Saturday, March 25, 2017

Meaning of Tamil new year thanks to dinamalar

எது வந்தாலும் எதிர் கொள்வோம்!
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

26மார்
2017 
00:00
மார்ச், 29 - தெலுங்கு புத்தாண்டு

கடந்த ஆண்டில் நடந்த விரும்பத்தகாத சம்பவங்கள், புதிய ஆண்டில் நடக்கக்கூடாது; அப்படியே நடந்தாலும், அதை எதிர்கொள்ளும் தைரியத்தையும், பக்குவமாக சமாளிக்கும் திறமையையும் கடவுள் நமக்கு அருள வேண்டும் என்பதே தெலுங்கு புத்தாண்டு எனும் யுகாதி திருவிழாவின் நோக்கம். இதனால் தான், இந்நாளில் ராமாயணம் படிப்பது வழக்கமாக உள்ளது.
சோதனைகளை சமாளிக்க உதவுவது ராமாயணம்; இதில் வரும் ராமர், சீதா, லட்சுமணன், அவன் மனைவி ஊர்மிளா, விபீஷணன் மற்றும் கும்பகர்ணன் ஆகியோர் சந்தித்த சிரமங்களும், இக்கட்டான சூழ்நிலைகளும் ஏராளம்.
ராவணன், சீதை மீது ஆசை வைத்தது தவறு என்றனர், அவனது தம்பிகளான கும்பகர்ணனும், விபீஷணனும்; ஆனால், அதை ஏற்க மறுத்தான், ராவணன். 
இந்த இக்கட்டான நிலையில் கூடப்பிறந்த பாவத்துக்காக அவனது தவறுக்கு ஒத்துழைக்க முடிவு செய்தான் கும்பகர்ணன். விபீஷணனோ, 'அந்த கொடுமைக்கு துணை நிற்கமாட்டேன்...' என்று அண்ணனை பிரிந்து விட்டான்.
குடும்பத்தில், ஒரு சகோதரன் தவறு செய்தாலும், அக்குடும்பமே அழிந்து போகிறது என்பதற்கு இது உதாரணம்.
எனவே, சகோதரர்கள் தங்கள் பிரச்னைகளை பேசித்தீர்த்துக் கொள்ள வேண்டும். தவறு செய்வதை சுட்டிக்காட்டினால், அதைப் புரிந்து, திருத்திக் கொள்ள வேண்டும் என்பது தெளிவாகிறது.
லட்சுமணனின் மனைவி ஊர்மிளா; சீதையின் தங்கையான இவள், ராமர், சீதையுடன் தன் கணவரும் கானகம் செல்ல, தசரத - ராமன் பிரச்னைக்கே சம்பந்தமில்லாத இவள், 14 ஆண்டுகள் கணவனைப் பிரிந்து வாழ சம்மதித்தாள். அவள் நினைத்திருந்தால், கணவனை காட்டுக்குப் போகக்கூடாது என்று சண்டை போட்டிருக்கலாம். குறைந்தபட்சம், 'அக்காவைப் போல நானும் உடன் வருகிறேன்...' என்று கூச்சலாவது எழுப்பியிருக்கலாம். ஆனால், எந்த பிரச்னையும் செய்யாமல், மூன்று மாமியார்களுடன் காலம் தள்ளினாள்.
ஆக, சகோதர ஒற்றுமையே குடும்ப ஒற்றுமை; குடும்ப ஒற்றுமையே உலக ஒற்றுமை என்பதை எடுத்துக் காட்டும் விழாவாக யுகாதி அமைந்துள்ளது. ராமாயணத்திலுள்ள கணவன் - மனைவி மற்றும் சகோதர ஒற்றுமை, அனுமனைப் போல பிரச்னைகளை தைரியமாக எதிர்கொள்ளுதல் ஆகிய கிளைக் கதைகளையும் யுகாதியன்று பொது இடங்களில் பெரியவர்கள் மக்களிடையே பேசுவர்.
இந்நாளில், 'தேவுபெல்லா' எனப்படும் யுகாதி பச்சடி சமைப்பர். வாழ்க்கை என்பது மகிழ்ச்சி, கவலை, கோபம், அச்சம், சலிப்பு, ஆச்சரியம் கலந்தது என்பதை உணர்த்தும் வகையில், கசப்புக்கு, வேப்பம்பூ; துவர்ப்பு - மாங்காய், புளிப்பு - புளி, காரம் - மிளகாய் அல்லது மிளகு, இனிப்பு - வெல்லம் ஆகிய அறுசுவையும் இந்த பச்சடியில் கலந்திருக்கும். இதை, சுவாமிக்கு நைவேத்யம் செய்து சாப்பிடுவர்.
தெலுங்கு புத்தாண்டு நன்னாளில், குடும்பத்திலும், மாநிலங்களுக்கு இடையேயும் ஒற்றுமை ஓங்க இறைவனை பிரார்த்திப்போம்!

No comments:

Post a Comment