Tuesday, November 13, 2018

ஸ்மார்ட்போன் போதை thanks to vikatan.com


நாம் நினைப்பதைவிடவும் ஆபத்தானது!
ண் குழந்தை வளர்ப்பு பற்றி ஆலோசனை வழங்கிவரும் மனநல மருத்துவர் ஷாலினி, இந்த இதழில் `ஸ்மார்ட்போன் போதை, நாம் நினைப்பதை விடவும் ஆபத்தானது' என்கிறார்.

``ஒரு பொருளைப் போதை வஸ்து என்று எதன் அடிப்படையில் வரையறுக்கிறோம்? அதைப் பயன்படுத்தும்போதெல்லாம், சட்டென ஒரு சந்தோஷம் ஏற்படும்; உடனடி மனநிறைவை ஏற்படுத்தும். காலையில் எழுந்தவுடனேயே மனம் அதைத் தேட ஆரம்பித்துவிடும். அதைப் பயன்படுத்துவது குறித்து யாராவது கண்டிக்கும்போது கோபமாக வரும். நாளுக்கு நாள் அதைப் பயன்படுத்துவது அதிகரித்துக்கொண்டே போகும். போதை வஸ்துக்கான முக்கிய அம்சங்களான இவை  ஸ்மார்ட்போனுக்கும் 100% பொருந்துபவை. ஆரோக்கியக் கேட்டில் இருந்து மன அழுத்தம் வரை, ஸ்மார்ட் போனால் ஏற்படக்கூடிய ஆபத்துகளுக்குக் குறைவில்லை. என்னதான் சமாதானம் சொல்லிக்கொண்டு பிள்ளைகளின் கையில் ஸ்மார்ட்போன் கொடுத்தாலும், அது பொழுதுபோக்கல்ல... ஆபத்து என்பதை பெற்றோர் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.
போர்ன் வீடியோ

ஸ்மார்ட்போன் அடிக்‌ஷன், சோஷியல் மீடியா அடிக்‌ஷன்... இவையெல்லாம்  நிறையவே பேசப்படுகிற பிரச்னைகள். இவற்றில் பரவலாகப் பேசப்படாத பிரச்னை, ஆபாச வீடியோக்களைப் பார்க்கத் தூண்டும் போர்ன் அடிக்‌ஷன். இன்றைய டெக் யுகத்தில்  நண்பர்கள், தோழிகள், சர்ச் இன்ஜின்கள் என ஏதேனும் ஒரு காரணி போர்ன் வீடியோக்களை அறிமுகப்படுத்திவிடும்.

குழந்தைகள் சாப்பாடு, விளையாட்டை எப்படித் தேடுவார்களோ, அதுபோல பதின் பருவப் பிள்ளைகள் காதலையும் காமத்தையும் மிக முக்கியமான இன்ஸ்டிங்ட்களாக உணர்வார்கள். முன்பெல்லாம் இளம்வயதில் திருமணமாகி, குழந்தை பெற்றிருந்தார்கள் நம் முன்னோர். இன்றைய வாழ்க்கைச் சூழலுக்காக, இன்றைய குழந்தைகளைப் படிப்பில் அதிக வருடங்கள் கவனம் செலுத்தவைத்து, அவர்களின் பாலியல் விருப்பங்களுக்கான வயதைச் செயற்கையாகத் தள்ளிப்போட்டிருக்கிறோம். ஆனால், உடலின் இயற்கைத்தன்மை மனிதனின் சொல்லுக்கெல்லாம் கட்டுப்படாதது. அது இந்த வயதில் அவர்கள் மனதில் ஒருவித உந்துதலை ஏற்படுத்தவே செய்யும். எனவே, இதைப் பெருங்குற்றமாகப் பார்க்காமல், இதன் அடிப்படை அறிவியலைப் பெற்றோர் புரிந்துகொள்ள வேண்டும்.
காதல், காம ஈடுபாடுகள் மேலெழும்பும் பதின்பருவத்தில், அவற்றை நேரடியாகப் பூர்த்தி செய்துகொள்ள முடியாத சூழலில், வேறு ஒருவர் காதலிலோ கலவியிலோ ஈடுபடுவதைப் பார்க்க உந்தப்படுகிறார்கள். அதன் விளைவுதான் போர்ன் வீடியோக்கள் பார்க்க ஆரம்பிப்பதும், ஒருகட்டத்தில் அதற்கு அடிமையாக மாறுவதும். அது மிகப்பெரிய போதையாக அவர்கள் மனதில் ஆழப் பதியும். மனதை மீண்டும் மீண்டும் அதிலேயே செலவு செய்துவிட்டு, தங்கள் மொத்த எனர்ஜியையும் அதிலேயே தொலைப்பார்கள். இதனால் படிப்பு உள்ளிட்ட விஷயங்களில் கவனம் செலுத்தமுடியாமல் போகும். இவை அனைத்துக்கும் வாசல், குழந்தைகளின் கைகளில் நாம் தரும் ஸ்மார்ட்போன்களும், வீட்டில் உள்ள கணினியுமே.
தவறு பெற்றோரிடமிருந்தே 

