Saturday, December 16, 2017

நிலவைக் காட்டி அமுது ஊட்டி 3 and 4 thanks to vikatan.com

போப்பு, மருத்துவ எழுத்தாளர்ஹெல்த்
ண்பகல் சாப்பாட்டு நேரத்தில் நண்பர் வீட்டிற்குச் சென்றிருந்தேன். கூடத்தில், ஜட்டியுடன் குழந்தை, உருளும் பந்தைத் துரத்திக்கொண்டிருந்தது. அது ஓடும் அழகைப் பார்த்ததும் எனக்கே பந்தாகி உருள வேண்டும் போலிருந்தது. 

வரவேற்ற நண்பர் முகத்தில் பதற்றத்தின் மெல்லிய தீற்றல் இருந்தது. ``அஞ்சு நிமிஷம்  உட்காருங்க” என்று எனக்கு இருக்கையைக் காட்டிவிட்டு, சமையல்கட்டை நோக்கி, “காவேரி... புவனா அம்மாவைக் கூப்பிடட்டுமா? ரெடியா?” என்றார். 

`டர்ர்’ ரென்று சத்தம் போட்ட மிக்ஸியை நிறுத்திவிட்டு, கூடத்துக்குத் தலைகாட்டிய காவேரி, “ம்.. கூப்புடுங்க. நான் எடுத்துட்டு வர்ரேன்” என்றார். 

குழந்தை விளையாட்டை நிறுத்திவிட்டு அம்மா, அப்பாவைப் பீதியுடன் பார்த்தது. அங்கு ஏதோ ஒரு கலவரத்துக்கு முந்தைய சூழல் நிலவுவதாகப்பட்டது எனக்கு. 

நண்பர் பக்கத்து வீட்டை நோக்கிக் குரல் கொடுக்க, புவனாம்மா எனப்படுபவர் விறுவிறுவென்று வந்து குழந்தையைப் பிடித்தார். குழந்தை ``வேண்ணா… வேண்ணா” என்று மிரட்சியுடன் துள்ளியது. புவனாம்மா ஆகிய அவர் உதட்டை இறுக்கிக் கடித்துக்கொண்டு “துள்ளினா விட்டுறுவமா...உங்கிட்ட ஒவ்வொரு நேரமும் இதே பாடு” என்றபடி, தரையில் அமர்ந்தபடிக் கால்களுக்கு நடுவே குழந்தையைக் கிடத்தினார். அதன் கைகளை ஏசுவைச் சிலுவையில் ஏற்றுவதுபோல விரித்துப் பிடித்துக்கொண்டார்.
உதறும் குழந்தையின் கால்களைத் தரையுடன் சேர்த்து அழுத்தியபடி ``சீக்கிரம் வா காவேரி” என்றார். 

``இந்த ஸ்பூன் சனியன் எங்கேயோ போய் ஒளிஞ்சிக்குது” என்றபடி மிக்கி மௌஸ் சித்திரமிட்ட வண்ணக் கிண்ணத்தை ஏந்தியபடி வந்தார் காவேரி. இதுவரை ``வேண்ணா வேண்ணா” என்று கத்திக்கொண்டிருந்த குழந்தை வாயை இறுக்கமாக மூடிக்கொண்டு தலையை இடமும் வலமுமாக வேகமாக ஆட்டியது. காவேரி, குழந்தையின் தலையை அழுத்திப் பிடித்தபடிக் கிண்ணத்தில் இருந்ததை ஸ்பூனைக்கொண்டு கோதி, குழந்தையின் வாயில் வல்லடியாகத் திணித்தார்.

உதட்டைப் பிளந்து உட்புகுந்த உணவு, ஸ்பூனில் இருந்து ஒன்றுக்குக் கால் என்ற அளவிலாவது உள்ளே சென்றதா என்பது சந்தேகமே. போர் போடும்போது காற்றும் நீரும் பீய்ச்சி அடிக்குமே... அதுபோல குழந்தை, ‘ப்ர்ர் ப்ர்ர்’ என்று துப்பிய சாதக் கலவை, குழந்தையின் முகத்தில் மட்டுமல்லாது அந்தப் பிரதேசமெங்கும் சிதறியது. ‘குழந்தையை ஊட்டி வளர்க்கிறேன்’ என்ற பெயரில் நடக்கும் இந்த வன்முறை எனது நண்பரின் வீட்டில் மட்டுமல்ல, பரவலாக நடப்பதுதான் என்பதைக் கிட்டத்தட்ட ஒரு கள ஆய்வுபோல நேரில்கண்டு புரிந்துகொண்டுள்ளேன்.

