Saturday, March 25, 2017

கடைசி நேரத்தில் கஷ்டப்பட்டுபடிக்கக் கூடாது! thanks to dinamalar

கடைசி நேரத்தில் கஷ்டப்பட்டுபடிக்கக் கூடாது!

குழந்தைகளின் கண் பிரச்னை குறித்து கூறும், கண் மருத்துவர் நவீன்: குழந்தைகளுக்கு விழித்திரையில் வெளிச்சம் சரிவர விழாவிட்டால், அது பார்வைக் குறைபாட்டை ஏற்படுத் தும். இதற்கு முதலில் கண்ணாடி தான், அணிய வேண்டும். பெரியவர்களுக்குப் பார்வை குறைபாடு என்றால், அறுவைச் சிகிச்சை செய்யலாம். 
தற்போது, வெளியில் விளையாடும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. உடல் அசைவின்றி, உட்கார்ந்த நிலையிலேயே மொபைல்போன், ஐபேட் பயன்படுத்தி விளையாடுவதால், துாரப் பார்வை குறைந்து, கிட்டப் பார்வை தான் அதிகம் பயன்படுகிறது.
இதனால் தான், கண் பார்வை பாதிப்புக்கு உள்ளாகிறது. இன்னும் எட்டு ஆண்டுகளில் படிக்கும் குழந்தைகளில், 50 சதவீதம் பேர், பார்வை குறைபாட்டால் பாதிக்கப்பட்டு, கண்ணாடி அணிவர் என, ஆய்வு கூறுகிறது.
மாணவர்கள், தங்கள் கண்களை பாதுகாக்க, வெளிச்சம் உள்ள இடத்தில் படிக்க வேண்டும். படிப்பதற்கென நாற்காலி, டேபிள், விளக்கு போன்ற வசதிகளை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். மேலும், படுத்துக் கொண்டே படிப்பதால், கழுத்து வலி, தலைவலி என, பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக நேரிடும்.
ஒழுங்காக உட்கார்ந்த நிலையில் படிப்பது மிகவும் அவசியம். சில குழந்தைகளுக்கு சிறிது நேரம் படித்தாலே தலைவலி வந்துவிடும். இதற்கு, அவர்களின் அக்கறை இன்மையா அல்லது கண்ணில் உள்ள குறைபாடா என்பதை கண்டறிய, பிரத்யேகமான கருவி வந்துவிட்டது. குறிப்பாக, துாசு, மன அழுத்தம் போன்றவை, கண் பார்வை குறைபாட்டை உருவாக்குகிறது.
உடலில் உள்ள தசைகள் வலுப்பெற உடற்பயிற்சி எப்படி பயன்படுகிறதோ, அதேபோல், கண்களில் உள்ள தசைகள் வலுப்பெற, தனிப் பயிற்சிகள் உள்ளன. பேனா முனையை நம் கையில் பிடித்தபடி எவ்வளவு துாரம் முடியுமோ அவ்வளவு துாரம் வைத்து, சிறிது சிறிதாக துாரத்தை குறைத்து, கண்களுக்கு அருகில் பேனா முனையைக் கொண்டு வர வேண்டும். 
அப்போது, பேனா முனை, இரண்டு உருவங்களாகத் தெரியும். இதை ஒரே உருவமாக மாற்ற முயற்சிக்க வேண்டும். நாள்தோறும் இதை, 20 - 30 தடவை செய்யலாம். மூன்று மாதம் முதல் நான்கு மாதம் வரை செய்தால், படிப்பதில் எந்தப் பிரச்னையும் வராது.
மாணவர்கள், பாடங்களை கடைசி நேரத்தில் கஷ்டப்பட்டு படிக்கக் கூடாது. மூளைக்குப் பணிகளை அதிமாக்கும்போது, அது வெற்றிடமாகி, எதையும் நினைவில் வைத்துக் கொள்ள முடியாமல் போகும். மூளைக்கு அவ்வப்போது ஓய்வு தேவை. துாக்கத்தின் நேர அளவைக் குறைக்கக் கூடாது. சத்தான உணவுப் பழக்கம் அவசியம்.
குறிப்பிட்ட நேர இடைவெளியில் கழுத்தை மெதுவாக இடமும், வலமும் அசைத்துப் பயிற்சி செய்ய வேண்டும். குறைவான நேரம் படித்தாலும், கவனத்துடன் படித்தல் வேண்டும்.

No comments:

Post a Comment