Friday, December 8, 2017

Last updated : 11:44 (07/12/2017) மலச்சிக்கல், மனஅழுத்தம் இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு... கவனம்! #ConstipationRemedies




மலச்சிக்கல், மனஅழுத்தம் இரண்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு... கவனம்! #ConstipationRemedies

தினமும் அதிகாலை அலாரத்துக்கு பதிலாக, மலம் கழிக்கும் உணர்வு ஒருவரை உறக்கத்திலிருந்து விழிக்கச் செய்தால், அவர் ஆரோக்கியமாக வாழ்கிறார் என்று தாராளமாகக் கூறலாம். மலச்சிக்கல் தொந்தரவால் அவதிப்படுபவர்களைக் கேட்டால், ’மலத்தை இயல்பாக வெளியேற்றுபவர்கள் கொடுத்துவைத்தவர்கள்’ என்று சொல்லுவார்கள். கல்போல கடினமான மலம், முழுமையாக மலம் வெளியேறாமல் துன்பப்படுவது, வயிற்றுவலி, வயிற்று உப்புசம், வாயு பிரிதல்... என மலச்சிக்கல் உண்டாக்கும் அறிகுறிகளே கடுமையான உணர்வுகளைக் கொடுப்பவை. தினமும் காலையில் வயிற்றைப் பிசைந்தும், வயிற்றுத் தசைகளுடன் குத்துச்சண்டை போட்டுப் பார்த்தும் மலத்தை வெளியேற்ற முயற்சிப்பவர்கள் பலர்!
மலச்சிக்கல்

ஆரோக்கியத்தை சுட்டிக்காட்டும் காரணி:
’மலம் வெளியேறுவதில் சிரமம் இல்லை. ஆனால் என்ன… டீ குடித்தால்தான்… சிகரெட் பிடித்தால்தான்… மாத்திரைகள் விழுங்கினால்தான் மலம் வெளியேறும்’ என்று சாக்குப் போக்கு சொல்பவர்கள் உடனடியாக பழக்கத்தை மாற்றிக்கொள்வது நல்லது. மேற்சொன்ன எந்த பொருள்களின் உதவியும் இல்லாமல், இளகிய மலமாக வெளியேறுவதுதான் உடலுக்கு நல்லது. சாப்பிட்ட உணவு முறையாகச் செரிமானம் அடைந்து, உடல் இயக்கங்கள் சிறப்பாக இருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டும் காரணியே மலம். ’சில நாள்கள் வரும், சில நாள்கள் வராது’ என்று அலட்சியமாகவிடக்கூடிய விஷயம் அல்ல மலம். மலச்சிக்கல் உண்டாவதற்கான காரணிகளை ஆராய்ந்து, மலத்தை இளகியதாக வெளியேற்றும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 
 
காரணிகள்:
துரித உணவுகளைத் தொடர்ந்து சாப்பிடும்போது மலச்சிக்கல் உண்டாவது உறுதி. பெருநகரங்களின் துரித வாழ்க்கையில் சிக்கிக்கொண்டு, வேறுவழியின்றி தினமும் துரித உணவுகளை சாப்பிட்டுக்கொண்டிருப்பவர்களுக்கு நன்றாகவே தெரியும், மலச்சிக்கலைப் பற்றி! துரித உணவுகளில் இருக்கும் ரசாயனங்கள் குடல் இயக்கங்களைத் தடுத்து, மலச்சிக்கலை ஏற்படுத்தும். மைதா சேர்த்த உணவுகள், நிச்சயம் மலச்சிக்கலை உண்டாக்கும். மசாலா நிறைந்த அசைவ உணவுகள் வேண்டவே வேண்டாம். அளவுக்கு அதிகமாக உணவுகளை உண்பது, செரிப்பதற்குக் கடினமான உணவுகளைச் சாப்பிடுவது, தேவையான அளவு தண்ணீர்பருகாதது போன்றவை மலச்சிக்கலை உண்டாக்கும் மிக முக்கியக் காரணிகள்.
தண்ணீர்

சில வகை மருந்துகளை உட்கொள்வதாலும், முதிர்ந்த வயதின் காரணமாகவும் மலச்சிக்கல் ஏற்படலாம். மனஅழுத்தத்துக்கும் மலச்சிக்கலுக்கும் நெருங்கிய உறவு உண்டு. உடல் உழைப்பு இல்லாதவர்கள், அதிகமாக தேநீர், காபி அருந்துபவர்கள், தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள், மலத்தை அடக்குபவர்கள் போன்றவர்களுக்கு மலம் கழிப்பதில் சிரமம் ஏற்படும். இயல்பாக வெளியேறும் மலத்தை அடக்கும்போது, மலத்தில் இருக்கவேண்டிய நீர்த்துவம் மீண்டும் மீண்டும் உறிஞ்சப்பட்டு, வறண்ட மலமாக வெளியேறும். வறண்டு கடினப்பட்ட மலம், மலப்பாதையில் சிக்கல்களை உண்டாக்கி, பௌத்திரம் வரை கொண்டு செல்லும். 
 
