Saturday, December 16, 2017

Posted Date : 06:00 (01/11/2017) நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 2 thanks to vikatan .com

நிலவைக் காட்டி அமுது ஊட்டி - 2

போப்பு, மருத்துவ எழுத்தாளர்ஹெல்த்
ரு குழந்தை உண்ணும்போது தனக்கு வயிறு நிறைய வேண்டும் என்ற எண்ணப் பதிவு அதனிடம் இல்லை. அல்லது வயிற்றின் கொள்ளளவு இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை. நமக்கெல்லாம் காலையில், தட்டில் ஆறு இட்லி அணி வகுத்தே ஆக வேண்டும். எதைக் கொண்டாவது வயிற்றை நிரப்பியாக வேண்டும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்களைக் கொண்டு மைதானத்தை நிரப்புவது மாதிரி. அசந்தர்ப்பமாக, ஒரு வேளைக்கு ஆறு இட்லியில் ஒன்று குறைந்து விட்டாலும் வயிறு அவமானத்தில் அன்றைக்கெல்லாம் புழுங்கித் தீர்க்கும்.

அல்லது `நச்சுனு சுவையான இட்டிலிப் பொடி கிடைத்ததே’ என்று கூடுதலாக ஒரு இட்லியை ‘லபக்’கினால், சட்டைப் பொத்தானைத் தெறிக்கவிட்டு ஒரு வேலையும் செய்யவிடாமல் ‘என்னைப் பார். என் கனத்தைப் பார்’ என்று வயிறு அன்றைக்கெல்லாம் கவன ஈர்ப்புத் தீர்மானம் வாசித்துக்கொண்டே இருக்கும். குழந்தையின் வயிறு அப்படிப்பட்டதல்ல. நேற்று இரண்டு கவளம் சாப்பிட்டது என்றால் இன்றைக்கு அதன் தேவை, ஒரு கவளத்தில் நிறைவடைந்து விடலாம். அல்லது இரண்டரைக் கவளத்தையும் கடந்து போகலாம். எப்போதும் ஒரே அளவு உண்ண வேண்டும் என்பதில்லை. உண்ணவும் முடியாது.
ஒரு வேளைக்கு குழந்தை உண்ணும் அளவு என்பது முன்னர் உண்ட உணவு செரிமானம் ஆகி முடிந்ததில் தொடங்கி, அன்றைக்கு அடிக்கும் வெயில், மழை எனப் புறச்சூழல் வரை பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படும். கண்ணுக்கு இனிய காட்சிகள் கண்டிருந்தால் அந்த நிறைவிலேயே குழந்தை உணவை மறுக்கும், அல்லது கூடுதலாக உண்ணும். அதற்காகத்தான் வேடிக்கைக் காட்டியவாறு உண்ணச் செய்வது நம்முடைய கலாசார மரபாக இருக்கிறது. குழந்தை உண்ணும்போது அது இதுவரைக் கேட்டிராத `வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தியவள்ள்… வேல் முருகன் அன்னையவள்ள்ள்’ என்று எல்.ஆர்.ஈஸ்வரியம்மா தெருமுனையில் கட்டிய ஸ்பீக்கர் வழியாகத் திடீரென்று வந்து குழந்தையின் காதில் அதிரச் செய்தால் குழந்தையின் உடலில் இயங்கு சிஸ்டம் குந்தாங்கூறாகச் சிதறிவிடும். ஒவ்வொரு செல்லும் நிலைகுலைந்திருக்கும்.

அந்த நிலையில் குழந்தை முன்னிலும் வேகமாகக் கபகபவென்று விழுங்கிவைக்கும். அல்லது உணவை முற்றாக நிராகரித்துவிடும். சிஸ்டம் சிதறிய நிலையில் உண்ட மிகையான உணவு, முறையாகச் செரிமானம் ஆகாமல் அடுத்த வேளை வயிற்றுப்போக்கு ஏற்படும். அல்லது, வயிற்றை இறுக்கி மலக்கட்டு ஏற்பட்டுவிடும். குழந்தையின் ‘அவுட் கோயிங்’ குறித்த ஆய்வறிக்கையில் நாம் எல்.ஆர். ஈஸ்வரியை ஒரு காரணியாகச் சேர்க்க மறந்து விடுவோம்.

