Thursday, December 14, 2017

அடல்ட்ஸ் ஒன்லி - 7 thanks to vikatan.com

வாழத் தெரியாதவர்கள் நிறைந்த நாடு என ஒரு பட்டம் கொடுக்கப்படுமெனில் அதைப் பெற இந்தியா தா ராளமாகப் போட்டி போடலாம். குடிமக்களாக நமக்குக் கோபம் வந்தாலும்…அதுவே உண்மை. ஒருவருக்கு மகிழ்ச்சியாக இருக்கத் தெரியவில்லை எனில் அவருக்கு வாழத் தெரியவில்லை என்றுதானே அர்த்தம்.

 ஐ.நா உருவாக்கிய வேர்ல்ட் ஹேப்பினஸ் இண்டெக்ஸில் இந்தியா இந்த ஆண்டு பிடித்திருக்கும் இடம் 155க்கு 122. சந்தோஷமான நாடுகளின் பட்டியலில் வறுமை நாடுகளான எத்தியோப்பியா, சோமாலியா போன்றவை நம்மைவிட முன்னால் இருக்கின்றன. அதிக முதியவர்கள், அல்லது பொருளாதார ரீதியாகச் சரிவில் இருக்கும் நாடுகள்கூட நம்மைவிட மகிழ்ச்சியாக உள்ளதாக இந்த ஆய்வு சொல்கிறது.

சரி சொல்லுங்கள், நீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக  இருக்கிறீர்களா? உங்கள் பிள்ளைகள் மகிழ்ச்சியோடு இருக்கிறார்களா?   
``எனக்கென்ன குறைச்சல், சென்னைக்கு மிக அருகில் ஒரு வீடு வாங்கிட்டேன். என் குடும்பம் மழை, வெயில் படாமல் போய் வருவதற்குக் காரும் வெச்சிருக்கேன். ஷாப்பிங் மற்றதுக்கெல்லாம் கிரெடிட் கார்டு இருக்கு. என் பிள்ளைகள் உயர்தரப் பள்ளியில் படிக்கிறார்கள். வாரம் முழுக்க உழைச்சிட்டு, களைப்பு தீர்றதுக்கு வாரக் கடைசியில் ஜாலியா இருக்கேன். வாழ்க்கை ஹேப்பியா போகுது. வேறென்ன வேணும்’’ எனும் உங்கள் மைண்டு வாய்ஸ் கேட்கிறது.     

ஆனால், மகிழ்ச்சி என்பது இதுதானா?

 பெர்ஷியக் கவிஞர் ஜலாலுதீன் ரூமி சொல்கிறார், ``உங்கள் இதயத்திலிருந்து விஷயங்களைச் செய்யும்போது, உங்களுக்குள் ஒரு நதி நகர்வதை உணர்வீர்கள். அதன் பெயர் மகிழ்ச்சி’’ என விளக்குகிறார். நதி வெளியில் நகர்வதைப் பார்த்தாலே மனம் குதூகலிக்கும். உள்ளுக்குள் நகர்ந்தால்… எத்தனை அலாதியான கற்பனை! உங்கள் இதயத்திற்குள் சலசலத்து ஓடும் நதியை எப்போதேனும் உணர்ந்திருக்கிறீர்களா? பரபரப்புகளைச்  சதா நம்மீது வீசியெறிந்துகொண்டே இருக்கும் இந்த வாழ்க்கை அதற்கான வாய்ப்பை நமக்கு வழங்குகிறதா? இல்லவே இல்லை.  

