Thursday, December 14, 2017

அடல்ட்ஸ் ஒன்லி - 6 thanks to vikatan.com

ரு தூய நதி ஓடிக்கொண்டிருக்கிறது. கரையில் அமர்ந்து அமைதியாக அதைப் பாருங்கள். மனதின் சஞ்சலங்களை மட்டுப்படுத்தி அதன் ஓட்டத்தைக் கவனியுங்கள். நீர் நகர்கிறது. உள்ளே இருக்கும் மீன்கள் தெரிகின்றன. அதனடியில் கூழாங்கற்கள். நதியின் ஈரத்தைத் தடவியெடுத்து காற்று உங்கள்மீது பூசுகிறது. நீங்கள் சிலிர்த்துப் போகிறீர்கள். வெளியே ஓடும் நதி உள்ளூர ஓடுவதை இப்போது உணர்கிறீர்கள். கண்களை மூடி யோசியுங்கள்.  கடைசியாக எப்பொழுது உங்கள் குழந்தையுடன் இப்படியொரு இடத்திற்கு வந்தீர்கள். வந்திருந்தால் என்ன உரையாடினீர்கள்? நினைவுகூருங்கள்...
 அதற்குள் நாம் சில முக்கியமான விஷயங்களைப் பேசிவிட்டு வந்துவிடலாம். 

 ஓர் இருபதாண்டுகளுக்கு முன்பு வரை, பாரபட்சமில்லாமல் எல்லாப் பெண் குழந்தைகளுக்கும் வீடு என்பது சிறைதான். திருமணம் முடிக்கிற வரை வீட்டில் வைத்து என்ன செய்வது எனத் தெரியாமல்தான் பெண் பிள்ளைகளைப் படிக்க அனுப்பினார்கள். வெளியில் போனால் பாதுகாப்பில்லை எனப் பூட்டிப் பூட்டி வைத்தனர். பெண் பிள்ளைகளை ஏன் சிறை வைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு அன்றைய பெற்றோரிடமிருந்த ஒரே பதில் `காலம் கெட்டுக் கிடக்கு. பெண்களுக்குப் பாதுகாப்பில்லை.’ அதற்கு முந்தைய தலைமுறைகளும் இதே காரணத்தையே சொல்லிக்கொண்டிருந்தனர்.
உண்மையில், பெற்றோரின் இந்த வசனம், எக்காலத்திற்கும் பொருந்தக்கூடியதே! கல்வியிலும் பொருளாதாரத்திலும் தொழில்நுட்பத்திலும் ரொம்பவே முன்னேறியிருக்கிறோம். அதனால், கெட்டுப்போயிருந்த காலம் இன்று சரியாகிவிட்டதா என்ன? இன்னும் மோசமாகியல்லவா நிற்கிறது. பெண் குழந்தைகளுக்கானதாக இருந்த ஆபத்துகள் ஆண் குழந்தைகள்மீதும் இன்று படர்ந்துவிட்டன. பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் நிலைகொண்டிருந்தபோதே இந்தச் சமூகத்தை நாம் சீர்படுத்தியிருக்க வேண்டும். அப்படிச் செய்யாமல், எங்கே என்ன நடந்தால் எனக்கென்னவென்று வீட்டுக்குள் பூட்டி வைப்பதிலேயே குறியாக இருந்தோம். இப்போது ஆண்/பெண் வித்தியாசமில்லாமல் யாருக்குமே பாதுகாப்பில்லை. அதனால் ஆண் குழந்தைகளையும் வீட்டிற்குள் சிறை வைக்க வேண்டிய அவலம். இப்போதும் நாம் காலத்தின் மேல் பழியைப் போட்டுக் கதவைச் சாத்திக் கொள்கிறோம். ஆனால், ஆபத்து கதவை உடைத்துக்கொண்டு எப்போது வேண்டுமானாலும் உள்ளே நுழைவேன் என மிரட்டுகிறது.