குழந்தைகள் ஸ்மார்ட்போன் கேட்பது என்பது, ஒருவரைப் பார்த்து ஒருவர் செய்யும் ‘பியர் குரூப் பிரஷர்’. இந்த விஷயத்தில் எல்லாப் பெற்றோர்களும் ஒருங்கிணைந்து ஒரே விதியைக் கடைப்பிடிக்கும்போது, ‘இதுதான் உலக வழக்கம்’ என்று பிள்ளைகளும் அதை ஏற்றுக்கொள்வார்கள். பெற்றோர் சிலர், ‘எங்கிட்ட காசு இருக்கு... வாங்கிக் கொடுக்கிறேன்’, ‘பையன் அழுது அடம்பிடிச்சான்’, ‘லேர்னிங் ஆப்ஸுக்காக வாங்கிக் கொடுத்தேன்’ என ஆளுக்கு ஒரு சாக்கைச் சொல்லும்போது, வாங்கிக் கொடுக்காத பெற்றோர்களுக்கு அது பிரச்னையாகிவிடுகிறது. ‘யார் வெச்சிருந்தாலும் சரி, கெடுதல்னு தெரிஞ்சும் உனக்கு அதை நான் வாங்கிக்கொடுக்க மாட்டேன்’ என்று கண்டிப்புடன் இருந்து தங்கள் பிள்ளைகளைக் காக்கும் பெற்றோருக்கு வாழ்த்துகள். அதே நேரம், ஸ்மார்ட்போன் தேடல், ஏக்கம், கவர்ச்சி உங்கள் குழந்தையை வேறு யார் கைகளுக்கும் அழைத்துச் செல்லாமலும் பார்த்துக்கொள்ளவும்.

மொத்தத்தில், பதின்பருவத்தினர் கல்லூரிக்குச் செல்வதற்கு முன்னால், ஸ்மார்ட்போன், ஐபாட், லேப்டாப் என எந்த ஸ்க்ரீனையும் வாங்கிக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். கல்வித் தேவைக்காக, கேம்ஸுக்காக என அவர்கள் ஆன்லைனில் இருக்கும்போது, பெற்றோரின் கண்கள் அவ்வப்போது ஸ்க்ரீனை நோட்டமிட வேண்டும். மொபைலில் இன்டர்நெட் பயன்படுத்தும்போது அறைக்குள் செல்லாது, ஹாலிலேயே அமர்ந்திருக்க அவர்களை வலியுறுத்த வேண்டும். ஹாலில் அல்லது அனைவரின் பார்வையிலும் படும்படியான இடத்தில் கணினியை நிறுவ வேண்டும். அன்வான்டட் லிங்க்குகள் ஏதேனும் ஓப்பன் ஆகிவிட்டால், அதிலிருந்து வெளியே வந்துவிட வேண்டும் என்றும், அதைப் பற்றி அம்மா/அப்பாவிடம் தெரிவித்துவிட வேண்டும் என்றும் சொல்லிவைக்க வேண்டும்; அதுபோன்ற லிங்க்குகளுக்கான டெக்னாலஜி ஃபில்டர்களைப் பயன்படுத்த பெற்றோர் கற்றுக் கொள்ள வேண்டும்.''

No comments:

Post a Comment