Saturday, February 29, 2020

இலுப்பை மரத்தை நடவு செய்யலாமா? - நன்றி விகடன் பி[ப்ரவரி-2020 இதழ்



இலுப்பை மரத்தை நடவு செய்யலாமா?
இலுப்பை மரம்
நீங்கள் கேட்டவை - புறா பாண்டி
பிரீமியம் ஸ்டோரி
‘‘ `இலுப்பை மரத்தைச் சொந்த நிலத்தில் வளர்த்தால் ஆகாது’ என்கிறார்கள். இது உண்மையா?’’
- கே.துரைகண்ணு, நடராஜபுரம்.

இலுப்பை மரம்
இலுப்பை மரத்தை உங்கள் சொந்த நிலத்தில் சாகுபடி செய்தால், ஆண்டுதோறும் வருமானம் வந்துகொண்டே இருக்கும். ஒரு காலத்தில் கோயில் நிலங்களில் இலுப்பை மரங்களை நடவு செய்தார்கள். அவற்றிலிருந்து கிடைத்த எண்ணெயை விளக்கு எரிக்கவும், மடப்பள்ளியில் உணவு தயாரிக்கவும் பயன்படுத்தினார்கள். `கோயிலில் வளர்க்கும் மரத்தை, நம் நிலத்தில் வளர்க்கக் கூடாது’ என்ற மூடநம்பிக்கை உருவாகியிருக்கலாம். தமிழ்நாட்டில், சொந்த நிலத்தில் இலுப்பை மரத்தை வளர்த்துவரும் விவசாயிகள் இருக்கிறார்கள். எனவே, நீங்கள் தாராளமாக இலுப்பையை நடவு செய்யலாம். காரைக்குடியிலுள்ள செட்டிநாடு மானாவாரி ஆராய்ச்சி நிலையத்திலும், கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்திலுள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலும் இலுப்பை தொடர்பான ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன. இலுப்பை மரத்தின் பயன்கள் ஏராளம். ஆனால், அதை வளர்ப்பது படிப்படியாகக் குறைந்துவிட்டது. கோயில் நிலங்களில் வளர்க்கப்படும் இலுப்பை மரங்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. எனவே, விவசாயிகள் இலுப்பை மரங்களை நடவு செய்ய ஊக்கப்படுத்தி வருகிறது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம்.

இந்த மரங்களை வரப்புப் பயிராகவோ, தனிப்பயிராகவோ சாகுபடி செய்யலாம். அனைத்து வகையான மண்ணிலும் இது வளரும். 10 ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கி, 50 ஆண்டுகள் வரை பலன் கொடுக்கக்கூடியது. இலுப்பை மரங்கள் சுமார் 100 ஆண்டுகள்கூட வளரும்; ஆனால், மகசூல் குறைந்துவிடும் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும். இலுப்பை விதையிலிருந்து எடுக்கப்படும் இலுப்பை எண்ணெய், ‘ஏழைகளின் நெய்’ என்று அழைக்கப்படுகிறது. பசு நெய்க்கு இணையான சத்துகள் இதில் உள்ளன. முன்பெல்லாம் இந்த எண்ணெயில்தான் பலகாரங்கள் செய்வார்கள். இந்த எண்ணெய் நீண்ட நாள்களுக்குக் கெடாது. இது சோப்பு தயாரிப்பு, இருமல் மருந்து, நெஞ்சுவலிக்கான மருந்து, சதைப்பிடிப்புக்கான களிம்பு, வலி நிவாரணிகள் போன்றவை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இந்த மரத்தின் பட்டை உள்ளிட்ட அனைத்து பாகங்களும் பலவித மருத்துவ குணங்களைக் கொண்டிருக்கின்றன. இலுப்பைப் பூவில் 73 சதவிகித அளவு சர்க்கரை இருக்கிறது. ‘இனிப்பில்லாத ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை’ என்ற பழமொழிகூட உண்டு. இலுப்பை மரக்கன்றுகள் மேட்டுப் பாளையத்திலுள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விற்பனை செய்யப்படுகின்றன. சில தனியார் நாற்றுப் பண்ணைகளிலும் இலுப்பைக் கன்றுகள் விற்பனை செய்யப்படுகின்றன.’’

தொடர்புக்கு, வன ஆராய்ச்சி நிலையம், மேட்டுப்பாளையம் தொலைபேசி: 04254 222010.


No comments:

Post a Comment