Tuesday, March 28, 2017

Last updated : 10:40 (23/03/2017) நாம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டியது யாரிடம்? #MorningMotivation

நாம் பாடம் கற்றுக்கொள்ளவேண்டியது யாரிடம்? #MorningMotivation

பக்தி
பசுமை போர்த்திய ஒரு கிராமத்தில், ராமசாமி என்கிற ஒரு விவசாயி இருந்தார். ஊரில் மற்றவர்களைக் காட்டிலும், அவருக்கு கடவுள் பக்தி அதிகம். அடிக்கடி கோயிலுக்குச் செல்வதையும், அங்கே அதிக நேரம் தங்கி கடவுளைப் பிரார்த்தனை செய்வதையும் அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார். மற்ற நேரங்களில் தோட்டத்துக்குச் சென்று அங்கு விவசாயம் செய்தும், காட்டில் மரங்களை வெட்டியும் நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். கடவுள் மீது அதீத பக்தி. ஒரு கட்டத்தில் நாம் எப்படி இருந்தாலும் நம்மைக் கடவுள் காப்பாற்றுவார் என்று  நினைத்துக்கொண்டார். தினமும் காட்டுக்குச் சென்றவர், இப்போது வாரத்தில் ஒருநாள் மட்டுமே செல்ல ஆரம்பித்தார். இதனால், விவசாயம் செய்வதும், விறகு வெட்டுவதும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது.
ஒருநாள், அவர் காட்டுக்குச் செல்லும்போது, அங்கே ஒரு நரியைப் பார்த்தார். அந்த நரிக்கு முன்னங்கால் இரண்டுமே இல்லை.  அந்த நரி, தன்பாட்டுக்கு ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்தது.
இதை, கவனித்த விவசாயிக்கு ஒரு சந்தேகம், "இந்த நரிக்கு இரண்டு காலும் இல்லை.. அப்படி இருக்கிறப்போ, இது எப்படி வேட்டையாடி தன்னுடைய பசியைப் போக்கி கொள்ள முடியும்?" என்று யோசிக்க ஆரம்பித்தார். இப்படி யோசித்துக்கொண்டு இருக்கும்போதே, அந்தப் பக்கமா ஒரு புலி வந்தது. அதைப் பார்த்த உடனே, ஓடிப் போய் ஒரு மரத்துக்குப் பின்னாடி ஒளிந்துகொண்டார். என்ன நடக்கிறது என்பதை மட்டும் கவனிக்க ஆரம்பித்தார் ராமசாமி.
அந்தப் புலி, ஒரு பெரிய மானை வேட்டையாடி இழுத்துக்கொண்டு வந்து, அதைச் சாப்பிட ஆரம்பித்தது. சாப்பிட்டது போக, மீதியை அங்கேயே விட்டுவிட்டுச் சென்றுவிட்டது. புலி போன பிறகு, இரண்டு காலும் இல்லாத அந்த நரி, மெதுவாக நகர்ந்து வந்து, மிச்சம் இருந்த மாமிசத்தைச் சாப்பிட்டு, திருப்தியாகப் போய்விட்டது.
இவ்வளவு நிகழ்வையும் மரத்துக்குப் பின்னால் நின்று பார்த்துக்கொண்டு இருந்த அந்த விவசாயி, யோசிக்க ஆரம்பித்தார்.
"இரண்டு காலும் இல்லாத ஒரு வயசான நரிக்கே ஆண்டவன் சாப்பாடு போடுறான். அப்படி இருக்கிறப்போ, தினமும் கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ள நமக்குச் சாப்பாடு போடாமல் விட்ருவானா? நமக்கு கடவுள் பக்தி வேற அதிகம், நாம எதுக்கு அனாவசியமா வெயில்லயும் மழையிலயும் கஷ்டப்படனும்? எதுக்காக வியர்வை சிந்தி விறகு வெட்டணும்?" என்றெல்லாம் யோசிக்க ஆரம்பித்தார்.
