Tuesday, November 13, 2018

நீங்கள் ஒரு ஹீரோவை உருவாக்குகிறீர்கள்! thanks to aval vikatan.com

நீங்கள் ஒரு ஹீரோவை உருவாக்குகிறீர்கள்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஆண் குழந்தைகளை வளர்ப்பது எப்படி?யாழ் ஸ்ரீதேவி
`ஆண் என்பதாலேயே ஒரு குழந்தைக்குத் தரப்படும் சலுகைகள், அவன் சுயமேம்பாட்டுக்கு எதிராக வினையாற்றும்; அவன் ஒழுக்கக் குணங்களில் தேக்கத்தை ஏற்படுத்தும்; அவன் பண்புகளில் கரும்புள்ளிகள் வைக்கும்’’ என்று சொல்லும் சென்னையைச் சேர்ந்த இயற்கை மற்றும் யோகா மருத்துவர் நிவேதனா, ஆண் குழந்தைகளை வளர்க்கும் அம்மாக்களுக்கான அறிவுரைகள் வழங்குகிறார். 
சலுகை... வளர்ச்சிக்குத் தடையே!

பொதுவாக, பெண் குழந்தை குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் தூங்கினால் பதறும் அம்மாக்கள், பையன்களை அதேபோல எழுப்ப நினைப்பதில்லை. இப்படி நினைத்த நேரத்துக்கு எழுவதால் ஏற்படும் நேரப்பற்றாக்குறை, காலைக்கடனைக் கழிப்பதற்குப் போதுமான நேரமின்மை, ஆடையை அயர்ன் செய்துகூட உடுத்த இயலாத அவசரம், பிரேக்ஃபாஸ்ட்டைக் கடமைக்குப் பிய்த்து வாயில் போட்டுக்கொண்டுவிட்டுப் பறக்கும் வழக்கம் என அவர்களின் அத்தனை செயல்களிலும் எதிரொலிக்கும். சென்றுசேர வேண்டிய இடத்திலும் அவர்கள் தங்கள் பங்சுவாலிட்டியை மிஸ் செய்து நிற்பார்கள். அனைத்துக்கும் காரணம், ‘ஆம்பளப்புள்ள சீக்கிரமா எழுந்திரிக்கலைன்னா என்ன?’ என்ற பெற்றோரின் எண்ணமே. எனவே, இப்படி சலுகை, சுதந்திரம் என்று நினைத்து நீங்கள் ஆண் குழந்தைகளுக்குச் செய்வது அனைத்துமே, எந்த வகையிலும் அவர்களுக்கு நன்மை விளைவிக்காது. மாறாக அவர்களை ஒழுக்கக்குறைபாடுடையவர்களாகவே வளர்த்தெடுக்கும். இது, அவர்களின் வளர்ச்சிக்கு நிச்சயம் தடையாகவே அமையும். 

உணவில் புரதம் அவசியம்!

ஆண் குழந்தைகளுக்கு அசைவ உணவு அதிகம் கொடுக்க வேண்டும் என்பதில்லை. அவர்களின் உடல் வளர்ச்சிக்கு ஈடுகொடுக்க, அவர்கள் உணவில் புரதம் அதிகம் இடம்பெற வேண்டும். பருவ வயதில் உள்ள ஆண் குழந்தைகளுக்கு வாரத்தில் ஒருநாள் உணவில் கொள்ளுப் பயறு சேர்த்துக் கொடுக்கலாம். இது, அவர்களின் உடல்வலிமையைக் கூட்டும். ராகி களி, உளுந்தங்களி, வரகு, தினை போன்ற சிறுதானிய உணவுகளையும் அவர்களுக்குப் பழக்கப்படுத்த வேண்டும். இவைபோல, எடையைக் கூட்டாமல், வலிமையை அதிகரிக்கும் உணவுகளை அவர்களுக்குப் பார்த்துப் பார்த்துக் கொடுக்க வேண்டும்.

பர்சனல் ஹைஜீன்... மஸ்ட்!

