Sunday, December 10, 2017

Posted Date : 06:00 (26/10/2017) அடல்ட்ஸ் ஒன்லி - 4 thanks to vikatan.com

பிரெஞ்சு எழுத்தாளர் அந்துவான்த் செந்த் எக்ச்பெரியால் 1943-ல் எழுதப்பட்டு 173 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட நாவலான குட்டி இளவரசன் (தி லிட்டில் பிரின்ஸ்) குழந்தை இலக்கியத்தின் மணிமகுடமாக உலக வாசகர்களால் கொண்டாடப்படுகிறது. பொதுவாகக் குழந்தை இலக்கியமென்பது குழந்தைகள் படிக்க வேண்டியது என நம்புகிறோம். ஆனால் குட்டி இளவரசன் அப்படியானதில்லை. அது குழந்தைகள் பற்றிப் புரிந்துகொள்ள, பெரியவர்கள் படிக்க வேண்டிய பேரிலக்கியம்.

மிகச் சரியான வாழ்க்கை வாழ்வதாக நம்பிக்கொண்டிருக்கும் பெரியவர்களின் வறட்டுத்தனங்கள் இந்தப் புத்தகத்தில் வரிசைப்படுத்தப் பட்டுள்ளன. அவற்றில் இந்தக் கட்டுரைக்குப் பொருத்தமான ஒன்றை இங்கே தருகிறேன்...

``வளர்ந்தவர்கள் எண்களையே விரும்புகின்றனர்... உனக்கு ஒரு புதிய நண்பர் கிடைத்ததாக நீ அவர்களிடம் சொன்னால் அது குறித்து எந்த உருப்படியான கேள்வியையும் அவர்கள் கேட்க மாட்டார்கள். உன் நண்பனின் குரல் எப்படி இருக்கும்? அவன் என்ன விளையாட்டை அதிகம் விரும்புவான்? அவன் பட்டாம்பூச்சிகளைச் சேகரிப்பானா? இப்படியெல்லாம் கேட்க மாட்டார்கள். மாறாக, அவனுக்கு என்ன வயது? அவனது எடை என்ன? அவன் அப்பா எவ்வளவு சம்பாதிக்கிறார் போன்ற கேள்விகளுக்கான பதிலை எதிர்பார்ப்பார்கள். இந்த எண்கள் வாயிலாகத்தான் உன் நண்பனைப் பற்றி அறிந்துகொள்ள முடியும் என அவர்கள் நினைக்கிறார்கள்.’’
குட்டி இளவரசன் சொல்வதுபோல, எண்களால்தான் எல்லாமே நிர்ணயிக்கப்படுகின்றன, உணர்வினால் அல்ல. நமக்கு, வாழ்க்கை என்பது வெறும் கணக்குதான். அது இலக்கியமோ, வரலாறோ, உயிரியலோ அல்ல.அதனால்தான் இவ்வளவு அலுப்பும் சலிப்பும். எவ்வளவு சம்பளம், எவ்வளவு கடன், வாழ்ந்தால் எவ்வளவு, செத்தால் எவ்வளவு, நோயில் சரிந்தால் எவ்வளவு  என அனைத்தும் எண்களில் என்றாகிவிட்டது. கனி தரும் ஒரு மரத்தை நட்டால் எத்தனை காய்க்கின்றன, காய்த்ததில் எத்தனை பழுக்கின்றன என எண்ணுகிறோம். யாரையேனும் சந்தித்தால் எத்தனை குழந்தைகள், எவ்வளவு சம்பளம் என்பதைத் தெரிந்துகொள்ள விழைகிறோம். பள்ளி என்றால் எவ்வளவு கட்டணம்? எதை எடுத்தாலும் எவ்வளவு விலை என அளக்கிறோம். உண்மைதான். நாம் ஒரு மனிதரிடமிருந்து தெரிந்துகொள்ள விரும்புவதெல்லாம் எண் சார்ந்த தகவல்களையே!

