Tuesday, November 13, 2018

உங்கள் மகனுக்கான கோல்டன் ரூல்ஸ்! thanks to aval vikatan

உங்கள் மகனுக்கான கோல்டன் ரூல்ஸ்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?- யாழ் ஸ்ரீதேவி, படங்கள் - மதன் சுந்தர்
ன் மகன் சமூகத்தில் எல்லோராலும் விரும்பப்பட வேண்டும் என்பதே பெற்றோரின்  விருப்பம். அவன் சாதாரண நிலையில் இருந்து ஜென்டில்மேன் என்கிற நிலையை எட்ட ஆண் குழந்தை வளர்ப்பில் அக்கறை செலுத்த வேண்டிய தங்க விதிகளை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் உளவியல் நிபுணர் டாக்டர் சித்ரா அரவிந்த்.

 ஆண் குழந்தைகள் பெண்களோடு எப்படிப் பழகுகின்றனர், அவர்களை எப்படி நடத்துகின்றனர் என்பது முக்கியம். இந்த இடத்தில் பெண்களைப் பற்றிய முதல் பிம்பத்தை உருவாக்குபவள் அம்மாதான். அந்தப் பெண் தன்னை ஒரு ரோல் மாடலாக மாற்றிக்கொள்ள வேண்டும். சவாலான நேரங்களைத் தன்னம்பிக்கையுடன் கடக்க வேண்டும். வீட்டில் உள்ள மற்ற உறவுகள் முன்னிலையில் மதிக்கப்படும் பெண்ணாகத் தன் நிலையை உயர்த்திக் கொள்ள வேண்டும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வது போன்ற விஷயங்களை அம்மா கடைப்பிடிப்பதும் தாய்க்கும் மகனுக்குமான நட்பைப் பலப்படுத்தும். பெண்களை அணுகும் பார்வையும் மாறும்.
 
பெண்ணை ஆண் குழந்தை சமமாக உணரச்செய்யும் வாய்ப்புகள் தேவை. பெண்ணின் சாதாரணமான இயல்புகள், சிரமங்களை வைத்து அவர்களைப் பலவீனமானவர்கள் என்று நினைத்திட வாய்ப்புள்ளது. பெண் எந்தளவுக்கு வலிமையானவள்; ஆணுக்கு இணையாகப் பல துறைகளிலும் ஜெயிக்கக்கூடியவள் என்று ஆண் உணரச் செய்ய வேண்டும். இதுபோன்ற பெண்களின் அனுபவங்களை அம்மாவின் வார்த்தைகளாகக் கேட்கும் போதுதான் ஆண் குழந்தைகளுக்குப் பெண்ணின் பலம் புரியும். `பெண்கள் உனக்கு இணையானவர்களே' என்ற சமநிலையை உணரச் செய்வதும் அவசியம்.

பெண் என்பவள் உரிமை கொண்டாடும் பொருள் கிடையாது. அவளுக்கான விருப்பங்கள் மற்றும் அவள் வெறுக்கும் விஷயங்கள் இருக்கக்கூடும். அவற்றை மதிக்க வேண்டும். அவள் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது. பிடிக்காத விஷயங்களுக்கு மறுப்புச் சொல்ல அவளுக்கு உரிமை உள்ளது என்பதை அம்மா வாழ்ந்துகாட்ட வேண்டியுள்ளது. இந்த சுதந்திரம் ஆண் குழந்தையுடன் வளரும் பெண் குழந்தைகளுக்கும் அளிக்கப்பட வேண்டும். பெண்ணைப் பொருளாக எண்ணும் ஆணுக்கு அவளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்துவது குற்ற உணர்வை ஏற்படுத்துவதில்லை. இதனால் தான் அவளும் சக மனுஷி என்பதை உணர்த்த வேண்டியுள்ளது. 

பெண்ணைத் துன்புறுத்துவதை ஹீரோயிசமாகக் காண்பிக்கும் திரைப்படங்கள் பதின்பருவ ஆண் குழந்தைகள் மனதில் அதிகளவில் ஆதிக்கம் செலுத்துகின்றன. உண்மையான ஹீரோயிசம் என்பது மற்றவர் மனதைக் காயப்படுத்துவதில் இல்லை என்பதை ஆண் குழந்தைக்குப் புரியவைக்க வேண்டும். மதிப்பதும், உணர்வுகளைப் புரிந்துகொள்வதும், பொறுப்பு உணர்வுடன் நடந்து கொள்வதும்தாம் ஹீரோயிசம் என்பதை ஆண் குழந்தைகள் புரிந்துகொள்ளப் பழக்கப்படுத்தலாம். 

சின்னச் சின்ன  விஷயங்களிலும் கவனம் செலுத்துங்கள்... 

சமூகத்தில் தன் வாழ்வையே வரலாறாக மாற்றியவர்களின் கதைகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

கண்கள் பார்த்துப் பேசக் கற்றுக் கொடுக்கலாம். பழகிய முகங்களைப் பார்த்த உடன் ஒரு புன்முறுவல், அன்புடன் கைகுலுக்கும்போதே கண்களைப் பார்த்து நட்பை வெளிப்படுத்தலாம். இது அவர்களுக்குத் தன்னம்பிக்கை அளிப்பதுடன் மற்றவர்கள் மத்தியில் ஜென்டில்மேன் அடையாளத்தை உருவாக்கும். 

