Saturday, February 15, 2020

செய்யும் தொழிலில் நேர்மையும் உழைப்பும் thanks to dinamalar

பொது செய்தி 

தமிழ்நாடு

இருந்தால் சாசெய்யும் தொழிலில் நேர்மையும் உழைப்பும் திக்கலாம்!

 Updated : பிப் 15, 2020  Added : பிப் 15, 2020  கருத்துகள் (6)
idli,idli_iniyavan,Idliman,இட்லி,இட்லி_இனியவன்
28Shares
'செய்யும் தொழில் எதுவாக இருந்தாலும், அதில் நேர்மையும், கடுமையான உழைப்பும் இருந்தால் சாதிக்கலாம்,'' என்கிறார், 'இட்லி' இனியவன். தமிழர்களின் இனிய, எளிய உணவான இட்லிக்கு, உலக அளவில் ஏகோபித்த வரவேற்பு உள்ளது. இட்லியில், 2,547 வகைகளை தயாரிக்க முடியும் என, சாதித்துக் காட்டியவர் இனியவன். 'வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்டு' சாதனைக்கு சொந்தக்காரரான அவருடன் பேசியதில் இருந்து...

உங்களை பற்றி?


சொந்த ஊர் கோவை. எங்க அப்பாவுக்கு, என்னுடன் சேர்த்து, ஐந்து பெண்கள் உட்பட, 10 பிள்ளைகள். காய்கறி, பழம் விற்று எங்களை காப்பாற்றினார். மதிய உணவுக்காக பள்ளிக்கு சென்றேன். அரிசி சாதம், தோசை என்றால், எங்களுக்கு திருவிழா மாதிரி. வறுமை காரணமாக, எட்டாவது வரை மட்டுமே படிக்க முடிந்தது. தேநீர் கடையில் உதவி யாளராக சேர்ந்து, நாள் ஒன்றுக்கு, 1.50 ரூபாய் சம்பாதித்தேன். அதன் பின், ஆட்டோ ஓட்டினேன்.


'ஆட்டோ' இனியவன் 'இட்லி' இனியவன் ஆனது எப்படி?


ஆட்டோ ஓட்டிய போது, கோவை, சாய்பாபா காலனியில், சந்திரம்மா என்ற பாட்டி இருந்தார். அவர், இட்லி அவித்து, கடைகளுக்கு சப்ளை செய்வார். ஒரு நாள், இட்லி மாவு அரைக்க, நான் அவரை ஆட்டோவில் அழைத்துச் சென்றேன். அப்படியே அவருக்கு உதவியாகவும் இருந்தேன். ஒரு சமயம், அவர் அவிக்கும் இட்லியை, நானே ஆட்டோவில் கொண்டு போய், கடைகளுக்கு சப்ளை செய்ய துவங்கினேன். ஒரு நாளுக்கு, 250 இட்லி வரை சப்ளை செய்வார். அந்த சமயத்தில், ஒன்றிரண்டு இட்லியை மற்ற கடைகளுக்கும் கொடுத்து, வியாபாரத்திற்கு பேசினேன்.

ஒரே மாதத்தில், 250 இட்லி, 3,500 இட்லி ஆனது. இந்த நேரத்தில் தான், சந்திரம்மாவுக்கு உதவி செய்ய, இட்லி செய்வது தொடர்பான விஷயங்களை கற்றுக் கொண்டேன். சந்திரம்மா சிபாரிசில், சென்னை வந்து, கேண்டீனில், இட்லி மாஸ்டராக ஓராண்டு இருந்தேன். மீண்டும், கோவை செல்ல மனமில்லாமல், சென்னையிலேயே தங்கி விட்டேன்.

சென்னை உங்களை அன்புடன் வரவேற்றதா?


'வந்தாரை வாழ வைக்கும் சென்னை' ஆரம்பத்தில் என்னை புரட்டி எடுத்தது. நான், 1997ல், ஒரு இட்லி பானை, கோணியுடன், ஆர்.கே.நகரில் கழிவு நீர் கால்வாய் அருகே, ஒரு குடிசையில் தங்கினேன். அப்போது மழை நேரம். இரவு பெய்த கனமழையால், கால்வாய் தண்ணீர், சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. அதில், என் இட்லி பானையும், பாத்திரங்களும் காணாமல் போயின. வெள்ள நீர் வடியாமல், 20 நாட்களாக, கோணியின் உதவியுடன், பிளாட்பாரத்திலேயே தங்கினேன். மீண்டும் கோவை சென்று, ஆட்டோ ஓட்டலாமா? என, யோசித்தேன். ஆனால், நம்மால் முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. சென்னையில், ஒரு கடை விடாமல் ஏறி, இறங்கி இட்லிக்கு, 'ஆர்டர்' எடுத்தேன்.

வேறு என்ன வியாபார யுக்தி?