  அரக்கோணத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் சென்னையில் ஆட்டோ ஓட்டுகிறார். அண்மையில் கோடம்பாக்கம் போகும் நிமித்தம் அவரது ஆட்டோவில் ஏறினேன். எப்படியாவது நடிகராக வேண்டுமென்பதுதான் அவரது ஆசையாம். ஏன் என்று கேட்டபோது, ‘`ஒரு நாளைக்கு ஐந்நூறு ரூபாய்க்கு ஆட்டோ ஓட்டுறேன். இப்படியே நூறு ரூபாயா சேர்த்து நான் என்னைக்குப் பணக்காரனாகுறது? சிவகார்த்திகேயன் மாதிரி கோடில சம்பளம் வாங்குற நடிகனாயிரணும்.இல்லேன்னா அரசியல்வாதியாகணும். ரெண்டாவது நமக்கு வராது’’ என்றார். அவர் சீரியஸாகச் சொன்னதைப் பார்த்து எனக்குச் சிரிப்பு வந்துவிட்டது. கட்டுப்படுத்திக்கொண்டு, ``கோடி கோடியா சம்பாதிச்சு என்ன பண்ணுவீங்க’’ என்று கேட்டேன்.

``எனக்கு ரெண்டு பசங்க மேடம். புள்ளைங்க எது கேட்டாலும் மறுக்காம வாங்கிக் கொடுத்துருவேன். இப்போகூட ரெட்மீ போன் வேணும்னான். வாங்கிக்கொடுத்துட்டேன். பி.எஃப், கிராஜுவிட்டி, பென்ஷன் இதெல்லாம் இருக்குற மாதிரி ஒரு நல்ல வேலையில் சேர்க்கணும். டொனேஷன் தர்றதுக்குப் பணம் சேர்த்துட்டிருக்கேன். பணம்தான் மேடம் எல்லாம்.’’

 ``பசங்களோட நேரம் செலவழிப்பீங்களா?’’

``எங்க மேடம்… காலைல ஓடத் தொடங்கினா ராத்திரி 11  மணி ஆயிரும். எங்க இருந்து குழந்தைகளோட நேரம் செலவழிக்கிறது. அவங்களுக்காகத்தான உழைக்கிறேன்.’’

 குழந்தைப்பிறப்பு இந்தியர்களின் வாழ்வில் ஒரு முக்கியமான திருப்புமுனை. பிள்ளையை நெஞ்சில் ஏந்த வேண்டிய பெற்றோர் கருத்தரித்ததுமே சுமக்க முடியாத ஒரு பெரிய பாறாங்கல்லைத் தூக்கித் தம் தலையில் வைத்துக்கொள்கின்றனர். அந்தப் பாறாங்கல்லின் பெயர் சம்பாதித்தல். இந்தப் பெருங்கல்,  குழந்தை எனும் உறவு நம்முடன் இருப்பதை நினைவுபடுத்துவதும் மறக்கடிக்க வைப்பதுமான விநோதங்களைச் செய்கிறது. வசதியான வாழ்க்கையைக் கொடுக்கத்தான் நாம் துடிக்கிறோமே தவிர, அன்பான, அமைதியான, பிரச்னைகளற்ற வாழ்வைத் தர நாம் எந்தச் சிரத்தையும் எடுப்பதில்லை.   
 
 காலை எழுவதில் தொடங்கி இரவு உறங்கப்போவது வரை குழந்தைக்கென நீங்கள் பிரத்யேகமாகச் செய்யும் விஷயங்களை நினைவுகூருங்கள். பள்ளிக்குக் கிளப்புதல், பாடம் சொல்லிக்கொடுத்தல், உணவு தயாரித்தல் இவற்றைத் தவிர என்னவெல்லாம் செய்கிறோம்? குழந்தைக்கெனச் சிறப்பான நேரத்தை நாம் யாரும் ஒதுக்குவதில்லை. மாறாக நம்முடைய பல்வேறு வேலைகளுக்கிடையில் குழந்தையை வளர்க்கிறோம். சமைத்துக்கொண்டு, டிவி பார்த்துக்கொண்டு, போன் பேசிக்கொண்டு, வாட்ஸ் அப்பில் சாட் செய்துகொண்டு, முகநூலைப் புரட்டிக்கொண்டு, புத்தகம் படித்துக் கொண்டு, அலுவலக வேலையைப் பார்த்துக் கொண்டு என நம் செயல்களுக்கிடையே குழந்தையைக் கண்காணிக்கிறோம், அவர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்கிறோம், அவர்களுக்கான உத்தரவுகளை இடுகிறோம். பல நேரங்களில் நமது குரல் முதலாளியின் தோரணையிலேயே இருக்கிறது. போய்ப் படி, டிவி பார்க்காத, ஒழுங்கா சாப்பிடப்போறியா இல்லையா? ஹோம் வொர்க்கை முடி என்பதாக அதட்டுகிறோம்.  உடல் குழந்தைக்கு அருகில் இருக்கிறது, மனம் எங்கோ தொலைவில் அலைகிறது. இதை யாரால் புரிந்துகொள்ள முடிகிறதோ இல்லையோ, குழந்தைகளால் நன்கு உணர முடியும்.