ஆறாம் வகுப்பு படிக்கும் என் மகளின் வகுப்பில் ஒரு சிறுமி இருக்கிறாள். இருவரும் நெருங்கிய தோழிகள்தான். எது சொன்னாலும், அதன் விலையோடு சேர்த்துக் குறிப்பிடுவது அவளது வழக்கம். நாங்க புதுசா ஒரு பீரோ வாங்குனோம். விலை 38 ஆயிரம் ரூபாய். தீபாவளிக்கு டிரெஸ் வாங்கினேன், மூவாயிரம் ரூபாய். வைய்ல்ட்கிராஃப்ட் பிராண்டில் பேக் வாங்கினேன், நாலாயிரம் ரூபாய்.’’ ஒரு முறை குக்கர் கையில் சுட்டு கட்டுப் போட்டிருந்த போதுகூட ட்ரீட்மென்ட்டுக்கு 2,000 ரூபாய் செலவாச்சு என்று சொல்லியிருக்கிறாள்.  அவளுக்குப் பொருளைவிடவும் அதன் விலைதான் பொருட்டு. இந்தப் பழக்கம் குழந்தைக்குத் தானாக வந்திருக்காது. பெரியவர்களின் எண் பித்து குழந்தைகளுக்குத் தொற்றியிருப்பதன் அறிகுறியே இது.

நமது மதிப்பெண் மோகத்திற்கான விதை இதில்தான் ஊன்றப்பட்டிருக்க வேண்டும். ஒரு  குழந்தையைப் பார்த்தவுடனே நமக்குத் தோன்றுகிற கேள்வி எவ்வளவு மார்க்  வாங்குகிறாய் என்பதுதான். அண்மையில் ஏதேனும் ஓவியம் வரைந்தாயா? கடைசியாக எந்த நிறத்தில் பட்டாம்பூச்சியைப் பார்த்தாய்? நீ சந்தித்த நல்ல மனிதர் பற்றி சொல்... என எந்தக் குழந்தை யிடமாவது கேட்டிருப்போமா? இங்கிலீஷ்ல எவ்வளவு, சயின்ஸ்ல எவ்வளவு, பாடத் தெரியுமா? ஆடத் தெரியுமா? கம்ப்யூட்டர்ல என்னென்ன தெரியும்? பார்க்கும் எல்லோருமே இதே கேள்வியைக் கேட்பதால் `ஓ இவ்வளவுதான் விஷயம் போல’ என அவை முடிவுக்கு வந்துவிடுகின்றன. குழந்தைகள் நம்மிடம் வேறு எது குறித்தும் உரையாடுவதை ஒரு கட்டத்தில் நிறுத்தி விடுகின்றன. பெரியவர்களுக்கான உலகில், பெரியவர்களைப் போல வாழ அவையும் பழகுகின்றன. அதுதான் சர்வைவல் விதி. பாடங்கள் தவிர்த்தோ, நம்மை மூழ்கடித்திருக்கும் நுகர்வுப் பொருள்கள் தவிர்த்தோ குழந்தைகள் எதைப் பற்றியேனும் கேட்கும்போது, வாயை மூடு எனக் கட்டளை இடுகிறோம்.

 வீட்டிலிருக்கும்போதெல்லாம் சத்தமாக வைத்து நியூஸ் சேனல் பார்ப்பது உறவினர் ஒருவரின் பழக்கம். அவரின் எட்டு வயது மகன் ‘சுவாதி கொலைச் செய்தி’யைப் பார்த்து, `ஏன்ப்பா இந்த அக்காவைக் கொன்னுட்டாங்க?’ என்று கேட்டான். அதற்கு அவர் சொன்ன பதிலைக் கேட்டு நான் உறைந்துபோனேன்... `அவ ஏதாவது தப்புப் பண்ணிருப்பா!’ என்றார். அந்தச் சிறுவன் விடாமல், `என்ன தப்புப்பா?’ என்றான். `இதெல்லாம்  பெரியவங்க விஷயம். இங்க இருந்து எழுந்து போகப் போறியா இல்லையா? நய் நய்னு கேள்வி கேட்டுட்டு. பாடப் புத்தகத்துல ஒரு டவுட்டும் வர்றதில்ல’ என்று விரட்டிவிட்டு, சேனலைப் பார்ப்பதைத் தொடர்ந்தார்.

