Sunday, December 31, 2017

அரவணைப்பில் சுரக்கும் அன்பு ஹார்மோன்கள்! thanks to vikatan.com


அரவணைப்பில் சுரக்கும் அன்பு ஹார்மோன்கள்!

ஹெல்த்
ஜெனிஃபருக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள். மூன்றாவதாக ஜேட் பிறந்தாள். குறைப்பிரசவம்; குழந்தையின் எடையும் குறைவு. 1 கிலோ 360 கிராம். சிசுக்களுக்கான இன்டென்ஸிவ் கேர் யூனிட்டில் குழந்தையை வைத்துவிட்டார்கள். பிரசவம் முடிந்து அம்மாவை டிஸ்சார்ஜ் செய்தாலும், குழந்தையைக் கொடுக்கவில்லை. 
எல்லா நேரமும் தாயின் அரவணைப்பு தேவைப்படும் ஒரு பச்சிளம் சிசுவைப் பிரிந்து எப்படி இருப்பது? இந்தக் குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டும்; வீட்டிலிருக்கும் மற்ற இரண்டு குழந்தைகளையும் பார்த்துக்கொள்ள வேண்டும். தவித்துப்போனார் அவர். 

அப்போது ஷெர்ரி என்ற பெண் உதவிக்கு வந்தார். இன்டென்ஸிவ் கேரில் இருக்கும் குழந்தை அழும்போதெல்லாம், ஷெர்ரி ஓடிவருவார். குழந்தையை அரவணைத்து ஆறுதல் சொல்வார்.
 
பச்சிளம் குழந்தையாகப் பிறந்த நிமிடத்திலிருந்து இந்த மானிடப் பிறவிக்கு அன்பான அரவணைப்பும், ஆறுதலான ஸ்பரிசமும் தேவைப்படுகிறது. ‘உனக்காக நான் இருக்கிறேன்’ எனத் தோள் தொட்டுச் சொல்லும் ஒற்றை வாசகம், எந்தத் துன்பத்திலிருந்தும் மீண்டெழச் செய்துவிடும். எப்படிப்பட்ட வலியையும் மறக்கடித்துவிடும். வளர்ந்த மனிதர்களுக்கே இதெல்லாம் தேவைப்படும்போது, குழந்தைகள் எதிர்பார்க்க மாட்டார்களா?

கனடா நாட்டின் குழந்தை மருத்துவமனைகள் இணைந்து ‘No Baby Unhugged’  என்ற திட்டத்தை 2015-ம் ஆண்டு அறிமுகம் செய்தன. ‘அம்மாக்கள் அருகில் இல்லை என்ற காரணத்துக்காக எந்தக் குழந்தையும் தாயின் அரவணைப்பை இழந்துவிடக்கூடாது’ என்பதற்காக உருவாக்கப்பட்டத் திட்டம் இது. இந்தத் திட்டத்தின்கீழ் தேர்வு செய்யப்பட்ட தன்னார்வலர்கள், எல்லா மருத்துவமனைகளிலும் இருப்பார்கள். குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தைகள், தாயற்ற குழந்தைகள் என மருத்துவமனைகளில் இருக்கும் குழந்தைகள் அழும்போது, இவர்கள் ஓடிவந்து தூக்குவார்கள். குழந்தையை அரவணைத்து, அம்மாவின் மடியில் இருப்பது போன்ற கதகதப்பைத் தருவார்கள். ஷெர்ரி அவர்களில் ஒருவர்தான்! 

‘அன்னையின் அரவணைப்பில் இருக்கிறோம்’ என்ற நினைப்பே பல மாயங்களை நிகழ்த்த வல்லது. குழந்தையின் இதயத்துடிப்பு சீராகும், நல்ல தூக்கம் வரும், வலி குறையும். இப்படிப் பல மருத்துவப் பலன்கள் கிடைப்பதை நூற்றுக்கணக்கான ஆய்வுகள் நிரூபித்துள்ளன. கனடா நாட்டின் குழந்தை மருத்துவமனைகள் அமைப்பு செய்த ஓர் ஆய்வு, ‘தொடுதலும் அரவணைப்பும் குழந்தையின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன. சீக்கிரமே எடை அதிகரிக்கிறது. மனவளர்ச்சியும் வேகம் அடைகிறது. நேசிக்கும் ஒருவரின் ஸ்பரிசம் கிடைத்ததும், சருமத்தில் இணையும் நரம்பின் முனைகள் தூண்டப்படுகின்றன. இதைத் தொடர்ந்து உடலில் எண்டோர்பின், ஆக்சிடோஸின், செரடோனின் ஆகிய ஹார்மோன்கள் அதிகம் சுரக்கின்றன. ‘அன்பு ஹார்மோன்கள்’ என அழைக்கப்படும் இவை, உடலுக்கு உற்சாகம், இதம், நிம்மதி எனச் சகல சந்தோஷ உணர்வுகளையும் தருகின்றன. 