 மேற்கத்தியர்களின் குழந்தை வளர்ப்பு முறை குறித்து நாம் எப்போதும் தாழ்வாகவே நினைக்கிறோம். ஆனால், அது தவறு என்பதை அவர்களது வளர்ப்பு முறையைக் கவனிப்பவர்களால் புரிந்துகொள்ள முடியும். அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு அலுவலக விஷயமாகப் போயிருந்தேன். திரும்புகையில் சிங்கப்பூரில் இறங்கி விமானம் மாறி வர வேண்டியிருந்தது. ஆஸ்திரேலியாவிலிருந்து சிங்கப்பூர் வரையிலான விமானப் பயணம் ஏறக்குறைய 11 மணி நேரம். மேற்கத்தியர்கள், சீனர்கள் அதிகளவில் அந்த விமானத்தில் இருந்தனர். நிறைய குழந்தைகள் அவர்களோடு தென்பட்டன. ஆனால், அந்த 11 மணி நேரமும் விமானம் `பின் டிராப் சைலன்ஸி’ல் இருந்தது. தொடர்ச்சியாக அமர முடியாததால் எழுந்து நடக்கத் தொடங்கினேன். அப்போது நான் கவனித்த விஷயம் வியப்பை அளித்தது. ஒரு பெண்மணி தன் குழந்தைக்குக் கதைப் புத்தகத்தை எடுத்து வாசித்துக் காட்ட, குழந்தை சுவாரஸ்யமாகக் கேட்டுக்கொண்டிருந்தது. ஒரு தந்தை குழந்தையோடு சேர்ந்து படம் வரைந்தார். இன்னொரு குழந்தை `மேக் மீ’ விளையாட்டைச் சகோதரியோடு விளையாடியது. விமானம் தரையிறங்குகிற வரை அந்தக் குழந்தைகளைப் பெற்றோர் என்கேஜ் செய்துகொண்டிருந்தனர். அதன்பின் சிங்கப்பூர் விமானத்தில் ஏறினேன். சில குழந்தைகளோடு நிறைய இந்தியர்கள் இருந்தனர். இரண்டு மணி நேரம்தான். ஆனால், இந்தியக் குழந்தைகள் கத்தி அழுதன. சத்தம் போட்டுப் பேசின. எனக்குப் பின்னால் அமர்ந்திருந்த சிறுவன் என் சீட்டை டங் டங்கென இடித்துக்கொண்டே இருந்தான். இந்தியப் பெற்றோர் குழந்தைகளை என்கேஜ் செய்வதில்லை. அது தன் வேலை இல்லை என்பதாகவே அவர்கள் நினைக்கின்றனர். இதுதான் வித்தியாசம்.    
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை எந்நேரமும் போன் பேசுவது எனது வழக்கமாக இருந்தது. எந்த அழைப்பு வந்தாலும் எடுத்து மணிக்கணக்கில் பேச வேண்டியது. அதிலும் சமூகப் பிரச்னை, பாலிட்டிக்ஸ் என்றால் கேட்கவே வேண்டாம். ஊடகப் பணி என்பது கூடுதல் சாக்கு. மேலே குறிப்பிட்டதைப் போலத்தான்... யாரிடமாவது பேசிக்கொண்டு அல்லது எதையாவது எழுதிக் கொண்டு, ஏதேனும் புத்தகத்தைப் படித்தபடிதான் மகளை வளர்த்துக்கொண்டிருந்தேன். எனக்கு போன் வந்தாலே அவள் டென்ஷனாகிவிடுவாள். ஒரு ஞாயிற்றுக்கிழமை அன்று எனக்கு வழக்கமாகப் பேசும் தோழி ஒருவர் அழைக்க, அரை மணி நேரம் பேசிவிட்டு சமைக்கப் போய்விட்டேன். மாலை வரை எந்த அழைப்பும் வரவில்லை என்பதால் ஆச்சர்யப்பட்டு போனைத் தேடினேன். பல இடங்களில் தேடியும் என் இரண்டு போன்களையும் காணவில்லை. மகளிடம் கேட்டதற்கு ’தொலைஞ்சு போச்சு’ என்று பதில் வந்தது. எங்கோ ஒளித்து வைத்து விளையாடுகிறாள் என்றுதான் நினைத்தேன். வெகு நேரம் கழித்துதான் தெரிந்தது, என் செல்போன் இரண்டும் ஜன்னல் வழி வீசியெறியப்பட்டது. அதுவொரு புல் முளைத்துக் கிடந்த காலி இடம் என்பதால் அவை தொலைந்து போகவில்லை. எரிகல் ஒன்று வந்து விழுந்ததைப் போல இச்சம்பவத்தால் நான் நிலைகுலைந்து போனேன். என் நடவடிக்கைகளை மீள்பார்வை செய்து திருத்திக்கொள்ளும் வாய்ப்பைத் தனது செயலால் உணர்த்தியிருந்தாள் ஏழு வயதே ஆன குழந்தை.  

