருகுவதை, இந்தப் பொம்மையின் உளவியலோடு ஒப்பிடும் ஏராளமான ஆய்வு முடிவுகள் இணையத்தில் கொட்டிக்கிடக்கின்றன. முன்னர் மாதவிடாய் நாட்களில் `தீட்டு’ எனக் காரணம் சொல்லி ஒதுக்கிவைக்கப்பட்டாலும், அந்தக் குறிப்பிட்ட நாட்களை ஓய்வாகக் கழித்தனர் நம் பாட்டி, அத்தைமார்கள். ஆனால், இன்றோ `மாதவிடாய்க் கால ஓய்வு’ என்ற ஒன்றே பெண்களுக்கு இல்லாமல் போய்விட்டது. `அந்த நாளிலும் நான் ஆறு செட் டென்னிஸ் விளையாடுவேன்’ என்ற விளம்பரம் தன்னம்பிக்கை கொடுத்தாலும், அது அந்தக் குறிப்பிட்ட நாப்கினை வாங்குவதற்கான தூண்டுதலே தவிர, பெண்ணின் உடல்நலம் மீதான கரிசனம் அல்ல. இப்போதெல்லாம் உதிரப்போக்கு வேதனையைத் தாங்கும் உடல் வன்மையைப் பெண்களுக்கு அளிக்கும் உணவைப் பற்றி யாரும் கண்டுகொள்வதே இல்லை. நவீனம் சொல்லும் தொலி உளுந்து, சோயா, பப்பாளி மட்டும்தான் பெண்ணுக்கானதா? நிச்சயம் இல்லை. மகளிர் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிய மரபும் உணவும் இன்றைக்கு இல்லவே இல்லை.
பார்பி பொம்மை
 ​​​பெண்களின் உடல்நலத்துக்கு என பல ரெசிப்பிக்கள் நம் மரபிலேயே இருக்கின்றன. அவற்றில் சில...
* பெண்ணுக்குத் தேவையான பிரத்யேக புரதங்கள் நிறைந்த பருப்பு உசிலி, முக்கியமான ஒன்று. எந்தக் காய்கறியிலும் இந்த உசிலியைச் சேர்த்துத் தயாரிக்க முடியும். குறிப்பாக, கொத்தவரை - பீன்ஸ் ஜோடி ஹிட். கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து, கொஞ்சம் பெருங்காயம், மிளகாய், உப்புடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். வாணலியில், கடுகு உளுத்தம் பருப்புடன் தாளிக்கும்போது இந்தப் பருப்பு விழுதை வதக்கி, வேக வைத்து, அதன் பின்னர் காய்கறிகளைச் சேர்த்துத் தயாரிக்கவும். பருப்பு உசிலி பெண்களுக்கான புரதம் நிறைந்த ஆரோக்கிய உணவு.  
கதம்ப உசிலி
* நாம் மறந்துபோன காய்களில் ஒன்று அத்திக்காய்; துவர்ப்புத் தன்மைகொண்டது. இதன் கனி, அதிக நார், இரும்புச்சத்து, அனைத்து வைட்டமின்கள் நிறைந்தது. காயாகவும் கனியாகவும் சாப்பிடக்கூடிய அத்தியின் பயன் குறித்து, நம் ஊர் சித்த மருத்துவத்திலும், பைபிளிலும், கிரேக்க இலக்கியத்திலும்கூடச் சொல்லப்பட்டிருக்கிறது. பெண் குழந்தைகள் கண்டிப்பாகச் சாப்பிடவேண்டிய கனி. மாதவிடாய்க்கு முந்தைய நாளில் திடீரென வரும் மூக்கடைப்பு, தும்மலுக்கு சித்த மருத்துவம் சொல்லும் மருந்து அத்திக்காய் பச்சடி.
அத்தி
* வாழைப்பூவைச் சமைப்பது கஷ்டம் என்பதால், கிட்டத்தட்ட அதைத் தவிர்த்தேவிட்டோம். ஆனால், இளம் பெண் குழந்தைகளில் மாதவிடாய் தொடக்கக் காலத்தில் வரும் அதிக ரத்தப்போக்குக்கு வாழைப்பூவும் துவரம் பருப்பும் உணவாகும் மருந்து. பெண் குழந்தைகளுக்கு வாழைப்பூ வடகம் செய்து காயவைத்துக் கொடுக்கலாம்.
வாழைப்பூ
* 11 முதல் 45 வயது வரை மாதவிடாய்க் காலங்களில், இரும்புச்சத்து, கால்சியம் சத்து, புரதச்சத்து என நவீன அறிவியல் பரிந்துரைக்கும் உணவியல் கூற்றுடன் பித்தத்தைச் சீராக்கும் உணவும் பெண்ணுக்கு மிக அவசியம்.
* இன்று பெருகிவரும் `பாலிசிஸ்டிக் ஓவரி’ எனும் சினைப்பை நீர்க்கட்டி வராமல் தடுக்க, குழந்தைப் பருவம் முதலே பெண்களுக்கு உணவுதான் மிக மிக அவசியம். பல குழந்தைகளுக்கு துவர்ப்பும் கசப்பும் பிடிக்காத சுவையாக மாறிவருகின்றன. வெறும் இனிப்பும், கூடுதல் எண்ணெயில் பொரித்தவையும் மட்டுமே குழந்தைகளுக்குப் பிடித்ததாக ஆகி வருகின்றன. இரண்டுமே, பின்னாளில் சினைப்பை நீர்க்கட்டி பெருக அடித்தளம் அமைக்கும். அதிகபட்ச மருத்துவக் குணமுள்ள துவர்ப்பு, கசப்பு சுவையுள்ள காய் கனிகளை சாப்பிடப் பெண் குழந்தைகளைப் பழக்கினாலே போதும்... பல வியாதிகளை நம்மால் விரட்டிவிட முடியும். மகளிர் ஆரோக்கியத்தைக் காப்பாற்றிய உணவும் மரபும் நம் பாரம்பர்யம். அதை நினைவில் கொள்வோம்.
மரபுகள் தானாக மாறவில்லை, நாம்தான் தொலைக்கிறோம்... சில சமயம் திட்டமிட்டு; சில நேரம் திருடப்பட்டு!

No comments:

Post a Comment