Saturday, March 7, 2020

குழந்தை சிவன் - நன்றி: தினmalar


தெய்வமே, சிரார்த்தம் செய்யும் அதிசயம், திருவண்ணாமலை அருகிலுள்ள, பள்ளி கொண்டாப்பட்டு என்ற ஊரில், மாசி மகத்தன்று நடக்கிறது. இவ்வூரின் புராணப் பெயர், சம்பந்தனுார்.

திருவண்ணா மலையை, வல்லாள மகாராஜா ஆட்சி செய்தார். இவரது மனைவியர், மல்லமா தேவி, சல்லமா தேவி. இவர்களுக்கு, குழந்தை இல்லை. அண்ணாமலையாரை வேண்டினார், மகாராஜா.

ஒருநாள், துறவி ஒருவர், வல்லாளன் அரண்மனைக்கு வந்தார்.

'எனக்கு, இரவு வேளையில் சேவை செய்ய, தகுதியான ஒரு பெண் உடனடியாக வேண்டும்...' என்றார்.

'நான், அவருக்கு சேவை செய்கிறேன்...' என்றாள், சல்லமா தேவி.

'ஒரு ஆணுடன், தன் மனைவி தனித்திருப்பதா...' என, மன்னர் யோசித்தாலும், வேறு வழியின்றி சம்மதித்தார். துறவியின் கால்களை, சல்லமா தேவி பிடித்து விட்டுக் கொண்டிருந்தபோது, அவர் மறைந்தார். அங்கே ஒரு குழந்தை தோன்றியது.

சல்லமா தேவிக்கு, மகிழ்ச்சி தாங்கவில்லை. மன்னரை அழைத்து, குழந்தையைக் காட்டினாள். அவரும், அண்ணாமலையாரே தங்களுக்கு குழந்தையாக வந்துள்ளார் என, மகிழ்ந்தார். சற்றுநேரம் அவர்களுடன் இருந்த குழந்தையும், மறைந்து விட்டது. மன்னர் வருந்தியபோது, அண்ணாமலையாரின் குரல் ஒலித்தது.'மன்னா... நானே, துறவியாகவும

குழந்தையாகவும் வந்தேன். அவ்வப்போது தோன்றி உங்களுடன் விளையாடி, மறைவேன். நீயே, என் தந்தை. மல்லமா, சல்லமா என் தாய்மார்...' என்றது.

இதன் பிறகு, அவ்வப்போது, மன்னர் தம்பதிகள் சாப்பிடும்போது, குழந்தை தோன்றி விளையாடும். ஒருநாள், மன்னர் இறந்து போனார். அரண்மனைக்கு வந்தார், அண்ணாமலையார்.

'அன்னையரே... உங்கள் குழந்தையான நானே, தந்தைக்கு, இறுதிக்கடன் செய்வேன்...' என்றார். அதன்படி, இறுதிக்கடனும் செய்தார்.

வல்லாள மன்னர் உயிர் விட்ட, மாசி மகத்தன்று, திருவண்ணாமலையில் இருந்து, 5 கி.மீ., துாரத்திலுள்ள, பள்ளி கொண்டாப்பட்டு கிராமத்துக்கு, அண்ணாமலையார் எழுந்தருள்வார். அங்கு, மன்னனுக்கு, சிரார்த்தம் செய்யும் நிகழ்ச்சி பாவனையாக நடத்தப்படும்.

மேள வாத்தியம் ஏதுமில்லாமல், ஒற்றைத்தாளம் போட்டபடி, அண்ணாமலையார், அமைதியாக பவனி செல்வது மனதை உருக்கும். இங்குள்ள ஒரு கோபுரத்துக்கு, வல்லாளன் கோபுரம் என, பெயர் சூட்டப்பட்டுள்ளது.

மாசி மகமான இன்று, இந்த வரலாற்றை படித்தவர்கள், சொர்க்க பதவி அடைவர்.

தி. செல்லப்பா

No comments:

Post a Comment