Wednesday, December 20, 2017

Posted Date : 06:00 (21/12/2017) அடல்ட்ஸ் ஒன்லி - 12 thanks to vikatan.com

அடல்ட்ஸ் ஒன்லி - 12

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஜெயராணி
குழந்தை வளர்ப்பு தொடர்பான ஒரு தொடருக்கு `அடல்ட்ஸ் ஒன்லி’ என்று தலைப்பா என, சில நண்பர்களும் வாசகர்களும் கேட்டனர். சொல்ல வரும் விஷயத்தை இந்தத் தலைப்பு மிஸ் லீடு செய்வதாகவும்  சிலர் குறிப்பிட்டனர். அடல்ட்ஸ் ஒன்லி என்றால் `வயது வந்தோருக்கு மட்டும்’ என்று பொருள். நம்மைப் பொறுத்தவரை வயது வந்தோருக்கு மட்டுமான விஷயமெனில் அது செக்ஸ் மட்டும்தான். மற்றபடி `எல்லாவற்றையும்’ கடைவிரித்து வைக்கலாம். குழந்தைகள் ஒருபோதும் பார்க்கக் கூடாத, பழகக் கூடாத அடல்ட்ஸ் ஒன்லி விஷயங்கள் நிறைய இருக்கின்றன. வன்முறை, வன்மம், பாகுபாடு, திருட்டு, பொய் சொல்லுதல், ஏமாற்றுதல், பாலியல் சீண்டல்கள், மூட நம்பிக்கை என அந்தப் பட்டியல் மிகப் பெரியது. குழந்தையின் உளவியலைக் கட்டமைக்கும் இவை குறித்து உண்மையில் நமக்கு எந்தப் புரிதலும் இல்லை.  
 
நம் சமூகத்தில் பல வீடுகளில் சர்வ சாதாரணமாகக் காணக் கிடைக்கிற `அடல்ட்ஸ் ஒன்லி’ காட்சிகள் இவை.  

 என் உறவினர் ஒருவருக்கு எதற்கெடுத்தாலும் `பளார்னு அறைஞ்சேன்னா தெரியும்’ என மனைவியை நோக்கிக் கையை ஓங்குவது பழக்கமாகவே இருந்தது. டென்ஷன் ஏறினால் நடுக்கூடத்தில் போட்டு அடிக்கவும் செய்வார். மறுநாள் மனைவியிடம் வந்து ``டென்ஷனா இருக்குறப்போ கூடக்கூடப் பேசாதன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்” என்று சமாதானம் செய்வார். இதைப் பார்த்துப்பார்த்து வளர்ந்த அவரின் மகன் 15 வயதில், ``ஏன்டா வெளில சுத்துற’’ என்று கேட்ட அம்மாவை, ஓங்கி ஒரு அறைவிட்டான். கேட்டால் ``டென்ஷன்’’   என்றான். அதைவிட, கொஞ்சம் வளர்ந்ததும் காதலித்துத் திருமணம் செய்த பெண்ணை அடிப்பதை வழக்கமாக்கிக்கொண்டான். காரணம் டென்ஷன்.
இன்னொரு தம்பதி. இருவருமே வேலைக்குப் போய் கைநிறைய சம்பாதிப்பவர்கள். குழந்தை முன் ஒருவரை ஒருவர் கேவலமாகத் திட்டித் தீர்ப்பார்கள். மனைவிக்குப் பல ஆண்களுடன் உறவு இருப்பதாகக் கெட்ட வார்த்தைகள் சொல்லி, கணவன் திட்டுவார். ``நீ மட்டும் ஒழுங்கா?’’ என மனைவியும் அசிங்க அசிங்கமாகப் பேசுவார். வாட்ஸ்அப்பில் வந்த மெஸேஜ் முதல் பாலியல் ரீதியான சம்பவங்கள் எல்லாவற்றையும் ஆத்திரத்தோடு விவரிப்பார்கள். அவர்களது எட்டு வயதுக் குழந்தை பெற்றோரின் சண்டையை அழுதுகொண்டே தடுக்கும். கூடா நட்பினால் விரிசல் விழுந்த தம்பதியருக்குப் பிள்ளையாக இருப்பதைப் போன்ற கொடுமை வேறெதுவும் இல்லை. வாழ்க்கையே அதற்கு சூன்யம்தான். குழந்தை முன் சண்டை போடக் கூடாது. கெட்ட வார்த்தைகள் பேசக் கூடாது என்ற அடிப்படையான அறத்தைக்கூட இன்றைய படித்த தலைமுறை கடைப்பிடிப்பதில்லை.

