Saturday, February 15, 2020

அன்புடன் அந்தரங்கம்! thanks to dinamalar.com

அன்புடன் அந்தரங்கம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16பிப்
2020
00:00
அன்புள்ள அம்மாவுக்கு —
வயது: 50. மனைவி வயது: 47. எலக்ட்ரானிக் மற்றும் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் படித்துள்ளேன். வெளிநாட்டு தனியார் நிறுவனத்தில், கணினி உற்பத்தி மற்றும் தர நிர்ணய உதவி மேலாளராக பணிபுரிந்தபோது, 33 வயதில் திருமணம் ஆனது. முதல் குழந்தை கருவுற்றிருந்தபோதே, தனிகுடித்தனம் என்ற கோரிக்கை மற்றும் கருத்து வேறுபாடு காரணமாக, அம்மா வீட்டுக்கு சென்று விட்டாள், மனைவி.
நான்கு ஆண்டுகளாக பிரிந்து இருந்தோம். இந்த கவலையில், என் தாய் இறந்து விட்டார். எனினும், அவ்வப்போது, என் அக்காவின் ஆதரவில், தவறான வழியில் மனைவி சென்றுவிட கூடாது என்பதற்காக, தந்தை சம்மதத்துடன், அவளை சந்தித்தேன்.
நிறுவனத்தில், ஓரளவு ஊதிய உயர்வு கிடைக்கவே, அவளின் அம்மா வீட்டிற்கு அருகில் வசித்தோம். இரண்டாவது குழந்தை பிறந்தது. மனைவி மீது மிகுந்த நம்பிக்கை வைத்து, அவளுக்கும் ஓர் ஆளுமை உரிமை வழங்கும் உயர்ந்த எண்ணத்தில், எனக்கு என்று எதையும் சேமித்து கொள்ளாமல், சம்பளம் முழுவதையும் அவளிடமே கொடுத்தேன்.
அவளின் அப்பா உயிரோடு இருந்தபோது, 'எங்கள் வீட்டிலேயே ஒரு பகுதியில் இருங்கள்...' என, அழைத்தார். நான் சம்மதிக்கவில்லை. அவரின் மறைவிற்கு பின், திருமணமாகாத மைத்துனரின் வேண்டுகோளின்படி, அவர்கள் வீட்டின் கீழ் பகுதியில், 12 ஆண்டுகளாக வாடகை கொடுத்தே வசித்தேன்.
வீட்டின் மூத்த மாப்பிள்ளை என்பதால், பாரபட்சம் பார்க்காமல், மாமியார், மைத்துனர் மற்றும் மனைவியின் உறவினர்களுக்கும் வேண்டியவற்றை, என் ஊதியத்திலேயே செலவு செய்து வந்தேன்.
தற்போது, மைத்துனருக்கு திருமணமாகி, இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஆள் குறைப்பு மற்றும் புதிய ஆள் சேர்க்கை காரணமாக, என்னுடன் சேர்த்து, 10 பேரை, 'செட்டில்மென்ட்' செய்து, வெளியேற்றி விட்டது, நிறுவனம்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், எனக்கு, முதுகுதண்டில் நடந்த அறுவை சிகிச்சையில், 'ராட்' வைத்துள்ளனர். ஓர் ஆண்டாக, பல இடங்களிலும் வேலை தேடி, ஏறி இறங்கி விட்டேன். வயது முதிர்வு காரணமாக, வேலை கிடைக்கவில்லை. வந்த மொத்த தொகையையும் மனைவியும், மைத்துனரும் செலவு செய்து விட்டனர்.
சாதாரணமாக கணக்கை கேட்க, 'தாம்பத்தியத்திற்காக தான், நீ என்னுடன் குடித்தனம் நடத்த வந்தாய்; நீ ஒரு பைத்தியம். இது, என் வீடு. வேலை வெட்டி இல்லாத உனக்கு, இங்கு இடமில்லை வெளியேறு. இனி, இந்த வீட்டு படியை மிதிக்க கூடாது...' என, மைத்துனருடன் சேர்ந்து, மனைவியும், என் வயதுக்கு கூட மரியாதை தராமல், இழிவுபடுத்தி அனுப்பி விட்டனர். மேலும், எனக்கு சொந்தமான எந்த பொருளையும் எடுக்க விடவில்லை.
தன்மானம் கருதி, ஏதும் பேசாமல், அடைக்கலம் தேடி, அக்கா வீட்டிற்கு வந்து விட்டேன். தற்போது எனக்கு என இருப்பது, தந்தை கொடுத்த ஒரு வீடும், காலி மனையும் தான்.
'நீ எந்த தப்பும் செய்யவில்லை. பாவம், உனக்கு அமைந்த வாழ்க்கை சரியில்லை. போனால் போகட்டும் விடுடா...' என, அக்கா ஆறுதல் கூறினாலும், பட்ட மன துயர், அவமானம், பலருக்கும் நான் பாரமாக இருக்கிறோமோ என்ற உணர்வு கொல்கிறது.
இன்று நிம்மதி தொலைந்து, கண்ணீருடனும், மன அழுத்தத்துடனும் இருக்கிறேன். ஆறுதல் தாருங்கள் அம்மா.
 இப்படிக்கு,
உங்கள் மகன்.