 குழந்தைகள் இப்படிப் பல விஷயங்களை மிகச் சாமர்த்தியமாகக் குறிப்பால் உணர்த்துகின்றனர். ஆனால், அதைக் கண்டுணரும் நுண்ணுணர்வு நமக்கு இருப்பதில்லை. என்னுடன் விளையாடு, `எனக்குக் கதை சொல்’ என அவர்கள் கெஞ்சுகின்றனர். ஆனால் நாம், `தொந்தரவு செய்யாதே’ என அவர்களைத் தனியே விரட்டுகிறோம்.  செல்போனிலோ டிவியிலோ அவர்கள் தஞ்சமடைகின்றனர். நாம் குழந்தைகளின் பேச்சைக் கேட்கவில்லை எனில், ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் நம் பேச்சைக் குழந்தைகள் கேட்காது.

வன்முறைகளிலிருந்தும் குற்றங்களிலிருந்தும் குழந்தைகள் காப்பாற்றப்பட வேண்டுமெனில் பெற்றோர் குழந்தைகளை வெறுமனே வளர்க்காமல், அவர்களோடு வாழத்தொடங்க வேண்டும். விலங்குகளைக் கவனியுங்கள். பறவைகளைப் பாருங்கள். தன் குட்டிக்கு/குஞ்சுகளுக்கு ஏதேனும் ஆபத்தென்றால் அவை சட்டெனப் பாய்ந்துவரும். காரணம் அவற்றின் நுண்ணுணர்வு. குஞ்சுகள் இரைதேடுகிற தெம்பைப் பெறுகிற வரை யாரையும் அண்டவிடாமல் தாய்ப் பறவை அலைபாய்வதையும் பரிதவிப்பதையும் கவனியுங்கள். அவற்றின் கண்கள் 360 டிகிரி சுற்றி வரும். உயிர்கள் அனைத்துக்குமே அந்த நுண்ணுணர்வு பொதுவே. ஆனால், பல்வேறு அழுத்தங்களால் மனிதப் பெற்றோர் அதைத் தொலைத்துவிட்டனர். 

யாருடைய கண்ணில் விஷமிருக்கிறது, உடல் மொழியில் வெளிப்படும் தீங்கு, வார்த்தைகளின் உள்ளர்த்தங்கள், தொடுதலில் கேடு ஆகியவை குழந்தையைச் சுற்றி இருக்கிறதா என, 100 சதவிகிதம் குழந்தைமீது கவனம் வைத்த பெற்றோரால் கண்டுணர முடியும். அப்படிப் பகுத்தறிய முடியாததால்தான் எல்லோருக்கும் பயந்து குழந்தையை ஒளித்து வைக்கும் சூழல் உருவாகிறது. நீங்கள் உங்கள் குழந்தையுடன் கண்ணுக்குத் தெரியாத லட்சம் நரம்புகளோடு பின்னிப் பிணைந்திருப்பீர்களானால் குழந்தையே உங்களுக்கு எல்லாவற்றையும் வெளிப்படுத்திவிடும்.