இன்னொரு வீடு. கணவன் குடும்பத்தை மனைவி கேவலமாகப் பேச, மனைவி வீட்டாரை கணவன் ரொம்பக் கேவலமாகப் பேச... இதுதான் அவர்களுக்குப் பொழுதுபோக்கே! ``சோத்துக்கு அலையுறாங்க’’, ``காசுக்கு அலையுறாங்க’’ என மாற்றி மாற்றி இழிவுபடுத்திக்கொள்வார்கள். பெற்றோர்கள் பற்றியும் சகோதரர்கள் பற்றியும் புறம் பேசும்போது அது குழந்தையின் காதுகளை எட்டுகிறதா என எத்தனை பேர் திரும்பிப் பார்த்திருப்போம். இன்னும் சொல்லப்போனால், பாட்டி-தாத்தா, அத்தை-மாமா, சித்தி-சித்தப்பா பற்றிக் குழந்தையிடமே தவறாகச் சொல்வது இங்கே `கலாசார’மாகவே இருக்கிறது. உறவுகள்மீது அன்பும் மதிப்பும் இல்லாமல் போவதுடன், மிக மிக சுயநலமாகக் குழந்தை வளர இதுவே காரணமாகிறது.    
   
மற்றுமொரு குடும்பம். பிசினஸில் நஷ்டம், குடும்பத்தில் பிரச்னை, உடம்பு சரியில்லாமல் போவது என வாழ்க்கையில் என்ன கேடு நடந்தாலும் ஜோசியம் பார்க்கக் கிளம்பிவிடுவார்கள். எந்தச் செயலுக்கும் தாங்கள் பொறுப்பேற்காமல் ``கட்டம் சரியில்லை, குரு அங்க போயிட்டார், சனி இங்க வந்துட்டார்’’ எனப் புலம்புவார்கள். யாரையும் மதிக்காமல், சரியாகப் படிக்காமல் எப்போதும் அடம்பிடிக்கும் தன் குழந்தையின் ஒழுக்கக் குறைபாட்டைக்கூடப் பரிகாரம் செய்து சரிபடுத்த வேண்டிய பிரச்னையாகவே பார்த்தனர். இத்தகைய குடும்பத்தில் வளரும் குழந்தை என்ன கற்கும்? 

மேலும் ஒரு வீடு! ``நம்ம தெருவுக்குள்ள செருப்பு போட்டுட்டு நடந்துட்டான், நம்ம புள்ளைய காதலிச்சுட்டான்... சும்மா விடக் கூடாது, நாம யாருனு புரிய வைக்கணும். தூக்குத் தண்டனை கிடைச்சாலும் பரவாயில்லை. நம்ம கெளரவத்தைக் காப்பாத்தியாகணும்’’ என அப்பா, சித்தப்பா, மாமன்கள் அடித்தொண்டையில் முழங்க, அவ்வீட்டில் உள்ள சிறுவர்கள், கெளரவம் என்பது பிறரைத் தாழ்த்தியும் ஒடுக்கியும் பெறவேண்டிய ஒன்றாக நம்பத் தொடங்குகின்றனர். எதிர்காலத்தில் குற்றம் இழைக்க அதுவே ஊக்க மருந்தாகிறது. சக மனிதர்களின் சமத்துவ நல்வாழ்விற்கு எதிரான நம் வன்மங்களை நாம் குழந்தைகளிடம் இருந்து ஒளித்து வைப்பதில்லை. சாதியால் தாழ்த்தப்பட்ட சக மாணவனை ஆதிக்க உணர்வோடு உங்கள் வீட்டுப் பிள்ளை தாக்கிவிட்டு வந்தால் பெற்றோர்கள் பெருமைப்படும் அவலம் இந்தக் காலத்திலும் இருக்கிறது. மனித நல்லுறவுக்கு எதிரான வன்மங்களும் பாகுபாடுகளும் குழந்தைகளுக்குக் கடத்தப்படவில்லை எனில் ஆதிக்கம் எனும் தொடர் சங்கிலியின் கண்ணி அறுந்துவிடும் என்பதால், பாலூட்டும்போதே இந்த நஞ்சையும் ஊட்டுகிறோம்.  

