Thursday, March 2, 2017

இந்தியன் டாய்லெட்... வெஸ்டர்ன் டாய்லெட்... எது பெஸ்ட்? thanks to vikatan.com

இந்தியன் டாய்லெட்... வெஸ்டர்ன் டாய்லெட்... எது பெஸ்ட்?

கடனில்லா வாழ்க்கை ஆனந்தம். அதிலும் ஒவ்வொருவரும் தீர்த்தே ஆகவேண்டிய முக்கியக் கடன் காலைக் கடன்! காலை நேரத்தில், வயற்காட்டுப் பக்கமும், ஆற்றங்கரைப் பக்கமும் ஒதுங்கவேண்டிய பிரச்னை இன்றைக்குப் பெரும்பாலும் இல்லை. பல வீடுகளில் கழிப்பறை வசதி வந்துவிட்டது. இருந்தாலும், இயல்பாகவே பலருக்கும் இருக்கிற அந்நிய மோகம், கழிப்பறையையும் விட்டுவைக்கவில்லை. `எங்க வீட்ல வெஸ்டர்ன் டாய்லெட்’ என்று பெருமை பொங்கச் சொல்பவர்களும் உண்டு. ரயில்கள், சினிமா தியேட்டர்கள், மால்கள் என எல்லாப் பொது இடங்களிலும் வெஸ்டர்ன் டாய்லெட் வந்துவிட்டது. சொல்லப்போனால், அதிக அளவில் பயன்படுத்தப்படுவது இந்தக் கழிவறைகளே! மேற்கத்திய பாணி கழிவறையை உபயோகப்படுத்துவது எந்த அளவுக்கு ஆரோக்கியமானது என்பது ஒருபுறம் இருக்கட்டும்... `மனிதர்களின் இயல்பான குத்தவைத்து அமரும் நிலையில் (Squatting Method) மலம் கழிப்பதே சிறந்தது’ என்கிறார்கள் மருத்துவர்கள். ஏன்?  
டாய்லெட்
கால்மூட்டுகள் வளைந்து, பிட்டம் பாதத்துக்கு அருகில் இருக்கிற மாதிரி வைத்துக்கொண்டு, மேல் உடம்பை வளைத்து, குந்தியிருக்கும் நிலைதான் (Squatting Position) ஓர் இயற்கையான காலைக் கடன் கழிக்கும் முறை. மனிதன் பூமிக்கு வந்த நாளில் இருந்து அன்றாடக் கடனைத் தீர்க்கும் முறை இப்படித்தான். கருவில் இருக்கும்போதே குழந்தை இந்த நிலையில்தான் இருக்கும். மனிதனின் நாகரிகம் வளர்ந்து, தனக்கென வீடு, உடை, உணவுக்கு வேளாண்மை, தனிமனித-சமூக ஒழுக்கங்கள் எல்லாம் மேம்பட்ட நிலையிலும் குந்தவைத்து அமர்ந்துதான் காலைக் கடனைக் கழித்தான். இந்த நிலையில் அமர்வதால், மனிதர்களுக்குக் கிடைக்கும் அரிய நன்மைகள் குடல் நோய்கள், மலச்சிக்கல், இடுப்புத் தசை நோய்கள் வருவதைத் தவிர்க்கலாம் என்பதே!
ஆயுர்வேதத்தில் இப்படி அமரும் நிலையை `மலாசனம்’ என்று குறிப்பிடுகிறார்கள். இப்படி அமர்ந்தால், மலம் வெளியேறுவது எளிதாக நடைபெறும். மலாசனத்தில் குந்தவைத்து அமர்வதன் மூலம், இடுப்பு மூட்டுகள் ஆரோக்கியமாகும். மலாசனத்தின்போது கொடுக்கப்படும் அழுத்தத்தினால், தசைகள் வலிமையடையும். மூலநோய் வராமல் தவிர்ப்பதும் சாத்தியம்.
வெஸ்டர்ன் டாய்லட்
இனி, மேற்கத்திய பாணி டாய்லெட்டுக்கு வருவோம்... இது கண்டுபிடிக்கப்பட்டது 16-ம் நூற்றாண்டில்! ஆரம்பத்தில் அதற்கான மாதிரி வடிவமே கொஞ்சம் வேடிக்கையானது. ஒரு சிம்மாசனத்தில் ஒரு பெண்ணோ, ஆணோ அமர்ந்திருப்பதுபோல வடிவமைத்திருந்தார்கள். ஆனால், விற்பனையில் சோபிக்கவில்லை. ராயல்டி... அதனால் அதிக விலை என்று மக்கள் வெஸ்டர்ன் டாய்லெட் பக்கம் போகாமல் கொஞ்சம் தள்ளியே நின்றார்கள். ஆனால், அடுத்த சில நூற்றாண்டுகளிலேயே மெள்ள மெள்ள ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்குள் ஆழமாக ஊடுருவிட்டது இந்த பாணி. புழக்கத்துக்கு வந்த பிறகு, 19-ம் நூற்றாண்டில் மேற்கத்திய மக்களுக்கு இது வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. இன்றைக்கு இந்தியா, பாகிஸ்தான், சீனா, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் இந்த பாணி கழிப்பறைகளின் பயன்பாடு அதிகமாகிவிட்டது. 
சில பத்து வருடங்களாக மேற்கத்திய நாடுகளில் குடல் சம்பந்தமான அப்பெண்டிசைட்டிஸ், மலச்சிக்கல், மூலநோய், இர்ரிட்டபுள் பவுல் சிண்ட்ரோம் போன்ற நோய்கள் பரவலானதற்கு காரணங்கள், அவர்களின் உணவு மற்றும் வாழ்வியல் முறைகள். இதைத் தொடர்ந்து ஆய்வு செய்த விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் இந்த நோய்களுக்கு முக்கியக் காரணமாக ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்... அது, வெஸ்டர்ன் டாய்லெட். அதாவது, மேற்கத்திய பாணி கழிவறையில் உட்கார்ந்து மலம் கழிப்பது, மனித உடல் அமைப்புக்கு எதிரானது என்கிறார்கள். அதனாலேயே இதைத் தவிர்க்கச் சொல்லி வலியுறுத்தவும் செய்கிறார்கள். இதற்கு மாற்றாக இருப்பது, நம் பழைய பாணி குந்தவைத்து காலைக்கடன் கழிக்கும் முறையே! 
இந்தியன் டாய்லட்
இந்திய பாணி டாய்லெட் நல்லது... ஏன்? 
மனிதர்களால் மலத்தை அடக்க முடியுமா? ஆசனவாயில் உள்ள சுருக்கத்தை தம்கட்டி லேசாக இழுத்துப் பிடிப்பதன் மூலம் சிறிது நேரம் அடக்கலாம். நீண்ட நேரத்துக்கு இப்படி அடக்க முடியாது. அதாவது, ஆசனவாய் தசையால், இதைத் தன்னிச்சையாக கட்டுப்படுத்த முடியாது. நமது உடலிலிருந்து வெளியேறும் மலக்கழிவுகளின் நிலை, மலக்குடலுக்கும் ஆசனவாய்க்கும் இடையே உள்ள வளைவைச் சார்ந்து இருக்கிறது. நாம் நின்றுகொண்டிருக்கும்போது, 90 டிகிரியில் இருக்கும் `அனோரெக்டல் கோணம்’ (Anorectal Angle) எனப்படும் இந்த வளைவின் விரிவு மலக்குடலுக்கு மேல்நோக்கி அழுத்தம் கொடுத்து, மலம் வெளியேறாமல் வைத்திருக்கும். ஸ்குவாட்டிங் பொசிஷனில் அமரும்போது, இந்த வளைவு சீராகும்.  