 இந்த ஒரு சம்பவத்தின் மூலமாக அந்தச் சிறுவனின் ஆழ்மனதில் என்னவெல்லாம் பதிந்திருக்கும்? 1. இது போன்ற கேள்விகளைக் கேட்கவே கூடாது. 2. பாடப் புத்தகத்தில் வரும் விஷயம் பற்றி மட்டுமே பெற்றோரிடம் பேசலாம். 3. தப்புப் பண்ணுனா கொலை செய்யலாம்.
நாம் எந்த உள்நோக்கமும் இல்லாமலே குழந்தைகளைத் தவறாக வழி நடத்துகிறோம். குழந்தைகள் இப்படியான கேள்விகளைக் கேட்கவே கூடாதெனில், இப்படியான விஷயங்கள் அவர்களது கவனத்திற்கே வரக் கூடாது. நடுக்கூடத்தில் வைத்து ஊருக்கே கேட்கிற அளவுக்கு பிரேக்கிங் நியூஸைப் பரபரப்பாகப் பார்க்கலாம். ஆனால், குழந்தை அதைப் பார்க்கவோ, கேட்கவோ கூடாது என்றால் எப்படி? தெளிவுபடுத்தும் வேலையைப் பெற்றோர் செய்யாததால் குழந்தை தானே ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறது.

பாடப் புத்தகத்திலிருந்து மட்டுமே கல்வி கிடைக்கும் எனப் பெற்றோர் நம்புகின்றனர். உண்மையில், கல்வி என்பது என்ன? பள்ளியிலும் கல்லூரியிலும் படிப்பதா? அப்படி நினைத்து தானே குழந்தைகளை விரட்டிக் கொண்டிருக் கிறோம். நம்மில் எத்தனை பேருக்குப் படித்தவை நினைவில் இருக்கிறது? ``பள்ளியில் படிப்ப தெல்லாம் மறந்துபோன பின்னர் எது உங்களிடம் மிஞ்சி இருக்கிறதோ, அதுதான் கல்வி’’ என்கிறார் ஐன்ஸ்டீன். அப்படிப் பார்த்தால் நம் குழந்தைகளுக்கு எது மிஞ்சும்? பாடப் புத்தகங்கள் தவிர்த்து என்ன அறிவை அவர்கள் பெறுகின்றனர், என்ன அனுபவங்களை உரித்தாக்குகிறோம். நிஜமாகவே ஒன்றுமில்லை.

 சோஷியல் மீடியா காலத்துப் பெற்றோர் இன்னும் உக்கிரமாகிவிட்டார்கள். ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு வாட்ஸப் குரூப் வைத்துத் தீயாய் வேலை செய்கின்றனர். என்னுடைய எண்ணும் ஒரு குரூப்பில் இணைக்கப்பட்டுள்ளது. எப்போதாவதுதான் அதற்குள் போய்ப் பார்ப்பேன். அதில் இவர்கள் விவாதித்துக் கொள்ளுவதைப் பார்க்கும்போது படிப்புக்காகப் பள்ளிக் கூடங்களில் மூன்றாம் உலகப்போர் வரப்போகிறதோ என்ற அச்சம் உண்டாகும். தன் குழந்தை காய்ச்சலால் விடுப்பு எடுத்துவிட்டதாகச் சொல்லி அன்றாடப் பாடங்களைப் புகைப்படம் எடுத்து அனுப்புங்கள் என ஒரு தாய் கதறிக்கொண்டிருப்பார். கணக்கில் ஒரு சந்தேகம் தெளிவுபடுத்துங்கள் என இன்னொருவர் கேட்பார். புராஜெக்ட் ஒர்க்காக ஓர் அரண்மனையைச் செய்ய வேண்டுமென்றால், அதைப் பெற்றோரே செய்து போட்டோ போட்டிருப்பார்கள். அதைப் பார்த்து, நாம் இப்படிச் செய்யவில்லையே என மற்றவர்களுக்கு கிலி பிடிக்கும்.

 மனப்பாடம் செய்ய வைத்து மார்க் வாங்க வைப்பதெல்லாம் ஒரு சாதனையே இல்லை. அதற்காக இந்தப் பள்ளிகள் பெருமையோடு மார்தட்டிக்கொள்வதைப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது. உண்மையில், மனப்பாடம் செய்வதென்பது ஒரு குழந்தையின் சிந்திக்கும் திறனைச் சிதைக்கும், கேள்வி கேட்கும் ஆற்றலைக் கெடுக்கும் செயல்பாடு. அதனால்தான் இன்றைய பள்ளிகள் நூறு சதவிகித ரிசல்ட்டைக் கொடுக்கின்றன.

