Tuesday, April 7, 2020

கிருமிகளை அழிக்கும் வெட்டிவேர் thanks to dinamalar.com

 கிருமிகளை அழிக்கும் வெட்டிவேர்!
வெயில் நேரத்திற்கு இதமான வெட்டிவேர் மூலிகையில், விதவிதமான பொருட்களை செய்யும், சென்னை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்த சாய் மோகனா: வெட்டி வேரை, லட்சுமியின் அம்சமாக கருதுகின்றனர். வெட்டி வேரை, வீட்டில் வைத்தால், 'பாசிட்டிவ் எனர்ஜி' எனப்படும் சிந்தனை வளரும் என்கின்றனர்.நான், பி.காம்., படித்துள்ளேன். என் கணவர் பாலாஜி, நாட்டு மருந்துகள் வாங்கி விற்கும்,'பிசினஸ்' செய்கிறார். வெட்டி வேர் கலைப் பொருட்கள் செய்வதற்கு, என் கணவர் மிகவும் ஆதரவாக உள்ளார். தனியாக ஒரு குழுவை வைத்து, கலைப் பொருட்களை தயாரித்து, நாங்களே விற்பனை செய்கிறோம்.இந்த தொழிலில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டுள்ளோம். நாங்களே செய்து விற்பனை செய்வதால், குறைந்த விலைக்கு கொடுக்க முடிகிறது. குறைந்தபட்சம், 100 ரூபாய் முதல், 2,500 ரூபாய் வரை, விதவிதமான பொருட்களை செய்கிறோம். வெட்டி வேர் மாலை, வாசல் படி தோரணம் போன்றவையும் செய்கிறோம்.முதலில், வெட்டி வேரில், வினாயகர், கிருஷ்ணர், பெருமாள் போன்ற கடவுள்களின் உருவங்களை, 'போட்டோ பிரேம்' மாடலில் செய்யத் துவங்கினோம். அதற்கு பின், கதகளி மாஸ்க், மயில், மாலை தோரணம் போன்றவற்றையும் செய்கிறோம்.வெட்டி வேரில் தண்ணீர் தெளித்து, அந்த காற்றை சுவாசித்தால், மனதுக்கு ரொம்ப இதமாக இருக்கும்; கெட்ட கிருமிகள், வீட்டிற்குள் வராது. மேலும், பல மருத்துவ குணங்கள் இதற்கு உள்ளது.
சிலர் வெட்டி வேர் தலையணை செய்து தர கேட்கின்றனர். ஜன்னல் திரைகளும், வெட்டி வேரில் செய்கிறோம். சுவாமி சிலைகளுக்கு, வெட்டி வேர் மாலையும் தயாரிக்கிறோம்.இந்த வேருக்கு, அதிகபட்சம், இரண்டாண்டுகள் தான் ஆயுள். ஏற்கனவே காய்ந்த வேராகத் தான் இது இருக்கும். அதில் தண்ணீரை நனைத்து பயன்படுத்தும் போது, அதிலிருந்து வெளிவரும் மணம், நம்மை துாக்கும். கோடை காலத்தில், வெட்டி வேர் கலந்த தண்ணீர், உடல் நலத்திற்கு மிகவும் நல்லது.
குடிக்கும் தண்ணீரில், நன்கு அலசிய வெட்டி வேரில் சிறிதளவை போட்டு வைத்திருந்து குடித்தால், உடல் சூடு பிரச்னை சீராகும். இதை தொழிலாக செய்து வந்தாலும், இயற்கையின் சிறந்த கொடையான இந்த மூலிகையின் பயன்பாடு அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்கான, விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
பல ஆயிரம் ஆண்டுகளாக நம்மவர்கள், இந்த மூலிகையின் பயன்களை அறிந்துள்ளனர். இதில் செய்யப்படும் கலைப் பொருட்கள், பார்ப்பதற்கு அழகாகவும், பயனுள்ள விதத்திலும் இருப்பது மனதுக்கு திருப்தி அளிக்கிறது!

No comments:

Post a Comment