Thursday, January 9, 2020

'அம்மா, எனக்கு ரொம்ப பசிக்குது!' thanks to dinamalar.com

'அம்மா, எனக்கு ரொம்ப பசிக்குது!'

பதிவு செய்த நாள்

09ஜன
2020
00:00
'என் குழந்தை பசிக்குது என்று அடிக்கடி சொல்கிறான்... ஒரு நாளில், எத்தனை முறை சாப்பாடு தர வேண்டும்?' இது, பொதுவாக பெற்றோர் என்னிடம் கேட்கும் கேள்வி.

சராசரியாக, மூன்று வேளை உணவு, ஒரு வேளை நொறுக்குத் தீனி தரலாம். நன்கு ஓடியாடி விளையாடும் குழந்தைகளுக்கு, இரண்டு வேளை நொறுக்குத் தீனி தரலாம். இதற்கு மேல் குழந்தைகளுக்கு தர வேண்டிய அவசியம் இருக்காது.

பசித்தால் குழந்தைகள் உணவு கேட்பர் என்பது ஒரு பக்கம். பல நேரங்களில், 'போர் அடிக்கிறது, விளையாடுவதற்கு எதுவும் இல்லை. அப்பா, அம்மாவிடம் ஏதாவது சொல்ல வேண்டும். தன் மீது அம்மா, அப்பாவின் கவனம் திரும்ப வேண்டும்' என்பதற்காக, அதை நேரடியாக வெளிப்படுத்த தெரியாமல், 'எனக்கு பசிக்குது' என்று சொல்வர்.

குழந்தையிடம் பேசிப் பார்த்தால், உண்மையில் பசி இருக்காது... விளையாட போக வேண்டும் என்று தோன்றியிருக்கலாம்; வேறு ஏதாவது செய்ய விரும்பலாம். அதை, எப்படி சொல்வது என்று தெரியாமல், 90 சதவீதம் குழந்தைகள் பசி என்று தான் சொல்வர்.

குழந்தை கேட்கிறது என்பதற்காக, உடனே எதையாவது சாப்பிடக் கொடுப்பது சரியல்ல. காரணம், 6 வயது வரை உள்ள குழந்தைகளால், எவ்வளவு செரிமானம் செய்ய முடியுமோ அவ்வளவு தான் முடியும். அதிலும், அதிக உடல் எடையுடன் வளர்வதற்கு, பெற்றோரே காரணமாக இருந்து விடக் கூடாது.

சாதாரணமாக, ஒரு நாளைக்கு காலை, மதியம், இரவு உணவு தவிர, இரண்டு வேளை ஸ்நாக்ஸ் தருகிறீர்கள்... அதற்கு மேலும் குழந்தை பசிக்கிறது என்று சொன்னால், குழந்தையிடம், 'என்ன வேணும், விளையாடணுமா, வெளியில் போகணுமா' என்று கேட்டுப் பாருங்கள்.

வேறு விஷயத்தை பேசும் போது, உணவை, குழந்தை மறந்து விட்டது என்றால், உண்மையில் குழந்தைக்கு பசி கிடையாது; உங்கள் கவனத்தை ஈர்ப்பதற்காக பசிக்கிறது என்று சொல்கிறது என்று புரிந்து கொள்ளலாம்.

குழந்தைப் பருவ உடல் பருமன், தற்போது அதிகமாகி வருகிறது. அதனால், அளவுக்கு அதிகமாக குழந்தைக்கு சாப்பிடக் கொடுத்து, நம் குழந்தைகளுக்கு நாமே நோயை உண்டு பண்ணி, அதன்பின் வருத்தப்பட்டு பலன் இல்லை.

அதேபோல, பிரீ ஸ்கூல் குழந்தைகளிடம் நாம் செய்யும் தவறு, தட்டில் உணவைக் கொடுத்து, 'இதை முழுவதுமாக சாப்பிட்டு முடி... உணவை வீணாக்கக் கூடாது' என்று சொல்வது. குழந்தைகளுக்கு பொய் சொல்லத் தெரியாது.

குழந்தையால், எவ்வளவு சாப்பிட முடியுமோ அவ்வளவு தான் சாப்பிடும். தட்டில் வைத்தது முழுவதையும் குழந்தையால் சாப்பிட முடியவில்லை என்றால், பரவாயில்லை என்று விட்டு விடுங்கள்.

குழந்தையால் எவ்வளவு சாப்பிட முடிகிறது என்று கவனித்து, அடுத்த முறை, அந்த அளவை கொடுங்கள். 'உணவை வீணாக்க கூடாது... சாப்பாடு எவ்வளவு முக்கியம்' என்று தத்துவம் பேசுவது தவறு.

இப்படி செய்வதால், குழந்தைக்கு சாப்பாடு மேல் வெறுப்பு வந்து விடும். அதன்பின், வீட்டில் சாப்பிடுவதை விட, வெளியில் சாப்பிடுவதை விரும்பும்.

குழந்தைக்கு பிடித்த மாதிரி உணவு தராததால் தான், பெரும்பாலும் வெளியில் கிடைக்கும் உணவுகளை விரும்புகிறது. குறிப்பாக, பிரீ.கே.ஜி., - எல்.கே.ஜி., - யு.கே.ஜி குழந்தைகள் சொல்வதையும் கொஞ்சம் கேளுங்கள்.

டாக்டர் அஸ்வின் விஜய்
பொதுநல மருத்துவர்,
சென்னை.
90940 10777

No comments:

Post a Comment