இளமை ஒளிர்கிறவரை எல்லாம் சூப்பராகத் தெரியும். குழந்தை குட்டிகளைக் கரையேற்றி, குடும்பச் சுமைகளை ஒவ்வொன்றாகத் தளர்த்தி `அப்பாடா’ என்று உட்காரும்போது, முடிந்துவிட்ட வாழ்க்கை ஒரு சூன்யத்தில் நம்மை நிறுத்தியிருக்கும். நரைக் கூடிக் கிழப் பருவம் எய்தும்போது `என்னத்த வாழ்ந்துட்டோம்’ என்ற எண்ணம் வராதவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். `நமக்காகவும் கொஞ்சம் வாழ்ந்திருக்கலாமோ’ என மனம் அடித்துக்கொள்ளும். ஏனென்றால், இங்கு யாருமே தன்னுடைய வாழ்வை வாழ்வதே இல்லை.  குழந்தை எப்போதும் பெற்றோருக்காக வாழ்கிறது, பெற்றோர் வாழ்நாள் முழுக்கக் குழந்தைக்காகவே வாழ்கின்றனர். இப்படியான ஒரு தியாக வாழ்வைத்தான் சரியானதென்று நம்புகிறோம். பண்பாடு எனப் போற்றுகிறோம்.

ஆனால், உண்மை என்ன தெரியுமா? இதில் கடுகளவுகூட நியாயமே இல்லை. இப்பூமியில் பிறக்கும் ஒவ்வொரு உயிரும் அதனதன் வாழ்க்கையை அதுவே வாழக் கடமைப்பட்டிருக்கிறது. உலகச் சமூகங்கள் பலவும் தனிமனித சுதந்திரம், தனிமனித உரிமை, தனிமனித மகிழ்ச்சி குறித்த ஆழ்ந்த புரிதலோடு வாழ்கின்றன. ஆனால், அது சுயநலமான வாழ்க்கை முறை என நாம் குறை கூறுகிறோம். இந்தியப் பெற்றோர், பிள்ளைகளை வளர்ப்பதற்காகத் தம்மையே அழித்துக்கொள்கின்றனர். அதுமட்டுமே பொதுநலன் எனும் மாயக்கற்பனையிலும் உழல்கின்றனர். `காலம் முழுக்க உனக்காகக் கஷ்டப்பட்டேன்’  என்பதுதான் ஒவ்வொரு பெற்றோரின் இறுதிக்காலப் புலம்பலாக இருக்கிறது. உடல், பொருள், ஆவி அனைத்தையும் உருக்கி ஏன் கரைகிறீர்கள் எனில், அவர்களிடம் இருக்கும் ஒரே பதில், ’பிள்ளைகளை நல்லா வளர்க்கணும்ல’ என்பதே!
ஒரு தம்பதியரை எனக்குத் தெரியும். திருமணமான 40 ஆண்டுகளில் அவர்கள் எங்கேயும் வெளியே சென்றதில்லை. நடுத்தர வர்க்கத்தினர். மாதச் சம்பளத்தில் வாழ்க்கை நடத்துகிறவர்கள். அந்த மனிதர் ஒருநாள்கூட விடுப்பு எடுக்காமல் அத்தனை ஆண்டுக் காலமும் குருவி சேர்ப்பது போலப் பணத்தைச் சேர்த்து, தன் இரண்டு பிள்ளைகளுக்காகவும் இரண்டு வீடுகளைக் கட்டினார். கடன்களை வாங்கி வாழ்நாள் முழுவதும் அடைத்தார். அவரது கஷ்டம் பிள்ளைகளுக்குத் தெரியாது. தாம் வசதியானவர்கள் என்ற மனநிலையோடுதான் அவர்கள் வளர்ந்தனர். அவர்கள் கேட்ட எல்லாமும் ஒரே கோரிக்கையில் நிறைவேற்றப்பட்டன. படிக்க வைத்து, மணமுடித்து, வரதட்சணை வாங்கி – கொடுத்து, வீடுகளை ஒப்படைத்து, வங்கிச் சேமிப்பைத் துடைத்தழித்து வெறும் மனிதர்களாக நிற்கின்றனர். மகனுக்குக் கட்டிக்கொடுத்த வீட்டில் இவர்களும் தங்கி இருக்கின்றனர். அவ்வளவுதான். சம்பாதிக்காத, சொத்துகள் இல்லாத எந்தவொரு மனிதரும் குடும்பத்துக்குச் சுமைதானே. ரிட்டயர்மென்ட்டுக்குப் பின்னர் இவருக்கும் அதே நிலைதான். `இப்போதாவது உங்களுக்காக வாழ்கிறீர்களா?’ என்றால், `அதெப்படிம்மா… பேரப் புள்ளைங்களை யார் வளர்க்குறது?’ என்கிறார்கள். தன் செலவுக்குக் காசில்லாததால் அந்த மனிதர் ஒரு கடையில் வேலைக்குச் சேர்ந்தார்.  ஆனால், மகன் என்ன நினைக்கிறார் எனில், `வீட்டில் போரடிப்பதால் அப்பா வேலைக்குப் போகிறார்.’  