அதன்பிறகு தோட்டத்துக்குச் செல்வதையும், காட்டுக்கு செல்வதையும் முற்றிலுமாக தவிர்த்தார். விவசாயம் மற்றும் மரம் வெட்டப் பயன்படுத்தும் பொருட்களை மூட்டை கட்டி ஓரமாக வைத்துவிட்டு, வீட்டில் ஒரு மூலையிலே அமர்ந்துகொண்டார். இடையில், அவ்வப்போது கோயிலுக்கு மட்டும் சென்று வந்தார். "கடவுள் நம்மை காப்பாற்றுவார், அவர் நமக்கு வேண்டிய சாப்பாட்டை கொடுப்பார்" என்று மட்டும் நம்பினார்.  
இப்படியாக ஒவ்வொரு நாளும் சென்றுகொண்டே இருந்தது. சாப்பாடு வந்த பாடில்லை. ராமசாமி, பசியால் வாடிப் போனார். உடம்பு இளைக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் எலும்பும் தோலுமாக ஆகிபோனார்.
ஒரு நாள் ராத்திரி நேரம், கோயில் நடை சாத்தப்பட்டிருந்தது. அங்கும் சுற்றம் முற்றம் யாருமே இல்லை. பசியால் வாடிப்போன ராமசாமி, மெதுவாகக் கோயில் வாசலில் வந்து நின்றுகொண்டு பசி மயக்கத்தில் கோயிலின் கோபுரத்தைப் பார்க்கிறார்.
"ஆண்டவா... என்னுடைய பக்தியில் உனக்கு நம்பிக்கை இல்லையா? நான் இப்படியே பட்டினி கிடந்து சாக வேண்டியது தானா? காட்டில் அந்த நரிக்குப் புலி மூலமா சாப்பாடு போட்டியே, அதை பார்த்துவிட்டுத்தானே இங்கே வந்தேன். என்னை இப்படித் தவிக்க விட்டுட்டியே... இது நியாயமா?" என்றார்.
அப்போது, அந்த வழியாகச் சென்ற மகான் ஒருவர், ராமசாமியைத் தொட்டு.. "முட்டாள், நீ பாடம் கற்று கொள்ள வேண்டியது நரி கிட்ட இருந்து இல்லே.. புலி கிட்ட இருந்து. புலியோட உழைப்புகிட்ட இருந்து. அது நல்லா இருந்ததால, தான் உண்டது போக மீதி இரையை விட்டுட்டுப் போனதுனால, கால் இல்லாத நரி சாப்பிட முடிஞ்சது. நீ நல்லா இருக்க, உன்னால முடியற வரைக்கும் உழைக்கணும். உனக்கு இருக்கறது போக மீதத்தை,  மத்தவங்களுக்கு கொடுத்து உதவணும்னு, புலிகிட்ட இருந்து கத்துக்கணும். இது  உனக்கு ஏன் புரியல?" என்றார்.
பக்தி என்ற பெயரில், அதீத மயக்கத்தில் இருந்து ராமசாமி விடுபட்டார். மறுபடியும் பழைய மாதிரி உழைக்கத் தொடங்கினார். கூடவே பிறருக்கு உதவவேண்டும் என்ற  எண்ணமும் வந்தது.
அதீத பக்தியில் எந்தவித முயற்சியும் இல்லாமல், கடவுள் பெயரை சொல்லிக்கொண்டே இருந்து பயனில்லை.  தேர்வு எழுதச் செல்லும் மாணவர்கள்கூட, தேர்வுக்குப் படிக்காமல்.. அப்போதுதான் திடீரென பக்தி மயமாக மாறுவார்கள். எல்லா முயற்சிகளுக்குப் பின்னாலும் பக்தியும், தன்னம்பிக்கையும் இருப்பது அவசியம்தான். ஆனால், எந்த முயற்சியும் இல்லாமல் வெறும் பக்தியையும், நம்பிக்கையையும் மட்டும் வைத்துக்கொண்டு, போட்டி நிறைந்த இவ்வுலகில் சாதிப்பது என்பது அவ்வளவு சாத்தியமில்லை என்ற புரிதல் நம் ஒவ்வொருவருக்கும் வேண்டும். 

No comments:

Post a Comment