தோட்டக்குழாயிலிருந்து தண்ணீர் வெளியேறும்போது குழாயில் இருக்கிற முறுக்குத் தன்மை எப்படி வளைவில்லாமல் நேர்த்தன்மைக்கு வருகிறதோ, அதேபோன்று குந்தவைக்கும் நிலையில், நம் மலக்குடலின் வளைவு நேராகி மல வெளியேற்றம் எளிதாகிறது. ஆக வெஸ்டர்ன் டாய்லெட் வேலைக்காகாது. நம் இந்திய பாணி கழிவறைகளே காலைக்கடன் கழிக்கச் சிறந்தவை. 

கர்ப்ப காலங்களிலும், அதிக உடல் பருமனாலும் மூல நோய் வரலாம். அடிவயிற்றில் கொடுக்கப்படும் அழுத்தத்தால், மலக்குடல் பாதிக்கப்பட்டு, மலக்குடல் வழியாக ரத்தம் கசியும் வாய்ப்பும் உண்டு. அதனால், குந்தவைத்து அமரும் நிலையில் மலம் கழிக்கிறபோது, வயிற்றுப் பகுதியில் அழுத்தம் குறையும். அதோடு, மலம் கழிப்பதும் எளிதாக இருக்கும். 
`எங்களுக்கு வேறு வழியில்லை... வெஸ்டர்ன் டாய்லெட் வசதிதான் இருக்கிறது’ என்கிறவர்கள் ஒன்று செய்யலாம்... கால்களுக்குக் கீழே முக்காலிருந்து ஓர் அடி உயர ஸ்டூலைப் போட்டு, அதில் கால்களை வைத்துக்கொண்டு மலம் கழிக்கலாம். பிரச்னை இல்லாமல் இருக்கும்.

No comments:

Post a Comment