Monday, February 10, 2020

கொஞ்சம் கவனம்... கொட்டும் நிம்மதி! - தென் மாநிலத்தவரை அதிகம் பாதிக்கும் கேன்சர்!


Advertisement
 
 
 
Advertisement
Advertisement

 
Advertisement
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09பிப்
2020
00:00
சர்வதேச அளவிலும் சரி, தேசிய அளவிலும் சரி, ஜீரண மண்டல கேன்சரால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும், முதல் மூன்று இடங்களிலேயே உள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன், 100 பேரில், 10 பேருக்கு இவ்வகை கேன்சர் பாதிப்பு இருந்தால், இந்த எண்ணிக்கை இரட்டிப்பாவதற்கு, 30 ஆண்டுகள் ஆனது. ஆனால், சமீப ஆண்டுகளில், இந்த எண்ணிக்கை, 10 ஆண்டுகளிலேயே இரட்டிப்பாகிறது.
கல்லீரல், பெருங்குடல், கணையம், இரைப்பை போன்ற ஜீரண மண்டல உறுப்புகளில், கேன்சர் பாதித்த புதிய நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், மிக முக்கியமானவை நான்கு காரணிகள்.
உணவுப் பழக்கம்




தென் மாநில உணவுகளில் பாரம்பரியமாக உபயோகிக்கப்படும் மஞ்சள், சீரகம், மிளகு போன்ற பொருட்களில், உடல் நலத்திற்கு தீங்கு செய்யாத மூலப்பொருட்கள் உள்ளன. உதாரணத்திற்கு, மஞ்சளில் உள்ள, 'குர்குமின்' என்ற வேதிப் பொருள், எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தக் கூடியது; கேன்சரை தடுக்கும் வல்லமையும் இதில் உள்ளது. நம்முடைய சிறுதானியங்கள் அனைத்திலும், உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஊட்டச்சத்துகளே உள்ளன.
ஆனால், சமீப ஆண்டுகளில் வந்த புள்ளி விபரங்களை பார்த்தால், தென் மாநிலத்தவருக்கு, ஜீரண மண்டல புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதற்கு பிரதான காரணம், நம் பாரம்பரிய மசாலாக்களைத் தவிர்த்து, சுவைக்காக சேர்க்கப்படும், 'அஜினமோட்டோ' போன்ற செயற்கை உப்புகள், செயற்கை நிறங்கள், பதப்படுத்த பயன்படுத்தப்படும் வேதிப் பொருட்கள் அனைத்தும், கேன்சரை துாண்டக் கூடியவை. அதிக காரம், கொழுப்பு சேர்ந்த உணவுகளையே விரும்பி சாப்பிடுகின்றனர்.
வறுத்த, பொரித்த உணவுகள் மற்றும் தந்துாரி வகைகளில், கேன்சர் செல்களை துாண்டக் கூடிய, 'கார்சினோஜென்' எனப்படும் வேதிப் பொருள் உள்ளது. தந்துாரி உணவுகள் நேரடியாக அடுப்பில் சுடப்படுகின்றன.இவற்றில் இருந்து, 'நைட்ரோ சமைன்' என்ற வேதிப் பொருள் வெளிப்படுகிறது. இது, கேன்சரை துாண்டக் கூடிய கார்சினோஜென் வகை.

சிகரெட், மது




புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு, ஜீரண மண்டல கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதில் உள்ள, 'நிகோடின்' எனப்படும் வேதிப் பொருள், கேன்சரை உண்டாக்கும் கார்சினோஜென்.
மது பழக்கம், கல்லீரலை செயலிழக்கச் செய்யும். கல்லீரலில் உள்ள திசுக்கள் அழிந்து, 'சிரோசிஸ்' எனப்படும் செயலிழக்கும் தன்மையை ஏற்படுத்தும். இதற்கு அடுத்த நிலை, கல்லீரல் கேன்சர். கடந்த வாரம், கல்லீரல் முற்றிலும் செயலிழந்த நிலையில் நான்கு நோயாளிகள் வந்தனர்; அனைவரும் இளைஞர்கள். அறுவை சிகிச்சை செய்யவே முடியாத அளவிற்கு, நிலைமை மோசமாக இருந்தது.தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்ளும் அபரிமிதமான திறன் கல்லீரலுக்கு உண்டு.
எல்லா விதத்திலும் தன்னைத் தானே சரி செய்து பார்த்து, முடியாத பட்சத்தில் அறிகுறிகள் வெளியில் தெரியும். அதற்குள், 80 சதவீதம் கல்லீரல் செயலிழந்து விடும். மது பழக்கம் இல்லாத ஒருவருக்கு, கல்லீரலில் கேன்சர் வந்தால், பாதித்த பகுதியை அறுவை சிகிச்சை செய்து அகற்றி விட முடியும். ஆனால், மது பழக்கம் இருந்தால், கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டு, திசுக்கள் சிதைந்து, அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலை ஏற்படலாம்.
இடது பக்க அல்லது வலது பக்க கல்லீரலை தானமாக பெற்று, மது பழக்கம் இல்லாத, கேன்சர் பாதித்த நபருக்கு பொருத்தலாம். ஆனால், மது பழக்கம் இருப்பவர்களுக்கு, 25 சதவீதம் அளவிற்கு புதிய கல்லீரல் பொருத்தினாலும், பலன் தருவதில்லை.