தன் சந்தோஷங்களை முற்றிலுமாகத் துடைத்தழித்துக்கொள்வது ஒரு வாழ்க்கையா?  40 ஆண்டுக்காலம், தன் இளமைக்காலம் முழுவதையும் சம்பாதித்தல் – சேமித்தல் என்ற இரண்டு வார்த்தைகளுக்குள்  அடக்கி, பெரும்பாலானவர்களின் வாழ்க்கை முடிந்துவிடுகிறது. கணக்குப்பிள்ளைகளைப் போல எப்போதும் வரவுசெலவுகளைப் பற்றியே பெற்றோர் பேசுவதால், இதுதான் வாழ்க்கை எனக் குழந்தைகள் நம்பத் தொடங்கிவிடுகின்றன.
2000-ம் ஆண்டிற்குப் பின்னர் இந்திய நடுத்தர வர்க்கத்தின் சொத்துகள் 150 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக குளோபல் வெல்த் ரிப்போர்ட் தெரிவித்திருக்கிறது. ஆனால், இது நற்செய்தியன்று. சொத்துகளாக வாங்கிப் போட்டாலும் அவர்கள் கடனாளியாக இருப்பதை வேறு ஆய்வுகள் உறுதி செய்கின்றன. கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை, அவர்கள் மாதாந்திர ஸ்வைப் கணக்கு, கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமை, நீதிமன்றங்களில் குவியும் லட்சக்கணக்கான வழக்குகள், செலுத்தாத கடனை வசூலிக்க ரெக்கவரி ஏஜென்ட்டுகளை நியமித்தல் என எல்லாமே ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கின்றன.  நிறைய சம்பாதித்து, நிறைய செலவழித்து, நிறைய கடன்பட்டு, நிறைய துயருறுதல் வாழ்க்கையாக இருக்கும்போது அதற்கிடையே அன்பு, மகிழ்ச்சி எங்கே மலரும்?

இந்தியத் தம்பதியர் தமது நெருக்கத்தைத் தொலைப்பதற்குப் பணமும் குடும்பப் பொறுப்புகளும் முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. இந்தியச் சுற்றுலாத் தளங்களுக்குப் போனோமென்றால், ஜோடி ஜோடியாக வெளிநாட்டவர்களைப் பார்க்க முடியும். இளைய ஜோடிகளுக்கு இணையாக முதிய ஜோடிகளும் கைகளைக் கோத்துக்கொண்டு வலம் வருவார்கள். துணையுடன் போகக்கூடிய, குழந்தைகளையும் அழைத்துச் செல்லும் நெடும் பயணங்களுக்கு அவர்கள் திட்டமிடுகின்றனர்.  வீடுகள் கட்டுவது, நிலங்கள் வளைப்பது, நகைகளைச் சேர்ப்பது போன்ற சிற்றின்பங்களைத் தூர வைத்துவிட்டு, சம்பாதிக்கும் பணத்தின் பெரும்பகுதியைப் பயணங்களுக்கும் குடும்பத்தோடு இளைப்பாறுவதற்கும் செலவிடுகின்றனர். குழந்தை படிப்பை முடித்து வளர்ந்துவிட்ட பின்னரும் அதற்குச் சொத்து சேர்த்து, தன் வாழ்வை அவர்கள் அழித்துக் கொள்வதில்லை.

