Friday, April 10, 2020

நிலக்கரிக்கு பதில் எரி கட்டிகளை தயாரிக்கிறேன்! thanks to dinamalar

 நிலக்கரிக்கு பதில் எரி கட்டிகளை  தயாரிக்கிறேன்!
நிலக்கரிக்கு மாற்றாக, மரக்கழிவுகளால் எரிபொருள் தயாரித்துள்ள, சிவகங்கையைச் சேர்ந்த ராகேஷ்: பி.இ., முடித்து, எம்.பி.ஏ.,வும் படித்து உள்ளேன்.சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் நிலக்கரிக்கு மாற்றாக, நன்கு எரியும் திறன் கொண்ட, 'பயோமாஸ் பிரிக்கெட்' என அழைக்கப்படும், மரக் கழிவுகளால் ஆன, எரி கட்டிகளை தயாரிக்கிறேன். சிவகங்கை மாவட்ட தொழில் மையம் வழிகாட்டுதலின்படி, அரசின் மானியம் பெற்று, 2016 முதல், இந்த தொழிலில் ஈடுபட்டு உள்ளேன்.சீமைக்கருவேல மரங்கள், பிற மரங்களின் கழிவுகள், மரத்துாள் ஆகியவற்றின் கலவை தான், நாங்கள் தயாரிக்கும் எரிபொருள் கட்டி. இதை எளிமையாக பயன்படுத்த முடியும்;
நீண்ட காலத்திற்கு வைத்திருந்து பயன்படுத்த முடியும். விவசாயக் கழிவு களான குச்சிகள், சக்கைகள், தானியங்களின் ஓடுகள், தோல்கள், சிறிய விறகுகள் போன்வற்றை ஒன்றாக அரைத்து, பொடியாக மாற்றி, உலர வைக்கப்பட்ட மரத்துாள் கலவையுடன் சேர்த்து, 'ஹைட்ராலிக் பிரஷர்' மூலம் அழுத்தி, வட்ட வடிவிலான உருளை போல, இந்த கட்டிகளை தயாரிக்கிறேன்.இயற்கையாக விளையும் எந்த பொருட்களையும், தீயிட்டு எரித்து வீணாக்காமல், எங்களிடம் கொடுத்தால், அதை அரைத்து பொடியாக்கி, எரிகட்டிகளாக ஆக்குகிறோம். இரும்பு உருக்கு ஆலை, பின்னல் ஆடைகள் ஆலை, டையிங், ரசாயன தொழிற்சாலைகள், உணவு பதப்படுத்துதல், தோல் தொழிற்சாலைகள் ஆகியவை, இந்த எரிபொருளை பயன்படுத்துகின்றன.
சாதாரண விறகுகளை எரிக்கும் போது, ஈரப்பதம் காரணமாக, புகை வரும். அதிக நாட்கள் வைத்து பயன்படுத்தினால், அவற்றின் எடை குறைந்து, கெட்டுவிடும். இதனால், விறகுகளை சேமித்து வைத்திருப்பவர்களுக்கு நஷ்டம் ஏற்படும். ஆனால், பிரிக்கெட்ஸ் அப்படி இல்லை. விறகை விட, இது குறைந்த அளவே தேவைப்படும். எரிந்த பின், 5 - 7 சதவீதம் தான் சாம்பல் கிடைக்கும். ஆனால், எரிசக்தி சிறப்பாக இருக்கும்; நீண்ட நேரம் எரியும். நம் மாநிலத்தில், 1990ம் ஆண்டுகளின் துவக்கத்திலேயே, பிரிக்கெட்ஸ் வர துவங்கி விட்டன; எனினும் பிரபலம் ஆகவில்லை.நாங்கள் மேற்கொள்ளும் முயற்சியால், துவக்கத்தில், 100 டன் விற்பனையான நிலையில், இப்போது, 300 டன் விற்பனையாகிறது.
50 லட்ச ரூபாய்க்கு விற்பனை நடந்த நிலையில், ஆண்டுக்கு, 1 கோடி ரூபாய்க்கு நடக்கிறது.எரிபொருளுக்காக மரங்களை வெட்டாமல், மரக்கழிவுகளில் இருந்தே, இந்த எரிகட்டிகள் பயன்படுத்தப்படுவதால், எதிர்காலத்தில் சிறப்பான வரவேற்பு இருக்கும். நிறைய இளைஞர்கள், இதுபோன்ற வித்தியாசமான முயற்சியில் இறங்க வேண்டும்; அதற்கு, உத்வேகமாக நான் இருக்கிறேன்

No comments:

Post a Comment