Sunday, December 17, 2017

குடும்பமே இங்கிருக்கு! thanks to d inamalar.com

Advertisement

பதிவு செய்த நாள்

12நவ
2017 
00:00
சனீஸ்வரன் என்ற சொல்லைக் கேட்டாலே, அடித்துப் பிடித்து ஓடுவர்; ஆனால், கும்பகோணம் அருகிலுள்ள திருநரையூர் கிராமத்தில் இருக்கும் சனீஸ்வரர், தன் குடும்பத்துடன், அனுக்கிரக சனியாக அருள்பாலிக்கிறார். இவருக்கு, ஆகமவிதிப்படி, கொடி மரம் அமைந்துள்ளது.
கும்பகோணத்தில் இருந்து, 9 கி.மீ., துாரத்தில் உள்ளது, நாச்சியார்கோவில். இங்கிருந்து பிரியும் சாலையில், 1 கி.மீ., துாரத்தில் உள்ளது, திருநரையூர். இவ்வூரில் உள்ள ராமநாத சுவாமி கோவிலில், மூலவருக்கு பலி பீடமோ, கொடி மரமோ கிடையாது. ஆனால், சனீஸ்வரருக்கு தனி சன்னிதியுடன், பலி பீடமும், கொடி மரமும் உண்டு. சிவன் சன்னதி முன் நந்தி இருப்பது போல், சனீஸ்வரர் சன்னிதி முன், காக வாகனம் இருக்கிறது.
சனீஸ்வரர் தன் இரு துணைவியரான மந்தா தேவி, ஜேஷ்டா தேவியுடன் அருள்பாலிக்கிறார். அத்துடன், இவர்களது மகன்களான குளிகன், மாந்தி ஆகியோரும் இங்கிருக்கின்றனர். இவர்களை வணங்கிய நிலையில், காட்சியளிக்கிறார், தசரதர்.
தமிழக தென் மாவட்டங்கள் மற்றும் கேரளா மக்கள் ஜாதகம் எழுதும் போது, மாந்திக்கு முக்கியத்துவம் தருவர். மாந்தி தோஷம் உள்ளோர், இங்கு வந்து மாந்திக்கு அர்ச்சனை செய்து, நிவாரணம் பெறுகின்றனர். நவக்கிரக மேடையின் நடுவே, சனீஸ்வரருடைய தந்தை சூரிய பகவான், தன் மனைவியர் உஷா தேவி மற்றும் பிரத்யுஷா தேவியுடன் காட்சி அளிக்கிறார்.
தசரத சக்கரவர்த்தி தனக்கு ஏற்பட்ட நோய் தீர, இத்தலத்துக்கு வந்ததாகவும், இங்குள்ள புண்ணிய தீர்த்தத்தில் நீராடி, சனி பகவானை வழிபட்டு நிவாரணம் பெற்றதாகவும் தல வரலாறு கூறுகிறது. 
ராமபிரான், ராவணனை வதம் செய்து, அயோத்தி திரும்பும் போது, தந்தை வழிபட்ட இத்தலத்திற்கு வந்து நீராடி, மண்ணால் லிங்கம் செய்து வழிபட்டுள்ளார். அத்துடன், இக்கோவிலின் சிறப்பை அறிந்த அனுமனும் சிவ வழிபாடு செய்துள்ளார். அதற்கு சான்றாக இவ்வாலயத்தின் பிரகாரத்தில் அனுமந்த லிங்கமும், மூலஸ்தானத்தில் ராமர் வழிபட்ட ராமநாத சுவாமியும் அருள்கின்றனர். இவர்களுடன் பர்வதவர்த்தினி அம்மன் காட்சி தருகிறாள்.
சோழர்களால் கட்டப்பட்டது, இக்கோவில். வரும், டிசம்பர் 19ல், சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து, தனுசு ராசிக்கு இடம் பெயர்கிறார். இப்பெயர்ச்சி காலத்தில், ஏழரை சனி நடக்கும் விருச்சிகம், தனுசு, மகரம் ராசியினரும், அஷ்டமத்து சனி ஆரம்பிக்கும் ரிஷப ராசியினரும், இக்கோவிலுக்குச் சென்று, தங்களுக்கு பாதிப்பு ஏற்படா வண்ணம் இருக்க, குடும்ப சனீஸ்வரரின் அருள் பெற்று வரலாம்!

No comments:

Post a Comment