 உலகப் புகழ்பெற்ற நடிகரான ஜாக்கிசான், தன் மரணத்திற்குப் பின் தன்னுடைய பெருமதிப்புள்ள சொத்துகளை அறப்பணிகளுக்குக் கொடுக்கப்போவதாக அறிவித்தார். உங்கள் மகனுக்கு ஏன் கொடுக்கவில்லை என நிருபர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு அவர் சொன்ன விளக்கம் என்ன தெரியுமா? ‘என் மகன் திறமையானவராக இருந்தால் அவருக்குத் தேவையான பணத்தை அவரே சம்பாதிப்பார். திறமையற்றவர் எனில், நான் சம்பாதித்ததையும் அழிக்கவே செய்வார்.’’ எத்தகைய மேன்மையான புரிதல்!

ஆனால், நாம் நம் பிள்ளைகள் அழிக்க வேண்டுமென்பதற்காகவே உயிரை உருக்கிச் சொத்துகளைச் சேர்க்கிறோம். பெற்றோர் தம் சொத்துகளைப் பிள்ளைகளுக்குக் கைமாற்றிக் கொடுத்துக்கொண்டே இருப்பதாலும், பிள்ளைகள் பெற்றோரின் பணத்தை முதலீடாக வைத்துக் கல்வி, வேலைவாய்ப்பு, சமூக வாய்ப்பு என அனைத்தையும் வரித்துக்கொள்வதாலும் பணக்காரராக இருப்பதென்பது பரம்பரை விஷயமாக இருக்கிறது. பத்துத் தலைமுறைகளுக்குச் சேர்த்து வைப்பதைப் பெற்றோர் நிறுத்தும்போது, புதையலைப்போல ஓரிடத்தில் குவிந்திருக்கும் பணம் மேலும் கீழுமாகப் பாயும். இதன்மூலம் சாமானியர்களும் தம் திறமையால் முன்னேறும் வாய்ப்பு எளிதாகிறது. கோடீஸ்வரரான ஜாக்கிசானின் மகன், சொத்துகள் தரப்படாததால் தன் உழைப்பில் முன்னேறும் அரிய வாய்ப்பைப் பெற்றார். அவர் சாதாரண வேலை பார்த்துக்கொண்டு சாமானியராக வாழக் கூடாதா என்ன? டாக்டர் பிள்ளை டாக்டராகவும், வங்கி ஊழியரின் வாரிசு வங்கி ஊழியராகவும், அரசியல்வாதியின் குழந்தை அரசியல்வாதியாகவும், நடிகர் மகன் நடிகராகவும்தான் ஆக வேண்டுமா?
நாம் நம் குழந்தைகளுக்கு எளிமையாக வாழ்வதன் அவசியத்தைக் கற்பிக்கவே இல்லை.  எளிமை எனும் நல்வாழ்க்கைக்கான தத்துவத்தை, பிழைக்கத் தெரியாதவர்களுக்கான வழி என ஒதுக்குகிறோம். எளிமையை ஏழ்மையோடு சேர்த்துக் குழப்பிக்கொள்கிறோம். சிக்கனத்திற்கும் கஞ்சத்தனத்திற்குமான வேறுபாட்டை மறந்தோம். கேட்டபோதெல்லாம் டிரஸ் வாங்கித் தராத பெற்றோரை, குழந்தைகள் கருமியாகப் பார்க்கின்றனர் எனில் அது யார் தவறு? என் முன்னாள் நண்பர் ஒருவர் தான் நிறைய சம்பாதிக்கிற போதும், தன் பிள்ளைகளை அரசுப் பள்ளியில்தான் படிக்க வைக்கிறார். உறவினர் கேலி செய்தும், மனைவி கண்டித்தும் அவர் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வில்லை. அதுமட்டுமன்று, பொருள்களின் பயன்பாட்டையும் தேவையையும் குழந்தைகளுக்குப் புரிய வைப்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருந்தார். ஒருமுறை அவரின் மகள், `அப்பா ஸ்கூல் பேக் கிழிஞ்சிருச்சு. நிறைய தடவை தைச்சுப் போட்டுட்டேன். காசு வரும்போது புதுப் பை வாங்கிக் கொடுங்க’ என்று சொல்வதைக் கேட்டு என் கண்ணில் நீர் துளித்துவிட்டது.

