Thursday, January 9, 2020

பிள்ளைகள் பேசுவதை கேளுங்கள்! thanks to dinamalar.com



பிள்ளைகள் பேசுவதை கேளுங்கள்!

 பதிவு செய்த நாள் : ஜன 10, 2020 

Advertisement
 பிள்ளைகள்  பேசுவதை கேளுங்கள்!
தங்கள் வீட்டில் உள்ள, 'டீன் ஏஜ்' எனப்படும், பருவ வயது பிள்ளைகளிடம், பெற்றோர் எப்படி பேச வேண்டும் என்பது பற்றி, டாக்டர் காமராஜ்: பாலியல் விஷயங்கள், போதை மருந்துகள், சிகரெட், மது போன்ற பல விஷயங்கள் குறித்து, பிள்ளைகளிடம் பேச, பெற்றோர் விரும்புவர்.அதன் மூலம், அந்த தீய பழக்கங்கள் தவறு என்பதை சொல்ல நினைப்பர். பேசும் நேரத்தில், பிள்ளைகள் கேட்கத் தயாரில்லை என்றால், பேசுவதை நிறுத்தி விட வேண்டும்.அந்த பேச்சை அப்படியே முறித்துக் கொண்டு செல்லக் கூடாது. பேச்சை வேறு பக்கம், திசை திருப்ப வேண்டும். உங்கள் பிள்ளைகளுக்கு, உறவுகளில், நட்புகளில் பிரச்னை வரலாம். தீய நண்பர்கள் மூலம், மது, புகை போன்ற தவறான பழக்கங்கள் வரலாம். அந்த விஷயங்கள் குறித்தும், அவர்களுடன் பேசலாம்.அது பற்றி, ஒரு முறை அவர்களுடன் பேசி, அது பலன் தராமல் போனால், கவலைப்பட வேண்டாம்; மீண்டும் மீண்டும் முயற்சி செய்யுங்கள். அது, பெற்றோரின் கடமை, பொறுப்பு. நீங்கள் சொல்ல விரும்பும் தகவலை, நேரடியாகச் சொல்லுங்கள். சொல்ல முடியவில்லை என்றால், மெசேஜ், கடிதம் போன்றவற்றின் மூலமும் தெரியப்படுத்தலாம்.'நான் உன்னிடம் ஒரு விஷயம் பேச வேண்டும்' என துவங்கினால், பிள்ளைகளுக்கு பய உணர்வு ஏற்படும். அப்படி துவக்காமல், புத்தகம், சினிமா காட்சிகள், சமீப கால நடவடிக்கைகள் என, ஏதாவது ஒன்றிலிருந்து பேச்சை துவக்கலாம். அதற்காக, ஒரே நாளில் எல்லாவற்றையும் பேசி விட்டு, இவ்வளவு தான் என முடிக்கவும் கூடாது. வாரம், ஒன்றிரண்டு நாட்கள் பேசலாம். இவ்வாறு செய்யும் போது, பாலியல் விவகாரங்கள் பற்றிய பேச்சு ஆரோக்கியமானதாக மாறும்.பருவ வயது பிள்ளைகளிடம் பேசும் போது, பெற்றோரின் கண்கள், காதுகள் மற்றும் இதயம் திறந்திருக்க வேண்டும். பிள்ளைகள் பேசுவதை முதலில், அமைதியாக, அதே நேரத்தில் ஆழ்ந்து கேட்க வேண்டும். எப்படி என்றால், உங்கள் நண்பர், அவரின் தனிப்பட்ட பிரச்னைகளை உங்களிடம் கூறும் போது, நீங்கள் எப்படி ஆழ்ந்து கவனிப்பீர்களோ அதுபோல!குறுக்கிட்டு பேசக் கூடாது. ஆனால், ஒருவர் பேசிக் கொண்டிருக்கும் போது, குறுக்கே பேசுவது தான் பெரும்பாலானோரின் வாடிக்கையாக உள்ளது.அவ்வாறு இல்லாமல், பிள்ளைகள் முழுமையாக பேசும் வரை, பொறுமையாக, ஆர்வமாக காத்திருக்க வேண்டும். அதன் பிறகு, நீங்கள் பேச வேண்டும். பிள்ளைகள் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிக் கொண்டிருக்கும் போதே, பிரச்னை இது தான் என்ற கணக்குக்கு செல்லாதீர்கள். அதுபோல, அவர்கள் கூறும் பிரச்னைகளுக்கான பதிலையும், முன்கூட்டியே தயாரித்து விடாதீர்கள்!

No comments:

Post a Comment