அடுத்து ஒரு வீடு. மனைவிக்கு வைர அட்டிகை வாங்கி வருகிறார் கணவர். எப்படிங்க இவ்ளோ காசு வந்தது என்ற கேள்விக்கு, இன்னிக்கு ஆபீஸ்ல நல்ல கலெக்‌ஷன் என்கிறார். இதைப் பார்க்கும் பருவ வயதுப் பையன், `அப்பா, எனக்கு பைக் வேணும்’ எனக் கேட்கிறான். அடுத்த கலெக்‌ஷன் உனக்குத்தான் என்கிறார் பாசமொழுக. ஊழல் செய்வதும் லஞ்சம் வாங்குவதும் கொலைக்கு இணையான குற்றம் என்பதை மாற்றி, அதை வசதியாக வாழ்வதற்கான வழியாக்கிய பெற்றோர், பிள்ளைகளையும் அவ்வாறே பிழைக்கப் பழக்குகின்றனர். ஓட்டுக்கு லஞ்சம், ஸ்கூல் அட்மிஷனுக்கு லஞ்சம், வேலைக்கு லஞ்சம் என, சாமானியர்களாகிய நம் வாழ்க்கையில் இரண்டறக் கலந்ததாக ஊழல் இருக்கையில் அரசியல்வாதிகளின் ஊழல் குறித்து மட்டும் ஆவேசப்படுகிறோம். அரசியல்வாதியின் மகன் கமிஷன்களை ஒழுங்குபடுத்தும் வேலையைப் பள்ளிப் பருவத்திலேயே கற்கிறான். அரசு ஊழியரின் வாரிசுகளுக்கு ஒரு ஃபைலை அடுத்த டேபிளுக்கு நகர்த்தக்கூட விலை உண்டு எனத் தெரியும்.  எத்தனை பேரை ஆபரேஷன் தியேட்டருக்கு அனுப்பினால் எந்த நாட்டிற்கு டூர் போகலாம் என டாக்டர் பிள்ளைகள் அறிவார்கள். இந்த ஊழலின் ஊற்றுக்கண் யார்? பெற்றோரும் குடும்பங்களும்தானே!  
   
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். குழந்தை வளர்ப்பு என்பது வெறுமனே சோறூட்டுவதன்று; தாலாட்டு பாடித் தூங்க வைப்பதன்று; படிக்க வைப்பதன்று, சம்பாதிக்கக் கற்றுத் தருவதன்று; மனிதரை மனிதராக வளர்த்தெடுக்கும் பெருங்கடமை அது.  பாதைகளற்ற மலையில் ஏறுவதைப் போல அடிக்கு அடி நாம் கவனத்துடன் செயலாற்ற வேண்டிய களம் அது. உங்கள் வீட்டுக்கு வெளியே குப்பையைக் கொட்டுகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். தினமும் கொட்டுகிறீர்கள். அந்த இடம் நாறத் தொடங்குகிறது. கொசுக்களும், விஷப்பூச்சிகளும் மொய்க்கின்றன. அப்படித்தான் குப்பை போடுவேன், என்னை யாரும் கேட்கக் கூடாது என நீங்கள் சொல்ல முடியுமா?

அதேபோல உங்கள் வீட்டில் ஒரு நாய் வளர்க்கிறீர்கள். மூர்க்கமான குணம் கொண்ட அந்த நாய், போவோர் வருவோரை எல்லாம் கடித்து வைக்கிறது. அப்படித்தான் என் நாய் எல்லோரையும் கடிக்கும் என அமைதியாக இருக்க முடியுமா?

