Saturday, March 23, 2019

ஆன்மிகம் உணர்த்தும் ஆளுமைத்திறன்! thanks to dinamalar.com

ஆன்மிகம் உணர்த்தும் ஆளுமைத்திறன்!

 Updated : ஜன 29, 2019  Added : ஜன 29, 2019  கருத்துகள் (1)
ஆன்மிகம் உணர்த்தும் ஆளுமைத்திறன்!
5Shares
ஆளுமைத் திறன் என்பது எல்லாத் துறைகளிலும் அவசியம்மிக்கது. அத் திறனுடையோரே சமுதாயத்தில் நல்வழிகாட்டிகளாக திகழ்கின்றனர். தலைமைப் பண்பிற்குத் தேவையான முக்கியத் திறனும் அதுவே. அத் திறனின்றி செய்யப்படும் எச்செயலும் நீடித்த பயன் தராது. நிலைத்தும் நிற்காது. அரசியல், ஆன்மிகம், கல்வி, பொருளாதாரம், ஊடகம், வணிகம் என எல்லாத் துறைகளிலும் நிர்வாகத் திறனுடையோரைக் கண்டு வியக்கின்றோம்.இதுபிறப்போடு வருவதா? அல்லது பயிற்சியால் வளரும் திறனா? எனக் கேள்விகள் எழுவதுஉண்டு. இது குறித்து பல நுால்கள் வெளி வந்துள்ளன. பல நிறுவனங்கள் பணம் செலவிட்டுப் பயிற்சி முகாம்கள் நடத்துகின்றன. இவை பெரும்பாலும் மேலாண்மை (Management) சார்ந்த ஆய்வுகளாகவும், தகவல்களாகவும் இருக்கின்றன. அதில் குறையேதுமில்லை. பயனடைந்தோர் பலருண்டு.

நேர்மைத் திறன்


ஆயினும் உண்மையானஆளுமைத் திறன் என்பது யாது? அதைஅறியும் வழியென்ன? அத்திறனோடு நேர்மை, உண்மை போன்ற உயர் பண்புகளும் ஊடுருவி உட்கலத்தல்வேண்டாமா? நேர்மையற்ற திறனால் பயனென்ன? இது குறித்து எவ்வளவு கற்றாலும், பயிற்சி பெற்றாலும், செயல்படும் சமயத்தில் திறனுக்கும், நற்பண்புகளுக்கும் நடுவில் நீண்டதோர் இடைவெளியைக் காண்கின்றோம். பண்பில்லாத திறன் குரங்கு கையிலிருக்கும் கூர்வாள் போலாகும்.இந்த இடைவெளி நீங்கி, திறனுடன், நேர்மையும் இணைந்து செயல்படும் நிலையே உண்மையான ஆளுமைத்திறனாகும். திறனும், அறனும் சேர்ந்து ஓளிரும்அறிவே கல்வி. இதுவே நம்மையும், தேசத்தையும் முன்னெடுத்துச்செல்வதற்கான முழுமையானசெயல் திட்டமாகும். மனிதனை ஆள்வது எது? என்றால் 'மனம்' என்று பொதுவாகக் கூறுவோம். அனைவரையும் வசப்படுத்துவது மனமே. மனம் வசப்படுமாயின் உலகே வசப்படும். மனதை ஆளும் திறனே மாபெரும் ஆளுமைத் திறன் என்றும் கூறுவர் உண்டு.ஆனால் மனதையும் ஆளும் மாபெரும் சக்தி ஒன்று உள்ளது. அதை அறியாது மனதை வெல்ல இயலாது. இவ் விஷயத்தில் விஞ்ஞானத்தைக் காட்டிலும் மெய்ஞானமே நமக்குத் துணை.மனதை ஆள்வதும், ஆட்டுவிப்பதும் மனிதனிடதில் மையமிட்டுள்ள குணங்களே.வெவ்வேறு எண்ணங்களாக, உணர்வுகளாக மனதின் மூலம் வெளிப்படுவதும் குணங்களே. தாவரம், மனிதன், விலங்கு என இயற்கை அனைத்திலும் பரவிக் கிடப்பதும் அதுவே. “எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன்” என்று மாணிக்கவாசகர் கூறியதின் காரணமும் குணங்களே. படைப்பில் இது இல்லாத இடமில்லை. ஆனால் இது குறித்து முழுமையான விழிப்போ நமக்கில்லை. மனதைப் பின்னிருந்து இயக்கும் குணங்களை ஆளும் திறனே ஆளுமைத் திறனாகும். அதனின்று விடுபடும் நிலையே ஆன்ம விடுதலை.


