Sunday, December 17, 2017

பொறுப்புத் துறப்பு எப்போது பொருந்தும்! thanks to dinamalar.com

Advertisement

பதிவு செய்த நாள்

08அக்
2017 
00:00
பொறுப்புத் துறப்பு என்ற சொற்றொடரை அண்மைக் காலமாகத் தொலைக்காட்சியில் நிறையப் பார்க்கிறோம். ஒரு வகையில், நிபந்தனைகளுக்கு உட்பட்டது என்பதன் நவீன வடிவமே, இது!
தொலைக்காட்சிகளுக்கு வெகுமுன்பே, தங்களது பொறுப்புத் துறப்புகளை, எப்போதோ கையாள ஆரம்பித்து விட்டனர், மனிதர்கள். 
வெற்றிகளைப் பங்கு போட, ஆளாளுக்குப் போட்டியிடுவோர்,தோல்வி என்றால், அதற்கு தாங்கள் காரணம் இல்லை என்று காத தூரம் ஓடுவதுடன், சுட்டு விரல் காட்டி, அவர் அல்லது அவர்கள் தான் காரணம் என்கின்றனர்.
வீட்டில் ஒரு கண்ணாடி டம்ளர் உடைந்து கிடக்கிறது... யார் உடைத்தது என்று கேட்டால், எல்லாருமே, 'நான் இல்லை...' என்கின்றனர். அப்படியானால் உடைத்தது யார் என்றால், பூனை தள்ளிவிட்டிருக்கும் என்கின்றனர், பிள்ளைகள். ஆம்... அது வீட்டில் உள்ள ஒரு கள்ளப் பூனை செய்த காரியம் தான். திட்டுகளுக்குப் பயந்து, அங்கே பொய் மூட்டை அவிழ்த்து விடப்பட்டிருக்கிறது என்பதே உண்மை.
செய்து வைத்த குலாப் ஜாமூனில் இரண்டு குறைகின்றன; தின்றவர் யார் என்ற கேட்டால், எல்லாரும், 'நானில்லை' என்று, பிய்த்துக் கொள்கின்றனர். எந்தப் பூனை இதைத் தின்றிருக்கும்... வீட்டில் உள்ள, இரண்டு கால், சர்க்கரை நோயாளிப் பூனை செய்த வேலை இது!
இப்படி ஆரம்பிக்கிற பழக்கம், சிலரது வாழ்வில் எப்போதும் தொடர்கிறது.
கையுங்களவுமாகப் பிடிபட்டாலொழிய பலரும், எப்போதும் பொறுப்புத் துறப்பு தான்.
அரியலூர் ரயில் விபத்து நடந்ததும், 'நானே பொறுப்பு...' என்று, தம் பதவியைத் துறந்தவர், அப்போதைய ரயில்வே அமைச்சர், லால் பகதூர் சாஸ்திரி. எந்த விதத்தில் இவர் இவ்விபத்திற்குப் பொறுப்பாக முடியும்... ஆனாலும், 'எனக்கு இதில் தார்மீகப் பொறுப்பு இருக்கிறது...' என்று, உறுதிபடப் பேசினார். இன்றைய அரசியலில் நேரிடையாகச் சம்பந்தப்பட்ட தவறுகளில் கூட, 'நான் எப்படிப் பொறுப்பாக முடியும்...' என்று அசையாமல் இருப்பதைப் பார்க்கிறோம்.
திருவிழாத் தேர் குடை சாய்ந்து, சக்கரத்தில் மிதிபட்டு, எவரேனும் இறந்தால், சம்பந்தப்பட்ட அனைவருமே பொறுப்பேற்க மறுக்கின்றனர். எவருக்குமே சம்பந்தம் இல்லாமல், எப்படி இப்படி ஒரு விபத்து நிகழ முடியும்!
கண்ணாடி டம்ளர் உடைத்தது, குலாப் ஜாமூன் திருடிய குணம், பொது வாழ்வு வரை தொடர்வதே இதற்குக் காரணம்.
பொது வாழ்விற்கு வருவோரோ, பதவியில் இருப்பவரோ, நடக்கிற எல்லாச் சிறப்புகளுக்கும் பெருமைப்பட்டுக் கொள்ள முன்வரும் அளவுக்கு, தவறுகளுக்கும் பொறுப்பு ஏற்க முன்வர வேண்டும்.
அப்படியானால், எந்தக் கட்டத்தில் தான் நாம் பொறுப்புத் துறப்பைப் பயன்படுத்த முடியும்...
ஒரு திருமணம் நடக்கிறது... வரவேற்புப் பகுதி, பந்தி, உடமைகள், நகைகள், பாதுகாப்பு போன்ற பொறுப்புகளை பிரித்து, முக்கிய நபர்களிடமோ, குழுக்களிடமோ பிரித்துக் கொடுக்கிறார், ஒரு குடும்பத் தலைவர். அதையும் மீறி நடக்கும் தவறுகளுக்கு, பொறுப்புத் துறப்பு அறிவிக்கலாம், குடும்பத் தலைவர். 
ஒரு நிறுவனத்தில் இயக்குனராகப் பொறுப்பு ஏற்கும் ஒருவர், 'என் ஒப்புதல் பெற்ற பிறகே எதையும் செயல்படுத்த வேண்டும். என் அனுமதி இல்லாமல், என் அறிவிற்கு அப்பாற்பட்டு நடக்கும் எதற்கும் நான் பொறுப்பேற்க முடியாது...' என, முதலிலேயே அறிவித்து விட்டால், இவரும் பொறுப்புத் துறக்கலாம்.
மாறாக, பாராட்டெல்லாம் எனக்கு; பிழை நடந்தால் பிறருக்கு என்ற மனநிலை கூடாது. இது, கூடுதல் சிக்கல்களுக்கே வழி வகுக்கும்.
'நானே முதல் பொறுப்பு...' என்று ஏற்க முன்வந்தாலோ, நம்ப முடியாத சலுகைகள் கிடைக்கும்! 

லேனா தமிழ்வாணன்

No comments:

Post a Comment