குழந்தைகளுக்கு மட்டும்தானா இது? ‘‘குழந்தைகளைவிடப் பெரியவர்கள்தான் அரவணைப்பை அதிகம் எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு அரவணைக்கத் தோள் மட்டுமில்லை, தங்கள் கஷ்டங்களைச் சொல்லி அழுவதற்குக் காதுகளும் தேவைப்படுகின்றன’’ என்கிறார் மேரிலின் ரீட். ‘Cuddlery’ என்ற பெயரில் கனடாவில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார் இவர். இந்த நிறுவனத்தின் சேவையைப் பற்றிச் சொன்னால், நீங்கள் ஆச்சர்யப்படுவீர்கள். துன்பத்தில் தவிக்கும் யார் வேண்டுமானாலும் இந்த நிறுவனத்துக்கு போன் செய்து, ‘எனக்கு இப்போது ஆறுதல் தேவைப்படுகிறது’ என்று சொல்லலாம். உடனடியாகத் தங்கள் நிறுவனத்தில் இணைந்துள்ள ஒரு தன்னார்வலரின் முகவரியைக் கொடுப்பார்கள். அங்கு போக வேண்டும். ஏதோ நெருக்கமான உறவை வரவேற்பது போல அங்கே வரவேற்பார்கள். அன்பாக அரவணைத்து, கஷ்டங்களைக் கேட்பார்கள். தீர்வு தருவார்கள். கண்ணீர் விட்டால் துடைத்துவிட்டு, ஆறுதல் வார்த்தைகள் சொல்வார்கள். எந்தக் கஷ்டமும் இன்னொருவருடன் பகிர்ந்துகொண்டால் லேசாகிவிடும்தானே! அப்படி ஓர் உணர்வு உடனடியாகக் கிடைக்கும்.  
என்ன... நம் உறவினர் என்றால் இதை இலவசமாகச் செய்வார். இங்கே கட்டணங்கள் உண்டு. அரை மணி நேரத்துக்கு 49 டாலர் கட்டணம்; வெறுமனே தொட்டு, கைகுலுக்கி, வார்த்தைகளால் ஆறுதல் சொல்லத்தான் இந்தக் கட்டணம். கட்டிப் பிடித்து ஆறுதல் சொல்ல இன்னும் 19 டாலர் கட்ட வேண்டும். மாணவர்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு 30 சதவிகிதச் சலுகை உண்டு. என்ன உடை அணிந்திருக்க வேண்டும், எப்படிப் பண்போடு பேச வேண்டும் என விதிகள் உண்டு.

‘‘அக்கறை காட்டுபவர்களாவும், அன்பாகப் பேசுகிறவர்களாகவும் பார்த்துப் பார்த்துத் தேர்வு செய்கிறோம். அதனால் பல நகரங்களில் எங்கள் சேவை இப்போது விரிவடைந்துள்ளது’’ என்கிறார் மேரிலின் ரீட். அரவணைத்துத் தோள்கொடுக்க ஓர் ஆள் கிடைத்தால், இரும்பு மனிதர்களின் இதயங்களிலிருந்துகூட ஈரம் சுரக்கும். மின்கம்பியைத் தொட்டால் மின்சாரம் பாய்வது போல, நம்மை நேசிப்பவர்கள் விரல் தொட்டால், அரவணைத்தால், உடலுக்குள் உற்சாகம் பாய்வதை பலரும் உணர்ந்திருக்கக்கூடும். சிலர் இருக்கிறார்கள்... புதிதாக அறிமுகமாகும் மனிதர்களிடம்கூட விரல்பிடித்துப் பேசுவார்கள். அக்கறையோடு நலம் விசாரிப்பார்கள். இப்படிப்பட்டவர்கள் சட்டென மனதுக்கு நெருக்கமாவார்கள். எல்லாம் ஹார்மோன்கள் செய்யும் மாயம்தான். 

