Tuesday, November 13, 2018

படிப்பில் ஏன் சறுக்குகிறார்கள்? thanks to vikatan.com

வன் வகுப்பில் நன்றாகப் படிக்கும் மாணவன். பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வில் பள்ளியில் அவனே முதலிடம் பெறுவான் என எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். வீட்டிலும் நொடிப்பொழுதையும் வீணாக்கவிடாமல் அவனைப் படிப்பிலேயே மூழ்கவைத்தனர். நடந்ததோ வேறு. மிட் டெர்ம் தேர்வில் இயற்பியல் விடைத்தாளில் எதுவும் எழுதாமல் பேப்பரை அப்படியே கொடுத்துவிட்டு வந்தான். என்ன ஆனது அவனுக்கு? மனநல ஆலோசகரிடம் அழைத்துச் சென்றபோது அவன் சொன்ன பதில் மருத்துவரையே அதிரவைத்தது. “நான் ஃபெயிலானா அப்பா வருத்தப்படுவார். அவர் வருத்தப்படணும்கிறதுக்காகத்தான் நான் எதுவும் எழுதலை” என்றான்.  
ஆண் பிள்ளைகள் திடீரெனப் படிப்பில் கவனம் சிதற, இப்படி யூகிக்க முடியாத காரணங்களும் இருக்கலாம். பதின்பருவத்தில் அந்தளவுக்கு அவர்களின் மனம் காட்டாறுபோல ஓடும். ஆண் குழந்தைகள் படிப்பில் சறுக்குவதற்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றிப் பேசுகிறார், சேலத்தைச் சேர்ந்த உளவியல் நிபுணர் மற்றும் பள்ளி மாணவர்களுக்கான ஆலோசகர் பிரவீன்குமார். 

*ஆண் குழந்தைகள் பருவம் அடையும் வயதில், எட்டாம் வகுப்புக்கு மேல் படிப்பில் ஒரு தேக்கத்தைச் சந்திக்கின்றனர். உடல்சார்ந்த மாற்றங்கள், ஹார்மோன் குழப்பங்கள் என அவர்களுக்குள் நடக்கும் ஒருவிதமான மனப்போராட்டத்தால் கவனச்சிதறலுக்கு ஆளாகின்றனர். இந்த வயதில் பருவமடைதல் பற்றி ஆண் குழந்தைகளுக்குத் தெளிவை ஏற்படுத்த வேண்டும். 

*பொதுத்தேர்வுகளில் மதிப்பெண், தேர்ச்சி விகிதம் இரண்டிலும் பெண்களே பெரும்பாலும் முன்னிலை வகிப்பதைப் பார்க்கிறோம். ஆண் குழந்தைகளுக்குத் தேக்கத்தைக் கொடுப்பது எது? குறிப்பிட்ட வயதுக்கு மேல் மாணவர்கள் தங்களது பர்சனல் பிரச்னைகளை ஆசிரியர்களிடம் - குறிப்பாகப் பெண் ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை. சக நண்பர்களிடம் பகிர்ந்துகொள்பவர்களுக்குத் தீர்வு கிடைப்பதில்லை. மேலும், குழப்பம் அதிகரிக்கவே செய்கிறது. இதுபோன்ற சூழல்களாலும் ஆண் குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படுகிறது. 

*எப்போதுமே படிப்பில் சராசரியாக இருக்கும் ஆண் பிள்ளைகளுக்கு, அவர்களின் படிப்பு விஷயத்தில் பெற்றோர் தங்களால் ஆன கவனம் கொடுத்துக்கொண்டே இருக்க வேண்டும். நன்றாகப் படிக்கும் மாணவர்கள், திடீரென மதிப்பெண் குறைவது, படிப்பில் நாட்டம் இழப்பது என்கிற நிலைவந்தால், பெற்றோர் அதை அகாடமிக்ஸ் பிரச்னையாக மட்டுமன்றி... பள்ளி, நண்பர்கள், ட்யூஷன், பர்சனல் என அவர்களின் சூழலில் ஏதோ பிரச்னை என்பதை உணர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். உளவியல் ஆலோ சகரை அணுகுவது, சரியான காரணத்தைக் கண்டுபிடித்துத் தீர்வு காண உதவும். 

*ஆண் என்கிற அடையாளத்தை நிரூபிக்க வேண்டும் என்கிற உணர்வு பதின்பருவத்தில் மாணவர்களுக்கு ஏற்படும். இதன் காரணமாகச் சிலர் தீய பழக்கங்களுக்கும் ஆளாவதுண்டு. இதை ‘பியர் குரூப் பிரஷர்’ என்பார்கள். உதாரணமாக, மூன்று மாணவர்கள் நண்பர்களாக இருந்து, அதில் இருவர் புகைபிடித்தால், அந்தப் பழக்கமில்லாத மூன்றாவது மாணவனை மற்ற இருவரும் புறக்கணிப்பார்கள்; அல்லது ‘நீயெல்லாம் ஒரு ஆம்பளையாடா?’ என்று அவனைச் சீண்டுவார்கள். இதனால் உந்தப்பட்டு அல்லது புறக்கணிப்பை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவனும் தீய பழக்கங்களுக்கு ஆளாகலாம். எனவே, பிள்ளைகளின் நட்பு வட்டம் ஆரோக்கியமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். 

*பதின்பருவப் பிள்ளைகளுக்கு ஏற்படும் காதல், அவர்களைப் படிப்பில் கவனம் சிதறவைக்கும். மாணவிகளைவிட, மாணவர்கள் இதனால் அதிகமாக நேரத்தை விரயம் செய்வார்கள். இதைக் கையாளும் பக்குவத்தைப் பெற்றோர் ஏற்படுத்தி பேரன்ட்ஸ் ஃப்ரெண்ட்ஸ் ஆகும்போது, அது சாத்தியமாகும். 

*குடும்பத்தின் பொருளாதாரச் சூழல், சில வீடுகளில் ஆண் குழந்தைகளின் படிப்பை பாதிப்பதாக இருக்கிறது. அவர்களுக்குப் பகுதிநேர வேலை பார்க்கவேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. என்றாலும், ‘என்ன வாழ்க்கை இது?’ என்கிற கழிவிரக்கமோ, விரக்தியோ அவர்களுக்கு ஏற்படாமல், ‘நம் நிலை ஒருநாள் மாறும்; அது உன்னால்தான் நிகழவிருக்கிறது; அப்போது நீ பட்ட கஷ்டங்களுக்கெல்லாம் பலன் கிடைக்கும்’ என்று பெற்றோர் அவர்களுக்கு நேர்மறை எண்ணங்களைச் செலுத்திக்கொண்டே இருக்க வேண்டும். தன்னம்பிக்கை புத்தகங்களைப் படிக்கக் கொடுக்கலாம்; தன்னம்பிக்கை உரைகளைக் கேட்க வைக்கலாம். சுற்றம் நட்புகளில் கல்வியால் சிறப்புப் பெற்ற மனிதர்களை அடையாளம் காட்டி, நம்பிக்கை அளிக்கலாம்.  

*விளையாட்டுத்தனமும், `கடைசியில் பார்த்துக் கொள்ளலாம்' என்று தேர்வுவரை பாடங்களைப் படிக்காமல் விட்டுவைப்பதும் பெரும்பாலான ஆண் குழந்தைகளின் பழக்கமாக இருக்கிறது. இவர்களுக்கு அன்றைய பாடத்தை அன்றே முடிக்கும் பழக் கத்தை முதலில் ஏற்படுத்த வேண்டும். 

No comments:

Post a Comment