மூன்று குணங்கள்


குணங்களை நம்மால் நேரிடையாக அறிய இயலாது. நம்முடைய செயல்கள், நாட்டம், மற்றும் உணவுப் பழக்கங்களைக் கூர்ந்து கவனித்தால் குணங்கள் வெளிப்படும் நுட்பத்தினை அறியலாம்.மனிதனை முற்றிலும் வசப்படுத்தி வைத்திருக்கும் மூன்றுகுணங்கள் சத்துவம், இரஜஸ், தமஸ் எனப்படும்.இம் மூன்று குணங்களும் எல்லோரிடத்திலும் காணப்படுகிறது.ஆனால் மாறுபட்ட விகிதத்தில் வெளிப்படுகின்றது. மூன்றில் எது மேலோங்கி நிற்கின்றதோ, அந்தத் தன்மை உடையவராகவே நாம் இருக்கின்றாம். மனிதரின் நடத்தையும், திறனும் அதை அனுசரித்தே நிற்கும்.“தமஸோமா ஜ்யோதிர் கமய” இருளில் இருந்து ஒளிக்கு என்னை வழி நடத்து என்கிறது வேத மந்திரம். தமோகுணமானது அறவே அறுத்தெறியப்பட வேண்டிய குணம். மனிதனை அறியாமை என்னும் இருளில் மயக்கி நிறுத்தும் குணமிது. இக்குணத்தை கொடிய நோயைக் காட்டிலும் கேடாகக் கருத வேண்டும். இதில் வீழ்ந்தோர் எச்செயலிலும் நாட்டமின்றி இருப்பர் அல்லது செய்வதனைத்தையும் தவறாகவே செய்வர். பிறரைத் துன்புறுத்துவதில் இன்பம் கொள்வர்.காலம் தாழ்த்திச் செயவது அல்லது செய்யாமலேவிட்டுவிட்டுவது, மறதி, சோம்பல், உறக்கம் என இக் குணங்களின் தாக்கத்தை வள்ளுவர் நான்காக வகுத்துள்ளார். தீயபழக்கங்களின் பிறப்பிடம் தமோகுணம். திறனோ, அறிவோ வெளிப்படாது முடங்கிய மந்த நிலை. இதனின்று பிறரைக்காத்தோமெனில் அதுவே மாபெரும் தொண்டாகும்.

இரஜோ குணம்


இரஜஸ்என்றால் அசுத்தம்.கண்ணாடியில் படர்ந்துள்ள மாசு போல் அறிவை மறைக்கும். ஆணவத்தை, ஆங்காரத்தை முன்னிறுத்தும் குணமிது. இக் குணமுடையோர் செயலில் அதிக நாட்டம் உடையோராக இருப்பர். ஓய்வின்றி உழைப்பர். இக் குணமின்றி செயலேதும் செய்ய இயலாது.ஆனால் செயலில் நிதானத்தை இழக்கச் செய்து, ஆத்திரத்தைத் துாண்டி, தன் வீழ்ச்சிக்கு தானே வித்திடும் அபாயம் படைத்த குணமிது. அதீத ஆசையே இதனியல்பு. அவ்வாசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அவசரத்தில் நன்மை, தீமை, தர்மம், அதர்மம், பாபம், புண்ணியம் இவற்றை புறந்தள்ளி செயலை முடிக்க முனைவர்.எல்லாச் செயல்களிலும் விருப்பு, வெறுப்பு, காமம்,குரோதம், சுயநலம் இவையே எஞ்சி நிற்கும்.செயலில் திறனிருக்கும் ஆனால் நம்பகமும், நற்தன்மையும் இராது. பேராசை, செயலைத் துவங்குவதில் முனைப்பு, புற விஷய நாட்டம். சபலம், சஞ்சலம் போன்றவை இரஜோ குணத்தின் ஆதிக்கத்தால் வருவனவாகும். மனிதனைத் துன்பத்தில் பிணைக்கும் குணமிது. எவர் கூறியும் கேளாது, மாறமறுத்து மடிந்த துரியோதனன் போன்றோர் இதற்கு உதாரணமாவர்.