உடற்பயிற்சியின்மை




உணவுப் பழக்கம் முற்றிலும் மாறிவிட்ட நிலையில், அதிக கலோரி உணவுகளையே அதிகம் சாப்பிடுகிறோம்; அதற்கு தகுந்த உடலுழைப்பு கிடையாது. பெரும்பாலும், ஒரு நாளில் எட்டு மணி நேரம் உடகார்ந்தபடியே வேலை பார்க்கிறோம்.

சுற்றுச்சூழல் மாசு




தொழிற்சாலைகளில் இருந்து வரும் கழிவுகளால், சுற்றுச்சூழல் மாசு அதிக அளவில் உள்ளது.

அறிகுறிகள்




எல்லா உறுப்புகளும் சில எச்சரிக்கை அறிகுறிகளை துவக்கத்திலேயே வெளிப்படுத்தும். இரைப்பை கேன்சர் இருந்தால், பசி இருக்காது; வாந்தி வரும்; சாப்பிட முடியாது. மஞ்சள் காமாலை வந்தால், கணைய கேன்சராக இருக்கலாம்.பெருங்குடல் கேன்சராக இருந்தால், சில நாட்கள் மலச்சிக்கல், சில நாட்கள் வயிற்றுப்போக்கு, மலத்தில் ரத்தம் வருவது என்று மாறி மாறி வரலாம்.

வருமுன் தடுக்க




இன்று இருக்கும் சூழலில், 40 வயதிற்கு மேல், முழு உடல் பரிசோதனையை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்து கொள்ள வேண்டியது அவசியம். 'எந்த கெட்ட பழக்கமும் இல்லை; கேன்சர் எனக்கு வராது' என்று பெரும்பாலானோர் நினைக்கின்றனர்; இது தவறு.
சிகரெட், மது பழக்கம் உட்பட கெட்ட பழக்கங்கள் இருப்பவர்கள், மிதமான சில அறிகுறிகள் தெரிந்தாலே, 'ஐயோ... நாம் சிகரெட் பிடிக்கிறோம்; பிரச்னை இருக்குமோ' என்று பயந்து, ஆரம்பத்திலேயே பரிசோதனைக்கு வந்து விடுகின்றனர்.'எந்த கெட்ட பழக்கமும் இல்லாதவர்கள், லேசான அறிகுறிகள் தெரிந்தாலும், 'நமக்குத் தான் எந்த கெட்ட பழக்கங்களும் இல்லையே...' என்று அலட்சியமாக இருந்து விட்டு, பிரச்னை பெரிதான பின் வருகின்றனர்.
காரணம், சிகரெட் பிடித்தால், என்னவெல்லாம் பிரச்னை வரும் என்று அனைவருக்கும் தெரிந்தே செய்வதால், எப்போது என்ன ஆகுமோ என்ற பயம், அவர்களையும் அறியாமல் மனதில் இருக்கும். முறையான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி என்று உடல் நலத்தில் கவனமாக இருப்பவர்கள், பல நேரங்களில் அலட்சியமாக இருந்து விடுகின்றனர். அறிகுறிகளை யாரும் அலட்சியம் செய்யவே கூடாது. ஆரோக்கியமான வாழ்க்கை முறையில் இருந்தாலும், சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள மாசு, யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். எனவே, எந்த அறிகுறியையும் அலட்சியம் செய்யவே கூடாது.
பொது மருத்துவரிடம் ஆலோசித்து, மருந்துகள் சாப்பிட்ட பின்பும், ஒரு மாதத்திற்கும் மேலாக, தொடர்ந்து அறிகுறிகள் இருந்தால், தேவையான மருத்துவப் பரிசோதனை செய்து, கேன்சர் பாதிப்பு உள்ளதா என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
நாற்பது வயதிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வரும் கேன்சர் அனைத்தும், தீவிர அறிகுறிகளுடன், ஆரம்பத்திலேயே பாதிப்பை அதிகம் ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. மிக அரிதாக, சிலருக்கு அறிகுறிகள் தெரிந்த ஒரு வாரத்திலேயே, கேன்சர் முற்றிய நிலையில் இருக்கும்.

டாக்டர் பி.செந்தில்நாதன்,
ஜீரண மண்டல கேன்சர் அறுவை சிகிச்சை மருத்துவர்,
ஜெம் மருத்துவமனை,
சென்னை.
044 - 6166 6666

No comments:

Post a Comment