Sunday, March 10, 2019

உடல், பொருள், ஆவி - மனைவி thanks to dinamalar .com


உடல், பொருள், ஆவி - மனைவி

 Advertisement
 உடல், பொருள், ஆவி - மனைவி
411Shares


'யாயும் ஞாயும் யாராகியரோ.....எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்யானும் நீயும் எவ்வழி அறிதும்செம்புலப் பெயல்நீர் போலஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”என்னுடைய தாயும், உன்னுடைய தாயும் உறவினரா?என் தந்தையும் உன் தந்தையும் உறவினரா?நானும், நீயும் எவ்வாறு முன்பு அறிந்தோம்?செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல...மழைநீரானது மண்ணின் நிறத்தை ஏற்று ஒன்றியபின் யாரால் இரண்டையும் மீண்டும் தனித்தனியே பிரிக்க முடியும்? அன்புடைய நம் இருவருடைய நெஞ்சம் இரண்டற கலந்தபின்.....எப்படிப்பட்ட புனிதமானது இந்த கணவன், மனைவி உறவு. அக்னி சாட்சியாக சுக, துக்கங்களில் துணையிருப்பேன் என்று சத்தியம் செய்து, குடும்ப வாழ்க்கையை துவங்குகிறோம். என்னுடைய தோழிகள் இருவரின் வாழ்வில் நடந்த யரங்களையும், ஒருவர் அதிலிருந்து எப்படி மீண்டு வந்தார், இன்னொருவருடைய வாழ்க்கை பயணம் எப்படி கரடுமுரடாகி போனது என்பது பற்றியதே இக்கட்டுரை.

திக்கற்ற காட்டில்


என் தோழியின் கணவர் சாலை விபத்தில் அகால மரணம் அடைந்தார் என்ற செய்தியை கேட்டதும், அதிர்ந்து போனேன். அவளுடன் கல்லுாரியில் படித்த தோழிகள் சேர்ந்து அவள் இருக்கும் ஊர் நோக்கி விரைந்தோம். போகும் வழியெல்லாம், அவள் கல்லுாரி நாட்களில் இளவரசியாக சுற்றி திரிந்தது, பட்டப்படிப்பு, மேற்படிப்பு படிக்கும் பொழுது எங்கள் கல்லுாரியின் தலைவியாக இருந்து திறமையாக செயல்பட்டது, அவளின் அழகு, சுறுசுறுப்பு என்று சந்தோஷமாக திரிந்தவளை இப்படி ஒரு சூழ்நிலையில் சந்திக்க போகிறோமே என வருத்தப்பட்டுக் கொண்டே அவள் வீட்டைச் சென்றடைந்தோம்.தோழி, அவளுடைய அம்மா, அவளுடைய இரண்டு பெண் குழந்தைகளையும் சமாதானம் செய்யும் பொருட்டு அவர்களின் அருகில் அமர்ந்து ஆறுதல் கூறினோம். அப்பொழுது தோழியின் தாய் கூறிய விஷயங்கள் எங்களை மிகவும் மனவேதனையில் ஆழ்த்தியது. தோழியின் கணவர், மனைவியை மதித்து எந்தவொரு விஷயத்தையும் கலந்து பேச மாட்டாராம். அவருக்கு எவ்வளவு வருமானம், எந்த வங்கியில் அவர் கணக்கு வைத்துள்ளார், எங்கெல்லாம் சொத்து வாங்கி வைத்துள்ளார், வங்கி பாஸ்புக், சொத்து பத்திரங்களை எங்கு பாதுகாப்பாக வைத்துள்ளார் என்ற எந்த வொரு விபரத்தையும் மனைவியிடம் கூறியதே இல்லையாம். ஏதாவது இன்ஸ்சூரன்ஸ் செய்துள்ளாரா? என நாங்கள் கேட்டபொழுது தெரியாதும்மா. ஏதாவது விபரம் கேட்டால் உடனே சத்தம் போட்டு என் மகளை மருமகன் அடக்கிவிடுவார். என் மகளும் அவரை எதிர்த்து பேசாமல் அடங்கிவிடுவாள்.இப்பொழுது என்னுடைய மகளின் வாழ்க்கை கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் உள்ளது. மருமகன் இறந்துவிட்டான் என்ற சோகத்திற்கு மேல் தன்னுடைய மகள் இனி எப்படி வாழ்வாள் என்ற பயமே அவரின் அழுகையில் ஓங்கி இருந்தது.