இத்தனை சாகச வன்முறையுடன் ஊட்டும் உணவு குழந்தையின் உடலுக்கு ஆற்றலை அளிக்குமா? சந்தேகமேயில்லை ஜென்டில்மேன்... நிச்சயமாக அதன் இயற்கையான வளர்ச்சிக்குக் குறுக்கீடாகவே இருக்கும். நாள் முழுக்க நொறுக்குத்தீனியை மட்டுமே தின்றுகொண்டு, சாப்பாடு என்றாலே அழுது அடம்பிடித்து, ஆர்ப்பாட்டம் பண்ணும் குழந்தையை வேறு என்னதான் செய்வது? சோறு, இட்லி, தோசை உண்ணாமல் ஒரு குழந்தை எப்படி வளரும்? நறுங்கிப் போய்விடாதா?

நம் காலத்து நடுத்தர வர்க்கத்து வீட்டுக் குழந்தைகள் `கொழுக்... மொழுக்...’ என்று இருக்கின்றன. ஆனால், குழந்தைமைக்குரிய துறு துறுப்புடனோ, கண்களில் மின்னும் உயிர்ப்பான ஒளியுடனோ இருப்பதில்லை. ஏன்?

குழந்தைகளை நாம் பெற்றோம். ஆனால், அவர்கள் இயற்கையாகத்தான் வளர்கிறார்கள். இயல்பில் ஒரு பகுதிதான் உணவு. அதுவே வளர்வதற்கான காரணி அல்ல. அதுவும் விளையாட்டின் ஒரு பகுதியே. நம் பெற்றோர் நெய்யூற்றியோ, வெறும் சோற்றை மையப் பிசைந்தோ, வானத்தில் தெரியும் நிலாவைக் காட்டி ஊட்டினார்களே... நிலாப் பார்க்கும்போது முத்துச் சிப்பியைப் போன்ற நம் உதடுகள் தன்னியல்பாக விரிய, அந்த விரிந்த வாயினுள் பூமொட்டுப்போல அமுதினைப் புகட்டினார்களே... தாயின் கைவிரல்கள் சோற்றுப் பிசுபிசுப்பில் காய்ந்து வெடவெடத்தபோதும், ‘இன்னும் கொஞ்சம்... இன்னும் கொஞ்சம்’ என்று நம் மென் உதடுகளும் அறியாத வண்ணம் புகட்டினார்களே... 

நாம் பெற்ற இன்பத்தை நம் குழந்தைக்குத் தர வேண்டாமா? ஒரு நாளாவது நிலாவைக் காட்டிச் சோறு ஊட்டினோமா? சீனத்தில், நிலாவை, `அன்னை’ என்கிறார்கள். தெலுங்கில், ‘சந்தமாமா’ என்று நிலாவை நம் உறவின் ஒரு பகுதியாக உள்ளத்தில் பதிந்து வைக்கிறார்கள். நாம்,  நிலாவை நம் பிள்ளைகளுக்குக் காட்டுவதுகூட இல்லை.

இரவில் தூக்கத்திற்கு முன், என் இரண்டு வயதுப் பேரனைத் தோளில் போட்டுத் தெருவில் உலாச்சென்று தட்டிக் கொடுத்துத் தூங்கச் செய்வது  வழக்கம். அதேபோல சில நாட்களுக்கு முன் சென்றபோது அவன் தலையைத் தோளில் சாய்க்க மறுத்து மேலே மேலே கையைக் காட்டுகிறான். மழலை மொழியில் ஏதோ ‘இயா இயா... ஓவி ஓவி வாவா’ என்கிறான். மின்கம்பியில் அமர்ந்திருக்கும் புறாவைக் காட்டுகிறானோ என்று நினைத்தேன்.
அவனிடம் ‘இயா இல்ல புறா’ என்றேன். திருவிளையாடல் பாலையாபோல ‘எங்கே நீ திருத்திச் சொல். புர்றா...’ என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னேன். அவன் என் நாடியை மேல் நோக்கி அழுத்தி ‘இயா’ என்றான். இந்தப் போராட்டமும் எனது குழப்பமும் ஐந்து நிமிடங்களுக்கு நீடித்த பின்னரே எனக்குப் புரிந்தது அவன் நிலாவைக் காட்டுகிறான் என்று. ‘நிலா நிலா ஓடி வா’ என்பதைத்தான் ‘இயா இயா ஓவி வா’ என்றிருக்கிறான்.