நம் வீட்டிலிருந்து குப்பையோ, நாயோகூட வெளியில் மற்றவருக்குத் தொல்லையாக மாறக் கூடாது எனும்போது, வீடுகளிலிருந்து உற்பத்தி செய்து அனுப்பப்படும் மனிதர்கள் இச்சமூகத்தில் ஏற்படுத்தும் விளைவுகளுக்கு வீடுகள் பொறுப்பேற்க வேண்டுமா இல்லையா? நாள்தோறும் அத்தனை அடல்ட்ஸ் ஒன்லி தவறுகளையும் குழந்தைகள்முன் நிகழ்த்திவிட்டு, குழந்தை மட்டும் சரியாக வளர வேண்டும் என்றால் எப்படி?

குழந்தைகள் நம் சொற்களைவிடவும் செயல்களையே பின்பற்றுகின்றன. சமூகத்தைச் சீரழிக்கும் குணக்கேடுகளான வன்முறை, வன்மம், வெறுப்புணர்வு, ஒழுக்கக்கேடு, பாகுபாடு, ஆதிக்கம் போன்ற வயது வந்தோருக்கான விஷயங்களுக்கு, குழந்தைகளை நாம் எல்லா வகையிலும் பழக்கப்படுத்துகிறோம். இந்த குணக்கேடுகள்தான் தவறான உளவியலைக் கட்டமைத்து ஒரு குழந்தை தீய மனிதராக வளரக் காரணமாக அமைகிறது. ஆனால்,  நம்மைப் பொறுத்தவரை செக்ஸைத் தவிர எதுவுமே அடல்ட்ஸ் ஒன்லி மேட்டர் கிடையாது. இந்த கருத்தியலை நம் மனதில் விதைத்தவை திரைப்படங்கள். ஏ சர்டிஃபிகேட் எனில் அதில் பாலியல் காட்சிகள் இடம் பிடித்திருக்கும் என அர்த்தம் கொள்கிறோம். திரைப்படங்களை எந்தெந்த வயதினர் பார்க்கலாம் எனச் சான்றிதழ் வழங்கும் சென்சார் போர்டின் விதிப்படி ஏ சான்றிதழ் என்பது பாலியல் காட்சிகளுக்கானது மட்டுமன்று, வன்முறைக்கும் வன்மங்களுக்கும்கூட அது பொருந்துகிறது.

ஆனால், பறந்து பறந்து அடிப்பது, இரும்பு ராடால் தாக்குவது, கத்தியால் கழுத்தை அறுப்பது, கை காலை உடைப்பது, வாயில் ஓங்கிக் குத்துவிடுவது போன்ற அதீத வன்முறைக் காட்சிகள் ஹீரோக்களின் சாகசமாக ஏறக்குறைய எல்லாத் திரைப்படங்களிலுமே இடம் பெறுகின்றன. இப்படியான காட்சிகளை குழந்தைகளுடன் உட்கார்ந்து பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே நாமும் பார்க்கிறோம்.  இதனால், குழந்தை உளவியல் ரீதியாக எத்தகைய மாற்றத்தை அடைகிறது என நாம் கவலைப்படுவதில்லை. ஒரு சூப்பர் ஹீரோவின் தீவிர ரசிகனான என் உறவினரின் 9 வயதுப் பையன் தன் தம்பியின் முகத்தில் கத்தியால் கோடு போட்டுவிட்டான். கூடவே பன்ச் டயலாக்கும் பேசியிருக்கிறான். இப்படியான விளைவுகள் சமூகக் கேடு இல்லையா?! என்னைக் கேட்டால் மாஸ் ஹீரோக்களின் ஹீரோயிஸப் படங்கள் எதுவும் குழந்தைகள் பார்க்கத் தகுதியற்றவை!