‘வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்’ படத்தில் கமல்ஹாசன் சொல்லும் ‘கட்டிப்பிடி வைத்தியம்’தான். ‘தினம் ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போகவேண்டிய அவசியமில்லை’ என்பது போல, ‘அன்பானவர் தினம் ஒருமுறை அரவணைத்தால், டாக்டரிடம் போக வேண்டியதில்லை’ என்று அடித்துச் சொல்கிறார்கள். அந்த அரவணைப்பு, ‘நமக்கு என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளவும் தோள்கொடுக்கவும் இவர் இருக்கிறார்’ என்ற நம்பிக்கையைக் கொடுக்கிறது. 

பெண்கள் தங்கள் வாழ்வில் எதிர்கொள்ளும் மிக மோசமான பருவம், மெனோபாஸ். உடல்ரீதியாக இனம்புரியாத பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். எப்போதும் கோபமே கொள்ளாத பெண்கள்கூட அந்த நேரத்தில் வீட்டில் எல்லோர்மீதும் எரிந்துவிழுவார்கள். அமெரிக்காவின் வடக்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் 2015-ம் ஆண்டு ஓர் ஆய்வு செய்தார்கள். ‘கணவர் அடிக்கடி அன்பாக அரவணைப்பதும், ஆறுதல் வார்த்தைகள் சொல்வதுமாக மெனோபாஸ் பருவத்தைக் கடந்த பெண்கள், மற்ற பெண்களைவிட குறைவான பிரச்னைகளைச் சந்தித்தார்கள். அவர்களுக்கு ரத்த அழுத்தமும் இயல்பாக இருந்தது’ என்கிறது இந்த ஆய்வு முடிவு.

கஷ்டமான ஒரு தேர்வு, சிக்கலான ஓர் அறுவை சிகிச்சை, ஆபத்தான ஒரு பயணம்... எதற்கு முன்பாகவும் அன்பானவர் அரவணைத்து தைரியம் சொன்னால், எதையும் எதிர்கொள்ளும் உறுதி கிடைக்கிறது. மருத்துவமனையில் மரணப்படுக்கையில் இருக்கிறார் அந்த முதியவர். கண்களை மூடியபடி ஏதேதோ தொடர்பில்லாமல் பிதற்றிக்கொண்டிருக்கிறார். அவர் மனைவி, மகன், மகள் என எல்லோரும் சுற்றியிருக்கிறார்கள். டாக்டர் வந்து பார்த்துவிட்டு, உதட்டைப் பிதுக்கினார். ‘‘யாருக்காவது சொல்ல வேண்டியிருந்தா சொல்லிடுங்க’’ என்று அட்வைஸ் கொடுத்துவிட்டுப் போய்விட்டார்.

மகனுக்கு அப்பாவைப் பார்க்கப் பார்க்கக் கண்ணீர் பொங்குகிறது. யோசித்துப் பார்க்கிறார், ‘கடைசியாக எப்போது அழுதோம்’ என நினைவில்லை. அவருக்கே திருமணமாகி, கல்லூரி போகும் வயதில் பிள்ளைகள் இருக்கிறார்கள். வேலைக்காக வெளியூர் போய், பல ஆண்டுகளாக அப்பாவைப் பிரிந்து வாழ்க்கை. எப்போதாவது செல்போன் பேச்சுகள் தவிர அப்பாவோடு எந்தத் தொடர்பும் இல்லை. அவரோடு சாதாரணமாக உட்கார்ந்து பேசியே பல ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தன.  சின்ன வயதில் தன் தோளில் தூக்கிக்கொண்டு கடைத்தெருவுக்குப் போனதும், சைக்கிள் கற்றுக்கொடுத்ததும் இப்போது ஞாபகத்துக்கு வந்தது. வளர்ந்தபிறகு, அப்பாவின் விரல் பிடித்து நடந்த இடத்திலிருந்து விலகி வெகுதூரம் வந்துவிட்டோம் என்பது புரிந்தது. கடைசியாக எப்போது அப்பாவைத் தொட்டுப் பேசினோம் என்பதே நினைவில் இல்லை.