அது, முழுநிலவுக்கு முந்தைய நாள். வானத்தில் நிலா, துலக்கமாக நீரில் ஆடும் ஒரு பூவைப்போலக் குளுமையாக மிதந்துகொண்டிருந்தது. இதற்கு முந்தைய நிலாக்காலத்தில், அவன் பாட்டி நிலாவைக் காட்டி ‘நிலா நிலா ஓடி வா’ என்ற பாடலையும் கற்றுக் கொடுத்திருக்கிறாள்.
பிள்ளைகளுடன் பொருள் பொதிந்த வகையில் செலவிட வேண்டும் என்று கருதுகிற நான், வீட்டில் தங்குகிற நாள்களில் எல்லாம் பேரனுடன் நேரத்தைச் செலவிட திட்டமிடுகிற நான், ஓராண்டு காலமாக அவனைத் தோளில் போட்டுத் தூங்கச் செய்கிற நான், குழந்தை வளர்ப்பில் பெரியவர்கள் விரிந்த பார்வை கொண்டிருக்க வேண்டும் என்று கருதுகிற நான், பேரனுக்கு நாற்பதடி உயர மின்கம்பியில் புறாவுக்கு மேலாக அவன் பார்வையை உயர்த்தி நிலாவைக் காட்டியதில்லை. 

இது அவசர உலகம். இதுக்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது என்று சமாதானப்படுத்திக் கொள்கிறோம். ஆனால். குழந்தைகள் விஷயத்தில் சமாதானங்கள் சொல்லிக் கடந்துபோக முடியாது. மூதாதையர் சொத்துகளை வாரிசுகளுக்குக் கொடுத்துச் செல்வது எத்தனை முக்கியமானதோ, அதுபோலவே நாம் நம் பெற்றோரிடம் பெற்ற இன்பங்களை நம் பிள்ளைகளுக்கு அளிப்பதும். 

இந்த உலகத்தின் அவசரம் (அவசரம் என்று மீண்டும் மீண்டும் கூறுவதே ஒரு கற்பிதம்தான்) நமக்கு மட்டுமே. நம் பிள்ளைகள் இயற்கையின் ஓர் அங்கம். புற உலகின் படிமங்கள் அவர்களது மூளையில் படியும்வரை அவர்கள் இயற்கையுடன் இயைந்தவர்களாகவே இருக்கிறார்கள். அழுக்குச் சுவரில் நகரும் இம்மி அளவிலான எறும்பு அவர்கள் கண்களுக்குப் படுகிறது. செடிகொடிகள் சூழ்ந்த சாலையில் பைக்கில் செல்லும்போது (இன்னமும்) பறக்கும் பட்டாம்பூச்சிகள் அவர்களுக்கு வியப்பளிக்கின்றன. அடுத்த ஈ.எம்.ஐ-யை எப்படிச் சமாளிப்பது என்ற கவலைகொள்ளாத குழந்தைகளின் மூளை, பட்டாம்பூச்சி சிறகசைக்கும் வேகத்திலும் அதன் ஒளிரும் வண்ணத்திலும் கிறங்கித் திளைக்க விரும்புகிறது.

இதையெல்லாம் மறுக்க நமக்கு அனுமதி இல்லை என்றபோதும் மெரினா பீச்சுக்குத் தடை போட்ட போலீஸைப்போல குழந்தைகளின் இயற்கை நுகர்வுக்குத்தான் தடை போட்டு விட்டோம். சரி... குழந்தையின் சிறுவாயும் குறு உணவுக்குழாயும் கொள்ளும் அளவிற்கு நிதானமாக ஊட்டுகிறோமா? இல்லை. 