200க்கு 200 வாங்குவதெல்லாம் இன்று சர்வ சாதாரணமாக ஆகிவிட்டதென்றால் ஏன்? குழந்தைகளின் பேராற்றல் முன் இது நிஜமாகவே ஒன்றுமில்லாத விஷயம். யானைப்பசிக்குச் சோளப்பொரி! குழந்தையைப் பொறுத்தவரை எது சவாலான விஷயம் என்றால், அதைச் சிந்திக்கத் தூண்டுவது, அதன் கேள்விகளுக்குப் பதில் சொல்வது. உலகின் பெருஞ் சாதனைக் காரர்கள், அறிவாளிகளில் பலர் பள்ளிப்படிப்பைத் தொடர மாட்டாமல் ஓடிப்போனதன் காரணம், அது மூளையை முடக்குகிறது என்பதே! 
கல்விப் பரவலாக்கம் இவ்வளவு நடந்தும், 130 கோடி மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் ஆய்வாளர்கள் குறைவு, விஞ்ஞானிகள் குறைவு, பல துறைசார் வல்லுநர்களுக்குத் தட்டுப்பாடு இருக்கிறது. இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு ஒரு மனவியல் நிபுணர்தான் இருக்கிறார். அவ்வளவு ஏன், அடுத்த தலைமுறைக்கு ஆசிரியர்கள் இருப்பார்களா என்பது தெரியவில்லை. அரசுப் பணியோ, வேறு வேலையோ கிடைக்காததால் இந்த வேலைக்கு வந்தார்கள் என்பதே பலரும் ஆசிரியராகக் காரணமாக இருக்கிறது.

 ஒரு முறை ஒரு பள்ளிக்கு விருந்தினராக அழைக்கப்பட்டபோது, மாணவர்களிடம் `நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்?’ என்ற வழக்கமான கேள்வியைக் கேட்டேன். டாக்டர், இன்ஜினீயர் என்பதைத் தாண்டி எதுவும் சொல்லப்படவில்லை. ‘டீச்சர்?’ எனக் கேட்டபோது, எல்லோருமே ‘இல்லை’ என மறுத்துவிட்டனர். என்னுடைய வியப்பு என்னவென்றால், நல்ல ஆசிரியர்களை உருவாக்காமல் நல்ல பள்ளிகள் மட்டும் இருக்க வேண்டுமென நாம் எப்படி நினைக்கிறோம்! நல்ல பள்ளி என்பதற்கான விளக்கம் என்ன? அதன் கட்டமைப்பு வசதிகளும் உயர் கட்டணங்களுமா? இல்லவே இல்லை. நல்லாசிரியர்கள் இருக்குமிடம்தான் நல்ல பள்ளி.

பணம் சம்பாதிப்பதுதான் நோக்கம் என்றால், அந்தப் பணம்தான் சந்தோஷமாக வாழ வைக்கும் என்றால், அதற்காக நம் குழந்தைகள் இத்தனை ஆண்டுக்காலம் பள்ளியில் உழலத் தேவையில்லை. சரவணா ஸ்டோர்ஸ் முதலாளி தொடங்கி பில் கேட்ஸ் வரையிலான பெருங்கோடீஸ்வரர்கள் அதை ஏட்டுக்கல்வியால் சாதிக்கவில்லை. ஒரு சில மாதங்களுக்கு முன்னர்  எரிக் ஃபின்மேன் என்ற சிறுவனின் பெயர் இணைய வர்த்தகச் செய்திகளில் பிரபலமானது. 2011-ம் ஆண்டு தனது 12 வயதில் பாட்டி அன்பளிப்பாகக் கொடுத்த ஆயிரம் டாலரை டிஜிட்டல் பணமான பிட்காயினில் முதலீடு செய்தார். தற்போது அது ஒரு லட்சம் டாலராக வளர்ந்து எரிக் ஃபின்மேனை 18 வயதில் மில்லியனராக உயர்த்தியிருக்கிறது.