நெருங்கி அப்பாவின் கைகளைப் பிடித்துத் தன் கைகளுக்குள் வைத்துக்கொண்டார். தாய்க்கோழி தன் குஞ்சுகளைச் சிறகுகளுக்குள் கதகதப்பாகப் பொத்தி வைப்பது போன்ற பிணைப்பு. சில நிமிடங்களில் அப்பாவின் பிதற்றல் நின்றது. கொஞ்ச நேரத்தில் அப்பா கண்களைத் திறந்து பார்த்தார். மகனுக்கு லேசாக நம்பிக்கை துளிர்த்தது. ‘‘அப்பா! எங்களைவிட்டு நீங்க எங்கேயும் போக மாட்டீங்க. நாங்க இருக்கோம். உங்களை விட்டுட மாட்டோம்’’ என அவர் காதருகே போய்ச் சொன்னார். அன்று முழுக்க எவ்வளவு நேரம் அப்பாவின் கரம் பற்றி இருந்தார் என்பது தெரியவில்லை. இரவு வீட்டுக்குத் திரும்பும்போது, படுக்கையில் குனிந்து அப்பாவை அரவணைத்துவிட்டு எழுந்தார். மனதின் ஆழத்தில் எங்கோ ஓரிடத்தில் பல நாள்களாகப் பூட்டியிருந்த கதவைத் திறப்பது போன்ற உணர்வு எழுந்தது. அப்பாவுக்கும் இது இருந்திருக்கும் என நினைத்தார்.

அடுத்தடுத்த நாள்களிலும் இது தொடர, ஒரே வாரத்தில் அப்பா எழுந்து உட்கார்ந்து பேச ஆரம்பித்தார். எப்படியும் அவர் குணமாகி வீட்டுக்கு வந்துவிடுவார்.

உங்கள் விரல்நுனி பல மாயங்களைச் செய்யக்கூடியது. அன்பெனும் மாயச்சாவி அதற்குள் இருக்கிறது. இறுகியிருக்கும் இதயங்களைத் திறக்க இதைப் பயன்படுத்துங்கள்.

- தி.முருகன்

கட்டிப் பிடி மருத்துவம்!

‘அரவணைப்பும் ஸ்பரிசமும் கட்டிப் பிடிப்பதும் பல மகத்தான பலன்களைத் தரும்’ என ஆராய்ச்சிகள் சொல்கின்றன.

மகிழ்ச்சி: ‘‘விருப்பமானவர்களின் ஸ்பரிசம், நம் மனதை மகிழ்ச்சியால் நிரப்புகிறது. அந்த அரவணைப்பில் ஆக்சிடோஸின் ஹார்மோன் நம் உடலில் சுரக்கிறது. அது மனதுக்கு மகிழ்ச்சியும், உடலுக்கு உற்சாகமும் தருகிறது’’ என்கிறார் மனநல மருத்துவர் எலிசபெத் லம்பார்டோ. கட்டிப் பிடிக்கும்போது எண்டோர்பின் என்ற வேதிப்பொருளும் அதிகம் சுரக்கிறது. நிறைவாக உடற்பயிற்சி செய்தாலோ, விரும்பி சாக்லேட் சாப்பிட்டாலோ இது சுரக்கும். மனமகிழ்ச்சிக்கு இதுவும் காரணமாகிறது. 
செக்ஸி: அரவணைப்பின்போது, உங்கள் வாழ்க்கைத்துணையின் கண்களுக்கு நீங்கள் மிகவும் செக்ஸியாகத் தெரிவீர்கள். டோபமைன் ஹார்மோன் அந்த நேரத்தில் அதிகம் சுரக்கிறது. இது பரவசத்தை அதிகரித்து, இருவருக்கும் வேட்கையைத் தூண்டுகிறது. ஆரோக்கியமான தாம்பத்யம், உடலையும் மனதையும் கச்சிதமாக வைத்திருக்கும். 

இதய நோய் வராது: ஸ்ட்ரெஸ் மேனேஜ்மென்ட் சிகிச்சை தரும் நிபுணரான கேத்தரின் கானர்ஸ், ‘‘கட்டிப் பிடிப்பதும், முத்தம் கொடுப்பதும், இன்னும் இதுபோன்ற தொடுதல்களும், நம் உடலில் ஆக்சிடோஸின் ஹார்மோன் அளவை அதிகமாக்குகின்றன. நெருக்கமானவர்களோடு இது பிணைப்பை ஏற்படுத்துகிறது. அது மட்டுமில்லை... இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது. அதன் விளைவாக இதய நோய்கள் வருவதில்லை. பதற்றமும் மன அழுத்தமும்கூட குறைகிறது’’ என்கிறார். 