 எல்லா நேரமும் குழந்தையுடன் connected ஆக இருப்பதுதான் பெற்றோரின் ஒரே கடமை. உடல் ரீதியாக, மனரீதியாக, அறிவுரீதியாக, உணர்வு ரீதியாக என நான்கு வகைகளிலும் இந்த கனெக்‌ஷன் இருக்க வேண்டும். பெற்றோர் தமது சுயநலன்களைப் பின்னுக்குத் தள்ளி அன்பையும் அறிவையும் தரும்போது, குழந்தைகள் இப்பூமிக்கும் மனித சமூகத்துக்கும் பயன்படும் உயிராக வளரும். இப்படியான மனித சமூகம் உருவாகும்போதுதான் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த பயமின்றி, சுதந்திரமாகத் தெருவில் விளையாட முடியும்.   

 இப்போது முதல் பத்தியை மீண்டும் படியுங்கள். எந்த நதிக்கரைக்குப் போனீர்கள். இன்னும் போகவில்லையா? எப்போது போவீர்கள், உங்கள் குழந்தையுடன்?

- நிறைய பேசுவோம்...

குவாலிட்டி டைம் முக்கியம் பெற்றோரே!

கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தைகளின் பருவம் ஓடிவிடும். கடகடவென அவர்கள் வளர்ந்து நிற்பார்கள். கையில் தவழ்ந்தவர்கள், கையைப்பிடித்து நிற்பார்கள், அப்புறம் தோள் உரசி, பின்னர் தலைக்கு மேலே. யோசித்துப் பார்த்தால் இன்னும் கொஞ்சம் நன்றாக வாழ்ந்திருக்கலாமோ எனத் தோன்றும். குழந்தையின் ப்ரயாரிட்டி லிஸ்ட்டில் பெற்றோர் எப்போதும் இடம் பிடித்திருக்க முடியாது. வளர வளர விருப்பங்களும் தேடல்களும் மாறிப்போகும். குழந்தை பெற்றோரைச் சார்ந்திருக்கும் அந்தக் காலகட்டம் இருவருக்குமே மிகவும் முக்கியமானது. எவ்வளவு மணி நேரம் குழந்தைகளுடன் இருக்கிறோம் என்பதல்ல. அரை மணி நேரமே இருக்க முடிந்தாலும் எவ்வளவு மனம் ஒன்றிக் குழந்தைகளுடன் செலவழித்தோம் என்பதுதான் முக்கியம். குவான்ட்டிட்டி அல்ல குவாலிட்டியே சிறந்தது. குவாலிட்டியாக நேரத்தைச் செலவிடச் சில பரிந்துரைகள்:

பேரன்ட்டிங் மெடிட்டேஷன் தெரியுமா?

தியானம் செய்யும்போது எப்படி இருப்போம். கவனத்தைச் சிதறவிடாமல், மனதை ஒருநிலைப்படுத்திக் குவித்திருப்போம் இல்லையா? குழந்தையுடன் செலவழிக்கும் நேரத்தை ஒரு தியானமாக மாற்றுங்கள். செல்போன், குக்கர் சத்தம், டிவி என எதுவும் உங்களைத் தொந்தரவு செய்யக் கூடாது. குழந்தைகளுடன் அன்று எதைப் பற்றிப் பேச அல்லது விளையாடப்போகிறீர்கள் என முன்கூட்டியே தயார் செய்யுங்கள். விஷயம் என்னவென்றால் கவனம் சிதறவே கூடாது.

வாக்கிங் போகிறோமா?

