Friday, March 27, 2020

கம்ப இராமாயணம் - கும்ப கர்ணனின் சகோதரப் பாசம்

கம்ப இராமாயணம் - கும்ப கர்ணனின் சகோதரப் பாசம்




கும்ப கர்ணனின் பாத்திரம் சகோதர பாசத்தின் உச்சம். 

ஒருபுறம் இராவணனை காக்க எவ்வளவோ சொல்லி பார்க்கிறான். இராவணன் கேட்பதாய் இல்லை. அவனுக்காக யுத்தம் செய்து உயிர் தருகிறான். 

மறுபுறம் இன்னொரு சகோதரனான விபீஷணன் மேல் அளவு கடந்த காதல். 

சாகும் தருவாயிலும், விபீஷணன் நன்றாக இருக்கவேண்டும் என்று கவல்கிறான். 


இரண்டு கையும் இரண்டு காலையும் இழந்து, மூக்கும் காதும் அறுபட்டு கிடக்கிறான் கும்பகர்ணன். இராமனிடம் இரண்டு வரம் வேண்டுகிறான்.
 
முதல் வரம், விபீஷணனை காக்கவேண்டி
 
--------------------------------------------------------------
தம்பி என நினைந்துஇரங்கித் தவிரான் அத்தகவு இல்லான்,
நம்பி! இவன்தனைக் காணின் கொல்லும்இறை நல்கானால்;
உம்பியைத்தான்உன்னைத்தான் அனுமனைத்தான்ஒரு பொழுதும்
எம்பி பிரியானாக அருளுதியான் வேண்டினேன்.
-----------------------------------------------------------
 
தம்பி என நினைந்து = விபீஷணனை தம்பி என்று நினைத்து
 
இரங்கித் = இரக்கம் கொண்டு
 
தவிரான் அத்தகவு இல்லான் = உயிரோடு விடமாட்டான் அந்த நல்ல குணம் இல்லாதாவன் (இராவணன்)
 
நம்பி! இவன்தனைக் காணின் கொல்லும் = நல்லவனான இவனைப் பார்த்தால் கொன்றுவிடுவான்
 
இறை நல்கானால் = அவன் அப்படி இவன் மேல் இரக்கம் காட்டா விட்டால்
 
உம்பியைத்தான் = உன் தம்பியாகிய லக்ஷ்மணனைத்தான்
 
உன்னைத்தான் = உன்னைத்தான்
 
அனுமனைத்தான் = அனுமனைத்தான்
 
ஒரு பொழுதும் = எப்போதும்
 
எம்பி பிரியானாக = என் தம்பியாகிய விபீஷணன் பிரியாமல் இருக்க
 
அருளுதி = அருள் தருவாய் என
 
யான் வேண்டினேன் = நான் உன்னை வேண்டினேன்
 
இது கும்பகர்ணன் கேட்ட முதல் வரம். உயிர் போய் கொண்டு இருக்கிறது. கை, கால், மூக்கு, காது இழந்து ஒண்ணும் செய்ய இயலாமல் கிடக்கிறான். அப்ப அவன் கேட்ட வரம், விபீஷணனை பார்த்துக் கொள் என்று.

என்ன ஒரு சகோதரப் பாசம் 

No comments:

Post a Comment