சத்துவம் பழகு


சத்துவம் என்றால் உண்மைத் தன்மை. குணங்களில் இது தெய்வத்தன்மை பொருந்தியது. மனிதனை இயலாமையினின்று விடுவித்து, முழு ஆளுமைத்திறனை வழங்கும் அருமருந்து. களங்கமற்றது. செயல்புரியும் காலத்தில் நன்மை, தீமைகளை நன்குணர்ந்து தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை நீக்கி செயல்படுவோமெனில் நம்மில் சத்துவம் மேலோங்கி நிற்கும். அமைதி, ஆழ்ந்த அறிவு, ஆனந்தம் இயவற்றின் இருப்பிடம் சத்துவம். ''உன் உடலிலுள்ள அனைத்துப் புலன்களின் வாயிலாக அறிவு வெளிப்படுமாயின் அதை சத்துவம் என்றறி” என்கிறது கீதை.“மெய்ப்பொருள் காண்பதறிவு”, “நன்றின்பால் உயப்பது அறிவு” என குறளில் வள்ளுவர் கூறும் அறிவு சத்துவ குணமே. பண்டைய பாரதத்தில் பாராண்ட மன்னர்கள் தவமிருந்து பெற்ற வரம். தன் கடமை மறந்து, புலன் இன்பத்தில் மூழ்கிய சுக்ரீவனுக்கு இராமன் போதித்ததாக கம்பர் சத்துவ குணச்சிறப்பை இப்பாடலில் விளக்குகின்றார்.'செய்வனசெய்தல், யாண்டும் தீயன சிந்தியாமை,வைவன வந்தபோதும் வசையில இனியகூறல்மெய்யன வழங்கல், யாவும் மேவின வெகல் இன்மைஉய்வன ஆக்கித் தம்மோடு உயர்வன: உவந்துசெய்வாய்'உள்ளத்துாய்மை, தன்னடக்கம், ஜீவகாருண்யம், பிறபொருள் விரும்பாமை, தன்னலமின்மை, கர்வமின்மை, வாய்மை முதலிய குணங்கள் கைகூடினால் சத்துவம் வளரும். சத்துவகுணம் படைத்தோர் பேரன்பும், அமைதியும் மிக்கவராக இருப்பர்.கும்பகர்ணன் தமோ குணத்தால் துாக்கத்தை வரமாகப் பெற்று மடிந்தான். ராவாணன் இரஜோகுணத்தால் பெண்ணாசை கொண்டு மடிந்தான். விபீடணன் சத்துவத்தால் இறைவனடி தொழுது நீடித்து வாழ்ந்தான். எனவே குணங்களைக் கூர்ந்து கவனிப்போம்.எல்லையற்ற ஞானத்தின் நுழைவாயிலாகிய சத்துவத்தால் அளவற்ற ஆற்றல் பெருகும். நன்மை விளையும், நேர்மைதவறாத ஆளுமைத் திறன் வளரும். துயரனைத்தும் தீரும். “இன்பமே என் நாளும் துன்பமில்லை”என்ற நாவுக்கரசரின் வாக்கு போல் வாழ்வும் வையமும் பயன்பெறும். வாழ்வோம்! வாழ்வதற்காக எழுவோம்!-சுவாமி சிவயோகனந்தாசின்மயாமிஷன், மதுரை93458 

No comments:

Post a Comment