உண்பதற்கு நாம் நமக்கு ஒரு நேரத்தை வகுத்து வைத்திருக்கிறோம். உண்பது நமக்குக் களிப்பு, இன்பம், கடமை, ஆற்றல் என்று பலவாறாகப் புரிந்து வைத்துள்ளோம். ஆனால், குழந்தைகள் உண்பது என்பதும் அவர்களது விளையாட்டில் ஒரு பகுதியே. அதற்குக் காலம், நேரம், அளவு எதுவும் கிடையாது. அவர்களது வளர்ச்சிக்குத் தேவையான ஆற்றல் உண்பதில் மட்டுமல்ல, விளையாட்டிலும் கிடைக்கிறது. உறங்குவதிலும் கிடைக்கிறது.

குழந்தையின் உணவானது கன்னம் உப்பிய குழந்தை சிரிக்கும் பளபள டப்பா மாவிலும் இல்லை; பெரியவர்கள் சோற்றை மிக்ஸியில் இட்டு கர்ர்ர்ரென்று சுற்றி,  நொசநொசக்கக் கொடுக்கிற கூழ்போன்ற ஒன்றிலும் இல்லை. 

குழந்தை உணவு என்பது தனித்துவமானது. வள்ளுவன் சொன்னதுபோல, சிறு கை அளவிய கூழ் நமக்கு எத்தனை இனிதோ அத்தனை இனிது நம் பெருவிரல்கள் அளவிய கூழ் அவர்களுக்கு!

நிலாச் சோறு ஊட்டுவோம்...



நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 4

போப்பு மருத்துவ எழுத்தாளர்ஹெல்த்
குழந்தை உணவில் நெய்யின் முக்கியத்துவம் குறித்துக் கடந்த இதழில் பார்த்தோம். ஆனால் இன்று,  ‘நெய் என்றாலே கொலஸ்ட்ரால்’ என்று ஓர் எதிர்மனப் படிம‍ம் உருவாகி உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.  
நெய் என்றதும் அதன் வாசம் நம் நினைவுப் படிமங்களில் இருந்து கிளர்ந்தெழுந்து நாக்கில் நீரை ஊறச்செய்த காலம் போயே போயிற்று. கொழுகொழுக் கைகால்களுடன், 120 வாட்ஸ் பல்பு கண்களுடன் கார்மேக வண்ணக் கண்ணன் முக்காலி மீது முக்காலி போட்டு ஏறி, உறிப் பானையில் இருந்து நெய்யைக் கை நிறைய எடுத்து வாயில் திணிக்கும் காட்சி நம் மனத்திரையில் ஓடுவதில்லை.

மாறாக, நெய் என்றாலே ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், ரத்த நாளங்களில், இதயத்தில் அடைப்பு, ஒருவர் இதயத்தைப் பிடித்துக் கொண்டு சரிந்து கண்ணை மூடும் எதிர்மறைச் சித்திரம் கடகடவென்று ஓடி, அனிச்சையாகவே நம் கைகள் நெஞ்சைப் பிடித்துக்கொள்கின்றன.

ரத்த அழுத்தம், மாரடைப்பு போன்றவை குறித்தும் அதற்குப் பின்னுள்ள மருத்துவ வணிக அரசியல் குறித்தும் இப்போது பார்க்கப் போவதில்லை. கொலஸ்ட்ரால் உருவாக்கும் உணவுகளைப் பட்டியல் போட்டவர்களே இன்று அதைக் கலைத்துப்போட்டு, சீத்தலைச் சாத்தனார்போல அடித்துத் திருத்தி, மாற்றி மாற்றி எழுதிக் கொண்டிருப்பதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.

பாலின் ஆதாரச் சத்தாகிய கொழுப்புக் கூறினை அடியோடு ‘லபக்’க்கிக் கொண்டு இன்னொரு வணிக‍க் கதவைத் திறப்பதற்காகத் தான் முதலில் கொலஸ்ட்ரால் பீதியை உருவாக்கி, பாலை ஆலைக்குள் கொண்டு போனார்கள். ஆலையில் இருந்து பாக்கெட்டாகி வரும் பாலைக் காய்ச்சி, உறை குத்தித் தயிராக்கி, ஆயர்பாடி ஆயர்கள் எல்லாம் ஒன்றுகூடி 24 x 7 ஷிப்ட் போட்டுக் கடைந்தாலும் மத்துதான் புட்டுக்குமே ஒழிய, சொட்டு வெண்ணெய் கிடைக்காது. 

