Sunday, December 24, 2017

தள்ளிப்போட வேண்டிய முடிவுகள் எவையெவை? thanks to dinamalar.com

தள்ளிப் போடுவது என்று வந்து விட்டால், அதை, அல்வா சாப்பிடுவதைப் போல் இனிய விஷயமாக எடுத்துக் கொள்வர், சிலர்.
தள்ளிப் போடுவதனால் அடைந்த நஷ்டங்களை, அவதிகளை, மன வேதனைகளை, காலங்காலமாக அனுபவித்தும், இந்த குணத்திலிருந்து விடுபடாத மனிதர்களின் போக்கு, வியப்பை மட்டுமல்ல, வேதனையையும் தருகிறது.
பள்ளிப் பருவத்தில், 'தேர்வுக்கு இன்னும் எவ்வளவோ நாட்கள் இருக்க, இப்போதே என்ன அவசரம்... அப்புறம் படிச்சுகிட்டா போச்சு...' என்று ஆரம்பித்த பழக்கம், வைத்திய சிகிச்சைகளை தள்ளிப் போடுவது வரை தொடரவே செய்கிறது.
இப்பழக்கம் நமக்கு கசப்பான அடிகளை தந்த போதும், அதை மாற்றிக் கொள்ள மறுப்பது ஏன்?
அனுபவம் எனும் ஆசான், நம் பள்ளி ஆசான்களை போல், தங்களுக்கென்று எல்லை வகுத்து நின்று விடுவதில்லை. சில நேரம் செல்லமாக கன்னத்தில் தட்டி, 'இனி, இப்படி செய்யக் கூடாது ராஜா...' என்றும், பல நேரம் ஓங்கி அறைந்தும், சில சந்தர்ப்பங்களில் முதுகெலும்பையே முறித்துப் போடும்படியான பாடங்களை சொல்லி, புரட்டி எடுத்து விடும். 
அது நிகழும் முன் விழித்து, நம்மை மாற்றி, திருத்தி கொள்ள முன் வரவேண்டாமா...
போனது போகட்டும்; இனியேனும், எதையும் தள்ளிப்போட வேண்டாம் என்கிற முடிவிற்கு வருவோம்!
அதேநேரம், சில விஷயங்களை தள்ளிப் போடுவது அவசியம். பிடிக்காத செயல் ஒன்று நடக்கிறது... உடனே, 'முணுக்'கென்று மூக்கின் மீது கோபம் வருகிறது. உடனே சம்பந்தப்பட்டவரை நேரிலோ, தொலைபேசியிலோ அழைத்து, காச் மூச் என்று கத்தித் தீர்த்துவிட நினைக்கிறோம்; இந்த முடிவை தள்ளிப் போடுங்கள். 
உணர்ச்சி பூர்வமாக ஒன்றை அணுகுவதை விட, அறிவுப்பூர்வமாக அணுகுவதே சிறந்தது. ஆத்திரத்தில் அறிவு வேலை செய்யாது; வார்த்தைகள் தணிக்கை செய்யப்படாமல் வந்து விழும். அவை, அனல் கட்டிகளாக மாறி எதிராளிகளின் உள்ளத்தை ரணமாக்கும்.
கத்த நினைத்ததை தள்ளிப் போடும்போது, நமக்கே, சில நியாயங்கள் புரிய ஆரம்பிக்கின்றன. 'போனாப் போறான் விடு...' என்று உள்ளிருந்து எதுவோ நம்மை சாந்தப்படுத்துகிறது. நமக்கும் வேறு சில கோணங்கள் தோன்ற, நீர் தெளிக்கப்பட்ட கொதி பாலாய், நம் உணர்வுகள் அடங்கிப் போகின்றன. காலம் கடத்தல் நிகழ்த்தும் மாயம் இது!
உளவியல் வல்லுனர்கள் கூட, கோபத்தை அடக்கும் உத்தியாக, கோபம் எழுந்தவுடனேயே, 'ஒன்று, இரண்டு...' என, நுாறு வரை எண்ணச் சொல்கின்றனர். தமிழறிஞர், கி.ஆ.பெ., இப்படி சொல்கிறார்... 'கோபமாக கடிதம் எழுதுகிறீர்களா... அதை, உடனே அஞ்சலில் சேர்க்காதீர்கள்; காத்திருந்து, மறுநாள் ஒருமுறை படித்துப் பாருங்கள்; உங்களுக்கே இது அதிகம் என்று தோன்றும். அதற்கு அடுத்த நாளும் படியுங்கள்; முடிந்தால் கிழித்துப் போடுங்கள்...' என்கிறார். என்ன அருமையான யோசனை!
கோபம் மட்டுமல்ல, வீட்டை - நிலத்தை விற்பது; வேலையை ராஜினாமா செய்வது; மகள் - மகன் அல்லது சொந்த வாழ்க்கையில் சிதிலப்பட்ட உறவுகளை அடியோடு அறுத்துக் கொள்வது; உறவுகளை முறித்துக் கொள்வது; எதிரிகளை பழி வாங்குவது; நியாயத்திற்கு அப்பாற்பட்ட செயல்களில் ஈடுபடுவது; மனசாட்சியை புறக்கணித்து, ஏதேனும் மாறுபட்டு செயல்படுவது ஆகிய எல்லா செயல்களையும் தள்ளிப் போடுங்கள்.
இத்தகைய தள்ளிப் போடல்கள், நஷ்டத்தை தராமல், பெரும்பாலும், நன்மையில் முடிவதை கண்கூடாக காண்பீர்கள்!

லேனா தமிழ்வாணன்

No comments:

Post a Comment