அவசரமான இந்த வாழ்க்கையில் எதற்கும் நேரமில்லை என்பதாக நாம் நினைத்துக்கொள்கிறோம். உண்மை அதுவல்ல. நாம் நிறைய நேரத்தை அர்த்தமில்லாத விஷயங்களுக்காக வீணடிக்கிறோம். தினமும் ஒரு மணி நேரம் குடும்பத்தோடு வாக்கிங் போங்கள். சோம்பேறித்தனப்படாதீர்கள். முடியாதவர்கள் நண்பர்கள் வீட்டிற்கோ, கடைகளுக்கோ போக கார்/பைக் எடுப்பதைத் தவிர்த்து அந்த வாய்ப்பைக் குழந்தைகளுடன் நடந்து செல்லப் பயன்படுத்துங்கள். ஓடிக்கொண்டே இருக்கும் பெற்றோரைக் குழந்தைகளுக்குப் பிடிக்காது. வாக்கிங் போகும்போது உங்கள் அலுவலகக் கதைகளையோ குடும்ப விவகாரங்களையோ பேசாமல், குழந்தைகளுடன் உரையாடுங்கள். மரங்கள், தெருவோரத்தில் வசிப்பவர்கள், குப்பைகூளங்கள் எனக் கைகாட்டிப் பேச எவ்வளவோ விஷயங்கள் வாக்கிங்கில் கிடைக்கும்.

டின்னரைச் சேர்ந்து உண்போம்!

பிரத்யேகமாக நேரம் ஒதுக்க முடியாதவர்கள் டின்னரை அதற்கான வாய்ப்பாக அமைத்துக்கொள்ளலாம். குழந்தைகள் லேட் நைட் சாப்பிடக் கூடாது என்பதால், ஏழு மணிக்குள் சாப்பிட உட்காருங்கள். நிதானமாகச் சாப்பிடுங்கள். தீம் டின்னர் என்றால் குழந்தைகள் உற்சாகமடைவார்கள். ’ஃப்ரூட் நைட்’ தான் தீம் என்று வைத்துக்கொள்ளுங்கள்... அன்றைய டின்னர் விதவிதமான பழங்களாக இருக்கட்டும். இது ஆரோக்கியமானது. அதுபோல சாண்ட்விச் நைட், தோசா நைட் என ஒவ்வொரு நாள் டின்னருக்கும் ஒரு பெயர் வைத்திடுங்கள். குழந்தைகளால் இப்படியான தருணங்களை மறக்கவே முடியாது.

சேர்ந்து சமைப்போம்!

குழந்தைகள் கிச்சனில் இருக்க விரும்புவார்கள். ஆண்/பெண் பாகுபாடில்லாமல் இருவருக்கும் கிச்சன் வேலையைக் கற்பியுங்கள். தண்ணீர் பிடித்துத் தருவது, குழம்பில் பொடியைப் போடுவது, கியாஸ் அடுப்பைப் பற்ற வைப்பது போன்ற வேலைகள் அவர்களுக்குத் திரில்லிங்காக இருக்கும். தக்காளி போன்ற காய்கறிகளை வெட்டித்தரச் சொல்லுங்கள். எலுமிச்சம்பழத்தைப் பிழிவது, புளியைக் கரைப்பது போன்ற வேலைகளில் ஈடுபடுத்துங்கள். இவையெல்லாம் உங்கள் கண்காணிப்பில் நடக்க வேண்டும்.  சமையலைக் கற்பதோடு, உங்களோடு அதிக நேரம் இருப்பதாகக் குழந்தைகள் உணர்வார்கள்.

வீட்டு/மாடித் தோட்டம் அமையுங்கள்:

இதுவும் குழந்தைகளை ஈர்க்கும் வேலைதான். செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற, இயற்கை உரமிட, களைகளை எடுக்கப் பழக்குங்கள். ஒவ்வொரு செடி பற்றியும் தெரிந்துகொண்டு அது குறித்துப் பேசுங்கள். காய்கள், கனிகள், பூக்கள் செடிகளில் விளைந்து வருவதைப் பார்க்கும்போது மிகவும் பெருமையாக உணர்வார்கள்.

அவர்களது விளையாட்டை விளையாடுங்கள்:

குழந்தைகளாக மாறுவது எல்லோருக்கும் விருப்பமானதில்லை. ஆனால், சாத்தியமானதே! நம்மால் குழந்தைகளாக மாற முடியாததால்தான் அவர்களை நம் உலகிற்குள் இழுக்கிறோம். பெரியவர்களின் விருப்பத்திற்கேற்ற வாழ்க்கையைத்தான் குழந்தைகள் வாழ்கின்றன. போர்ட் கேம், பால் கேம், தெரு விளையாட்டு... எதுவாக இருந்தாலும் அவர்களோடு விளையாடத் தயங்காதீர்கள்.

மேனர்ஸ் முக்கியம்!

