சொல்கிறார்கள்
Advertisement

உடல் எடை அதிகரிக்காது!நார்ச்சத்து உணவுகளின் முக்கியத்துவம் பற்றி கூறும், குடும்ப நல மற்றும் இதய நோய் மருத்துவர், ஜீனத் பேகம்: இன்றைய உணவு பழக்கமும், வாழ்க்கை முறையும் வெகுவாக மாறிவிட்டன. சுவையை பிரதானமாக கொண்ட துரித உணவுகள் அதிகரித்து விட்டன. நார்ச்சத்து குறைவான அந்த உணவுகளை உண்பதால் தான், உடல் பருமன் ஏற்படுகிறது; ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது; உடலில் கெட்ட கொழுப்பு -சேர்ந்து, இதய நோய் உண்டாகிறது. எனவே, இதய நோயாளிகள், நார்ச்சத்து உணவுகளை தவிர்க்கக் கூடாது.நார்ச்சத்து உணவுகளை அன்றாடம் சேர்த்து கொண்டால், உடல் எடை அதிகரிக்காது. மேலும், உடலிலுள்ள, எச்.டி.எல்., எனும் நல்ல கொழுப்பின் அளவு அதிகரித்து, எல்.டி.எல்., எனும் கெட்ட கொழுப்பின் அளவு குறைகிறது.இதனால், ரத்தக்குழாய்களில் படியும் கொழுப்பின் அளவு குறைந்து, ரத்த ஓட்டம் அதிகரித்து, உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவது தடுக்கப்படும். உணவிலுள்ள கொழுப்பு மற்றும் சர்க்கரையின் அளவு, ரத்த நாளங்களால் அதிக அளவில் உறிஞ்சப்படுவதையும் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதத்தில் இருந்து பாதுகாத்து கொள்ளலாம்.நார்ச்சத்து உணவுகளில் கரையும் நார்ச்சத்து, கரையா நார்ச்சத்து என, இரண்டு வகை உள்ளது. பீன்ஸ், ஓட்ஸ், அவரை வகை மற்றும் பார்லி போன்ற உணவு பொருட்களில், கரையும் நார்ச்சத்து அதிகம். இவை சீரான ரத்த ஓட்டத்துக்கு உதவும்; இதயத்தை காக்கும்.குடல் பாதையிலுள்ள நச்சுகளை வெளியேற்றுவதில், நீருக்கு முக்கிய பங்கு உண்டு. போதிய அளவு நார்ச்சத்து உணவை உட்கொள்வதால், உடலுக்கு தேவையான அளவு, நீர்ச்சத்தை பெறலாம். இது, உடலுக்கு தேவையில்லாத நச்சுகளை, குடல் பாதை வழியாக வெளியேற்றவும், செரிமான மண்டலத்தில் நச்சுகள் தங்கியிருக்கும் கால அளவை குறைக்கவும் உதவும். நார்ச்சத்து போதுமான அளவு கிடைக்காத போது தான், மலச்சிக்கல் ஏற்படுகிறது.நார்ச்சத்து உணவுகளில் புற்றுநோயை தடுக்க உதவும், 'ஆன்டி ஆக்ஸிடன்ட்' மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளன. நார்ச்சத்துள்ள உணவு களை அதிகம் உட்கொண்டால் பெருங்குடல், மார்பகப் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம்.காய்கறி, கீரைகள், பழங்களில் நார்ச்சத்துகள் நிறைவாக உள்ளன. பழச்சாறில் நார்ச்சத்து கிடையாது. எனவே, பழங்களை அப்படியே கடித்து சாப்பிடுவது நல்லது. 'சாண்ட்விச், பிட்சா' என எதுவானாலும், குறைந்த அளவிலாவது காய்கறிகளை சேர்த்து சாப்பிட வேண்டும்.
No comments:
Post a Comment