இட்லிக்கு ஆர்டர் எடுத்த போது, பெரிய வரவேற்பு இல்லை. சென்னையில், அவசர வாழ்க்கையில், என் பேச்செல்லாம், ஓட்டலில் பாடும் ரேடியோ சத்தத்தில் காணாமல் போனது. போன் பேச வேண்டுமானால், ஒரு நிமிடத்திற்கு, 15 ரூபாய் வரை ஆனது. இந்த நேரத்தில் தான், தபால் கார்டுகளை பயன்படுத்த துவங்கினேன். என் இட்லி வகைகளையும், அதனால் முதலாளிகளுக்கு ஏற்படும் நேர மிச்சத்தையும், தெளிவாக எழுதி அனுப்பினேன். இதற்கு, கை மேல் பலன் கிடைத்தது.





எத்தனை வகை இட்லி செய்வீர்கள்?


இட்லிக்கு தனி சுவை இல்லை. சாம்பார், சட்னி என்று, எதனுடன் தொட்டு சாப்பிடுகிறோமோ, அதற்கேற்ப சுவை மாறும். இட்லியை ஒரே மாதிரி வடிவத்தில், ஒரே சுவையில் தருவதற்கு பதில், வெவ்வேறு வடிவத்தில், சுவையை கூட்டி தரலாம் என, யோசித்தேன். இப்போது, 2,547 வகை இட்லிகளை செய்வேன். இதை, 'வேர்ல்ட் புக் ஆப் ரெக்கார்ட்'டில் சாதனையாக அங்கீகரித்துள்ளனர். ஒரே இட்லியை, 124 கிலோவில் செய்தேன். மார்ச், 30ம் தேதியை, உலக இட்லி தினமாக அறிவித்தனர். இதற்காக, என் நண்பர்கள் சேர்ந்து, இட்லி தினத்திற்கான சிறப்பு தபால் தலையை வெளியிட்டனர்.

சாதாரண இட்லி, உங்களை இமயத்திற்கு உயர்த்தியது குறித்து?


இட்லி மட்டுமல்ல... எந்த ஒரு விஷயமானாலும், அதில் நேர்மையும், கடுமையான உழைப்பும் இருந்தால், ஜெயிக்கலாம். இன்று, இலங்கை, துபாய் என, பல வெளிநாடுகளில் இருந்தும் கூட அழைப்பு வருகிறது. இளநீர் இட்லி, சிறுதானிய இட்லி, பீட்சா இட்லி என, இட்லியின் அடுத்தக்கட்ட ஆராய்ச்சியும் தொடர்கிறது. எட்டாவது வரை மட்டுமே படித்த என்னை, இன்று பல கல்லுாரிகளில் நடக்கும் கருத்தரங்கில் பேச அழைக்கின்றனர். சமீபத்தில், திருச்சி கல்லுாரியில் மாணவர்கள் மத்தியில் பேசினேன்.

ருசியான இட்லியின் ரகசியத்தை சொல்லலாமா?


கண்டிப்பாக... இதில், எந்த ஒரு ரகசியமும் இல்லை. இட்லி அரிசி முக்கால் கிலோ போட்டால், ஐ.ஆர்., 20 புழுங்கல் அரிசி கால் கிலோ போட்டு, இரண்டு மணி நேரம் ஊற வைத்து, மையாக அரைக்க வேண்டும். அரைக்கும் போது, மாவு சூடாகாத வகையில், தண்ணீரை சரியான அளவில் சேர்க்க வேண்டும். இட்லி அவிப்பதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன், 200 கிராம் உளுந்து, சிறிது வெந்தயத்தை ஊற வைத்து, மையாக அரைக்க வேண்டும். இதனுடன், ஆமணக்கு விதையையும் சேர்க்கலாம்.

பொதுவாக, இட்லிக்கு வெப்பநிலை மிகவும் முக்கியம். பனி காலத்தில் ஒரு மாதிரியும், வெயில் காலத்தில் ஒரு மாதிரியும், புளிப்பு சுவை மாறி, இட்லி பதத்தை கெடுத்து விடும். வெயில் காலத்தில் தண்ணீர் ஊற்றிய பாத்திரத்தில், இட்லி மாவு ஊற்றிய பாத்திரத்தை வைக்கலாம். பனி காலத்தில் இட்லி மாவில், இளநீர் சேர்க்கலாம். இதன் வாயிலாக, இட்லி எப்போதும் மல்லிப்பூ போல் வரும். அரைத்த இட்லி மாவு, உளுந்து மாவு இரண்டையும் கலந்து, இட்லி அவிக்க வேண்டியது தான். இட்லி பானையில் தண்ணீர் கொதி நிலைக்கு வந்த பின் தான், தட்டில், இட்லி மாவு ஊற்ற வேண்டும்.

- நமது நிருபர் -

No comments:

Post a Comment