ஆக, குழந்தைக்கு அதிர்ச்சியூட்டியோ, மிரட்டியோ அதிக அளவு உணவை ஊட்டுவது பலன் தராது என்பது மட்டுமல்ல, எதிர்வினை யாகவும் ஆகிவிடும். இன்றைக்குப் பல வீடுகளில் குழந்தைகள் சாப்பிடும்போது, மிக்கி மவுஸ், பொக்கி மேன் போன்ற கார்ட்டூன்களைத் தொலைக்காட்சியில் ஓடவிடுகிறார்கள். நாளடைவில் குழந்தை, உணவைச் சுவைத்து உண்ணும் தன்மையை மறந்து கார்ட்டூன் காட்சிகளின் வழியாக மட்டுமே உண்ணும் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறது. நிரந்தரமாக ஒரே சுவையுணவு, அதே காட்சிகள், அதே அளவு. சில தாய்மார்கள் தம் குழந்தைகள் இப்படியான பழக்கத்திற்கு அடிமையான விபரீதம் புரியாமல் “எங்க பப்பு பொக்கி மேன் இல்லாம மம்மு சாப்பிட மாட்டான்” என்று பெருமை பரப்பு வார்கள். இந்தப் பெருமைதான், வயது கூடும்போது டி.வி பார்த்துக்கொண்டே அளவில்லாமல் உண்ணும் பழக்கமாக மாறுகிறது. அப்புறம் டி.வி பார்ப்பது என்றாலே எதையாவது உண்பது என்ற பழக்கத்திற்கு ஆளாகி ஏழெட்டு வயதிலேயே கார் டயர்களை இடுப்பில் சுமக்கும் ‘ஒபிசிட்டர்’களாக மாறுவதைப் பார்க்கிறோம்.

நம்மைப்போல, ‘நேற்று உண்ட உணவில் இன்ன சுவை பிடித்திருந்தது. இன்றைக்கும் அதையே உண்ண வேண்டும்’ என்று புற அறிவின் வழியாகச் சுவையைத் தேர்வு செய்வதில்லை குழந்தை. நாம் அளிக்கிற வாய்ப்பில் இருந்து மட்டுமே உடலின் தேவையைப் பொறுத்துச்  சுவையைத் தேர்வு செய்கிறது.  குழந்தை உணவில் நாம் தனித்த கவனம் செலுத்துவதில்லை. ஒன்று, பெரியவர்களுக்குச் சமைக்கும் உணவையே எடுத்து மிக்ஸியில் இட்டு அரைத்துத் திணிப்பது அல்லது ‘95 சதவிகிதம் டாக்டர்கள் உங்கள் குழந்தைகளுக்குப் பரிந்துரைக்கிற ஊட்டச்சத்து’ டப்பா பவுடர்களை வாங்கி வெந்நீரில் ’டக..  டக’-வென்று ஒரு பேஸ்ட் தயாரித்துக் குழந்தையின் கண்ணில் நீர் பொங்கப் பொங்கத் திணித்துவிட்டு, ‘அப்பாடி கடமை முடிந்தது’ என்று கிண்ணத்துடன் நமது பொறுப்பையும் கழுவிக் கவிழ்த்து விடுகிறோம். 

