Sunday, December 17, 2017

நிழலில் வளர்ந்தால் நிலைப்பது எப்போது? thanks to vikatan.com

தாய் வாழை குலை தள்ளிச் சாயும் வரை, நிழலில் வளரும் கன்றிற்கு வளர்ச்சி என்பது பெயரளவில் தான் இருக்கும். இது, மனிதர்களுக்கும் பொருந்தும்!
மேலை நாடுகளில், பிள்ளைகளை தன்னம்பிக்கை ஊட்டி வளர்க்கின்றனர். நம்மில் பலர் பொத்திப் பொத்தி வளர்க்கிறோம். இப்படி, அடைக்காத்து வளர்க்கப்படுவதால், அடுத்த தலைமுறையின் திறமைகள் மழுங்கடிக்கப் படுகின்றன.
திருமணமாகி, ஒரு குழந்தைக்குத் தாயாகிவிட்ட எங்கள் உறவுப் பெண் ஒருத்தி, இன்றும் தன் தாய் வீடு வந்தால், உணவை கையால் எடுத்துச் சாப்பிடுவது இல்லை; தாய் தான் உணவை ஊட்டுவார்.
பாசம், பிரியம், உரிமை ஆகியவற்றின் பெயரால் நடக்கும் இப்படிப்பட்ட காரியங்கள், பிள்ளைகளை மனதளவில் சவலைப் பிள்ளைகளாகவே வைத்திருக்கின்றன.
வட மாநிலத்தில் உள்ள பல வெற்றிகரமான தொழிற் குடும்பங்களில் என்ன பழக்கம் தெரியுமா... தங்கள் வாரிசுகளுக்கு எடுத்த எடுப்பில், உயர் பதவி வழங்காமல், கீழ் மட்டத்தில் போட்டுப் புரட்டி எடுப்பர் அல்லது ஒரு குறிப்பிட்ட தொகையை வழங்கி, 'சுயமாக சம்பாதித்து பிழைத்துக் கொள்...' என்று தண்ணீர் தெளித்து விடுவர்.
இது கூட பரவாயில்லை; குஜராத்தைச் சேர்ந்த ஒரு பெரிய வைர வியாபாரி, தன் மகனுக்கு, அத்யாவசிய செலவுக்கு மட்டும் பணம் கொடுத்து, 'இந்தியாவில் எங்கேனும் சென்று பிழைத்துக் கொள்; ஓராண்டு வரை, நீயே உழைத்து, உன்னை காப்பாற்றிக் கொள். நடுவில், என்னிடம் பணம் என்று கேட்டால், உனக்கு ரோஷம் என்பதே இல்லை என்பதை புரிந்து கொள்...' என்று அனுப்பி விட்டார். இரக்கமற்ற தந்தை இவர் என்று எண்ணுவீர்கள்; அதுதான் இல்லை.
இந்த சவாலை ஏற்று, அந்த செல்வ மகன் கேரளாவிற்கு சென்று, வேலை தேடி அலைந்து, பெற்று, எளிய ஊதியத்தில் வாழ்க்கையை ஓட்டி, வெற்றிகரமாக காலத்தை ஓட்டித் திரும்பி, பட்டம் சூட்டிக்கொண்டார். இது, 
கதையல்ல, நிஜம்!
'நான் பட்ட கஷ்டம், என் பிள்ளை படக் கூடாது...' என்று நம் தந்தையர் உதிர்க்கும் வாக்கியத்தை ஒரு வெள்ளைக்காரன் வாயிலிருந்து ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது.
செல்வச் சூழலில் புரட்டி எடுக்கப்படும் மகன், பணத்தின் அருமை தெரியாதவனாக இருக்கிறான். வாழ்வு நடத்திக் காட்டும் சூதாட்டங்களில் பெரும்பாலும், இவன் தோற்றுப் போகிறான்.
நான் சொல்லப் போவது ஒரு மோசமான உதாரணம் தான்; காரணம் கருதி பொறுத்துக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
வாகனங்களில் அடிபட்டு, தெரு நாய்கள் சாவது மிக அபூர்வம்; வீட்டு நாய்கள் அப்படி அல்ல. எல்லை தாண்டி வரும்போது, வாகனங்களின் வேகத்தை கணிக்க முடியாமல், தப்பிக்கும் வழிவகை தெரியாமல் வாகனங்களில் சிக்கி இரையாகின்றன.
'பையனை ஹாஸ்டலில் போட்டா, ரொம்ப கஷ்டப்படுவான்; பிள்ளை எதுக்கு அப்படி கஷ்டப்படணும்... ராஜகுமாரன் அவன்; ஒருபோதும் அனுப்ப மாட்டேன்...' என, அடம்பிடிக்கிற பெற்றோர் உண்டு.
விடுதி வாழ்க்கை என்பது என்ன? சாப்பாட்டின் தன்மை எதுவாக இருந்தாலும், உள்ளே தள்ளப் பழக வேண்டாமா... மூட்டைப் பூச்சி, கொசுக்கடி, சக மாணவர்களின் தொந்தரவு, பிடுங்கல்கள் ஆகியவை தாண்டி இவன் ஜெயித்தால், இதுதான் உண்மையான வெற்றி!
பிள்ளைகள் என்றில்லை; நம் வட்டத்தில் உள்ள பலருக்கும், சிறு சிறு வாய்ப்புகளை தந்து, சில சவால்களை ஒப்படைத்தால், இவர்களுக்குள் இப்படிப்பட்ட ஆற்றல்கள் ஒளிந்துள்ளனவா என, வியக்குமளவு அவர்கள் ஒளி விடுவர்.
'இவன் இதற்கு லாயக்கு இல்லை... இவன் வேஸ்ட் பார்ட்டி...' என்று அவர்களை குறைத்து மதிப்பிட்டு, கொம்பு தேடும் கொடியாகவே வைத்திருக்கிறோம்.
மாறாக, வெளியே கொண்டு வந்து, அதிக நஷ்டத்தை ஏற்படுத்தாத சிறு சிறு முயற்சிகளை மேற்கொண்டால், உரியவர்களின் ஆற்றல்களை வியக்குமளவு வெளிக் கொணர முடியும்!

லேனா தமிழ்வாணன்

No comments:

Post a Comment