நம் வீட்டை ஒரு முறை சுற்றிப் பார்ப்போம். வீடா, ஷாப்பிங் காம்ப்ளெக்ஸா என்ற சந்தேகமே வந்துவிடும். `சொந்த வீடு இல்லேன்னா வாழ முடியாது’, `சோஃபா இல்லேன்னா உட்கார முடியாது’, `டிவி இல்லேன்னா பொழுது போகாது’, `கார் இல்லேன்னா பக்கத்துத் தெருவுக்குக்கூடப் போக முடியாது’, `தினமும் ஒரு டிரஸ் போடலேன்னா மரியாதை கிடைக்காது’, `காஸ்மெட்டிக்ஸ் இல்லேன்னா அழகு வராது’, `காஸ்ட்லி சிகிச்சை இல்லேன்னா ஆரோக்கியம் வராது’, `செல்போன் இல்லேன்னா வாழவே முடியாது’ என இப்படியான முடியாதுகள் நம் மூச்சைப் பிடித்து இறுக்குகின்றன.

உண்மை என்னவென்றால், நாம் இன்று வாங்கிக் குவிக்கும் பொருள்களில் 90 சதவிகிதப் பொருள்கள் இல்லாமலேயே நம்மால் சந்தோஷமாக வாழ முடியும். அது நமக்குத் தெரியும். ஏனென்றால், நாம் சென்ற தலைமுறைக் குழந்தைகள். ஆனால், இந்தத் தலைமுறைக்கு அது தெரியாது. நம் முன்னோர்கள் கற்பித்த எளிமையையும் சிக்கனத்தையும் நம் பிள்ளைகளுக்குச் சொல்லித் தரத் தவறிவிட்டோம்.  
இந்தியக் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. ஒன்றரை லட்சம் பேராக இருக்கும் எண்ணிக்கை இன்னும் நான்கைந்து ஆண்டுகளில் இருமடங்காக அதிகரிக்கப்போகிறது. புதிய பணக்காரர்கள் அதில் இடம் பிடித்திருப்பார். ஆனால், வேர்ல்ட் ஹேப்பினஸ் இண்டெக்ஸில் முன்னேறும் வாய்ப்பு தொலைதூரத்தில்கூட இல்லை.

ஏனென்றால், மகிழ்ச்சி என்பதற்கு நாம் வைத்திருக்கும் அர்த்தமும் உலகச் சமூகங்கள் வைத்திருக்கும் அர்த்தமும் வேறுபடுகின்றன. எந்த நாட்டில் வளர்ச்சி ஆரோக்கியமான சமநிலையில் இருக்கிறது? எங்கே ஏற்றத்தாழ்வுகள் இல்லையோ, எங்கே தான் வாழ்கிற சமூகத்தின் மீது மக்கள் உச்சபட்ச நம்பிக்கை வைத்துள்ளனரோ, எங்கே அரசின்மீது  நம்பிக்கை இருக்கிறதோ’ அந்த நாட்டினர் மகிழ்ச்சியாக இருப்பதாக ஐ.நா சொல்கிறது. ஆனால், நாம் நமது மகிழ்ச்சியைச் சமூகத்தோடு தொடர்புபடுத்திப் பார்ப்பதில்லை. சக மனிதர்மீது அன்பும் மரியாதையும் இல்லாதவர்களின் மகிழ்ச்சிக்கு மதிப்பில்லை.