அன்பு மகனுக்கு —
உனக்கு, 33 வயதில் திருமணமாகியுள்ளது. தாமதமாய் திருமணம் செய்து கொள்ளும், சில ஆண்களுக்கு, தங்களது ஆண்மை மீது சந்தேகம் வரும். திருமண பந்தம் மீறிய உறவில், மனைவி ஈடுபட்டு விடுவாளோ என்கிற பதைபதைப்பும் ஏற்படும். அதனால் தான், உன் கடிதத்தில், 'மனைவி தவறான வழியில் சென்று விடக்கூடாது என்பதற்காக, பிரிந்திருக்கும் அவளை சந்தித்தேன்...' என, கூறியிருக்கிறாய்.
மனைவியை பிரிந்திருக்கும் கணவன்மார்கள், தவறான வழியில் சென்றுவிட மாட்டார்களா... உணர்ச்சி என்பது, ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுதானே, மகனே. மனைவியை நீ பிரிந்தது, ஆணாதிக்க மனோபாவத்தால் தான் என, யூகிக்கிறேன்.
கணவன், தான் சம்பாதிக்கும் பணத்தை மனைவியிடம் கொடுத்து செலவு செய்ய சொல்வது, அவளுக்கு ஆளுமை உரிமை வழங்கும் எண்ணத்தால் அல்ல; தான் கொடுக்கும் பணத்திற்குள், குடும்பத்தை சிறப்பாக மனைவி நிர்வகிப்பாள் என்கிற, சுயநலம் தான்.
மாமனார் வீட்டுக்கு, 12 ஆண்டுகளாக வாடகை கொடுத்து குடியிருந்திருக்கிறாய். அதை தவறு என சொல்ல மாட்டேன். ஆனால், மாமியார், மைத்துனர் மற்றும் மனைவியின் உறவினர்களுக்கு, உன்னை யார் செலவு செய்ய சொன்னது?
தனியார் நிறுவனங்களில், 45 வயதுக்கு மேல் ஊழியர்களை வேலைக்கு வைத்துக்கொள்ள மாட்டார்கள். மாதா மாதம் ஊதியத்தில் ஒரு தொகையை ஒதுக்கி, நீ சேமித்திருக்க வேண்டும். ஊதாரித்தனத்தாலும், வீண் பெருமையாலும் இன்று அவதிப்படுகிறாய்.
திருமணமான புதிதில், ஒரு கணவன், என்ன குணத்தில் இருக்கிறானோ அதை வைத்து தான், ஆயுளுக்கும் அவனை மதிப்பாள், மனைவி.
மனைவியிடமும், மைத்துனரிடமும், 'செட்டில்மென்ட்' தொகையை ஏன் கொடுத்தாய்... வங்கியில் வைப்பு தொகையாக போட்டிருந்தால், மாதா மாதம் வட்டி வருமே... 'தீதும், நன்றும் பிறர் தர வாரா' என்ற முதுமொழி, உன்னை பொறுத்தவரைக்கும், அக்மார்க் உண்மை. சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டாய், மகனே.