பாசப்பிணைப்பு: அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள பாய்லர் மருத்துவக் கல்லூரியில் ஓர் ஆய்வு செய்தார்கள். ‘ஆக்சிடோஸின் ஹார்மோன் என்பது குழந்தை பிறப்போடும், தாய்ப்பால் கொடுப்பதோடும் தொடர்புடைய ஒன்று. தாய்க்கும் குழந்தைக்கும் பாசப்பிணைப்பு ஏற்படுத்தவும் இந்த ஹார்மோன் உதவுகிறது’ எனச் சொல்கிறது இந்த ஆய்வு. ‘பெற்றோரோடு ஒட்டுதல் இல்லாமல் வளரும் பெண்கள், தங்கள் குழந்தைகளிடமும்கூட நெருங்கத் தயங்குகிறார்கள். இதுபோன்ற சூழலில், இந்த ஹார்மோன்தான் பிணைப்பை உருவாக்குகிறது’ என்கிறார் இந்த ஆய்வைச் செய்த டாக்டர் லேன் ஸ்ட்ராதியர்ன். 

சண்டை குறைகிறது: தாம்பத்ய உறவுக்காக உடலால் நெருங்குவது வேறு. மற்ற நேரங்களிலும் தம்பதிகள் மத்தியில் ஸ்பரிசமே இல்லாமல் இருந்தால், அடிக்கடி சண்டை வருமாம். சிகாகோவில் இருக்கும் திருமண தெரபிஸ்ட் டேவிட் க்ளோ, ‘‘செக்ஸ் உணர்வோடு இல்லாமலும் சாதாரணமாகத் தொட்டுப் பேசிக்கொள்வது நெருக்கத்தை ஏற்படுத்தும். வெறும் வார்த்தைகளால் மட்டுமே ‘நான் உன்மீது அன்பாக இருக்கிறேன்’, ‘உன் வலிகளைப் புரிந்துகொள்கிறேன்’ எனச் சொல்வது போதாது. வார்த்தைகளைத் தாண்டிய தகவல்தொடர்பு சாதனமாக உடலே இருக்கிறது. ஒரு தொடுதலில், ஓர் அரவணைப்பில் ஆயிரம் வார்த்தைகளை நிரப்பிவிடலாம்’’ என்கிறார். 

தூக்கம் வருகிறது: கட்டிப் பிடித்தால் சீக்கிரமே தூங்க முடிகிறதாம். சொகுசான படுக்கை, இதமான சூழல் எனத் தூங்குவதற்கு ஏற்ற எல்லா சூழல்களும் இருந்தாலும், பலருக்குப் படுத்ததுமே தூக்கம் வருவதில்லை. நேசம் மிகுந்த வாழ்க்கைத்துணையுடன் தூங்கும்போதோ, தாயின் அரவணைப்பில் குழந்தை தூங்கும்போதோ, ஒரு பாதுகாப்பு உணர்வு வருகிறது. ஆக்சிடோஸின் சுரப்பதால், மன அழுத்தம் குறைந்து நிமம்தியான உறக்கம் வருகிறது. 

நோயை எதிர்க்கிறது: கட்டிப் பிடிக்கும்போது ஆக்சிடோஸின் மட்டுமே சுரப்பதில்லை. ‘மகிழ்ச்சி ஹார்மோன்’ என அழைக்கப்படும் செரடோனின் அளவும் அதிகரிக்கிறது. 2014-ம் ஆண்டு அமெரிக்காவின் கார்னெகி மெல்லன் பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வு செய்தார்கள். ‘அடிக்கடி கட்டிப் பிடிப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. ஜலதோஷ வைரஸ் மற்றவர்களைத் தொற்றுவது போல இவர்களை அதிகம் தொற்றுவதில்லை. அப்படியே தொற்றினாலும், நோயின் தீவிரம் அந்த அளவுக்கு இருக்காது’ எனச் சொன்னது அந்த ஆய்வு முடிவு. 

பயம் போகிறது: நெதர்லாந்தின் புகழ்பெற்ற உளவியல் ஆய்வாளர் சாண்டெர் கூல் தலைமையில் நடந்த ஓர் ஆராய்ச்சியில், ‘அரவணைப்பும் தொடுதலும் பயத்தைக் குறைத்துத் தன்னம்பிக்கையை வளர்க்கிறது. கவலைகளைக் குறைத்து நீண்ட காலம் வாழச் செய்கிறது’ என்று தெரிய வந்துள்ளது. ‘‘மனிதர்களைத்தான் அரவணைக்க வேண்டும் என்பதில்லை. டெடி பியரைக் கட்டிக்கொண்டு தூங்கும்போதுகூட குழந்தையின் பயம் போய்விடுகிறது. ஏதோ ஒன்றின்மீதான நம்பிக்கையோடு நிகழும் ஸ்பரிசம், வாழ்க்கைமீதான பிடிமானத்தை அதிகரிக்கிறது’’ என்கிறார் சாண்டெர் கூல்.

No comments:

Post a Comment