பள்ளிப்படிப்பு வெறுத்துப்போயிருந்த எரிக் இணையப் பொருளாதாரத்தில் ஆர்வம் கொண்டிருந்தார். தன்னைப் பள்ளியிலிருந்து நிறுத்திவிடுமாறு பெற்றோரை நச்சரித்தார். `நான் கூடிய விரைவில் மில்லியனராகிவிட்டால் பள்ளிக்கு அனுப்பக் கூடாது’ எனச் சவால் விட்டார். அப்படியே நடந்தது. எரிக்கின் சாதனையைவிட, பள்ளிகள் குறித்து அவர் கூறிய கருத்து கவனிக்கத்தக்கதாக ஆனது.

‘`பள்ளிகள் மிகவும் தரம்குறைந்ததாக இருக்கின்றன. ஆசிரியர்கள் எல்லா வகையான நெகட்டிவ் மனநிலையையும் கொண்டுள்ளனர். ஓர் ஆசிரியர் என்னைப் படிப்பை விட்டுவிட்டு மெக்டொனால்ட்ஸில் வேலைக்குப் போகச் சொன்னார். நான் அதற்குத்தான் லாயக்காம். நான் முதலாவதை மட்டும் செய்தேன். பள்ளியை விட்டு நின்றேன். இன்றைக்கு இருக்கிற கல்வித் தரத்தை வைத்து நான் அதை யாருக்கும் பரிந்துரைக்க மாட்டேன். அதற்குப் பதில், நான் இணையத்தைப் பரிந்துரைப்பேன். அதில் எல்லாமே இலவசமாகக் கிடைக்கின்றன. மில்லியன் மடங்கு அதிகமாக  யூ டியூபிலும் விக்கிப்பீடியாவிலும் நீங்கள் கற்க முடியும்’’ என்ற எரிக் 2014-ல் அதாவது தனது 15வது வயதில் ஆன்லைன் கல்வி நிறுவனத்தைத் தொடங்கினார். அவரைப்போல பள்ளியை வெறுப்பவர்கள் வீடியோ சாட்டின் மூலமாகத் தங்களுக்கான ஆசிரியரைக் கண்டறிந்து கல்வியைத் தொடரலாம்.

குழந்தைகள் பள்ளியை வெறுக்கத் துவங்கிவிட்டதை நாம் இன்னும் உணரவில்லை. எரிக் வேறு நாட்டைச் சேர்ந்தவர் என்றாலும், அவர் பேசும் விஷயங்கள் நமக்கும் பொருந்தக் கூடியவை. இன்றைய குழந்தைகளால் தனக்கு ஆர்வமுள்ள அத்தனை விஷயங்கள் குறித்தும் இணையத்தின் வழி கற்றுக்கொள்ள முடியும். தகவல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி ஆசிரியரின் தேவையையும் பள்ளிகளின் தேவையையும் இல்லாமல் செய்துவருகிறது. ஓவியம், இசை போன்ற கலைகள் தொடங்கி அறிவியல் தொழில்நுட்பம் வரை குழந்தைகள் தமக்கு விருப்பமானவற்றை ஆன்லைனில் படிக்கின்றன. இப்படியான  மெய்நிகர் கல்விக்கான காலம் நெருங்கி வருகிற நிலையில், இன்றும் மதிப்பெண் என்ற அங்குசத்தைப் பயன்படுத்திக் குழந்தைகளைப் பள்ளிகளுக்குள் முடக்குவது கொடுமையானது. தகவல்களுக்கும் அறிவுக்கும் நிறைய எக்ஸ்போஸ் ஆவதால் குழந்தைகளின் ஸ்மார்ட்னெஸ் கட்டுக்கடங்காததாக இருக்கிறது. அந்தந்தக் காலகட்டத்திற்கு ஏற்ப இந்த வளர்ச்சி ஒவ்வொரு தலைமுறைக் குழந்தைகளிடமும் இருந்தது என்றாலும், இந்தத் தகவல் தொழில்நுட்பக் காலம் ஒரு பெரும் பாய்ச்சலைக் குழந்தைகளின் அறிவுவளர்ச்சியில் நிகழ்த்தியிருக்கிறது.