முன்பெல்லாம் ப்ராசஸ் செய்யப்பட்ட பாலில் வெண்ணெய் தான் இல்லாமல் இருந்தது. இன்று பாக்கெட்டோடு ஒரு லேயர் வெள்ளையாக ஒட்டிக்கொண்டிருக்கும் பாலில், பாலே இல்லை. நமது கிராமங்களில் இருந்து பாசத்துடன் வந்திறங்கும் பாலில், கிழங்குமாவில் இருந்து யூரியா, வண்டிக்குப் போடும் டூ ட்டி ஆயில், டிடெர்ஜென்ட் பவுடர் போன்ற நம் கற்பனைக்கும் எட்டாத பொருள்கள் எல்லாம் கலந்திருக்கின்றன.

நமது கைக்குக் கிடைக்கும் பாலில் வெண்ணெய் `லபக்’கப்பட்ட பின்னர்தான், மேற்படி கலப்படச் சித்து வேலைகள் நடக்கின்றன என்பதால் வெண்ணையில் இருந்து நேரடியாகத் தயாரிக்கப்படும் நெய், பெருமளவு பாதுகாப்பானதுதான். ஆனால், விற்பனைக்காகவே பிறப்பெடுத்து, கைப்படாமல் மிகவும் சுத்தமான முறையில் ஆலையில் தயாரிக்கப்படுவதாக விளம்பரப்படுத்திக் கொள்கிற வணிக நெய்யில் தகிடுத‍த்த வேலைகள் இல்லாமல் இல்லை. பிராண்ட‍ட் நெய்யில் தூக்கலான வாசத்தி்ற்காக சிந்தெடிக் மணமும், கவர்ச்சிகரமான நிறத்திற்குச் செயற்கை  நிறமூட்டியும் கலக்கப்படுகின்றன.

சரி எதுதான் நம்பகமான நெய்? 

என்னைக் கேட்டால் பெரிய ஊடகங்களில் விளம்பரப்படுத்தாத நெய்தான் ஓரளவு பாதுகாப்பானது. இன்றளவும் பால் உற்பத்தியாளர்கள் கிராம‍ப்புறங்களிலும், நகரங்களின் வெளிப்புறப் பகுதிகளிலும் இருக்கவே  செய்கின்றனர். இவர்கள் மாட்டுக் கடனுக்காகப் பால் சொசைட்டிக்கு ஊற்றினது போக, ஒருபகுதிப் பாலை எடுத்து வைத்துக்கொண்டு அதில் தயிர், மோர், வெண்ணெய் கடைந்து நெய்யுருக்கி விற்கவே செய்கிறார்கள். தம் குலத் தர்ம‍த்தைத் தக்க வைப்பதற்காகவே செய்கிறவர்கள் என்பதால் அது முற்றிலும் நம்பகமான நெய்யாக மட்டுமே இருக்கும். அதுதான் மிகவும் பாதுகாப்பானது.

நம் காலத்தில், வேலை நேரத்திற்கு பஸ் பிடிப்பதில் தொடங்கி ஒவ்வொன்றிலும் பாதுகாப்பான பொருள் வாங்குவது வரை அத்தனையிலும் திறன் பயிற்சி பெற்றுத்தான் வாழ முடியும் என்கிற அளவிற்கு அன்றாட வாழ்க்கை மாறிக்கொண்டு வருகிறது. 

இந்த வாழ்க்கை நெருக்கடியில் இருந்து நம்மை மீட்கத்தான், வாழ்வியல் பயிற்சி, தன்னம்பிக்கைப் பயிற்சி என்று ஒரு குரூப் கல்லாக் கட்டிக் கொண்டு அலைகிறது. நாம் அவ்வளவு தொலைவிற்குப் போய் பணத்தையும் நேரத்தையும் விரயம் செய்யத் தேவையில்லை. 