உடலின் அடிப்படைக் கட்டுமானம் வளரும் கட்டத்தில் உள்ள குழந்தை உணவும், கட்டுமானம் முழுமை பெற்ற பெரியவர்கள் உணவும். ஒருபோதும் ஒன்றாக இருக்க முடியாது. உணவின் சுவை, அதன் ஊடுபாவு (texture), செரிக்கும் பண்பு போன்ற அனைத்தும் வேறு வேறாகத்தான் இருக்கும். பால் பற்கள் வலுப்பெறாத ஒன்றிலிருந்து மூன்று வயது வரை இளம் கெட்டித்தன்மை (semi solid) உள்ள உணவையே அளிக்க வேண்டும். அது மிதமான சுவைகளை உள்ளடக்கி இருக்க வேண்டும். அதிலும் சதை வளர்ச்சிக்கு உதவும் இனிப்புச் சுவை முதன்மையாக இருக்க வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு வேளை உணவிலும் பால் வாசம் இதமாக இழையோடி இருக்க வேண்டும். மாவுத்தன்மையும், புரதத்தன்மையும் உடைய பருப்பும் அடிநாதமாக இருக்க வேண்டும்.

உணவுக் குழல், வயிறு, சிறுகுடல், பெருங்குடல் ஆகிய உணவுப் பாதையினுள் வழுக்கிச் செல்லும் கொழுப்புத் தன்மையுள்ள வழவழப்பான நெய் அல்லது வெண்ணெய், பொருளாதாரம் இடந்தராத நிலையில் தரமான (செக்கில் ஆட்டிய) நல்லெண்ணெய் போன்றவை முழு மனதோடு கூட்டணி அமைத்துக் களமிறங்க வேண்டும். இத்தகையச் சத்தும் சுவையும் ஒரு சேர அமைந்தது தான் இரண்டு தலைமுறைக்கு முன்னர் நமது பெற்றோர் நமக்கு ஊட்டிய நிலாச்சோறு.
காட்டு வேலை முடித்து வீடு திரும்பியதும், முதல் வேலையாக உரலில் இட்டுக் குற்றி உலையில் போட்டு, இதமான சூட்டில் பதமாக மலரவிட்டு அரிசிச் சோறு வடிப்பார்கள். வடித்த சோற்றைக் கிண்ணத்தில் ஆறப் போட்டுவிட்டு, வடித்த கஞ்சி நீரில் உப்புப் போட்டு ஆற்றி, வளர்ந்த பிள்ளைகளின் பசியாறக் கொடுத்து விடுவார்கள். இன்னோர் அடுப்பில் குழம்புக்கு வெந்துகொண்டிருக்கும் பருப்பு மலர்ந்ததும் பருப்பை மட்டும் அரிந்தெடுத்துச் சோற்றுடன் சேர்ப்பார்கள். ஆவி அடங்கியதும் தளர நெய் விட்டு துளியூண்டு உப்பிட்டுப் பருப்புக்கோ, சோற்றுக்கோ வலிக்காமல் மையப் பிசைவார்கள். அந்தச் சோற்றில் குழந்தையின் செரிமானத்திற்கு ஏற்ற சத்துகளும் மென்மையான நாவின் சுவை மொட்டுகளுக்கு உகந்த சுவையும் சரி விகிதத்தில் கலந்திருக்கும். அதற்கு மேலாகப் பிசைந்த விரல்களின் தாயன்பு அந்த உணவின் ஒவ்வோர் இம்மியிலும் படர்ந்திருக்கும். பருப்பும் நெய்யும் கலந்து பிசைந்த சோற்றின் வாசம், வளர்ந்த பிள்ளைகளின் பசியைத் தூண்டி, குழந்தைக்கு ஊட்டும் சோற்றின மீது ஏக்கத்தைத் தூண்டக் கூடாது. அவ்வாறு தூண்டப்பட்டால் ஏக்கமுற்ற சோறு, குழந்தைக்கு முழுமையான பலனைத் தராது என்ற உளவியல் சிந்தனையோடுதான் வளர்ந்த பிள்ளைகளின் வயிற்றை, வடித்த கஞ்சி நீரால் நிரப்பிவிட்டிருக்கிறார்கள்.

