Sunday, December 17, 2017

நேரிடையாகவே சொல்லியிருக்கலாமே! thanks to dinamalar.com

Advertisement

பதிவு செய்த நாள்

29அக்
2017 
00:00
'நீ ஏன் அவர்கிட்ட போய் சொல்றே... எங்கிட்டயே நேரடியா சொல்லியிருக்கலாம்ல...' இந்தக் குற்றச்சாட்டு வீசப்படாத நபர்கள், நம்மில், மிகக்குறைவு.
முகத்திற்கு முன் ஒன்று, முதுகிற்குப் பின் வேறாக பேசுகிற குணம் நம்முள் எப்படி வளர்ந்தது...
உரியவர்களின் முகத்திற்கு நேரே இதைச் சொன்னால், அதை, அவர் எப்படி எடுத்துக் கொள்வாரோ, உறவில், நட்பில் விரிசல் விழுந்து விடுமோ என்கிற தயக்கம் மற்றும் ஐயப்பாடுகளும் ஒரு காரணம்.
ஒருவரிடம் நேரிடையாகவே ஒன்றைச் சொல்லும்போது, அவர் பதிலுக்கு ஏதும் சொல்லி விட்டால், அதற்கான பதில், நம்மிடம் இல்லாமல் போய் விடலாம் என்கிற அச்சம், அடுத்த காரணம்.
மேலும், குறை சொல்லி, புலம்பித் தீர்த்து, பாரத்தை யாரிடமாவது கொட்ட மாட்டோமா என்கிற உணர்வு தான், நம்மிடம் அதிகமாக இருக்கிறதே தவிர, தீர்வு காண்பதிலோ, உரியவர்களை மாற்ற வேண்டும் என்பதிலோ, அக்கறை செல்வது இல்லை.
இதுமட்டுமல்ல, பிறர் நமக்காக அனுதாபப்பட வேண்டும்; நமக்கு சமாதானம் சொல்ல வேண்டும் என்பதிலோ தான், நம் கவனம் இருக்கிறது.
பிறரை, குற்றச்சாட்டு மூலையில் நிறுத்தி விடுவதில், மகாவல்லவர்கள் என்று பிறர் நம்மை பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் கூட, உரியவர்களிடம் குறைகளைச் சொல்லாமல், பிறரிடம் சொல்வதற்குக் காரணமோ என்று, நினைக்கிறேன்.
இத்தகைய குணம் வளர்ந்ததற்கு நம்முடைய சமூகமும் ஒரு காரணம்.
ஆம்... என்னை எவரும் எதுவும் சொல்லக்கூடாது; வானத்திலிருந்து குதித்தவன் நான்; என்னைக் குறை சொல்ல, என்னை நோக்கி சுட்டு விரல் காட்ட, எவனுக்குத் தகுதியிருக்கிறது என்கிற ஆணவம், நம் சமூகத்தவருக்கு இருக்கிறது.
'இது தான் பாதை... அது முட்டுச்சந்து...' என்று உள்ளூர் சிறுவன் ஒருவன் பாதை காட்டினால், 'பொடிப்பயலே... நீ என்னடா எனக்கு வழி சொல்வது... நான் போய் முட்டுச் சந்தில் முட்டிக் கொள்கிறேன்; உனக்கென்ன வந்தது...' என்று சொல்வது அறிவுடைய செயல் ஆகுமா?
சொல்பவர்களுக்குத் தகுதி இருந்தால் தான் வாய் திறக்க வேண்டும் என்று எந்த விதியும் கிடையாது. குறைபாடுகளை எவரும் சுட்டிக் காட்டலாம்; அவர்களுடைய பின்னணிகளை ஆராய்வது கால விரயம் மட்டுமல்ல, காரியத்திலிருந்து விலகுவதும் ஆகும்.
விமான நிலைய, கன்ட்ரோல் அறையில் இருப்பவரைப் பார்த்து, 'நான் எவ்வளவு அனுபவம் வாய்ந்த, 'பைலட்' தெரியுமா... நீ என்ன எனக்கு வழிகாட்டுவது...' என்று ஒரு பைலட் மறுதலித்தால், எத்தனை கோடி நஷ்டமும், மதிப்புமிக்க எண்ணற்ற உயிர்களும் பறிக்கப்படும்!
கேட்டுக் கொள்கிற மனோபாவம் குறைந்ததால் தான், முதுகிற்குப் பின் பேச ஆரம்பிக்கின்றனர், மனிதர்கள் என்று இதை நியாயப்படுத்த முடியாது.
அதனால், முகத்திற்கு நேராக எப்படி போட்டு உடைப்பது என்பது பற்றிப் பார்ப்போம்... 
'நல்லதை யார் சொன்னாலும் அதைத் திறந்த மனசோட ஏத்துக்குவீங்கன்னு தெரியும்...' என்று, முதலிலேயே குளிர்விக்க வேண்டும். ஆம்... பாராட்டிற்குப் பிறகே, தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
அடுத்து, எதிராளியிடம் பீடிகையுடன் ஆரம்பிக்க வேண்டும். 'நான் ஒன்றைச் சுட்டிக்காட்டினால், தவறாக எடுத்துக் கொள்வீர்களா...' என்ற பாணியில் அணுக வேண்டும்.
அடுத்து, குறைகளைச் சொல்லும்போது, தயங்கித் தயங்கியே பேச வேண்டும்; சகட்டு மேனிக்கு சரளமாகப் பேசி, 'பொளந்து' கட்டக்கூடாது.
இவை எல்லாவற்றையும் விட, மிக முக்கியமான ஒன்று உண்டு... அது, முகத்திரையைக் கிழிக்கும் இச்செயலின்போது எவரும் உடன் இல்லாமல் பார்த்துக் கொள்வது மிக நல்லது!

லேனா தமிழ்வாணன்

No comments:

Post a Comment