Monday, January 6, 2020

கொத்தமல்லி உடலுக்கு மிகவும் நல்லது thanks to dinamalar.com


கொத்தமல்லி உடலுக்கு மிகவும் நல்லது!



 கொத்தமல்லி உடலுக்கு மிகவும் நல்லது!

 பதிவு செய்த நாள் : ஜன 07, 2020 

கொத்தமல்லியின் அற்புத குணங்களை பட்டியலிடுகிறார், மூலிகை மருத்துவர், 'அல்மா' வேலாயுதன்: உடல் ஆரோக்கியமாக இருக்க, வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றும் சமநிலையில் இருக்க வேண்டும். அதாவது, வாதம் ஒரு பங்கு, பித்தம் அரை பங்கு, கபம் கால் பங்கு இருக்க வேண்டும். இவற்றில் எது குறைந்தாலும், கூடினாலும் நோய் வரும். வாதம், உடலின் இயக்கத்தை கட்டுப்படுத்துகிறது; பித்தம், ரத்த ஓட்டத்தை கட்டுப்படுத்துகிறது; கபம், உடல் வறண்டு போகாமல் வைத்திருக்கிறது. தலை சுற்றல், வாந்தி, மயக்கம், ரத்த அழுத்தம், மன அழுத்தம், துாக்கமின்மை, கல்லீரல் பாதிப்பு போன்றவற்றிற்கு காரணம், பித்தம். அதை கட்டுக்குள் வைத்திருந்தால், பெரும்பாலான நோய்கள் நம்மை அணுகாது. உணவில் அன்றாடம் கொத்தமல்லி பயன்படுத்தி வந்தால், பித்தம் தணியும்; உடல் பருமன், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் கட்டுப்படும். மஞ்சள், இஞ்சி, எலுமிச்சை, சீரகம், கொத்தமல்லி போன்றவை பித்தத்தை தணிக்கும். கொத்தமல்லியின் கீரை, விதை இரண்டுமே மருத்துவப் பயன் கொண்டது. ஒரு கைப்பிடி கொத்தமல்லி விதை, 20 காய்ந்த திராட்சையை, 1 லிட்டர் தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து, கஷாயமாக்கி குடித்து வந்தால், பித்தம் தணியும். ஒரு மேஜை கரண்டி மல்லி விதையை, 500 மி.லி., தண்ணீரில் போட்டு ஒரு டம்ளராக வற்ற வைத்து, நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலந்து குடித்தால், கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தில் உள்ள உலோக நச்சுகள் வெளியேறும். மேலும், மல்லி இலையை வாயில் போட்டு மென்றால், வாய் துர்நாற்றம் மறையும்; வாய்ப்புண் ஆறும்; மல்லி விதையை அரைத்து பற்று போட்டால், தலைவலி சரியாகும். மல்லி விதையை வறுத்து, பொடித்து, தினமும் ஒரு டீ ஸ்பூன் உட்கொண்டு வந்தால், வயிற்றுப் பிரச்னைகள் தீரும்; இதயம் வலிமை பெறும்; உடலுக்கு வலிமையும், ஆண்மையும் பெருகும்.காய்ச்சல் வந்தவர்கள் சாப்பிடத் துவங்கும் போது, மல்லி இலை துவையல் செய்து சாப்பிட, நாவில் ருசி தெரியும். ரத்த சோகை பிரச்னை உள்ளவர்கள், கொத்தமல்லி இலையை, ஜூஸ் எடுத்து பருகி வர, நல்ல குணம் கிடைக்கும். பொதுவாக, கீரைகளை இரவு உணவுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது என, டாக்டர்கள் அறிவுரை வழங்குவர். ஆனால், கீரை வகையில் உள்ள கொத்தமல்லியை, இரவிலும் சாப்பிடலாம். மல்லி இலையையும், புதினாவையும் சம அளவில் எடுத்து, மிளகாய், புளி, தேங்காய், உப்பு சேர்த்து சட்னி அரைத்து சாப்பிடலாம்; துவையலாகவும் எடுத்துக் கொள்ளலாம். இது, உடல் நலத்திற்கு மிகவும் நல்லது; மலச்சிக்கலை தீர்க்கும்!

No comments:

Post a Comment