உனக்கு, இரு குழந்தைகள் என எழுதியிருக்கிறாய். மூத்தது, பெண் குழந்தை என்றால், 16 வயதும், இரண்டாவது, ஆண் குழந்தை என்றால், 14 வயது இருக்கும். வீட்டை விட்டு தனியாக வெளியேறி, அக்கா வீட்டில் அடைக்கலம் ஆகியிருக்கிறாய் என்றால், இரு குழந்தைகளும் உன்னுடன் வரவில்லை. அவர்கள் இருவரும், அம்மா கட்சி என்பது அப்பட்டமாகிறது.
உன் பக்கம் நியாயம் இருந்தால், அவர்கள் உன்னுடன் வந்திருக்க வேண்டும். தந்தை மீது தவறா, தாயின் மீது தவறா என்று தீர்ப்பு கூற, சிறந்த நீதிபதிகள், உன் குழந்தைகளே.
அக்கா வீட்டில் உட்கார்ந்து எவ்வளவு நாள் ஓசி சோறு தின்பது. உடனடியாக, அக்கா வீட்டிலிருந்து வெளியேறி, தந்தை வீட்டிற்கு குடி போ. சமையல் செய்யக் கற்றுக்கொள். காலி மனையை வந்த விலைக்கு விற்று விடு.
வீட்டின் முன் பகுதியை இடித்து, கடையாக்கு. 'மினி டிபார்ட்மென்டல் ஸ்டோர்' வைத்து, தினசரி வரவு - செலவு கணக்கை எழுது. ஊதாரித்தனத்தையும், வீண் பெருமையையும் குப்பையில் துாக்கிப் போடு. 'ஈகோ'வை துறந்து, மனைவியுடன் பேசு. அதற்காக, கடை வருமானத்தை துாக்கி கொடுத்து விடாதே. வாரா வாரம் குழந்தைகளை அழைத்து, அளவளாவு; பரிதாபம் கொள்ளாதே.
ஒரு கட்டத்தில், மனைவி உன்னுடன் சேர்ந்து வாழ விரும்புவாள்.
'ஆடம்பர செலவு செய்ய அனுமதிக்க மாட்டேன். மைத்துனர் குடும்பம் வரக்கூடாது. குடும்ப செலவை நானே பார்த்துக் கொள்வேன்...' என்ற நிபந்தனைகளுடன் மனைவியை சேர்த்துக் கொள். உன்னுடைய கொள்கையில் உறுதியாக இருந்தால், மனைவியோ, மைத்துனனோ வாலாட்ட மாட்டார்கள். குழந்தைகளிடம், நல்ல தந்தை என, பெயர் வாங்கு.
உலகத்தில் மிக சிரமமான காரியம், நல்ல கணவன் என, பெயர் எடுப்பது. மிகச்சிறந்த கணவனுக்கு கூட, அந்த விருதை கொடுக்க மனைவியர் முன் வருவதில்லை. முதல் இன்னிங்சில், 'ஹிட் விக்கெட்' முறையில், ரன் அடிக்காமல், 'அவுட்' ஆகி விட்டாய்; இரண்டாவது இன்னிங்சில், சிறப்பாக ஆடி, 'செஞ்சுரி' அடி. போர்க்களத்தில் ஒப்பாரி எதற்கு... யுத்த முறைகளை மாற்றி, வெற்றிபெறு மகனே!
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.

No comments:

Post a Comment