இந்த 8 காரணங்களுக்காக இளஞ்சூடான தண்ணீரை குடிங்க..! #HealthTips
உடலில் 70 சதவிகிதம் அளவுக்கு நீர் இருக்கிறது. செல்கள், செல்களின் வெளிப்புறம், ப்ளாஸ்மா, ரத்தம், உமிழ்நீர் என பெரும்பாலும் நீரால் சூழப்பட்டிருக்கும் நம் உடலுக்கு தண்ணீர் மிகவும் அவசியம்.

*குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் உடலில் அதிக அளவில் நீர் இருக்கும்.
*அடுத்ததாக, ஆண்களுக்கு அதிக அளவில் இருக்கும்.
*ஆனால், பெண்களுக்கு குழந்தைகளைவிடவும் ஆண்களைவிடவும் குறைவான அளவிலேயே உடலில் நீர் இருக்கும். இதனால் பெண்கள் அதிக அளவில் நீரை அருந்தவேண்டும்.
தண்ணீர் ஏன் தேவை?
செல்கள் உருவாக, கட்டமைக்க என அடிப்படை தேவைக்கே நீர் அவசியம். உடல் வெப்பத்தை கட்டுப்படுத்த, சுவாசத்தை சீர்ப்படுத்த, மூளை, முதுகுத்தண்டு போன்றவற்றுக்கு ஷாக்அப்சர்பராக செயல்பட, கழிவுகளை சிறுநீர் வழியாக வெளியேற்ற, மாவுச்சத்து நிறைந்த உணவுகளை செரிப்பதற்காக என பெரும்பாலும் நீரே அனைத்துக்கும் அடிப்படை.
உடலில் நீர் குறைந்தால் என்ன ஆகும்?
* மலச்சிக்கல்
* உடலின் வெப்ப நிலையில் மாற்றம்
* செரிமானக் கோளாறு
* வயிற்றுப்புண்
* மூட்டுவலி
* சிறுவயதிலே முதிர்ச்சியடையும் நிலை
* வறண்ட சருமம் மற்றும் கூந்தல்

இளஞ்சூடான நீரை பருகுவதால் பெறும் நன்மைகள் என்னென்ன?
பொதுவாகவே, இளஞ்சூடான உணவுகளுக்கு மியூகஸ் எனும் திரவத்தை (சளி) குறைக்கும் தன்மை உண்டு. இளஞ்சூடான நீர் (Warm Water), சூப் போன்றவை குடிப்பதால், மூக்கு, தொண்டை, இரைப்பை மற்றும் குடல் ஆகியவற்றில் இருக்கும் மியூகஸ் திரவம் குறைவதோடு, அந்த இடங்களில் வைரஸ் மற்றும் பாக்டீரியாவின் வளர்ச்சியும் குறைகின்றது.
* அடிக்கடி இளஞ்சூடான நீரை அருந்திவந்தாலும், மியூகஸ் திரவம் உடலிலிருந்து வெளியேறும்.
* சீன மருத்துவத்தின் படி, செரிமான மண்டலம் சிறப்புடன் செயல்பட அதிகாலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரை அருந்துவது நல்லது. குடல் செயல்படுவதற்கான 'கிக் ஸ்டார்ட்டே' இளஞ்சூடான நீர்தான்.
* நீர்ச்சத்து குறைபாடால் ஏற்படும் தசைபிடிப்பு பிரச்னை நீங்கும். சருமம், வறட்சியாவது தடுக்கப்படும்.
* பொதுவாகவே, வயிற்றில் உள்ள வெப்பம் அதிகமாக இருப்பதால், வெதுவெதுப்பான நீரை பருகும்போது, உணவை உடைக்கவும் செரிக்கவும் உதவுகிறது. இதை வாசோடிலேட்டரி எஃபெக்ட் (Vasodilatory Effect) என்பர். இதனால், ரத்த நாளங்களின் வீக்கம் குறைந்து, ரத்த அழுத்தமும் கட்டுக்குள் வருகிறது. சாதாரண தண்ணீரை பருகுபவரை விட இளஞ்சூடான நீர் குடிப்பவருக்கு உணவுக்குழாய் பிரச்னைகள் வராது.
* வளர்சிதை மாற்றம் சீராகும். எடை குறைக்க விரும்புபவர்களுக்கு ஒரு நற்செய்தி, உடல் எடைக் குறைய பெரிதும் உதவுக்கூடியது இந்த இளஞ்சூடான நீர்தான். இதனுடன் சிறுநீரகம், இரைப்பை மற்றும் குடல் ஆகியவை சிறப்பாக செயல்பட உதவுகிறது.

* மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள், வெதுவெதுப்பான நீரில், எலுமிச்சைப் பழச்சாறு மற்றும் தேனை, தலா நான்கு சொட்டு விட்டு வெறும் வயிற்றில் குடித்துவந்தால் மலச்சிக்கல் தீரும். கழிவுகள் சுலபமாக வெளியேறும் என ஹோமியோபதி மருத்துவம் பரிந்துரைக்கிறது. இந்த வெந்நீர் சிகிச்சையை உடல்பருமன் பிரச்னை இருப்பவர்களும் கொலஸ்ட்ரால் பிரச்னை இருப்பவர்களும் அவசியம் பின்பற்றி வந்தால் விரைவில் மாற்றம் தெரியும்.
* கெட்ட கொழுப்பை குறைக்கும் என்பதால் பாரம்பர்ய சீன மருத்துவமும் வெதுவெதுப்பான நீரை குடிக்கச் சொல்லி பரிந்துரைக்கிறது. ஸ்லிம்மான உடலமைப்பு வேண்டும் என விரும்புபவர்கள், சாதாரண நீரை விட இளஞ்சூடான நீரை தொடர்ந்து அருந்துவது நல்லது. அதாவது, இது ஒரு பழக்கமாகவே மாற வேண்டும்.
குறிப்பு: பயணம் செய்பவர்கள், இளஞ்சூடான நீரை அவ்வப்போது குடிக்க முடியாதவர்கள், ஒரு ஃப்ளாஸ்கில் சூடான நீரை ஊற்றிவைத்து அவ்வப்போது குடித்து வரலாம். உணவுக்கு பிறகு 20 நிமிடங்கள் கழித்து நீரை அருந்துவது நல்லது.
No comments:
Post a Comment