மலம் கழிக்கும் முறை முக்கியம்:
மேலைநாட்டுப் பாணி கழிப்பறையில் (Western toilet) அமர்ந்துகொண்டு மலம்கழிக்க முயலும்போது, ஒரு சிறுகதையே படித்து முடித்திருந்தாலும், மலம் வெளியேறாமல் தவிப்பவர்கள் உண்டு. மூட்டுகளில் எந்த பிரச்னையும் இல்லையெனில், நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ள குத்தவைத்து மலம் கழிக்கும் முறையைப் (Squatting position) பின்பற்றினாலே மலம் இயல்பாக வெளியேறும். மேலைநாட்டுக் கழிப்பறையைப் பயன்படுத்துபவர்களுக்கு மலச்சிக்கல் தொந்தரவு அதிகளவில் இருக்கும். குத்தவைத்து மலம் கழிக்கச் சிரமப்பட்டு, மேலைநாட்டு பாணியில் அமர்ந்துகொண்டு மலம் கழிக்கும்போது, முழுமையாக கழிவுகளை வெளியேற்ற முடியாது. மேலும், மலப்பை தசைகளுக்கு அழுத்தம் ஏற்பட்டு, மலம் வெளியாவதில் சிரமத்தை உண்டாக்கும். அதே வேளையில் தொடைப் பகுதிகள் வயிற்றுத் தசைகளை அழுத்தும் அளவுக்கு குத்தவைத்து மலம் கழிக்க முயலும் முறை, மலத்தை முழுமையாக வெளியேற்றும்; இடுப்புப் பகுதிகளுக்கு சிறந்த பயிற்சியாகவும் அமையும்.
 
மலமிளக்கி மருந்துகள் எப்போது தேவை?
மலச்சிக்கல் ஏற்பட்டவுடன், உடனடியாக மலமிளக்கி மருந்துகளின் ஆதரவைத் தேடக் கூடாது. தொடர்ந்து மலச்சிக்கல் ஏற்படுவதற்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்து, உணவு மற்றும் வாழ்வியல் முறை மாற்றங்களின் மூலமே சரிசெய்ய முயற்சிக்க வேண்டும். திடீரென மலம் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டால், முந்தைய நாள் சாப்பிட்ட உணவின் தன்மையை ஆராய்ந்தால் போதும். காரணம் பெரும்பாலும் கிடைத்துவிடும். முதிர்ந்த வயதில் குடலின் செயல்பாடுகள் பெருமளவில் குறைந்திருக்கும்போது மலமிளக்கி மருந்துகளை தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். ஆனால், பதினைந்து வயதிலிருந்தே மலத்தை வெளியேற்ற, மருந்துகளை நாடுவது மிகப் பெரிய தவறு. இயற்கையை இயக்க, செயற்கையைத் தேவையில்லாமல் வரவழைப்பது தவறு. 
மலச்சிக்கல்

நார்ச்சத்து நலம் தரும்!
நார்ச்சத்துள்ள உணவுகள், குடலின் அசைவுகளை துரிதப்படுத்தி, மலத்தை வெளியேற்ற உதவும். கரையக்கூடிய நார்ச்சத்து (Soluble fibre) மற்றும் கரையாத நார்ச்சத்துள்ள (Insoluble fibre) உணவுகளை கலந்து உட்கொள்ளலாம். பசலை, சிறுகீரை, மணத்தக்காளி போன்ற கீரைகள், நார்த்தன்மை நிறைந்த காய்கள், வாழை, பப்பாளி, திராட்சை போன்ற பழங்கள், பயறு வகைகள், முழுதானியங்கள், கொட்டை வகைகள்... என அனைத்தும் தேவை. மலச்சிக்கலை சரிசெய்வதில் வெந்தயம் சிறந்த பங்களிப்பைத் தரக்கூடியது. நீரில் ஊறவைத்த வெந்தயம், சிறிது நேரத்தில் கொழகொழப்புத் தன்மையை அடையும். அதைப் பயன்படுத்தும்போது, மலச்சிக்கலைநிவர்த்தி செய்யும்; உடலுக்குத் தேவையான நுண் ஊட்டச்சத்துகளையும் கிடைக்கச் செய்யும். நூறு கிராம் வெந்தயத்தில் அறுபத்தைந்து சதவிகிதம் நார்ச்சத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
 