`குழந்தையைப் பள்ளிக்கே அனுப்ப வேண்டாம் என்கிறீர்களா?’ நிச்சயமாக இல்லை. எப்போதுமே பள்ளிகளுக்கான தேவை இருக்கிறது. ஆனால், நினைப்பதைப்போல வெறுமனே படித்து மதிப்பெண் வாங்குவதற்காக மட்டுமல்ல... வேறு இரண்டு முக்கியமான விஷயங்களுக்காக. ஒன்று, நற்பண்புகளைக் கற்றல். இரண்டாவது, சமூக உறவை மேம்படுத்துதல்.

பெற்றோர் மற்றும் ரத்த உறவுகளைத்தாண்டி ஒரு குழந்தையின் சமூக உறவு என்பது பள்ளியில்தான் தொடங்குகிறது. சாதி, மத பேதங்களைக் கடந்து சமூக வாழ்க்கை என்பது பள்ளியில்தான் சாத்தியப்படுகிறது. அனைவரும் சமம் என்பதை அறிவிக்கத்தான் சீருடை என்ற கான்செப்ட்டே உருவானது. பாடப் புத்தகங் களைத் தாண்டி, சமூகக் கல்வியை ஆசிரியர்கள் போதிக்க வேண்டும். ஒற்றுமையாக இருத்தல், பாகுபாடின்றி வாழ்தல், அனைவரையும் மதித்தல் என, சமூகக் கலப்பிற்கான இடமாகக் கல்விக்கூடங்கள் மாற்றப்பட வேண்டும். அதே போல, நற்பண்புகளை வளர்த்தெடுத்தலும் பள்ளிகளின் பணிதான். அன்பு செலுத்த வேண்டும், பொய் சொல்லக் கூடாது, திருடக் கூடாது, ஏமாற்றக் கூடாது, பேராசைப்படக் கூடாது, கோபப்படக் கூடாது போன்ற விஷயங்களைக் கற்பித்தல். பள்ளியிலிருந்து ஒவ்வொரு மாணவரும் நல்ல மனிதராக வெளியேறி வர வேண்டும். அதுதான் கல்வியின் அடிப்படைப் பணி. சாதனையாளர்களை உருவாக்குவதற்குப் பள்ளிகள் தேவையில்லை.

வேப்பமரத்தடியில்கூடப் பாடம் கற்பிக்கலாம். ஆனால், ஆசிரியர் என்ன சொல்லுகிறார், மாணாக்கர் என்ன உள்வாங்குகிறார்கள் என்பதுதான் முக்கியம். கட்டடங்களையும் கட்டணத்தையும் வைத்துப் பள்ளிகளை எடை போடுவதை நிறுத்திவிட்டு, குழந்தைகளுக்கு உண்மையான கல்வியை உறுதி செய்து தர வேண்டியது மிக மிக அவசரம். ஆண்டுக்கு சுமார் 200 நாள்கள், ஒவ்வொரு நாளும் ஏழு மணி நேரம், ஏறக்குறைய 13 ஆண்டுகளைக் குழந்தைகள் பள்ளியில் கழிக்கின்றன. ஒரு மனிதரின் வாழ்வின் பெரும் பகுதி என்பது மட்டுமல்ல, முக்கியமான காலகட்டமும் அதுவே என்பதை மறக்க வேண்டும். குட்டி இளவரசனிலேயே முடிக்கிறேன்...

``எனக்கு ஆறு வயதானபோது ஓர் அற்புதமான படத்தைக் கண்டேன். அது ஒரு காட்டுவிலங்கை மலைப்பாம்பு ஒன்று விழுங்கிக் கொண்டிருப்பதைக் காட்டியது. அந்தப் படத்தைக் கண்டதும் அதை ஓவியமாக வரையலாமே என்று நானும் ஒரு சித்திரம் தீட்டினேன். என்னுடைய படத்தைப் பெரியவர்களிடம் காட்டியபோது அது ஒருவருக்கும் புரியவில்லை. அப்போதுதான் எனக்கு ஓர் உண்மை புரிந்தது. பெரியவர்கள் ஒருபோதும் எதையும் தாங்களாகவே புரிந்து கொள்வதில்லை. எப்போதும் ஓயாமல் விளக்கங்களைத் தருவது குழந்தைகளுக்கு சலிப்பைத் தருவதாக இருக்கிறது.’’