வன்முறை மட்டுமன்று, சாதிப் பெருமை பேசும், பெண்களை இழிவுபடுத்தும், தீய பழக்கங்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் கொண்ட படங்களை எல்லாம் நாம் குழந்தைகளுடன் பார்க்கிறோம். இதில் நமக்கு எந்தச் சங்கடமும் இல்லை. ஆணும் பெண்ணும் நெருக்கமாக இருக்கும் பாலியல் காட்சி வந்தால் பதறுவதைப் போல வன்முறைக்கும் வன்மங்களுக்கு நம் மனம் சஞ்சலப்படுவதில்லை. இப்படியான திரைப்படங்களை இயக்குவோர் `சமூகத்தில் நடப்பதைத்தானே காட்டுகிறோம்’ என வாதிடுவார்கள். சமூகத்தில் நடப்பதைக் காட்டுங்கள், தவறில்லை. எல்லா வகையான படைப்பு உரிமையும் உங்களுக்கு இருக்கிறது. ஆனால், அதைக் குழந்தைகள் பார்க்க வேண்டுமென ஏன் நினைக்கிறீர்கள் என்பதுதான் என் கேள்வி. ஏ சர்டிஃபிகேட் கொடுத்தால் அதை ஏன் பெரிய பிரச்னையாக்குகிறீர்கள்? 18 வயதிற்கு உட்பட்டோரால் படத்திற்கு பிசினஸ் என்று கருதினால் அடல்ட்ஸ் ஒன்லி விஷயங்களைத் தள்ளி வைக்க வேண்டியது இயக்குநர்களின் கடமை.
சினிமா மட்டுமன்று, முற்பகல் தொடங்கி நாள் முழுவதும் ஓடிப் பின்னிரவு வரை நீடித்து, பலரது மன ஆரோக்கியத்தையும் இரவுத் தூக்கத்தையும் கெடுக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் அனைத்தும் அடல்ட்ஸ் ஒன்லி கன்டென்ட்தான். அதில் காட்டப்படாத வன்முறையா, வன்மமா, மூட நம்பிக்கைகளா? கொலை செய்வது, சூழ்ச்சி பண்ணுவது, பிறர் மனைவியை அபகரிப்பது, பேய் பிடிப்பது என மனித வாழ்வின் அத்தனை எதிர்மறை விஷயங்களும் சீரியல்களில் காட்சிப்படுத்தப்படுகின்றன. ஏறக்குறைய எல்லா வீடுகளிலுமே அம்மாக்களோடும் பாட்டி களோடும் அமர்ந்து குழந்தைகள் சீரியல் பார்க்கின்றன. இன்னும் ஒருபடி மேலே ரியாலிட்டி ஷோக்கள். குறிப்பாக குடும்பச் சண்டைகளை அம்பலப்படுத்தும் நிகழ்ச்சிகளை நடுக்கூடத்தில் அமர்ந்து குடும்பமாகப் பார்க்கின்றனர். இது குழந்தைகளின் உளவியலில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்துவது குறித்து நாம் கவலைப்படுவதே இல்லை. அவ்வாறே சமூக வலைதள வீடியோக்களும்.   

ஆக, எது அடல்ட்ஸ் ஒன்லி என அறிவு பெறுவது வயது வந்தோரான நமது அடிப்படைக் கடமை எனக் கருதுகிறேன். இந்தத் தொடர் தொடங்கப்பட்டபோது தொடர்புகொண்ட சிலர், ``அருமையாக எழுதியிருக்கிறீர்கள். என் குழந்தையிடம் படிக்கக்கொடுக்கிறேன்” என்றார்கள். ``நீங்கள் அவ்வாறு செய்யக்கூடாது என்பதற்காகத்தான் அடல்ட்ஸ் ஒன்லி எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது’’ என்றேன். குழப்பமடைந்தார்கள். இத்தொடரில் விவாதிக்கப்பட்ட விஷயங்களைக் குழந்தை அறியுமானால், `நம் பெற்றோர் என்னென்ன தவறுகள் செய்கின்றனர்’ எனக் குழந்தை ஒப்பு நோக்கத் தொடங்கும். பெற்றோர்மீது மரியாதையை இழக்கவும் வாய்ப்பிருக்கிறது. 