இன்றளவும் நாம் எல்லோரும் ஏதோ ஒருவகையில் கிராமத்துடன் தொடர்பு கொண்டிருக்கிறோம். தொடர்ந்து மூன்று நாள்கள் விடுமுறை வந்தால் பெருங்களத்தூர் திணறுகிற திணறலில் தெரிகிறது நாம் எல்லோரும் இன்னமும் ‘அப்பார்ட்மென்ட் அப்பாடக்கர்கள்’ ஆகிவிடவில்லை என்று.

ஏதோ ஒருவகையில் கிராமத்து உறவு அறுந்து போகாதவர்கள்தான். எனவே, உணவுப் பொருள்களைப் பொருத்தமட்டில் அவற்றை உற்பத்தி செய்பவர்களுடன் நல்லுறவு வைத்துக் கொண்டால் தரமான உணவுப் பொருள் கிடைக்கப் பெருமளவு வாய்ப்புள்ளது. இத்தனை கஷ்டப்பட்டு உணவில் நெய் சேர்த்தேதான்  ஆக வேண்டுமா என்றால், நமது உடல் நலனைத் தக்க வைத்துக்கொள்வதில் நாம் செலுத்தப் போவது குறைந்தபட்ச கவனமே என்பேன்.   
பெரியவர்களின் உணவைக் காட்டிலும் உடலின் அடிப்படைக் கட்டுமானம் கட்டமைக்கப்படுகிற இளம் வயதினரின் உணவில் நாம் குறைந்தபட்ச கவனம் செலுத்துவது தான் அந்த வயதுக்கு உரிய நியதியைச் செய்வதாகும். இளம் வயதில் அவர்களுக்கான கல்வி, உடை, கேளிக்கை, விளையாட்டு போன்றவற்றிற்கு அள்ளி இறைக்கிற இன்றைய சமூகம் அவர்களது உடலின் அடிப்படைக் கட்டுமான விஷயத்தில் போதிய கவனம் செலுத்துவதில்லை. அதனால்தான் ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி திருமணத்திற்கு முன்பே அந்த வயதில் இருக்கக்கூடாத குடல் வால் அழுகல் நோய் தொடங்கி, உடல் பருமன், முடி உதிர்தல், தைராய்டு, சிறுநீரக‍க் கல், விந்தணுக் குறைபாடு, கருமுட்டைக் குறைபாடு வரை கற்பனைக்கு எட்டாத தொல்லைகளுக்கு ஆளாகி வருவதைக் கண்கூடாக‍க் கண்டு வருகிறோம்.

பதின்ம வயதை எட்டுகிற வரை, குழந்தை தொடங்கி பள்ளிச் சிறுவர்கள் பலருக்கும் மலச் சிக்கல் மிகப்பரவலாக உள்ளது. இதற்கு முதன்மையான காரணங்கள், குழந்தைப் பருவத்தில் அவர்களது சிறுநீர் மலக் கழிவை நீக்கச் சோம்பல்பட்டு, ‘அட்டாச்டு டாய்லெட்’டான டயப்பரை அணிவிப்பது, பின்னிரவில் தூங்காமல் விழித்திருப்பது, காலையில் தாமதமாக எழுந்து ஸ்கூல் வேனைப் பிடிக்கும் அவசரத்தில் பாத்ரூம் பக்கத்தில் ‘‘ஆச்சா ஆச்சா’’ என்று துரத்துவது போன்றவை தான். 

இப்போதைக்கு இளம் வயது மலச் சிக்கலைத் தவிர்க்க உணவில் செலுத்த வேண்டிய கவனம் குறித்து மட்டும் பார்ப்போம். கொழுப்புச் சத்துத் தேவைக்காவும், சுவைக்காகவும், அவர்களுக்கு உள்ள பாலின் மீதான ஈர்ப்பு உணர்விற்காகவும் சிறியவர்கள் உணவில் நெய் இடம் பெற வேண்டியது மிகவும் முக்கியம். 