இன்றைக்குப்போல், ‘எங்கும் அரிசி, எதிலும் அரிசி’ என்று உணவில் அரிசி பேராதிக்கம் செலுத்தாத காலம் ஒன்று இங்கு இருந்தது. ஒன்றை ஒன்று சினேகபாவத்துடன் ஒன்றின் முகத்தை ஒன்று பார்த்துக்கொண்டு தெருக்களாகப் படர்ந்து இருந்தன வீடுகள். அந்தக் காலத்தில் அனேக வீடுகளுக்குக் கதவுகளே இருந்ததில்லை. மனங்களும் ஒன்றில் இருந்து ‘apart’ ஆகாமல், திருகிக்கொண்டு நிற்காமல் சமூகப்பிணைப்பு கொண்டிருந்தன. நெல்லுச்சோறு வடிக்கும் வசதியுள்ளவர்கள், சோறு வடித்ததும் முதல் வேலையாகப் பொறுப்பு உணர்வுடன் கிண்ணத்தில் சோறும், பருப்பும், நெய்யும் ஊற்றி அரிசிச் சோறு வடிக்காத குழந்தையின் வீட்டிற்குக் கொடுத்தனுப்புவார்கள். நெல்விளைச்சலே அறுகிக்கொண்டு வந்தாலும் இந்நாளில் கப்பலிலோ, ரயிலிலோ, பாக்கெட்டிலோ, ரேசனிலோ அரிசி வீடுவந்து சேர்ந்துவிடுகிறது. ஆனால், நம் குழந்தைகளுக்குத்தான் சத்தான உணவு கிடைப்பதில்லை.

அரிசி, நம் காலத்தில் இத்தனை பரவலாகி விட்டது. ஆனால், மண்ணின் இயற்கையான தாதுச்சத்துகளுடன் அரிசி விளைவிக்கப் படுவதில்லை. உரமும் பூச்சி மருந்துகளும் நெல்மணியின் மூல ஆற்றலைச் சிதைப்பது ஒருபுறமிருக்க நம் கைக்குக் கிடைத்த அரிசியில் உள்ள சத்துகளை நம் கை வண்ணத்தால் மேலும் ஒருமுறை சிதைக்கிறோம். குக்கரில் இட்டு அழுத்தம் கொடுத்து, மிரட்டி வேகவைக்கிறபோது மலர்ந்து வேகாமல் அழுத்தத்தில் வேகும் அரிசியின் சத்து சிதைக்கப்படுகிறது.

குக்கர் ஒரு பக்கம் சோற்றின் சத்துகளைச் சிதைக்க, குழந்தை உண்ணும் பதத்திற்குச் சோற்றை மசிக்கிறேன் என்று மிக்ஸியில் இட்டு மேலும் ஒருமுறை சிதைக்கிறோம். அன்னையின் கை படாத சோறு, எப்படிக் குழந்தைக்கு உயிரின் ஆதாரமான அன்பைக் கொடுக்கும்? அன்னையின் விரல்கள், சோற்றைப் பிசையும் வெறும் இன்ஸ்ட்ருமென்ட் அல்ல. ஐந்து விரல்களும் நெருப்பு, நிலம், காற்று, நீர், ஆகாயம் எனும் ஐம்பெரும் பூத ஆற்றல்களின் குறு வடிவம். அவை ஆறு சுவைகளின் ஊற்று. குழந்தைக்குக் கரண்டியால் ஊட்டுகிறபோது, உணவில் உள்ள ஆற்றலின் மிகக் குறைந்த சதவிகிதமே கிடைக்கிறது. தாயின் கைப்பட ஊட்டுகிறபோது அந்த உணவில் சத்துக்குறை இருந்தாலும் ஐம்பூதங்களின் ஆற்றல் அக்குறைபாட்டை ஈடு செய்கிறது. நமக்குக் கிடைக்கும் அரிசியில் இருந்து குழந்தைக்கு எப்படிச் சத்தான உணவு அளிப்பது என்பதை அடுத்த இதழில் பார்க்கலாம். முடிந்தால், சிவப்பரிசி எனும் கவுனி அரிசி எனும் புட்டரிசியை, அல்லது இயற்கை முறையில் விளைந்த ஏதேனும் ஓர் அரிசியுடன் காத்திருங்கள். 

நிலாச்சோறு ஊட்டுவோம்...

No comments:

Post a Comment