பணமிருந்தால்தான் சந்தோஷம் கிடைக்கும் என்ற உலகமயக் கருத்தியல் தோல்வியடைந்து விட்டது. வளர்ந்த நாடுகளில்  பெருகும் மன அழுத்தமும் தற்கொலைகளும் நமக்கான எச்சரிக்கை. வாழ்வில் எளிமையையும் எளிய விஷயங்களையும் கற்கும்போதுதான் உண்மையான மகிழ்ச்சி உருவாகிறது. குழந்தைகள் அத்தகைய மகிழ்ச்சிக்குத்தான் ஏங்கிக் கிடக்கின்றனர். பெற்றோர் குழந்தைகளுடன் எப்படி வாழ்கின்றனர்  என்பதுதான் முக்கியமே தவிர, எவ்வளவு சம்பாதித்தனர் என்பது ஒரு பொருட்டே அன்று. 

வகுப்பில் என் ஆசிரியர் ஒரு கேள்வியைக் கேட்டார். ஆசை என்றால் என்ன? ஆளாளுக்கு ஒரு பதிலைச் சொன்னோம். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு இறுதியில், விளக்கத்தை அளித்தார். `தேவைக்கு மிஞ்சிய எல்லாமே ஆசைதான்.’  நான் வாழ ஒரு வீடு வேண்டும் என நினைத்தால் அது தேவை. வீடுகள் வேண்டுமென நினைத்தால் அது ஆசை. அந்த வீடும் வாழ்நாள் கடனில்தான் கிடைக்கும் என்றால், அது தேவையில்லை என்றே அர்த்தம். வாழ்நாள் முழுக்க வாடகை வீட்டில் வசிப்பது ஒன்றும் இழுக்கான விஷயமல்ல. ஆயுள் முடிகிறவரை கட்டுகிற கடனை, குழந்தையின் அறிவு, ஆரோக்கியம், நற்பண்புகள், அனுபவங்களுக்குச் செலவிடுங்கள். கடனில் வீட்டை வாங்கிவிட்டு எங்கேயும் வெளியில் போக முடியாமல் குழந்தைகளைச் சொந்த வீட்டுச் சிறையில் அடைக்காதீர்கள். குழந்தைகளுக்குச் சரியாக வாழக் கற்றுக் கொடுத்து, தன் காலில் நிற்க வழி விட்டு, மறுபடியும் கிடைக்கவே கிடைக்காத இந்த அரிய வாழ்வை நீங்களும் கொஞ்சம் வாழுங்கள்.  

- நிறைய பேசுவோம்...

குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ…

* நேசிக்கும் விஷயத்தைச் செய்ய அனுமதியுங்கள், கவிதை எழுதுவது, நீச்சலடிப்பது, விளையாடுவது என விரும்பும் விஷயத்தைக் குழந்தை செய்யும்போது அதன் மனம் மகிழ்ச்சியடைகிறது. பொருள்கள்மீது நாட்டம் குறைகிறது.

* பிறருக்கு உதவ ஊக்கப்படுத்துங்கள். எல்லாம் தனக்கே வேண்டுமென்ற சுயநலம் இதனால் அழிகிறது.

* கிடைக்கும் நல்வாழ்க்கைக்கு நன்றி பாராட்டப் பழக்குங்கள். உணவை வீணடிப்பது, பொருள்கள் பழுதடைந்தால் ரிப்பேர் செய்யாமல் விசிறியடிப்பது இவையெல்லாம் அவற்றின் மதிப்பு தெரியாததாலேயே வருகின்றன. ஒரு பேனா வாங்கித் தந்தாலும் அதற்கு நன்றியோடு இருக்கச் செய்யுங்கள்.