தேவையான இடங்களில் மட்டும் பேசுவது, அமைதியாக இருக்க வேண்டிய இடத்தில் மெளனம் காப்பதும் அவசியம். பணிவோடு கேட்பது, நன்றி சொல்வது, தவற்றைப் பொறுத்துக்கொள்ள மன்னிப்புக் கேட்பது, தேவைப்படும் மனிதர்களுக்கு வலிந்து உதவுவது, கடுமையான வார்த்தைகளைத் தவிர்ப்பதும் உங்கள் மகனைப் பற்றிய நல்ல எண்ணங்களை மற்றவர் மனதில் ஏற்படுத்தும். 

பொது இடங்களில் எப்படிப் பழக வேண்டும் என்பதற்கும் நீங்களே உதாரணமாக இருங்கள். பொதுப் போக்குவரத்தில் பயணிக்கும்போது நின்று பயணிக்க முடியாதவர்கள் வந்தால் எழுந்து உதவுவது, சிறு உதவியானாலும் தயக்கமின்றிச் செய்வதையும் பழக்கப்படுத்துங்கள். அப்படி உங்கள் ஆண் குழந்தை நடந்துகொண்டால், `உன்னை நினைத்து எவ்வளவு பெருமைப்படுகிறேன் தெரியுமா?' என்று உங்களது உள்ள உணர்வைப் பகிர்ந்து கொள்ளுங்கள். 

ஆண் குழந்தைகளுக்கான பாடி லாங்வேஜில் கவனம் செலுத்துங்கள் நான் ஆண் என்ற கர்வம், அலட்சியம் இரண்டையும் தங்களது உடல்மொழியில் வெளிப்படுத்தக் கூடாது. சேரில் அமர்வது, சாப்பிடும் முறை என ஒவ்வொன்றிலும் அழகிய ஒழுங்குகளைக் கற்றுக் கொடுங்கள். சிறு வயதில் இதுபோன்ற விஷயங்களைக் கடைப்பிடிப்பதால் வளர்ந்து ஆளாகும்போது இதெல்லாம் அவர்களது பழக்கமாக மாறியிருக்கும். 

பணம் சம்பாதிப்பதற்கான வலியைக் கற்றுக்கொடுக்க வேண்டும். எந்த வேலையைச் செய்யும்போதும் எத்திக்ஸ் அவசியம் என்பதைப் பதிய வையுங்கள். தனது சட்டையை மடிப்பதாயினும், ஹோம்வொர்க் முடிப்பதாக இருந்தாலும் தனக்குத் திருப்தி ஏற்படும் வரை அதை சரியாகச்செய்வது, தன் செயலுக்கு உண்மையாக இருப்பதும் எப்போதும் அவனை ஜென்டில்மேனாகவே வைத்திருக்கும். இப்படி நடந்து கொள்ளும் குழந்தையைத் தோள்தட்டிப் பாராட்டுவதுடன் அதற்குப் பரிசளித்தும் ஊக்கப்படுத்தலாம். 

ஆண் குழந்தைகள் தவறு செய்யும் போது அதைப் பற்றியே பேசுவதைத் தவிர்க்கலாம். தான் செய்தது சரியா என்பதை யோசிக்க இடம் கொடுப்பது அவசியம். இதற்குப் பதிலாக வேறு என்ன செய்திருந்தால் சரியாக இருக்கும் எனக் கேட்கலாம். எதை ஆண் குழந்தைக்குச் சொல்ல நினைக்கிறோமோ அதைப் பற்றி சிந்திப்பதற்கான வாய்ப்புகளை ஆண் குழந்தைகளுக்கு ஏற்படுத்தலாம்.
ஆண் குழந்தைகளுக்குக் கோபத்தைக் கட்டுக்குள் வைக்கப் பழக்குவது அவசியம். அவர்கள் கோபம் கொள்ளும்போது ஆண்களுக்கான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பு அதிகரிக்கிறது. அதனால்தான் ஆண்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அதிரடியாக எதையேனும் செய்துவிடுகின்றனர். எதெல்லாம் அவனைக் கோபப்படுத்துகிறது என்று பட்டியலிடச் சொல்லுங்கள். அதுபோன்ற சூழலை முன்கூட்டியே கணித்துத் தவிர்த்துவிடலாம். கோபம் ஏற்படும்போது அந்த இடத்தை விட்டு வெளியேறுவது, ஆழமாக மூச்சை இழுத்து விடுவது, உடற்பயிற்சி செய்வது, தனக்குப் பிடித்த டான்ஸ், டிராயிங், கவிதை எனத் தனக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யும் போது கோபம் அடங்கும்.  
 உறவுச் சிக்கல்களைக் கையாளவும் ஆண் குழந்தைகளுக்கும் பயிற்சி அவசியம். உறவுகளில் பகை ஏற்படும்போது அதைப் பற்றியே யோசிப்பதும் பிரச்னையை அதிகரிக்கச் செய்யும். பகை ஏற்படும்போது அதைப் புறக்கணிக்க வேண்டும். அதனை மனதில் ஏற்றிக்கொண்டு அது பற்றியே சிந்திக்கக் கூடாது. 

உங்கள் ஆண் குழந்தையின் மனம் கருணையால் நிரம்பி, தனக்கான பொறுப்புகளைச் சிறப்பாக நிறைவேற்றும் போது அவன் ஜென்டில்மேன் அந்தஸ்தை அடைவான்!''

No comments:

Post a Comment