தண்ணீர்… விளக்கெண்ணெய்:
குடலுக்கு நன்மை செய்யக்கூடிய ’புரோபையாடிக்’ கூறுகள் நிறைந்த மோரை அவ்வப்போது குடித்து வந்தாலும், மலச்சிக்கல் குணமாகும். இள வெந்நீர் குடலின் அசைவுகளை அதிகரிக்க (Increases peristalsis) உதவும். நிறைய தண்ணீர் குடிப்பது மலச்சிக்கலுக்கான முதல் மருந்து. பன்னாட்டு குளிர்பானங்களை எப்போதும் அருந்தக் கூடாது. விளக்கெண்ணெய் அமைதியான மலமிளக்கி. விளக்கெண்ணெயை மலமிளக்கியாக குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை உபயோகிக்கலாம். முன்பெல்லாம் விளக்கெண்ணெயை அவ்வப்போது சிறிதளவு குடிக்கும் வழக்கம் நம்மிடையே இருந்தது. இப்போது முற்றிலும் மறைந்துவிட்டது. 
பேதி… பீச்சு…
செரிமானத்தை சிறப்பாக்கக்கூடிய சீரகம், சுக்கு, மிளகு, ஏலம் போன்றவற்றை உணவு வகைகளில் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். குறிப்பிட்ட கால இடைவெளியில், மருத்துவரின் ஆலோசனைப்படி பேதி மருந்துகளை எடுத்துக்கொண்டு, செரிமானப் பகுதிகளை புத்துணர்வுடன் வைத்துக்கொள்வது அவசியம். பேதி மருந்துகள் மலச்சிக்கலை நீக்கும்; உடலில் தேங்கிய நச்சுப் பொருள்களை வெளியேற்றவும் உதவும். நீண்டகால மலக்கட்டினை சரிசெய்ய, ’பீச்சு’ (Enema) எனப்படும் புற மருத்துவ முறையும் அற்புதமான பலனை அளிக்கக்கூடியது.
செரிமானம் சிறப்பாக

எளிய மருந்துகள்…
சித்த மருத்துவத்தில் உள்ள நிலவாகைச் சூரணம், சிறந்த மலமிளக்கி. அதிலுள்ள கிளைக்கோசைடுகள் (Glycosides), செரிமானப் பகுதியில் உள்ள நரம்புகளைத் தூண்டி, மலத்தை வெளியேற்றுவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. திரிபலா சூரணம், பொன்னாவரை சூரணம், கடுக்காய் லேகியம், கடுக்காய் சூரணம், மூலக்குடோரி எண்ணெய்... என உடல் அமைப்புக்குத் தகுந்த நிறைய சித்த மருந்துகள் இருக்கின்றன. தொடர்ந்து மலச்சிக்கல் தொந்தரவு நீடித்தால், மருத்துவரின் ஆலோசனை நிச்சயம் தேவை. சில நோய் நிலைகளிலும் மலச்சிக்கல் பிரச்னை உண்டாகும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். உணவியல் மற்றும் வாழ்வியல் மாற்றம் மூலம் சரிசெய்ய முடியாதபோது மருந்துகளுக்குச் செல்லலாம். மருந்துகளின் மூலம் இயல்பான மலம் வெளியானவுடன், மருந்துகளை நிறுத்திவிடுவது நல்லது.
உடல் பேசும் மொழிகளைப் புரிந்துகொள்ளாமல், அவசர உலகத்தில் மெளனிகளாக ஓடிக்கொண்டே இருக்கின்றோம். நோய்கள் உண்டாகவிருப்பதை, ’மலச்சிக்கல்’ எனும் மொழியின் மூலம் உடல் வெளிப்படுத்துவதைப் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியம். மலச்சிக்கல்… அநேக நோய்களுக்கு அடிநாதம்! தோல் நோய்களில் தொடங்கி இதய நோய்கள் வரை, மலச்சிக்கலால் உருவாகலாம். மலம் இளகலாக வெளியேறாமல், கடினமாக வெளியேறினால் மூலம், ஆசனவாய் வெடிப்பு (Fissure), பெளத்திரம் (Fistula) போன்ற நோய்கள் உறுதியாக உண்டாகும். மலச்சிக்கல் என்பது தீர்க்க முடியாத நோயல்ல. சில மாற்றங்களால் சரி செய்யக்கூடியது. நமது செரிமானப் உறுப்புகளை கவனிக்கச் சொல்லும் சிக்கல்தான் மலச்சிக்கல்... இனிமேல் கவனிப்போம்!

























































































































































































உடல் பேசும் மொழிகளைப் புரிந்துகொள்ளாமல், அவசர உலகத்தில் மெளனிகளாக ஓடிக்கொண்டே இருக்கின்றோம். நோய்கள் உண்டாகவிருப்பதை, ’மலச்சிக்கல்’ எனும் மொழியின் மூலம் உடல் வெளிப்படுத்துவதைப் புரிந்துகொண்டு செயல்படுவது அவசியம். மலச்சிக்கல்… அநேக நோய்களுக்கு அடிநாதம்! தோல் நோய்களில் தொடங்கி இதய நோய்கள் வரை, மலச்சிக்கலால் உருவாகலாம். மலம் இளகலாக வெளியேறாமல், கடினமாக வெளியேறினால் மூலம், ஆசனவாய் வெடிப்பு (Fissure), பெளத்திரம் (Fistula) போன்ற நோய்கள் உறுதியாக உண்டாகும். மலச்சிக்கல் என்பது தீர்க்க முடியாத நோயல்ல. சில மாற்றங்களால் சரி செய்யக்கூடியது. நமது செரிமானப் உறுப்புகளை கவனிக்கசொல்லும் சிக்கல்தான் மலச்சிக்கல்... இனிமேல் கவனிப்போம்!
































































No comments:

Post a Comment