உண்மை கசக்கிறதா, பெரியோரே!

- நிறைய பேசுவோம்

கல்வியும் நாமும்...

* மூன்று வயதில் பள்ளியில் சேர்த்துவிடுவது... உலகிலேயே சிறந்த கல்வி முறையைக் கொண்டிருக்கும் ஃபின்லாந்தில் குழந்தைகளை ஏழு வயதில்தான் பள்ளியில் சேர்க்கின்றனர். ஏழு வயது வரை இசை, பாட்டு, விளையாட்டு போன்றவை மட்டும்தான்.  நமக்கு குழந்தை பிறக்கும் போதே `ஏபிசிடி’ பாடிக் கொண்டே பிறக்காதா என்று ஏக்கம். 

* பள்ளியிலிருந்து வீட்டிற்கு வந்துவிட்டாலும் குழந்தை எப்போதும் புத்தகமும் கையுமாக இருக்க வேண்டுமென நினைக்கிறோம். டியூஷனில் சேர்ப்பது கட்டாயமாகிவிட்டது. பாடங்களைப் பள்ளியில்தான் படிக்க வேண்டும். அதனால், வீட்டுப் பாடம் என்பதே தேவையற்றது. மாலை நேரத்தில் விளையாட்டு, வாசித்தல், பிற மொழிகளையும் கலைகளையும் கற்றல் போன்றவற்றுக்குச் செலவிடலாம்.

* சில குழந்தைகள் இரவு நீண்ட நேரம் கண்விழித்துப் படிக்கும். தயவுசெய்து அதை அனுமதிக்காதீர்கள். அதிகாலையில் எழுந்து படிப்பதே நல்லது. இரவுத் தூக்கம் மிக மிக அவசியமானது. அதில் சமரசம் செய்யாதீர்கள்.

* அந்தந்த வகுப்புப் பாடங்களை அந்தந்த வகுப்பில் படித்தாக வேண்டும். இன்றும் பல பள்ளிகள் ஒன்பதாம் வகுப்பிலேயே பத்தாம் வகுப்புப் பாடங்களை எடுக்கின்றன. இது மிகப்பெரிய தவறு. அறிவு வளர்ச்சிக்குத்தான் குழந்தைகள் படிக்கின்றன என்பதால் அதில் அவசரம் காட்டாதீர்கள்.

* உங்கள் கௌரவத்திற்காகவோ, பெயர் பெற்றது என்பதற்காகவே பள்ளியைத் தேர்ந்தெடுக்காதீர்கள். அது கல்வித் தரத்தில் சிறந்து விளங்குகிறதா என்று பாருங்கள். 

* கல்வி வியாபாரமல்ல; அளிப்பவர்களுக்கு அது சேவை, பெறுகிறவர்களுக்கு உரிமை என்பதை மறக்காதீர்கள். பெற்றோருக்கோ, மாணவருக்கோ ஏதேனும் உரிமை மீறல் நடந்தால் அதைத் தட்டிக் கேளுங்கள் அல்லது வெளியேறுங்கள்.

* மதிப்பெண்ணை வைத்துத்தான் திறமை என்பது ஒரு மாயை. உங்கள் குழந்தை கல்வியில் சுமாராகவோ அதற்கும் கீழாகவோ இருக்கலாம். தவறில்லை. அதற்கு வேறென்ன திறமைகள் இருக்கின்றன, வேறெதில் நாட்டம் இருக்கிறது என்று கவனியுங்கள். அதில் கவனம் செலுத்த ஊக்கப்படுத்துங்கள். நீங்கள் ஒரு மலையை வரைந்துவிட்டு அதில் குழந்தை ஏறியே ஆக வேண்டுமென அடம் பிடிக்காதீர்கள்.

* அதிக விலை கொடுப்பதால் மட்டுமே நல்ல கல்வி கிடைத்துவிடாது.

* ஃபெயில் ஆவது குற்றமில்லை. ஓராண்டு பின்தங்குவதால் வாழ்க்கையில் ஒரு நட்டமும் வந்துவிடாது. குழந்தை ஃபெயில் ஆனால் அதன்மீது மேலும் அன்பு செலுத்துங்கள். ஆதரவாக இருங்க

No comments:

Post a Comment