அதுபோலவே அவர்களது உணவுப்பாதையில் இளம் வயிற்றில், சிறு குடலில் உணவு இதமாக நழுவிச் செல்லவும், பெருங்குடலிலும் மல வாயிலும் மலம் வழுக்கிச் செல்லவும் நெய் மிகவும் அவசியம் ஆகும். அதிலும் குறிப்பாக இறுகலான தன்மையுள்ள, உடலின் நீரை உறிஞ்சும் தன்மையுள்ள பிஸ்கட் போன்ற வறள் தின்பண்டங்களையும், சாக்லேட் போன்ற பசைத்தன்மை மிகுந்தவற்றையும் உண்கிற குழந்தைகளுக்கு நெய், ஒவ்வொரு நேர உணவிலும் தவிர்க்க முடியாத உணவாகும். பெரியவர்கள் கொண்டுள்ள கொலஸ்ட்ரால் பீதியை சிறுவயதினருக்கு ஊட்ட வேண்டியதில்லை.

நம் வீட்டு நெய்யையே ஊரான் வீட்டு நெய்போல தாராளமாக விளாவலாம். தரமான நெய் கிடைக்காதபோது அல்லது நெய்யின் விலை நமது பட்ஜெட்டில் ஒரு துண்டு விரித்துப் படுத்துக்கொள்ளுமானால் இருக்கவே இருக்கிறது, நல்லெண்ணெய். துறுதுறுப்பான, நெருப்பின் ஆற்றல் மிகுந்த குழந்தைகளுக்கு நெய்க்குப் பதிலாக நல்லெண்ணையைத் தாராளமாகப் பயன்படுத்தலாம். நெருப்பாற்றலின் சுவை வடிவம் கசப்பு. கசப்பான எள்ளில் இருந்து பிழிந்தெடுக்கப்படும் எள்ளெண்ணையில் கசப்புச் சுவை, வால்போலக் கூடவே வந்துவிடும். 

இத்தனைக்கும், எள்ளுடன் விடாப்பிடியாக இறுக்கிக்கொண்டிருக்கும் எண்ணையை இளக்க  எள்ளைச் செக்கில் ஆட்டும்போது உடன் கரும்பு வெல்லம் அல்லது பனை வெல்லம் சேர்க்கவே செய்கிறார்கள். ஆனாலும் எள்ளெண்ணையில் கசப்புச் சுவை அடிநாதமாக இருந்தே தீரும். எனவே, குழந்தை உணவைப் பொருத்தமட்டில் நல்லெண்ணெய் சேர்க்கும்போது கூடவே சிறிதளவு இனிப்புச்சுவையும் சேர்த்தால்தான் குழந்தைகள் முரண்டு பிடிக்காமல் ஏற்பார்கள்.  மற்றொரு வகையில் சதையை இறுகச்செய்யும் தன்மையுடையது கசப்புச் சுவை. எனவே, சதை வளர்ச்சி பெறும் கட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு அச்சுவையைத் தணித்து இனிப்புச் சுவையுடன் உணவைத் தருவதே பொருத்தமாக இருக்கும்.

குழந்தைகளுக்குச் சோற்றை மையப் பிசைந்து தரும்போது உடன் சோற்றுருண்டை மினுமினுக்கும் விதமாகத் தாராளமாக நல்லெண்ணைய் விட்டுப் பிசையலாம். அத்துடன் அரைத் தேக்கரண்டி நாட்டுச் சக்கரையும், அரை வாழைப்பழத்தையும் சேர்த்துப் பிசைந்து கொடுத்தால் குழந்தையின் நாவிற்கும் சுவையாக இருக்கும். வயிற்றிலும் இதமாக இறங்கும்.

குழந்தையின் உறுதியான சதை வளர்ச்சிக்கு ஏற்ற உணவு வகைகளை அடுத்த இதழில் பார்க்கலாம். அதற்கு இப்போது பரவலாக‍க் கிடைக்கத் தொடங்கியுள்ள கேழ்வரகு என்ற பொதுப் பெயரைக்கொண்ட, ‘கேவுறு’ என்று வட தமிழகத்திலும் ‘கேப்பை’ என்று தென் தமிழகத்திலும் அறியப்படுகிற இரும்பைப் போன்ற உறுதி மிகுந்த தானியத்தை வாங்கி வைத்திருங்கள்.

நிலாச்சோறு ஊட்டுவோம்...

No comments:

Post a Comment