வியர்வை உப்பு காய்ந்த உடலுடன் இருப்பது, இரண்டு நாள்களாகக் குளிக்காமல் ஒரே உடையுடன் திரிவது, ஒரு ஜீன்ஸை ஒரு வாரத்துக்கு உடுத்துவது... பதின்பருவத்தில் நுழையும்போது பல ஆண் குழந்தைகள் இப்படித்தான் ஆகிவிடுகிறார்கள். குறிப்பாக, இந்தக் கோடை விடுமுறை நாள்களில் இப்படியான ‘அழுக்கு பாய்'ஸை நாம் அதிகம் பார்க்கலாம். ஆண் குழந்தைகளுக்கு பர்சனல் ஹைஜீனை வலியுறுத்த வேண்டியதும், பழக்கப்படுத்த வேண்டியதும் பெற்றோரின் கடமை. சில வீடுகளில், ‘ஆம்பளைப் புள்ளைக்கு எதுக்கு உள் பனியன் எல்லாம்?’ என்று, அதைக்கூட ஓர் ஆணாதிக்க மனநிலையுடன் தவிர்ப்பதைப் பார்க்க முடியும். இவை அனைத்தும், பெற்றோர் தங்கள் வளர்ப்பில் திருத்திக்கொள்ள வேண்டிய விஷயங்கள். 
ஆண் பிள்ளைகளைத் தினமும் இரண்டு வேளைகள் குளிக்கவும் பல் துலக்கவும் பழக்கப்படுத்த வேண்டும். தினமும் துவைத்த ஆடைகள் மற்றும் உள்ளாடைகளையே பயன்படுத்தும்படி அறிவுறுத்த வேண்டும். 
பத்து வயதை அடைந்துவிட்டால், சாக்ஸைத் தாங்களாகவே துவைத்துக்கொள்ள அவர்களைப் பழக்குவது மிகவும் நல்லது. மூன்றரை வயதில் பள்ளி செல்ல ஆரம்பிக்கும்போது, ஜட்டி, பனியன் என்று உள்ளாடை அணியப் பழக்கப்படுத்த வேண்டும். சீப்பு முதல் கழிவறை வரை தான் பயன்படுத்துபவற்றைச் சுத்தத்துடன் பேண வேண்டும். அழுக்கு உடைகளை லாண்டரி பேஸ்கட்டில் சேர்ப்பது முதல் ஈர டவலை பெட்டில் வீசிவிட்டுச் செல்லாமல், உலரவைக்கக் கொடியில் போடுவது வரை எல்லாமே ஆண் குழந்தைகள் பழக வேண்டிய வழக்கங்கள். உடல் சூட்டைக் குறைப்பதற்கு வாரம் ஒரு முறை நல்லெண்ணெய்க் குளியலும் அவசியம்.  

தாயுடனான பிணைப்பு! 

ஆண் குழந்தைகளுக்குப் பதின்பருவத்தில் அம்மாவின் அன்பு சற்று அதிகமாகவே தரப்பட வேண்டும். அது அவர்களின் தேவையாகவும் இருக்கும். இந்த வயதில் தாயின் அரவணைப்பும் கண்காணிப்பும் கிடைக்காதபோது புகை, மது போன்ற போதைப் பழக்கங்களுக்கு அவர்கள் ஆளாகும் அளவுக்கு ஆபத்துள்ளது. செய்திகளில், சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த பதின்வயதுப் பையன்கள் பற்றிப் பார்த்திருப்போம். இதைப் பாலியல் குற்றமாக மட்டும் அணுகக்கூடாது; நியாயமில்லாத தன் இச்சையை வன்முறையின் வழியாகத் தேடியடையவும் துணிந்த ஆணாக அவன் வளர்ந்து நிற்பதைக் கவனிக்க வேண்டும். இதுவே தாய், சகோதரிகள், தோழிகள் என்று பெண்கள் சூழ, அவர்களின் சுக துக்கங்களை உணர்ந்து, அவர்களின் அன்பை வாங்கி வளர்ந்த ஓர் ஆணின் மூளையும், மனதும், நிச்சயமாக மற்றொரு பெண்ணை இச்சைப் பண்டமாக மட்டுமே பார்க்கவும், அவளைப் பாலியல் தொல்லை, வன்முறை செய்யவும் சிந்திக்காது. மேலும், தோழி, சக ஊழியர் எனத் தன்னுடன் பயணிக்கும் பெண்களை மதிப்புடன் நடத்தும் பண்பாளனாகவும் அவன் இருப்பான். இவற்றுக்கெல்லாம் அடித்தளம், ஒரு தாய் தன் மகனுக்குப் பெண்களின் உலகைத் தன்மூலம் கொண்டு செலுத்தும் பாங்கிலேயே இருக்கிறது.

ஹீரோயிஸம் என்பது இதுதான்!

சாலை அதிரும் பைக் ஹார்ன், கன்னாபின்னா ஹேர்ஸ்டைல், யாரையும் மதிக்காத திமிர்...  இவையெல்லாம் ஹீரோயிஸம் என்று நம்பும் மூடர்களாகவும் முரடர்களாகவும் ஆண் குழந்தைகளை வளர்க்கக் கூடாது. பேராண்மை என்பது பைக், ஜீன்ஸ், பர்ஸ், மொபைல் என ஆணின் பிராப்பர்ட்டிகளில் இல்லை. ஹீரோயிஸம் என்பது ஆணின் நடத்தையில் தான் உள்ளது. பெரியவர்களுக்கு மதிப்புக்கொடுப்பது, முன்பின் அறியாத பெண்களின் பாதுகாப்பைக்கூட உறுதிபடுத்துவது, பாசிட்டிவ் ஆட்டிட்யூட் பழகுவது, பிரச்னைகளைக் கையாளும்போது பாதிக்கப் பட்டவர்களின் நிலையில் இருந்து யோசிப்பது, தனக்கு உண்மையாக இருப்பது என எல்லாத் தளங்களிலும் நிறைவான ஆளுமையாக வளரும் ஆணே ஹீரோ. ஹீரோக்கள் உருவாவதில் அவர்களின் வீட்டுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. உங்கள் ஆண் பிள்ளையை, அனைவருக்கும் பிடிக்கும்படியான வசீகரனாக வளர்த்தெடுங்கள். 

No comments:

Post a Comment