Saturday, February 15, 2020

இணையதளத்தில் மகாபாரதத்தை இலவசமாக படிக்கலாம் thanks to dinamalar.com


இணையதளத்தில் மகாபாரதத்தை இலவசமாக படிக்கலாம்!
மகாபாரதத்தை ஆங்கி லத்திலிருந்து, அழகிய தமிழில் மொழிபெயர்த்து, அனைவரும் கட்டணம் இன்றி, இலவசமாக படிக்கும் வகையில், ௧௫ ஆயிரம் பக்கங்களை இணையத்தில் பதிவேற்றியுள்ள, சென்னை, திருவொற்றியூரைச் சேர்ந்த அருட்செல்வபேரரசன்: என் பெற்றோர், தமிழாசிரியர்கள். அப்பா, பகுத்தறிவாளர்; அம்மா, தெய்வ நம்பிக்கை உடையவர். மகாபாரத கதைகளைத் தான் அம்மா, அனைத்திற்கும் உதாரணமாக கூறுவார். அப்போது, அம்மாவுக்கும், அப்பாவுக்கும் விவாதம் நடக்கும். இவர்கள் இடையே தான் நான் வளர்ந்தேன். எனக்கு, மகாபாரத ஆவல், பெற்றோரால் ஊட்டப்பட்டது தான். அதன் பின், ராஜாஜி, 'துக்ளக்' ஆசிரியர் சோ போன்றோரின் நுால்கள், என் அறிவு ஜன்னல்களை ஒவ்வொன்றாக திறக்கத் துவங்கின. 100 ஆண்டுகளுக்கு முந்தைய, கிசாரி மோகன் கங்குலி என்ற நுாலாசிரியர், மகாபாரத கதையை விரிவாக எழுதியுள்ளார். காப்புரிமை சிக்கல் இல்லாத அந்த கதையை, 2013ல் மொழிபெயர்க்கத் துவங்கினேன்; 2020ல் முடித்தேன். 86 ஆயிரம் சுலோகங்களுடன், எளிய தமிழில் மொழிபெயர்த்து, https://mahabharatham.arasan.info என்ற என் இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளேன். யார் வேண்டுமானாலும் படித்து இன்புறலாம். இந்த பணிக்கு, ஏழு ஆண்டுகள் ஆனது. இணையதள வடிவமைப்பாளராக உள்ளேன். அலுவலகம் சென்று, வீடு திரும்பியதும், இரவு, 11:00 மணி துவங்கி, அதிகாலை, 2:30 மணி வரை, மகாபாரத பணியில் என்னை ஈடுபடுத்திக் கொண்டேன். நான் செய்தது, வெறும் மொழிபெயர்ப்பு பணியல்ல; நம் தேசத்துடன் தொடர்புடையது. நம் பாரம்பரியம், தத்துவம், பண்பாடு, வாழ்வு, போதனை இவற்றோடு பின்னிப் பிணைந்தது. இந்த பழம்பெரும் இதிகாசத்தை, ஏராளமானோர், பல மொழிகளில் மொழிபெயர்த்துள்ளனர். தமிழில் சிலர், அவரவர் இஷ்டத்திற்கு மகாபாரதத்தை கூறி வருகின்றனர். அது தவறு என, உணர்ந்தேன். நாம் ஏன், சரியான மகாபாரதத்தை அனைவருக்கும் வழங்கக் கூடாது என்ற எண்ணத்தில் தான், இந்த பணியில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி, நிறைவு செய்துள்ளேன். இதற்கு, எனக்கு பலர் உதவி செய்துள்ளனர். மகாபாரதத்தை எழுதிய வியாச முனிவர், அதற்கு இட்ட பெயர், 'ஜெயம்!' அந்த வகையில், எழுத்தாளர் ஜெயமோகன், என் நண்பர் ஜெயவேலன் போன்றோர், இந்த ஜெயம் உருவாக, உதவிகரமாக இருந்துள்ளனர். இணையத்தில் மகாபாரதம் வெளியாகியுள்ளதை அறிந்து, பிரபல எழுத்தாளர்களும், ஆன்மிக பெரியவர்களும் பாராட்டுகின்றனர். இதில், என் பங்கு எதுவும் இல்லை. இவ்வாறு செய்ய, இறைவன் என்னை பயன்படுத்தினார்; அவ்வளவு தான்! தொடர்புக்கு: arulselvaperarasan@gmail.com

No comments:

Post a Comment