பெண் தொழில் அதிபர்


என் ஒரு தோழியின் கணவர் கட்டுமானத் தொழிலுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வந்தார். தினமும் டைரி எழுதும் பழக்கம் உள்ளவர். அவர் ஆறடி உயரம், நல்ல சிகப்பு நிறம், அழகான உருவம் கொண்டவர். என் தோழியை அவருக்கு பெற்றோர்கள் தேர்ந்தெடுத்து நிச்சயம் செய்யும்பொழுது நாங்களே பிரமித்துவிட்டோம். தோழி குண்டாக, கறுப்பாக, குட்டையாக இருப்பார். ஆனால், இனிமையாக பேசுவாள், நல்ல குணவதி. தோழியும் அவர் கணவரும் அவ்வளவு அன்னோனியமாக இருப்பார்கள். பார்ப்பதற்கே ஆசையாக இருக்கும் அவர்கள் குடும்பம் நடத்தும்முறை. தினமும் இரவு 10:00 மணிக்கு கடையை அடைத்துவிட்டு, அவர் வரும்வரை வீட்டிலுள்ள அனைவரும் காத்திருப்பார்கள். அவர் வந்தபிறகே அனைவரும் ஒன்றாக சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவார்கள். சாப்பிடும்பொழுது தோழியின் கணவர் எந்த டீலரிடம் இருந்து எந்த பொருள், என்ன விலைக்கு வாங்கினேன், அன்று எப்படிப்பட்ட கஸ்டமர்கள் கடைக்கு வந்தார்கள், அவர்களை அவர் எப்படி சமாளித்தார், என்ற விபரங்களை குழந்தைகளிடமும், மனைவியுடனும் கலந்து பேசுவார். வீட்டில் ஒரு டைரி வைத்திருப்பார். அதில் வங்கி விபரங்கள், ஆதார், ஸ்மார்ட் கார்டு, எல்லா வகையான இன்சுரன்ஸ் விபரங்கள், சொத்து விபரங்கள், மேலும், சொத்துக்கள் எங்கெங்கு உள்ளது, அவற்றை என்ன விலைக்கு வாங்கினார் என்ற விபரங்களையும் எழுதி வைத்திருப்பார்.சில வருடங்களுக்கு முன்பு டெங்கு காய்ச்சலில் அவர் இறந்துவிட்டார். ஆனால், கணவர் இறந்த ஐந்தாவது நாள் அந்த சோகத்தை மறைத்து கடையில் அமர்ந்து வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார் என் தோழி. கணவன் நடத்திய வியாபாரத்தைவிட பல மடங்கு வியாபாரத்தை பெருக்கிவிட்டார். இன்று இரண்டு பெரிய கடைகளுக்கு அவர்தான் அதிபர். கணவர் எதையும் மறைக்காமல் மனைவிக்கு அனைத்து தொழில் ரகசியங்களையும் கூறிய காரணத்தால் என்னுடைய தோழி அதே கடை ஊழியர்களை வைத்து, அழகாக திறம்பட பலரும் புகழும் வண்ணம் அந்த கடையை நடத்தி வருகிறார்.

நிச்சயமில்லா வாழ்க்கை


என்னுடைய அம்மா, இரவு துாங்குவதற்கு முன்பு நாளை போக வேண்டிய இடம் அல்லது நாளை செய்யவேண்டிய செயலை நினைவு கூர்ந்தால், உடனே 'பிழைத்துக் கிடந்தால் பிச்சைக்காரனுக்கு” என்பார். இது நிதர்சனம் அற்ற வாழ்க்கை, எடுத்து வைத்த பழைய உணவு பொருட்களை, நாளை காலை நாம் உயிரோடு இருந்தால்தான் பிச்சைக்காரனுக்கு கொடுக்க முடியும் என்பது இதன் அர்த்தம்.ஒவ்வொரு மனிதனுக்கும் இறப்பு என்பது உறுதி. ஆனால், எப்பொழுது என்பது உறுதியில்லாதது. விரும்பியோ, விருப்பம் இல்லாமலோ, பெற்றோரின் வற்புறுத்தலினாலோ அல்லது விதியின் வசத்தாலோ வாழ்க்கை அமைந்து, சட்ட ரீதியாக கணவன், மனைவியாக உறுதி செய்யப்படுகிறதோ அன்றிலிருந்து அவனும் அவளும் வேறு வேறு அல்ல. மனைவி, கணவன் ஆகியோரின் குறைகளையும், நிறைகளையும் இருவரும் பரஸ்பரம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.கணவன், மனைவியாக ஒன்று சேர்ந்து வாழ ஆரம்பித்த நாள்முதல் ஒவ்வொரு நாளையும், நிமிடத்தையும், வினாடியையும் இருவரும் சேர்ந்து அழகான குடும்பமாக செதுக்க ஆரம்பியுங்கள். இந்த தாய், தந்தைக்கு குழந்தையாக பிறக்க என்ன தவம் செய்தோமோ என உங்களது குழந்தைகள் பெருமைப்படும்படி குடும்பத்தை நடத்திச் செல்லுங்கள்.ஆணாகிப் பெண்ணாகிப் நின்றானவன்அவையொன்று தானென்று சொன்னானவன்தான் பாதி உமைபாதி கொண்டானவன்சரிபாதி பெண்மைக்கு தந்தானவன், என அனைத்துலகையும் ஆளும் ஈசனே உமையவளுக்கு தன்னுடைய உடம்பில் சரிபாதியை கொடுக்கும்பொழுது அவனுடைய குழந்தைகளாகிய நாம் எல்லாம் எம்மாத்திரம்...-அமுதா நடராஜன்எழுத்தாளர், மதுரைr_amudha@yahoo.com

No comments:

Post a Comment