நல்ல பழக்கங்களுடன் நடந்துகொள்ளும் குழந்தைகள் பெற்றோரின் பெருமை. நல்ல பண்பாளர்கள் வாழ்க்கையில் தோற்கமாட்டார்கள். உலகின் எந்த மூலைக்குச் சென்றாலும் அவர்கள் மதிக்கப்படுவார்கள். ஐந்து வயதிற்குள் இந்த நடத்தை முறைகளைக் குழந்தைகளுக்குப் போதியுங்கள்.

1. தயவுசெய்து மற்றும் நன்றி என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தப் பழக்குங்கள். உங்கள் குழந்தைகளைத் தன்மையானவர்களாக மாற்றும் மேஜிக் சொற்கள் இவை.

2. யாருடைய பொருளையும் முன் அனுமதிபெற்ற பின்னர் எடுக்கச் சொல்லுங்கள். அது அம்மா, அப்பாவினுடையதாக இருந்தாலும்.

3. செய்த தவற்றை உணர்ந்து மன்னிப்பு கேட்கப் பழக்கப்படுத்துங்கள். போகிற போக்கில் `சாரி’ எனச் சொல்லுவது பயனளிக்காது. மீண்டும் அதே தவற்றைச் செய்வார்கள்.

4. கதவைத் தட்டிவிட்டு வரச் சொல்லுங்கள். பிரைவஸி எல்லோருக்குமே அவசியமானது. அனுமதி கிடைக்கிற வரை வாசலில் நிற்கச் சொல்லுங்கள். திபுதிபுவென ஓடிவந்து கதவைத் தட்டிக்கொண்டே இருப்பது தவறு. இதைப் பழக்கப்படுத்த எளிய வழி, நீங்கள் அதைப் பின்பற்றுவதே.

5. கவனிக்கக் கற்றுக்கொடுங்கள். யார் பேசும்போதும் முழுமையாகக் கேட்டுவிட்டுப் பிறகு பதில் அளிக்கப் பயிற்றுவியுங்கள்.

6. யாரையும் கிண்டல் செய்து சிரிக்க அனுமதிக்காதீர்கள். பொது இடமோ வீடோ, யாரையும் கிண்டல் செய்வது அவர்களைக் காயப்படுத்தும் எனப் புரிய வையுங்கள்.

7. பிறருக்கு உதவி செய்யவும் கருணையோடு இருக்கவும் பழக்கப்படுத்துங்கள்.

8. போனில் எப்படிப் பேசுவது, யாராவது பேசும்போது எப்படி அமைதியாக இருப்பது எனச் சொல்லித் தாருங்கள்.

9. வயதில் பெரியவர்களையும் ஆசிரியர்களையும் மதிக்கச் செய்யுங்கள்.

10. தேவைப்படும் நேரத்தில் அமைதியாக அமர்ந்திருக்கப் பழக்குங்கள். குழந்தைகளுக்கு இது கஷ்டம்தான் என்றாலும் சூழலைப் புரிய வைத்தால் அதற்குத் தக நடந்துகொள்ளப் பழகிவிடுவார்கள்.

11. மென்மையாகப் பேசுவதன் அவசியத்தைக் குழந்தைகள் உணர வேண்டும். கத்துவது, அலறுவதெல்லாம் சரியான பேசும் முறைகள் அல்ல. ஆனால், நாம் அவ்வாறுதான் நடந்துகொள்கிறோம் என்பதால் குழந்தைகள் அதையே பின்பற்றுகின்றன. கோபமாக இருந்தால், தணிந்தவுடன் அமைதியாகப் பேசுங்கள். குழந்தையும் அதையே பழகும். உரையாடலின் போது பேசுவதை முடிக்கும் வரை காத்திருந்து எதிர்வினையாற்றச் சொல்லித் தாருங்கள்.

12. யாரையும் தாழ்வாக நினைக்கவோ நடத்தவோ கூடாது எனக் கற்பியுங்கள். ஆசிரியருக்கும் துப்புரவு வேலை செய்பவருக்கும் ஒரே மாதிரியான மரியாதையைக் கொடுக்கச் செய்யுங்கள். சமத்துவத்தைக் கடைப்பிடிப்பது நற்பண்புகளில் மேன்மையானது.

No comments:

Post a Comment