குழந்தை வளர்ப்பு என்பது அடல்ட்ஸ் ஒன்லி விஷயம்தான். அம்மாக்கள் அப்பாக்களையும், அப்பாக்கள் அம்மாக்களையும் குழந்தைகள் முன் வளர்ப்புமுறை குறித்துக் குறைகூறுவது இன்றும் நடக்கிறது. இப்பழக்கத்தை உடனடியாக மாற்றிக் கொள்ளுங்கள். இதனால் பெற்றோராகிய உங்கள் மரியாதை காப்பாற்றப்படும்.

குழந்தையைக் குழந்தையாக வாழ அனுமதிக்காத குடும்ப/சமூகச் சூழல்தான் ஒரு தலைமுறையின் மீது தொடுக்கப்படும் மோசமான வன்முறை என்பேன். நம் வீடு குழந்தைகளுக்கானதாக இல்லை. இந்த உலகம் குழந்தைகளுக்கானதாக இல்லை. இந்த வாழ்க்கையும் குழந்தைகளுக்கானதாக   இல்லை. பெரியவர்களின் உலகில் பெரியவர்களின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு ஒரு பெரிய மனுஷத் தனமான வாழ்வைத்தான் குழந்தைகள் பரிதாபமாக வாழ்கின்றன. நாற்பக்கமும் பாருங்கள். குழந்தைகளுக்கென என்ன இருக்கிறது? அவர்கள் அறிவு பெற, இளைப்பாற, பொழுது போக்க, கொண்டாடி மகிழ பிரத்யேகமாக என்ன வைத்திருக் கிறோம்! நம் விருப்பம்தான் அவர்களது விருப்பமும். நம் கனவுதான் அவர்களுடையதும். நம் தேடல்களுக்குதான் அவர்கள் ஓடுகின்றனர். பரந்துவிரிந்த இந்த அடல்ட்ஸ் ஒன்லி உலகத்தில் சின்னஞ்சிறிய இடம்கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை. இன்றைய குழந்தைகளுக்கு childhood என ஒன்றே கிடையாது. எல்லாமே adulthood தான். நமக்கும் குழந்தைகளுக்கும் இடையில் இயற்கை இயங்கியல் கிழித்திருக்கும் கோட்டை அழித்துவிட்டு நாம் அவர்களது ஏரியாவுக்குள் அத்துமீறுகிறோம் அல்லது நம் எல்லைக்குள் அவர்களை இழுக்கிறோம். இரண்டின் விளைவும் ஒன்றுதான். அது சீரழிவு.  

பெரியவர்களாகிய நாம் முன்னே நடந்து வழிகாட்ட, குழந்தை பின்னே நடந்து வரும். இழுத்துக்கொண்டு ஓட வேண்டிய அவசியம் இல்லை. திரும்பிப் பார்க்க வேண்டிய தேவையும் இல்லை. நாம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்றைத்தான். நாம் அடியெடுத்து வைக்கும் திசை சரியானதாக இருக்கிறதா என்பது மட்டுமே! அத்திசையில் வன்முறை, வன்மம், காழ்ப்பு, வெறுப்பு, பாகுபாடு, ஒழுக்கக்கேடு எதுவும் இல்லை தானே! அன்பு, அறம், அமைதி, அறிவு ஆகியவை நிறைந்திருக் கின்றனதானே! திரும்பிப் பார்க்காமல் தலை நிமிர்ந்து நடங்கள். உங்கள் பிள்ளை வழிதவறிப் போகாது!

- முற்றும்.

குழந்தை வளர்ப்பு என்பது...

புனித காரியமில்லை!

நமக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. எதையும் புனிதப்படுத்தி காலி பண்ணுவது. பெண்களைப் புனிதப்படுத்தி உரிமைகளைப் பறித்தோம். நதிகளைப் புனிதப்படுத்தித் தூய்மையைக் கெடுத்தோம். அவ்வகையில்தான் குழந்தைகளும் நம்மிடம் படாதபாடு படுகின்றனர். தெய்வத்திற்கு இணை என்போம். ஆனால், அடிப்படை உரிமைகளைக்கூடப் பறித்துவிட்டோம். புனிதப்படுத்தாதீர்கள். குழந்தை பிறந்தால் செல்வம் பிறந்தது, அதிர்ஷ்டம் பிறந்தது என்றெல்லாம் சொல்லாமல், கடமை பிறந்ததாக உணருங்கள். அதனால் இச்சமூகத்திற்கு நன்மை உண்டாகிறதோ இல்லையோ தீமை உண்டாகக்கூடாது.