* எண்ணங்களை, நேரத்தை, திறமைகளை, பொருள்களைப் பிறரோடு பகிர்ந்துகொள்ளக் கற்றுத் தாருங்கள். மனம் இலகுவாகும்.

*  சிரிக்க அனுமதியுங்கள். பிறரைப் புண்படுத்தும் கிண்டல்களே நகைச்சுவை என்றாகிவிட்ட காலம் இது. குழந்தை நிறைய சிரிப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள். 

* நேரத்தைக் கேட்டால் நேரத்தைக் கொடுங்கள். அன்பைக் கேட்டால் அன்பைக் கொடுங்கள். பணம் பொருளால் இவற்றை ஒருபோதும் ஈடு செய்யாதீர்கள்.

* அன்பிற்குரியவர்களோடு நேரம் செலவிட அனுமதியுங்கள். உறவு மற்றும் நட்புகளின் வழியே மனிதர்களை மதிக்க, அவர்களின் சுக துக்கங்களைப் பகிர, குழந்தை பழகுகிறது.

* இயற்கை சூழ் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லுங்கள். இந்தப் பூமியில் உள்ள கோடானு கோடி மரங்கள், பறவைகள், விலங்குகளோடு தானும் ஓர் அங்கம் என்ற புரிதல் வளரும். பூமியை அழிக்கும் சுயநலம் அழியும்.

* பிறருடைய பணம், வசதிகள், மதிப்பெண் இவற்றோடு ஒப்பிடாதீர்கள். குழந்தை தன் வாழ்க்கையை அது வாழ வேண்டும். எவ்வளவு குறைகள் இருந்தாலும் பிறர் வாழ்க்கையை வாழ அனுமதிக்காதீர்கள்.

பெற்றோர்கள் மகிழ்ச்சியாக வாழ…

1. குறைவான கடன்: ஒரு சில ஆண்டுகளில் அடைத்துவிடக் கூடிய கடன்களை மட்டுமே ஏற்றுக் கொள்ளுங்கள். முடிந்தளவு வருமானத்திற்குள் வாழப் பழகுங்கள். கடன் வாழ்வின் நிம்மதியைப் பறித்துவிடும் என்பதை மறக்காதீர்கள். கடன் பத்திரத்தில் கையொப்பம் இடும்போது வாழ்க்கையை ஒப்புக் கொடுக்கிறீர்கள் என்பதை நினைவில் நிறுத்துங்கள்.

2. மினிமலிஸ்ட்டிக் வாழ்க்கைக்கு மாறுங்கள். பொருள் குறையும்போது சுமை குறைகிறது. பொருள்களை வாங்குவது, துடைத்து வைப்பது, ரிப்பேர் செய்வது என வாழ்க்கை இதிலேயே முடிந்துவிடும். தினமும் ஒரு கண்டுபிடிப்பு நிகழ்கிறது. தினமும் ஒரு பொருள் சந்தைக்கு வருகிறது. அவற்றையெல்லாம் வாங்கிக் கொண்டிருந்தால் முடிவேது?

3. அந்தஸ்து என்பது நற்பண்புகளாலும் நற்செயல்களாலும் வருவது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். வசதிக்குறைவு ஒருபோதும் ஒருவரின் மரியாதையைக் குறைக்காது.

4. எந்த உழைப்பும் இல்லாமல் பெரும் பணமீட்டத் திட்டமிடுகிறீர்கள் என்றால், ஏதோவொரு வகையில் ஊழலுக்குத் தயாராகிறீர்கள் என்றே அர்த்தம்.

5. அச்சப்படாதீர்கள். பொருள் தேவை ஒரு பிரச்னையே இல்லை. அவரவர் வசதிக்கு ஏற்ப வாழ இப்பூமியில் இடமிருக்கிறது. நம் பிரச்னை என்னவெனில் நாம் நமக்கு மேலே இருப்பவர்களைப் பார்த்துச் சூடுபோட்டுக்கொள்வதுதான்.

No comments:

Post a Comment