சுமை தூக்கும் வேலையன்று!

குழந்தை பிறந்ததும் பெற்றோர்கள் தம்மை சுமைதூக்குபவராக மாற்றிக் கொள்கின்றனர். ஏன் இவ்வளவு பில்டப்? வாழ்க்கை ஒன்றும் அவ்வளவு எதிர்மறையானதோ, பாரமானதோ அன்று. நம் ஆசைகள்தான் அதைச் சுமையானதாக மாற்றுகிறது. எட்டாத இலக்கை நிர்ணயித்துக்கொண்டு ஓடத் தொடங்குகிறோம். ஓடி ஓடி சலிக்கிறோம். ஒரு கட்டத்தில் `அடச்சே, இந்தக் குழந்தைக்காகத்தான் இவ்வளவு ஓட வேண்டியிருக்கிறது’ என அலுப்பு வருகிறது. குழந்தையைச் சுமையாக மாற்றாதீர்கள். சுதந்திரமாக விடுங்கள். இலகுவாக உணர்வீர்கள். 
படம்: சி.சுரேஷ் பாபு
செலவை அதிகரிக்கும் தொல்லையன்று!

பசிக்கு உணவு, மாற்று உடை, இருப்பதற்கு ஒரு கூரை இவைதாம் அடிப்படைத் தேவை. மற்றவையெல்லாம் எக்ஸ்ட்ராதான். அப்படி எனில் நாம் எவ்வளவு பேராசைப்படுகிறோம் என நினைத்துப் பாருங்கள். உண்மையில் சின்னச் சின்ன விஷயங்களில் மகிழ்ச்சியடையும் பண்புதான் குழந்தையின் குணம். நாம் அவர்களுக்கு பிரமாண்டங்களைப் பழக்கப்படுத்துகிறோம். பெரிய வீடு, பெரிய ஸ்கூல், பெரிய கார், பெரிய வாழ்க்கை இவையெல்லாம் நாம் சொல்லித் தருகிறோம். அடிப்பகுதி இல்லாத பாத்திரத்தை உங்களால் ஒருபோதும் நிரப்ப முடியாது. எளிமைக்குப் பழக்கப்பட்ட குழந்தை எல்லாச் சூழலையும் சமாளித்து வாழும். அந்த வாழும் கலையைக் கற்பித்து நீங்கள் சுதந்திரமடையுங்கள்.

வாரிசு உற்பத்தியன்று!

நாம் அப்படித்தான் நினைக்கிறோம். ஆனால், உண்மை அதுவன்று. உங்களுக்கு மகனாகவோ மகளாகவோ பிறந்தாலும் இச்சமூகத்தின் ஓர் அங்கமாக, உலக உயிரியல் விருத்தியின் தொடர்ச்சியாக, தலைமுறையின் பங்களிப்பாக, கூட்டத்தில் ஒருவராகவே குழந்தை வாழப்போகிறது. சுயநலனோடு வாழப் பழக்காதீர்கள். எல்லோருடனும் கலந்து வாழும் கூட்டு வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்துங்கள். வாரிசு என்பது ஒருவித மாயை. சமூகத்தோடு ஒன்றாமல் தனிநபராக மகிழ்ச்சியாக வாழ்ந்துவிட முடியும் என்ற அறியாமையை உடனே பொசுக்குங்கள். அது மிக மிக ஆபத்தானது.

சொந்த விஷயமன்று!

குடும்பங்கள் இந்த பூமிக்கு ஏதேனும் பங்காற்றுகின்றன எனில், அது குழந்தை பெறுவதே. பின் அது எப்படி சொந்த விஷயமாகும். உங்கள் வீட்டில் ஒரு குழந்தை பிறந்தால் உங்கள் சமூகப் பொறுப்பு இரட்டிப்பாகிறது. பொறுப்புடன் செயல்படத் தயாராகுங்கள்.

No comments:

Post a Comment